இவங்க சொல்றது உண்மையா? பொய்யா? போலிகளை அடையாளம் காண பிலிப் டெட்லாக் கூறும் 4 வழிகள்!

political-expert-predictions-philip-tetlock
political-expert-predictions-philip-tetlockcredit AI image
Updated on
Kalki strip
Kalki strip

அப்பப்பா! ஒருவழியாக ஓய்ந்தது ஒரு அரசியல் அலை! எத்தனை பொய்கள்! எத்தனை கட்டிவிடப்பட்ட கதைகள்! எத்தனை அவதூறுகள்!

மண்டையே சுழல்கிறது.

நல்லவர்கள் கெட்டவர்களாகிறார்கள்; கெட்டவர்கள் “கடவுளாகி” விடுகிறார்கள்.

எல்லோரும் அறிஞர்கள்! எல்லோரும் அரசியல் வல்லுநர்கள்! யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “உண்மையாக்கலாம்”, உண்மையைப் பொய்யாக்கலாம்!

சமூக ஊடகங்களில் எத்தனை மணி நேரம் வீண்!

“இப்பதான் பிரதம மந்திரி என்னிடம் மட்டும் சொன்னாரு” என்று டெல்லியிலிருந்து வரும் பொய்க்குரலைக் கேட்டு ஏமாந்தவர்கள் எத்தனை லட்சம்!

இப்படி ஏமாறுவதைத் தவிர்க்க வழி உண்டா?

2005-ஆம் ஆண்டு பிலிப் டெட்லாக் என்பவர் “நிபுணர்களின் அரசியல் ஆரூடம்” என்று ஓர் ஆய்வை மேற்கொண்டார். இஷ்டத்திற்கு “அள்ளி விடுபவர்களைப்” பற்றிய ஆய்வு இது.

எதிர்காலத்தைப் பற்றிய இந்த நிபுணர்களின் ஆரூடமும் கணிப்பும் உண்மைதானா, அவற்றை நம்பலாமா என்பதே அவரது ஆய்வின் அடிப்படைக் கேள்வி.

அதற்கு ஆச்சரியகரமான ஒரு பதில் வந்தது.

"உண்மை இல்லை!"

284 அரசியல் நிபுணர்களிடமிருந்து சுமார் 28,000 அரசியல் கணிப்புகளை எடுத்து அவர் அலசி ஆராய்ந்தார்.

முடிவைக் கண்டவுடன் அவர் திகைத்தே போனார்!

கூக்குரலிட்டு கத்தி, ‘நாளையே உலகம் பாழாய்ப் போகப் போகிறது, இவர் தோற்கப் போகிறார், அவர் ஜெயிப்பார்’ என்ற கணிப்புகள் எல்லாம் பொய்யாய்ப் போயின. மிகச் சில கணிப்புகளே அதிர்ஷ்டவசமாக உண்மையாயின.

எதைப் பற்றிய கணிப்பை வெளியிடும் அறிஞராக இருந்தாலும், அவர் இந்த நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கிறாரா (political-expert-predictions-philip-tetlock) என்று பாருங்கள் என்கிறார் பிலிப்:

1. கணிப்பை எண்களில் சொல்லச் சொல்லுங்கள் 'இந்தக் கட்சி பெரும்பான்மை பெறும், அது தேறவே தேறாது' என்று அடித்துச் சொல்பவர்கள் போலி கணிப்பாளர்கள். "இவர் 150 இடங்களைப் பெறுவார், அவர் 30 இடங்களையே பெறுவார்" என்று ஒருவர் சொல்லும்போது, உண்மையான கணிப்பாளர் சற்று அடிப்படை வேலைகளைச் செய்தே ஆக வேண்டும். களத்திற்குச் சென்று நிலவரத்தை ஆராய்ந்த பின்னரே அவர் எண்களைக் குறிப்பிடுவார். இதையும் மீறி, எதிராளி "இரண்டு இடங்களே வாங்குவார்" என்று சொல்லும் போலி அறிவாளி ஒருவர், அந்த எதிராளி 108 இடங்களை வாங்கிவிட்டால் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்? அவர் ஒரு போலி என்பதற்கு அதுவே முத்திரை. இனி அவர் சொல்வதை யாராவது கேட்பார்களா?

2. கேள்வியைச் சுருக்கி, குறிப்பாகக் கேளுங்கள் "தினசரி உடற்பயிற்சி செய்தால் நான் கட்டமைப்பான உடலைப் பெறுவேனா?" என்று கேட்கக் கூடாது. "இன்றிலிருந்து தினமும் ஒரு மணி நேரம் வீதம், நான்கு வாரங்கள் உடற்பயிற்சி செய்தால் என் எடை எவ்வளவு குறையும்?" என்று குறிப்பாகக் கேளுங்கள். முதல் கேள்விக்கான பதிலை ”அளக்க” முடியாது; ஆனால், இரண்டாம் கேள்விக்கான பதிலை அளக்க முடியும். அது தவறாக இருக்கும்பட்சத்தில், அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இது உதவும்.

3. உண்மைக்கான அடிப்படை விகிதத்தைக் கேளுங்கள் ‘இதுபோல இதற்குமுன் எப்போது, யாருக்கெல்லாம் நடந்தது? அதன் பலன் அல்லது விளைவு என்ன?’ என்று கேளுங்கள். இது உண்மையின் அடிப்படையை ஆராயும் கேள்வி. "இப்போது சூழ்நிலை மாறி இருக்கிறதா? அதேபோலத்தான் இன்றும் சகல அம்சங்களும் உள்ளனவா?" என்பனவற்றைக் கேட்டால், கணிப்பு தவறாகப் போனாலும் அதன் அடிப்படையைப் புரிந்து கொள்ளலாம்.

4. ஃபெர்மி வழியைக் (Fermi Approach) கடைப்பிடியுங்கள் பிரபல விஞ்ஞானியான என்ரிகோ ஃபெர்மி கண்டுபிடித்துக் கடைப்பிடித்த வழி இது. ஒரு பிரச்சினையை ஏழு, எட்டு துண்டுகளாகப் பிரித்து உண்மையை அறிவதுதான் இந்த வழி. உதாரணமாக, "இந்த வேலையை நள்ளிரவுக்குள் முடிப்பேனா?" என்று ஒட்டுமொத்தமாகக் கேட்காதீர்கள். "இரவு 9 மணிக்கு எத்தனை பக்கங்கள் முடிப்பேன்? அதற்கு அப்புறம் எவ்வளவு முடிக்க வேண்டியிருக்கிறது? இதில் என் வேகம் அல்லது ஆற்றல் என்ன?" என்று ஒரு பிரச்சினையைப் பல சிறு துண்டுகளாக்கி விடை என்னவென்று யோசித்தால், உண்மையான பதில் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கல்லாய் போன மனிதர்கள்!
political-expert-predictions-philip-tetlock

இப்படித்தான் ஆரூடக் கணிப்புகளைச் செய்வோரையும் அலசி ஆராய வேண்டும். காசுக்காகச் சமூக ஊடகங்களில் ஆரூடம் சொல்பவர்களைக் கேட்டுக் கொண்டே இருந்தால் நமது மூளையும் பாதிக்கப்படும்; நமது பொன்னான நேரமும் வீணாகும். அவர்களின் கணிப்புகளுக்கான பலிக்கடாக்களில் நாமும் ஒருவராக மாறிவிடுவோம்.

logo
Kalki Online
kalkionline.com