
கருப்பு அரிசியில் ஊட்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் பல்வேறு ஊட்டச்சத்துகள் அதிகமாக இருப்பதன் காரணமாகவே கருப்பு அரிசி அரிசிகளின் ராஜா என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த கருப்பு அரிசியில் உள்ள சத்துகள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்க உதவுகிறது. வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது.
மற்ற வகை அரிசி மற்றும் பல தானியங்களை விட கருப்பு அரிசியில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருதய நோய்களைத் தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன.
இதய நோய், புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் மற்றும் நிலைமைகளைத் தடுப்பது மற்றும் சிகிச்சையளிப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை கருப்பு அரிசி வழங்குகிறது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கருப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் தொப்பை மற்றும் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.
ஆரோக்கியம் நிறைந்த கருப்பு அரிசி மற்றும் முருங்கை கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் கால்சியம் பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். அதாவது 40 வயதிற்கு மேல் பெண்களுக்கு கால்சத்து மிகவும் அவசியம். அது கருப்பு அரிசி மற்றும் முருங்கைக்கீரையில் அதிகளவு உள்ளது.
கருப்பு அரிசி முருங்கைக்கீரை கொழுக்கட்டை:
தேவையான பொருட்கள்
கருப்பு அரிசி - 1 கப்
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
வெங்காயம் - 2
ப.மிளகாய் - காரத்திற்கு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு- அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
செய்முறை
* முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து காம்பு இல்லாமல் இலைகளை மட்டும் எடுத்து நன்றாக கழுவி வைக்கவும்.
* கருப்பு அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைத்த பின்னர் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, ப.மிளகாய் போட்டு தாளித்த பின்னர், வெங்காயத்தை போட்டு நன்று வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் சுத்தம் செய்த முருங்கைக்கீரையை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொரகொரப்பாக பொடித்த மிளகு, சீரகத்தை சேர்த்து வதக்கிய பின்னர் அதில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உப்பு மற்றும் அரைத்த கருப்பு அரிசியை போட்டு நன்றாக கிளறவும்.
* அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கிளறிக்கொண்டே இருக்கும் போது பாத்திரத்தில் ஒட்டாமல் தண்ணீர் வற்றி மாவு கொழுக்கட்டை பிடிக்கும் பதம் வரும் போது கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி ஆறவிடவும்.
* கை பொறுக்கும் அளவு சூடு இருக்கும் போதே மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.
* இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கொழுக்கட்டைகளை அடுக்கி வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
* இப்போது சத்தான சுவையான கருப்பு அரிசி முருங்கைக்கீரை கொழுக்கட்டை ரெடி.