மேற்படிப்புக்கான சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

NAAC
NAAC

பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிப் படிப்பிற்காக முயற்சித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளுக்கான கல்லூரி, சிறந்த கல்லூரிதானா? என்ற சந்தேகம் எழுவது இயல்பே. இந்நிலையில், தாங்கள் சேர்க்கை பெற விரும்பும் கல்லூரி, இந்திய அரசின் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழு வழங்கும் A++, A+, A, B++, B+, B, C என்று ஏழு வகையான சிறப்புக் குறியீடுகளில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்கிறதா? என்பதை வைத்து அந்தக் கல்லூரியின் மதிப்பீட்டை நாமும் அறிந்துகொள்ள முடியும். அதன்பிறகு, அந்தக் கல்லூரியில் சேர்க்கை பெறுவது குறித்து முடிவு செய்யலாம்.

தரக்குறியீடுகள்:

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு, அவற்றைத் தரவரிசைப்படுத்தும் அமைப்பான தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழு (National Assessment and Accreditation Council - NAAC), இந்தியாவிலிருக்கும் உயர் கல்வி நிறுவனங்களின் தர மதிப்பீட்டுக்கேற்ப, அக்கல்வி நிறுவனங்களுக்கு A++, A+, A, B++, B+, B, C என்று ஏழு வகையான சிறப்புக் குறியீடுகளை வழங்கி வருகிறது.

நோக்கம் மற்றும் செயல்பாடு:

1986ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைக்கேற்ப, கல்வியின் தரக் குறைபாடுகளைக் களையும் வகையில் 1994ஆம் ஆண்டில், பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு, ‘தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழு’ (National Assessment and Accreditation Council - NAAC) எனும் அமைப்பு அமைக்கப்பட்டது.

இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு வழங்கும் நிதியுதவியில் செயல்படுத்தப்பட்டு வரும் இவ்வமைப்பானது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பு, சுய மற்றும் வெளிப்புற மதிப்பீடு, பதவி உயர்வு மற்றும் வாழ்வாதார முயற்சிகள் ஆகியவற்றுக்கு இந்தியாவின் உயர்கல்வியும் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் எனுமளவில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலான பார்வையினைக் கொண்டிருக்கிறது.

உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது அதன் அலகுகள் அல்லது குறிப்பிட்ட கல்வித் திட்டங்கள் அல்லது திட்டங்களுக்கு அவ்வப்போது மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் வழங்க ஏற்பாடு செய்தல், உயர்கல்வி நிறுவனங்களில் கற்றல் - கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்துவதற்கான கல்விச் சூழலைத் தூண்டுதல், உயர்கல்வியில் சுய மதிப்பீடு, பொறுப்புக்கூறல், சுயாட்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல், தரம் தொடர்பான ஆராய்ச்சி ஆய்வுகள், ஆலோசனை மற்றும் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்தல் மற்றும் தர மதிப்பீடு, பதவி உயர்வு மற்றும் வாழ்வாதாரத்திற்காக உயர்கல்வியின் மற்ற பங்குதாரர்களுடன் ஒத்துழைத்தல் போன்ற பணிகளை இவ்வமைப்பு செய்து வருகிறது.

College Application
College Application

விண்ணப்பம்:

தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கோரி விண்ணப்பிக்கும் உயர்கல்வி நிறுவனம் தொடங்கப் பெற்று, இரண்டு தொகுதி (Batch) மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து வெளியேறி இருக்க வேண்டும் அல்லது கல்வி நிறுவனம் தொடங்கி ஆறு ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும்.

மத்திய அரசு (Central Government)/மாநில அரசு (Universities) (State Government) / தனியார் (Private) / நிகர்நிலை (Deemed-to-be) பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்கள் (Institutions of National Importance) ஒரு பிரிவாகவும், தன்னாட்சிக் கல்லூரிகள் (Autonomous Colleges) / தொகுதிக் கல்லூரிகள் (Constituent Colleges) / பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரிகள் (Affiliated Colleges) ஒரு பிரிவாகவும், தரமதிப்பீடு, மறு மதிப்பீடு அல்லது அதற்கு அடுத்து வரும் சுழற்சிகள் (சுழற்சி 2, சுழற்சி 3, சுழற்சி 4) மதிப்பீட்டிற்கு விண்ணப்பங்களைச் செய்யலாம்.

மூன்று நிலைகள்:

தரச்சான்று பெற விண்ணப்பிக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நிலையிலான செயல்பாடுகள் தேவையானதாக இருக்கின்றன. முதல் நிலையில், விண்ணப்பிக்கும் உயர்கல்வி நிறுவனம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவின் தரப்படுத்தல் விதிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் நிறுவனத்தைத் தயார்படுத்திக் கொண்டு சுயஆய்வு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டாம் நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதைத் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவினால் அமைக்கப்பட்ட இணைக்குழு கல்வி நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, அதனடிப்படையில் பரிந்துரைகளை வழங்குகிறது. மூன்றாம் நிலையாக, இணைக்குழுவின் பரிந்துரையினை முழுமையாகப் பரிசீலித்து, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழு அமைப்பின் செயற்குழுவானது உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர மதிப்பீட்டை வழங்குகின்றன.

அளவுகோள்கள் மற்றும் மதிப்பீடுகள்:

விண்ணப்பித்த உயர்கல்வி நிறுவனத்தின் பாடத்திட்டக் கூறுகள் (Curricular Aspects), கற்பித்தல் கற்றல் மற்றும் மதிப்பீடு (Teaching Learning and Evaluation), ஆய்வுகள், புதுமைகள் மற்றும் விரிவாக்கம் (Research, Innovations and Extension), உள் கட்டமைப்புகள் மற்றும் கற்றல் வளங்கள் (Infrastructure and Learning Resources), மாணவர் ஆதரவு மற்றும் முன்னேற்றம் (Student Support and Progression), ஆளுமை, தலைமை மற்றும் மேலாண்மை (Governance, Leadership and Management), நிறுவன மதிப்புகள் மற்றும் சிறந்த பயிற்சி முறைகள் (Institutional Values and Best Practices) எனும் ஏழு வகையான அளவுகோள்களைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை - கருப்புக் காரில் குழந்தை கடத்தல்!
NAAC

மதிப்பீட்டு முடிவுகள்:

குழுவின் அறிக்கை, அளவுகோள் அளவீடுகளீன் முக்கியத்துவம் மற்றும் நிறுவனத்தின் தரத் தாள் எனும் மூன்று பகுதிகளைக் கொண்ட ஆவணமாக மதிப்பீட்டின் முடிவுகள் தொகுக்கப்படுகின்றன. இம்மூன்றினையும் கொண்டு, தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தின் (Information and Communications Technology - ICT) அடிப்படையில் உயர்கல்வி நிறுவனத்தின் தரச்சான்றுக்கான மதிப்பீடு செய்யப்படுகின்றது. அதன் பிறகு, உயர்கல்வி நிறுவனங்கள் பெற்ற ஒட்டு மொத்தத் தரப் புள்ளிச் சராசரி (Cumulative Grade Point Average - CGPA) அளவினைக் கொண்டு, ஏழு வகையான உயர் கல்வி நிறுவனத்திற்கான தரச்சான்று வழங்கப்படுகிறது. அவை;

• 3.51 முதல் 4.00 வரை – A++ - தரமுடையது.

• 3.26 முதல் 3.50 வரை – A+ - தரமுடையது.

• 3.01 முதல் 3.25 வரை – A – தரமுடையது.

• 2.76 முதல் 3.00 வரை – B++ - தரமுடையது.

• 2.51 முதல் 2.75 வரை – B+ - தரமுடையது

• 2.01 முதல் 2.50 வரை – B – தரமுடையது.

• 1.51 முதல் 2.00 வரை – C – தரமுடையது.

• 1.50 மற்றும் அதற்கு குறைவு – D – தரமற்றது.

மேற்காணும் 7 வகையான தரச்சான்று பெற்ற கல்வி நிறுவனங்களில் மொத்தத்தில், (19-5-2023 ஆம் நாள் வரை) பல்கலைக்கழகங்கள் – 820, கல்லூரிகள் – 15501 என்று மொத்தம் 16321 கல்வி நிறுவனங்கள் இவ்வமைப்பின் தரச்சான்றினைப் பெற்றிருக்கின்றன. (இந்தப் பட்டியல் மாறுபடக்கூடியது)

கல்வி நிறுவனங்களின் தரக் குறியீடுகள் பற்றி தெரிந்துகொண்ட நாம், மேற்படிப்புக்காக கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும்போது இத்தகவல்களை மனதில் நிறுத்தி சரியான முடிவை எடுப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com