

இந்தியாவிற்கும், பிரிட்டனுக்கும் இடையே அறிவியல் உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சியாக 'ராமானுஜன் ஜூனியர் ஆராய்ச்சியாளர்கள் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அறிவியல் ஆய்வாளர்கள், லண்டன் கணித அறிவியல் நிறுவனத்தில், முன்னணி பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபடுவதற்கு உதவி செய்கிறது. இதற்கான நிதி உதவியை இந்தியாவின் அறிவியல் மட்டும் தொழில்நுட்பத் துறை (DST – Deapartment of Science and Technology) மேற்கொள்ளும்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மின் இந்திய வருகையின் போது இந்த முயற்சி அறிவிக்கப்பட்டது. இந்திய கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மற்றும் பிரிட்டிஷ் கணித மேதை ஜி.ஹெச்.ஹார்டி இடையே ஏற்பட்ட நட்பு கணித உலகில் வியத்தகு சாதனைகளை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட நட்பு இராமானுஜனை 1913ஆம் வருடம் இங்கிலாந்திற்கு அழைத்து வந்தது. இரு கணித மேதைகளின் கூட்டு நுண்ணறிவு நவீன கணிதத்தில் மைய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த இருவரிடையே ஏற்பட்ட நட்பின் நினைவாக, இந்த திட்டத்திற்கு இராமானுஜன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. இன்றும் அவர் வகுத்த “பிரித்தல் கோட்பாடு” தானியங்கி பணம் கொடுக்கும் செயலியில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
இந்த திட்டத்திற்கு அரசின் அங்கீகாரம் பெறுவதற்கு, பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனர் விக்ரம் துரைசாமி முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு இதற்கான ஆதரவு தந்தவர் இந்திய அரசின் முன்னாள் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணசாமி விஜயராகவன்.
“எங்கள் ராமானுஜன் ஜூனியர் ஆராய்ச்சியாளர்கள் திட்டம் இரண்டு அறிவியல் வல்லரசுகளுக்கு இடையே திறமைகளை பரிமாறிக் கொள்வதற்கான சாதகமாகப் பயன்படும்” என்கிறார் லண்டன் கணித அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் தாமஸ் ஃபிங்க். அவர் மேலும் சொன்னார், “ஹார்டியும் ராமானுஜனும் கூட்டாக செய்த பணிகள் கணித அறிவியலை மாற்றியமைத்தன. ரஷ்யா மற்றும் உக்ரைன் கோட்பாட்டாளர்களுடன் எங்கள் பெல்லோஷிப் வெற்றியைத் தேடித் தந்தது. இந்த வெற்றி இந்தியாவின் திறன் படைத்த மனங்களை எங்களுடன் சேர்ந்து பணி செய்வதற்கு வரவேற்க எங்களுக்கு உத்வேகம் அளித்தது.”
இந்த பெல்லோஷிப் இரண்டு கட்டங்களாக செயல்படும்.
முதல் கட்டத்தில், “ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்திலிருந்து (JNCASR – Jawaharlaal Nehru Centre for Advanced Research) முனைவர் பட்டம் பெற்ற ஆறு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்கள் “ராமானுஜன் ஜூனியர் விசிட்டர்” என்ற பெயருடன் நியமிக்கப்பட்டு, லண்டன் மேஃபேரில் உள்ள லண்டன் கணித அறிவியல் நிறுவனத்தில் (LIMS – London Institute of Mathematical Sciences) பல மாதங்கள் மூத்த அறிவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். இந்த கால கட்டத்தில் அவர்கள் விரிவுரைகளில் கலந்து கொள்வது, ஆராய்ச்சிக்கான யோசனைகளை உருவாக்குவது, கடினமான ஆராய்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துவது என்று பணியாற்றுவார்கள்.
இரண்டாம் கட்டமாக “ராமானுஜன் ஜூனியர் பெல்லோஷிப்கள்” என்ற பெயரில் இந்த திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் கோட்பாடு இயற்பியல் மற்றும் ஆரம்ப கால கணித ஆராய்ச்சியாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் பெல்லோஷிப் அளிக்கப்படும். இவர்கள் லண்டன் கணித அறிவியல் நிறுவனத்தில் மூன்று ஆண்டு காலம் முழு நேர ஆராய்ச்சியாளர்களாகப் பணி புரிவார்கள். இவர்கள் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து புதிய சுயாதீன திட்டங்களை உருவாக்குதல், தொடர்ச்சியான ஆராய்ச்சிகளில் பங்கு பெறுதல் ஆகிய பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
இந்த நிறுவனம் உச்ச செயல் திறன் மற்றும் முழு நேர ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகிறது. பல நோபல் விருதுக்கு தகுதியானவர்களை உருவாக்கியுள்ளது. பத்து வேதியல் கூறுகளைக் கண்டறிந்துள்ளது. மின்காந்தவியல் கொள்கை இந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்பு.