பிரதமர் பதவியேற்பு விழாவும் சில சுவாரஸ்ய தகவல்களும்!

Narendra Modi
Narendra ModiImg Credit: Dailypost
Published on

மீபத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றன. இதனையடுத்து சென்ற 4ம் தேதியன்று அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கின்றன. இதனையடுத்து, இந்த மக்களவைத் தேர்தல் மூலம் நடைபெற்றிருக்கும் நடைபெறவிருக்கும் சில சுவாரசியமான விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்த பாஜகவுக்கு போதுமான இடங்கள் இல்லாத நிலையில், கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

2. ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியமைக்க வேண்டிய நிலையில் உள்ளது பாஜக.

3. பிரதமர் மோடி தலைமையிலான 17வது மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

4. அதனையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார்.

5. அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

6. இதனையடுத்து, நேற்று மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கியத் தலைவர்களாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரும் கலந்துகொண்டனர்.

7. அமைச்சரவையில் முக்கியமான துறைகளைக் கேட்டு தெலுங்கு தேசம், ஐ.ஜ.தளம் கட்சிகள் நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

8. வரும் ஜூன் 16ம் தேதியுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலம் நிறைவடைய உள்ளது.

9. இம்மாதம் ஜூன் 7ம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

10. அதைத் தொடர்ந்து ஜூன் 8ம் தேதி மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

11. இந்தப் பதவியேற்பு விழாவிற்கு இந்திய அரசியல் தலைவர்களுக்கு மட்டுமின்றி, அண்டை நாடுகளான பங்களாதேஷ் மற்றும் இலங்கை பிரதமர்களான ஷெய்க் ஹசினா மற்றும் ரனில் விக்ரமசிங்கே ஆகியோருக்கும் போன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

12. அதேபோல், நேபாள் பிரதமர் புஷ்ப கமல் மற்றும் மொரிஷியஸ் பிரதமர் ப்ரவிந்த் ஜக்நாத் ஆகியோரும் பதவியேற்பு விழாவிற்கு வருகைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் சான்சலர் ஒலஃப் ஸ்கோல்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் மோடிக்கு தங்களது வாழ்த்துத் தெரிவித்து இருக்கின்றனர்.

14. மேலும், பிரான்ஸ், நைஜீரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் அதிபர்கள் நரேந்திர மோடிக்கு தங்களது வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
‘கடவுளின் குழந்தை கையில் பிச்சை பாத்திரம்’: மோடி குறித்து ஆ.ராசா விமர்சனம்!
Narendra Modi

15. நடிகர் ரஜினிகாந்த், நடிகை கங்கனா ரானவத் மற்றும் திரையுலகைச் சேர்ந்த கரன் ஜோஹர், அனுபம்கெர், ஷாஹித் கபூர், போனி கபூர் ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகக் தெரிகிறது.

16. மேலும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், இயக்குனர் ஆனந்த் எல்,ராய் ஆகியோரின் புகைப்படங்கள் காட்சி செய்யப்படுகின்றன.

17. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் எக்நாத் ஷிண்டே ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

18. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவையொட்டி, சந்திராபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா (ஆந்திர மாநில முதல்வராக) திங்கட்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

19. இம்மாதக் கடைசி வாரத்தில் புதிய எம்பிக்களின் பதவியேற்பு நடைபெறும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com