

இன்றைய காலத்தில் வீட்டுக்கு வரும் நண்பர்களோ அல்லது உறவினர்களோ, "வாங்க, உட்காருங்க" என்று நாம் சொல்வதற்கு முன்பே, "உங்க வீட்டு வைஃபை பாஸ்வேர்ட் என்ன?" என்றுதான் கேட்கிறார்கள். இது ஒரு தர்மசங்கடமான நிலைமை. ஒன்று, நம் பாஸ்வேர்ட் மிக நீளமாக, சிக்கலானதாக இருக்கும்; அதை ஒவ்வொரு எழுத்தாகச் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
அல்லது, பாஸ்வேர்டை மற்றவர்களிடம் சொல்ல விருப்பம் இருக்காது. இந்தக் கவலையெல்லாம் இனி வேண்டாம். உங்கள் வாயால் பாஸ்வேர்டை சொல்லாமலே, அவர்கள் போனில் இணையத்தை இணைக்க நவீனத் தொழில்நுட்பம் சில எளிய வழிகளை வைத்திருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்.
QR கோட்!
இதுதான் இருப்பதிலேயே மிகவும் சுலபமான வழி. இன்றைக்கு வரும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இந்த வசதி இருக்கிறது. உங்கள் போனில் வைஃபை செட்டிங்ஸ் பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே நீங்கள் இணைந்திருக்கும் வைஃபை பெயருக்குப் பக்கத்தில் அல்லது அதைத் தொட்டால் 'Share' என்ற ஆப்ஷன் வரும். அதைத் தொட்டவுடன் உங்கள் போன் திரையில் ஒரு க்யூ.ஆர் கோடு தோன்றும். உங்கள் நண்பரை அவரது போனில் ஸ்கேனர் மூலம் அதை ஸ்கேன் செய்யச் சொன்னால் போதும், பாஸ்வேர்ட் டைப் செய்யாமலே நொடியில் வைஃபை கனெக்ட் ஆகிவிடும்.
ஐபோன் பயனர்கள்!
வீட்டுக்கு வந்தவர் கையில் ஐபோன் இருக்கிறதா? உங்களிடமும் ஐபோன் உள்ளதா? அப்போ விஷயம் இன்னும் ஈஸி. இரண்டு போன்களிலும் ப்ளூடூத் ஆன் செய்திருங்கள். அவர் உங்கள் வைஃபை பெயரைத் தேர்ந்தெடுத்தாலே போதும், உங்கள் போனில் "பாஸ்வேர்டை பகிரலாமா?" என்று ஒரு மெசேஜ் வரும். நீங்கள் 'Share' என்று கொடுத்தால் போதும், பாஸ்வேர்ட் தானாகவே அவர் போனுக்குப் போய்விடும். அவருக்கு அந்த எழுத்துக்கள் கண்களுக்குத் தெரியாது, ஆனால் நெட் கனெக்ட் ஆகிவிடும்.
Guest Network!
பாதுகாப்பு ரொம்ப முக்கியம்னு நினைப்பவர்களுக்கு உங்க ரூட்டரிலேயே 'கெஸ்ட் நெட்வொர்க்' (Guest Network) என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இதை ஆன் செய்தால், உங்க வீட்டுக்குனு ஒரு வைஃபை, வந்தவங்களுக்குனு ஒரு தனி வைஃபை லைன் உருவாகிவிடும். வந்தவர்களுக்கு அந்தத் தனி லைனுக்கான பாஸ்வேர்டை மட்டும் கொடுக்கலாம். இதனால் உங்களுடைய முக்கியமான பாஸ்வேர்ட் ரகசியமாகவே இருக்கும்.
பழைய போன் மற்றும் ஹாட்ஸ்பாட்!
சிலர் பழைய மாடல் போன் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு க்யூ.ஆர் கோடு வேலை செய்யாது. அதற்காக, கூகுளில் இலவசமாக இருக்கும் இணையதளங்களைப் பயன்படுத்தி, உங்கள் பாஸ்வேர்டுக்கான ஒரு க்யூ.ஆர் கோடை உருவாக்கி, அதை பிரிண்ட் எடுத்து ஹாலில் ஒட்டி விடலாம். வருபவர்கள் ஸ்கேன் செய்து கொள்ளட்டும். இதுவும் செட் ஆகவில்லை என்றால், உங்கள் மொபைல் டேட்டாவில் 'ஹாட்ஸ்பாட்' ஆன் செய்து, அதற்கு ஒரு ஈஸியான பாஸ்வேர்ட் வைத்துக் கொடுங்கள். வேலை முடிந்ததும் ஆஃப் செய்துவிடலாம்.
இனிமேல் வீட்டுக்கு யார் வந்தாலும், பாஸ்வேர்டை தேடித் தேடி டைப் செய்யும் கடுப்பு வேண்டாம். கெத்தாக உங்கள் போனை எடுத்து, அந்த க்யூ.ஆர் கோடை மட்டும் காட்டுங்கள். பாதுகாப்பாகவும் இருக்கும், அதே சமயம் ஸ்மார்ட்டாகவும் இருக்கும்.