சந்தோஷம் ஒரு கலை; அதை விளக்க ஒரு கதை!
சந்தோஷமாக வாழ்வது என்பது தனிக்கலை. அதைக் கற்றுத்தருவது சிரமம். சந்தோஷம் என்னும் கலையை அவரவரே கற்றுக்கொள்ள வேண்டும். அது அவரவரிடமே இருக்கும் ஒரு செயல்.
வத்திக்குச்சியை உரசி ஆயிரம் வாலா பட்டாசு மீது போடும்போது அது தொடர்ச்சியாக ஒளிச்சிதறலைப் பாய்ச்சிக்கொண்டு படர்ந்து செல்லும். சந்தோஷமும் அப்படித்தான் தொட்டால் தொடரும்.
இரண்டு பேர் யுத்தம் நடந்த பகுதிகளில் சிதறிக் கிடக்கும் பொருள்களைச் சுருட்டிச் செல்ல நினைத்தார்கள். அந்த இருவரில் ஒருவன் புத்திசாலி. மற்றவன் முட்டாள். முதலில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தார்கள். அங்கே ஆட்டு ரோமம் (கம்பளி) கிடந்தது. அதை இரண்டு பேரும் மூட்டையாக கட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.
வரும் வழியில் ஜவுளி மூட்டைகள் கிடந்தன. புத்திசாலி கம்பளி மூட்டையை வீசிவிட்டு ஜவுளி மூட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். முட்டாள் கம்பளி மூட்டையோடு ஜவுளி மூட்டையையும் எடுத்துக் கொண்டு ரொம்ப சிரமப்பட்டு நடந்தான்.
சிறிது தூரம் சென்றதும் இன்னொரு இடத்தில் சட்டைகள், கோட்டுகள் போன்ற ஆடைகள் கிடந்தன. புத்திசாலி ஜவுளி மூட்டையை தூக்கிக் கடாசி விட்டு அந்த அழகிய ஆடைகளை மூட்டைகட்டி எடுத்துக் கொண்டான். அப்போது முட்டாள் இரண்டு மூட்டையையே சுமக்க முடியவில்லை இது வேறு எதற்கு என்று கிளம்பி விட்டான்.
இரண்டு பேரும் மேலும் நடந்தார்கள். வழியில் வெள்ளிப் பொருட்கள் சிதறிக் கிடந்தன. உடனே புத்திசாலி ஆடைகளின் மூட்டையைக் கீழே போட்டுவிட்டு வெள்ளிப் பொருட்களை மூட்டைக்கட்டிக் கொண்டு புறப்பட்டான். முட்டாள் தமது கம்பளி, ஜவுளி மூட்டைகளுடனே சிரமத்துடன் நடந்தான். அவன் வெள்ளியை எப்படி எடுப்பது. எதில் வைத்து எடுத்துச் செல்வது என்று விட்டுவிட்டான். தொடர்ந்து இருவரும் நடந்தார்கள்.
வழியில் தங்க நகைகள் சிதறிக் கிடந்தன. புத்திசாலி வெள்ளி மூட்டையைக் கீழேபோட்டான். உடனே தங்க நகைகளை அள்ளி மூட்டையாகக் கட்டினான். முன்னை விட படு உற்சாகமாக நடையைக் கட்டினான். முட்டாளோ கம்பளி ஜவுளி மூட்டைகளை கீழே போடவில்லை. மேலும் இதை அள்ளி எதில் போடுவது என்று நினைத்துக் கொண்டு நடந்தான். வீட்டுக்குச் செல்லும் வழியில் பலத்த மழை பெய்தது. இருவரின் முட்டைகளும் நனைந்தன.
மழையில் நனைந்து கம்பளி மூட்டை மிகவும் கனமாகி விட்டது. ஜவுளிகள் மூட்டையும் மழையில் நனைந்து கனமாகி விட்டது. அதை சுமக்க முடியாமல் மூட்டைகளை கீழே கடாசிவிட்டு முட்டாள் வெறும் கையுடன் வீட்டுக்குச் சென்றான்.
புத்திசாலியோ தான் நனைந்தபோதும் சந்தோஷமாக தங்க மூட்டையுடன் வீட்டுக்குச் சென்று வசதியாக வாழ்ந்தான்.”
- இது ரஷிய ஞானி லியோ டால்ஸ்டாய் கதை.
ஆக வாழ்க்கையில் எது முக்கியம், எது முக்கியமில்லை என்பத தெரிந்து தேவையானதை எடுத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். தேவையில்லாததைச் சுமந்து சென்று சிரமப்படாதே என்பதே இந்தக் கதை உணர்த்தும் பாடம். தேவையில்லாதது அதிகமானால் தேவையானதை இழக்க நேரிடும்.
நமக்கு எது முக்கியம் என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். எது சந்தோஷம் தரும் என்று அந்த புத்திசாலி புரிந்து வைத்திருந்தான். எனவேதான் ஒவ்வொன்றாக பரிசீலித்து எடுத்தான். மற்றதைப் போட்டு விட்டான். அவன் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லவேண்டும் என்று பேராசைப்பட்டிருந்தால் அவனால் எதையுமே எடுத்துச் செல்ல முடியாமல் போயிருக்கும்.
எனவே தனக்கு மிக அவசியமானதை எடுத்ததும் புத்திசாலி மற்றவைகளை விட்டுத் தள்ளினான். ஆனால் முட்டாள் எது தேவை எது தேவையில்லை என்பது அறியாமல் உள்ளதையும் கீழே போட நேர்ந்தது.
"உங்களுடைய சொந்த சந்தோஷத்தைக் கடந்து, நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு சேவையாகவும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனும் எண்ணி வாழ்கின்றபோது உண்மையான சந்தோஷத்தை அடைய முடியும்“ என்கிறார் லியோ டால் ஸ்டாய்.