

தென்னகச் சக்கரவர்த்தி!
கடல் அல்ல சமுத்திரம் என்றும்,
அலை அல்ல ஆழிப்பேரலை என்றும்,
அரசர் அல்ல சக்கரவர்த்தி என்றும்
சொல்லும் போதே சிறப்பு விளங்கும்!
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்றும்,
மூதறிஞர் ராஜாஜி என்றும்
எளிமையாக ராஜாஜி என்றும்
ஆங்கிலத்தில் சி.ஆர்.,(C.R.,)என்றும் அழைக்கப்பட்ட இவரின் வரலாறு, வளமானது. வாயைப் பிளக்க வைப்பது!
94 வயது வரை வாழ்ந்த தொரப்பள்ளி ராஜகோபால் வகித்த பதவிகள் ஏராளம்!
- இந்தியாவின் கடைசித் தலைமை கவர்னர்(Governor General of India)
- இந்திய தேசீய காங்கிரசின் தலைவர்
- சென்னை மாகாண முதல்வர்
- சென்னை மாநில முதலமைச்சர்
- மேற்கு வங்க ஆளுநர்
- மத்திய அரசின் உட்துறை அமைச்சர் என்று, பல பதவிகளுக்கு மெருகேற்றியவர்.
பதவிகள் ஒரு புறம் என்றால் மறுபுறத்தில்,
- வழக்கறிஞர்
- எழுத்தாளர்
- விடுதலைப் போராட்ட வீரர்
- பாடலாசிரியர் என்று பன்முகத் தன்மை காட்டியவர்!
குறை ஒன்றுமில்லை, மறை மூர்த்தி கண்ணா! என்ற பக்திப்பாடல் இவரால் எழுதப்பட்டு 1967 ல் கல்கி இதழில் வெளியானது. இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் பாடப்பட்டு, இறவாப் புகழை எய்தியது!
ஆங்கில இலக்கியத்திற்கு அரும்பணி ஆற்றியுள்ளார். தமிழில் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை மொழி பெயர்த்துள்ளதுடன் மேலும் பல நவீனங்களையும் படைத்துள்ளார்.
கல்கி மற்றும் டி.கே.சி.,யுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தி, தமிழ் இலக்கியத்திற்கு அருந் தொண்டாற்றினார்.
1954ல் பாரத ரத்னா விருதும், 1958ல் சாகித்ய அகாதமி விருதும் இவரைத் தேடி வந்தன.
நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1959ல் சுதந்திராக் கட்சியைத் தொடங்கினார். 1967ல் திராவிடக் கட்சிகள் அரியணை ஏற இவர் கட்சியும் துணை புரிந்தது. ஆம்! சுதந்திராக்கட்சி கூட்டணியுடனே அண்ணா அரியணை ஏறினார்.
எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் ஈ.வெ.ரா., வுடன் இறுதி வரை நட்பு பாராட்டினார் அண்ணல் ராஜாஜி. இவர் மகள் லட்சுமி, காந்தியின் மகன் தேவதாசைக் கை பிடித்தவர்!
மது விலக்கைக் கடைப்பிடிக்கத் தன் கடைசி மூச்சு வரை போராடியவர். கொட்டும் மழையில், அப்போதைய முதல்வர் கருணாநிதியின் இல்லம் சென்று மதுவிலக்கைக் கை விட வேண்டாமென்று கோரிக்கை வைத்தவர்.
வர்ண பேதத்தை ஒழிக்கவும், சாதிய வேறுபாடுகளைக் களையவும் அயராது உழைத்தார். இறைவன் உறையும் ஆலயத்தில் எல்லோருக்கும் இடமுண்டு என்று கூறி அனைவரும் ஆலயம் நுழைய பல ஏற்பாடுகளைச் செய்தவர் ராஜாஜி!
ஆலயப் பிரவேச சட்டம், மதுவிலக்குச் சட்டம், விவசாயக் கடன் நிவாரணச் சட்டம் போன்ற பல சட்டங்களைத் தன் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த மாமேதை இவர்.
ஆதி திராவிடர்களையே பெரும்பாலும் தன் உதவியாளர்களாக வைத்துக் கொண்டதுடன், தன் மந்திரி சபையில் அச்சமூகப் பிரதிநிதிகளுக்கு உயர் பதவிகள் கொடுத்துக் கௌரவிக்கவும் இவர் தயங்கியதே இல்லை!
திருச்சானூர் ஆலயத்திற்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குக் கீழ் நீதிமன்றம் ரூ 75/- அபராதம் விதிக்க, மேல் கோர்ட்டில் அதனை எதிர்த்து வாதாடி, புராண, வேத, இலக்கிய உதாரணங்களையெல்லாம் கோர்ட்டில் எடுத்துக் கூறி, அபராதத்தை வாபஸ் பெறச் செய்தவர் சி.ஆர்.
சென்னையின் முன்னாள் கவர்னர் லார்ட் எர்ஸ்கைன், லண்டனில் கிழக்காசியக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், ‘இந்தியாவில் எனது நண்பர் ராஜாஜி ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் ஒரு துளி ரத்தமோ, எவ்வித இழப்போ இன்றி, நீண்ட கால அநீதிக்கு முடிவு கட்டினார்!’ என்று கூறியது ராஜாஜி அவர்களின் தலைக்குச் சூட்டப்பட்ட மகத்தான கிரீடம்!
அவர் வழியில் ஆணித்தரமாகப் பயணித்திருந்தால் இன்றைக்கு நாட்டில் வலம் வரும் சாதிகள் ஒழிந்திருக்கும்; ஆணவக் கொலைகளும் இல்லாது போயிருக்கும்! மதுவரக்கன் பல பெண்களின் தாலியைப் பறிக்க மாட்டான்!
புரட்சிகள் பலவற்றை மௌனமாகவே ஏற்படுத்திச் சாதித்த அவரின் நினைவு தினம் (25-12-1972) இன்று.
‘ராஜ ரிஷி’ யாக வாழ்ந்த அவரின் நல்கொள்கைகளைப் பின்பற்றி நடப்போம்!
சாதியில்லாத சமுதாயம் அமைப்போம்!
ஆணவக் கொலைகள் விடுத்து அமைதிக்கு வழி வகுப்போம்!