

ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் (அமெரிக்கா ரிட்டர்ன்) சொன்னார்:
“எத்தகைய கடவுச்சொல்லையும் உடைத்து விடும் வண்ணம் குவாண்டம் கணினிகள் வந்து விட்டன.. ஏஐ வந்துவிட்டது.. இனி ரகசியம் என்று எதுவுமில்லை”.
கூகுள் ஏஐ மெனுவில் எது வேண்டுமானலும் கேளுங்கள் எனச் சொல்லியது. சரி அதுகிட்டேயே கேட்போமே.
பாஸ்வேர்டுகள் உடைக்கும் விதம் பற்றிச் சொல்லவும்... (Password hacking security tips)
அது சொன்னது..
grover’s algorithm, Shor’s algorithms என இரு வித டூல்களைப் பயன்படுத்துவார்கள். இதை முறியடிக்க குறைந்தது 25 எழுத்துக்கள், ஸ்பெஷல் கேரக்டர்கள், நம்பர்கள் கலந்து பயன்படுத்தலாம்.
சைபர் கிரிமினல் ஆட்கள் ஏஐ கருவிகள் மூலம் ஒரு நொடியில் மில்லியன் பாஸ்வேர்டுகளில் புகுந்து வெளிக்கொணர்ந்து விடுவார்கள். பெயர்கள், பிறந்தநாட்கள், வரிசையாக உள்ள எண்கள், உங்கள் பாஸ்வேர்டில் இருந்தால் விரைவில் உடைத்து விடுவார்கள்.
ஒரு தரம் பயன்படுத்திய பாஸ்வேர்டை அல்லது அதன் டிசைனில் மறுபடியும் பயன்படுத்த வேண்டாம்.. ஏஐ கருவிகள் எளிதில் படித்து உடைத்து விடும்.
கடவுச் சொற்களின் அமைப்பு மற்றும் ஏ ஐ கருவிகளால் உடைக்கக் கூடிய கால அளவை இப்படிச் சொல்கிறார்கள்.
8 எழுத்து கடவுச்சொல் - உடனடியாக உடைத்து விடும்.
10 எழுத்தில் யூகிக்கக் கூடிய கடவுச்சொல் (அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் பெயர் மற்றும் பிறந்த நாட்கள் அடங்கியது) - சில நிமிடங்கள் போதும் உடைக்க,
நீளமான சொற்றொடர் - 20 அல்லது 25 எழுத்துக்கள் - நூறு ஆண்டுகள்
கலந்து யோசித்து பாஸ்வேர்டு மேனேஜர் மூலம் உருவாக்கிய கடவுச்சொல் - பல மில்லியன் ஆண்டுகள் ஆகும்.
நான் ஒரு கேள்வி கேட்டேன்..
“ஒரு திருக்குறளின் ஈற்றடி வார்த்தை, ஒரு தமிழ் சினிமா பாடலின் முதல் வரி வார்த்தை, ஒரு இந்திப் பாட்டின் முதல் வார்த்தை, ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தின் முதல் வார்த்தை இவற்றை ஆங்கிலத்தில் பாஸ்வேர்டாக வைத்தால் குவாண்டம் கணினி ஏஐ உடைக்குமா?”
‘வாய்மை எனப்படுவது யாதெனின் குறளில் வரும் இறுதிச் சொல்’ - ‘சொலல்’
‘தமிழ் சினிமா பாட்டு எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ - அதில் ‘எங்கேயும்’
‘இந்தி பாட்டு ரூப் தேரா மாஸ்தானா’ - வில் ‘ரூப்’
‘ஸ்லோகத்தில் பரித்ராணய சாதுனாம்’ - அதில் ‘பரித்ராணய’
ஆகவே ‘solal engeyum roop parithraanaaya’ ஞாபகம் வைப்பதும் எளிது.
30 எழுத்தில் அமைந்து விட்டது.. வாங்கடா ஹேக்கர்களா!
கூகுள் பாராட்டியது.. 'யாராலும் இதை உடைக்கவே முடியாது. இதன் இடையில் கொஞ்சம் ஸ்பெஷல் எழுத்துக்கள் ஏதாவது #,@,&,%,* மற்றும் ரேண்டமாக எண்கள் 8,3,4 மாதிரி சேர்த்து விடுங்கள்.. அசைக்க முடியாது யாராலும்...'
ஒரு ஆராய்ச்சியில் கடவுச் சொற்களை நவீன குவாண்டம் ஏஐ மூலம் உடைக்க ஒரு பரீட்சார்த்த சோதனை செய்தார்கள். அந்த பரிசோதனைக்கு Pass GAN என்று பெயர். கசிந்து வெளியான பழைய கடவுச்சொற்களை அடிப்படையாக வைத்து நடத்தியதில் ஒண்ணரைக் கோடி கடவுச் சொற்களில் 51% சாதாரணமாக பரவலாக பயனில் உள்ளவற்றை ஒரு நிமிஷத்துக்கும் குறைவான டயத்தில் உடைத்து விட்டது மெஷின்.
7 எழுத்து கடின கடவுச்சொற்களைக் கூட 6 நிமிஷத்தில் உடைத்து அறிந்து கொண்டார்கள்.
வங்கிகளில் ஒவ்வொரு டேபிளில் உள்ள கணினிக்கும் ஒரு பாஸ்வேர்டு இருக்கும். ஒரு அம்மணி ஊழியருக்கு எப்போதும் பாஸ்வேர்டு மறந்து விடும்.
அதனால் அதை டெஸ்க்கில் ஓரமாக எழுதி வைத்து இருந்தார். ஒருநாள் அவசரமாக வந்து ஆன் செய்து பாஸ்வேர்டு அடிக்க முயன்றார் மறந்துவிட்டது. எழுதி வைத்ததும் அழிந்துவிட்டது. கிளீனிங் செய்த பெண்மணி தண்ணீர் தொட்டு துடைத்து விட்டார். என்ன இது பென்சில் கிறுக்கல்.
எதிரில் இருந்த வயதான கஸ்டமர் சொன்னார்.. தினமும் முதலில் வரும் பக்கத்துக்கடை ஒன்றின் கணக்குப்பிள்ளை அவர்.. “மேடம் சுதா 0625ன்னு அடிங்க.” அவர் எப்போதும் இந்த அம்மணி ஒவ்வொரு எழுத்தாக அடிப்பதை எட்ட நின்றே பார்த்துக் கணித்து இருந்தார்.
சுதா அவர் மகளின் பெயர். பிறந்தது ஜூன் 2025.
பொன்னியின் செல்வனில் பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகளில் ஒரு ஆள் தங்கள் சகா தானா என அறிய இரு கைகளையும் ஒன்றின் மேல் வைத்து கட்டை சுண்டு விரல்களை ஆட்டி மீன் நீந்துவது போல் ஜாடை காட்டுவார்கள்.. மீன் பாண்டிய நாட்டு கொடி சின்னம்.
பண்டைத் தமிழகத்தில் குழூஉக்குறி, மங்கலம், இடக்கரடக்கல் இவை அக்காலத்தில் உபயோகத்தில் இருந்த பாஸ்வேர்டு அமைப்பாகும். ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் ரகசியமாக செய்தி பரிமாறிக் கொள்ள பயன்படுத்துவார்கள்.
மாட்டுச் சந்தைகளில் மாட்டின் விலை பேச இருவர் ஒருத்தர் கை ஒருவர் பிடித்து மேலே துண்டை போர்த்தி விரல்களைத் தொட்டு சங்கேதமாக விலை பேசுவது வழக்கம்.
‘மங்கலம்’ – ‘ஒரு அமங்கலமான விஷயத்தை வேறு சொல்லால் உணர்த்துவது’.
‘விளக்கை அணை’ என்பதற்கு ‘குளிர வை’ என்பார்கள்
‘கறுப்பு ஆடு’ - ‘வெள்ளாடு’ எனப்படும்
‘செத்தார்’ என்பது ‘துஞ்சினார்’ எனக் குறிக்கப்படுவது.
‘குழூஉக்குறி’ - ‘பொன்னை கொல்லர்கள் பறி’ என்பார்கள்
‘ஆடைக்கு காரை’ என பாகர்கள் சொல்வது.
இந்த மூன்றும் தமிழ் இலக்கணத்தில் தகுதி வழக்கு என்ற பிரிவில் வரும்.. இது தொல்காப்பிய காலத்துக்கும் பழமையானது. இதுதான் பாஸ்வேர்டுக்கு அடிப்படை.
அம்மணிகள் ‘வசம்பு’ எனச் சொல்லாமல் ‘பெயர் சொல்லாதது’ எனச் சொல்லி வாங்குவார்கள்.
அந்தக்காலத்தில் பாட்டிகள் தாத்தா பெயரைச் சொல்ல மாட்டார்கள்.. கணவன் பெயரைச் சொல்வது என்பது ஒரு தப்பு. ஆகையால் யாரும் கேட்டால் மறை பொருளாகச் சொல்வது வழக்கம்.
ஒரு சர்வேக்கு ஒரு அதிகாரி ஒரு கிராமத்துக்குப் போனார். பெண்கள் பெயர் சொல்லி விட்டார்கள். வயது மட்டும் பத்து வருஷம் குறைத்துச் சொன்னார்கள்.
ஒரு பாட்டியிடம் கணவன் பெயர் கேட்டதுக்கு, புடவை கறுப்பு பார்டரைக் காட்டி, மேலே கும்பிட்டார்.
“ஓ கருப்பசாமியா”... “ஆம்” என்றாள்.
இன்னொரு பெண்மணி நெற்றியில் மூணு விரலால் கோடு போட்டு கும்பிட்டாள் “ஓ ராமசாமி”
“சரி” என்றாள்.
இன்னொரு அம்மணி ரூபா நோட்டைக் காட்டி அதில் இருந்த காந்தியைக் காட்ட “காந்தி யா?”
“இல்லே அவரோட சின்ன வயசு பெயர்.”
“ஓ மோகன் தாஸ்”
“கரெக்ட்” என்றாள்.
இப்படியாக ஒரு தெரு சர்வேக்கு இரண்டு நாள் ஆனது.
அந்த ஆபீஸர் தெரிந்த முக்கியஸ்தர் மூலம் மாற்றல் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்குப் போய்விட்டார் என்பது வேறு சமாச்சாரம்!