இந்திய ராணுவம் பாதுகாப்பான தகவல் தொடர்பைக் கொண்டு வர புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
உலகில் எத்தனையோ செல்போன்கள் இருக்கின்றன. அவ்வப்போது புதுபுது வகையான செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுதான் வருகின்றன. அதேபோல், புது பிராண்டுகளும் வந்தவண்ணம் உள்ளன. இந்தியாவிலும் ஏராளமான ஸ்மார்ட் போன் பிராண்டுகள் உள்ளன. ஆனால், அவற்றைவிட மிகவும் ஸ்பெஷலான ஒன்றாக அமைந்துள்ளதுதான் இந்த இந்திய ராணுவம் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் போன்.
இந்தியா சீனா எல்லையில் இந்திய ராணுவத்தினர் எப்போதும் இருப்பார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆம்! சீனாவுடனான எல்லை குறித்த பேச்சுவார்த்தைக்குதான் இந்திய ராணுவம் 'சம்பவ்' ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் நவீன 5G தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன. மேலும் பாதுகாப்புக்காக முழுவதுமாக என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பான மற்றும் உடனடி தகவல் தொடர்புக்காக இந்த (SAMBHAV) (Secure Army Mobile Bharat Version) ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராணுவத்தினரும் வைத்திருக்கும் வகையிலும், அதேபோல் செல்போனில் சில கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்விதமாக இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மேலும் சில தகவல் தொடர்பு சாதனங்களை இந்திய ராணுவத்தினருக்காக வாங்கியுள்ளனர். பாதுகாப்பான தகவல் தொடர்புக்காக, 30,000 சம்பவ் தொலைபேசிகள் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இராணுவத்திற்கென மத்திய அரசு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு சீனாவுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின்போது, இந்திய ராணுவம் சம்பவ் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட் போனில் எம்-சிக்மா (M-Sigma) போன்ற ஆப்கள் இடம்பெற்றுள்ளன. இது மெசேஜ், டாக்குமெண்ட்ஸ், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இது கிட்டத்தட்ட, பிரபல மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப் போன்றே இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொது வெளிகளில், முக்கிய ஆவணங்கள் கசிவதையும் தடுக்கும்.
ஏனெனில், இதற்கு முன்னர் ராணுவத்தினர் நாம் பயன்படுத்தும் சாதாரண வாட்ஸ் அப் பயன்படுத்தினர். அப்போது சில ரகசிய ஆவணங்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.