

இசையுலகின் நிலா எஸ். ஜானகி…
மௌனமான குரல், முடிவில்லா இசை, எழுதாதே என் பேனாவே… இனி இரங்கல் செய்திகளை எழுதாதே. சில நாட்களாக உன் நுனியில் மை இல்லை; கண்ணீர்தான் வழிகிறது.
வாழ்த்துகளையும் வெற்றிகளையும் பதிவு செய்வதற்காகப் பிறந்த உன்னை, தொடர்ந்து பிரிவுகளின் வரலாற்றை எழுத வைத்துவிட்டது காலம்.
கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை தமிழ்க் கலை உலகம் நம்மை அமைதியாக அழவைத்திருக்கிறது. முதலில் காட்சிகளால் பேசத்தெரிந்த இயக்குனர் இமயம். அடுத்து திரைக்கதைக்கு புதிய இலக்கணம் படைத்த திரைக்கதை மன்னன். இன்று, ஒரு தலைமுறையின் இதயத்துடிப்பாக ஒலித்த இசையுலகின் நிலா, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், மெல்லிசை ராணி, முடிசூடா இசைப்பேரரசி எஸ். ஜானகி.
இது ஒரு கலைஞரின் மறைவு பற்றிய செய்தி அல்ல. நமது வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் நம்மோடு நடந்துசென்ற ஒரு குரல், இனி புதிதாகப் பிறக்காது என்பதை ஏற்றுக்கொள்ள இயலாத வேதனை.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திரையிசையின் வானில் ஒளிர்ந்த அந்த இனிய குரல், மொழிகளின் எல்லைகளைத்தாண்டி மனங்களின் மொழியாக மாறியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொங்கிணி, துளு, சௌராஷ்டிரம், வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள். இது ஒரு சாதாரண சாதனை அல்ல; ஒரு மனித வாழ்நாளில் நிகழ்த்தப்பட்ட உயிர்ச்சாதனை.
தேசிய விருதுகள், மாநில அரசுகளின் பாராட்டுகள் என அங்கீகாரங்கள் அலைபோல் வந்து குவிந்தன. ஆனால் மிகவும் தாமதமாக வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை ஏற்க மறுத்த அந்த ஒரு முடிவில், கலைஞரின் சுயமரியாதை எந்தப் பதக்கத்தையும் விட உயர்ந்தது என்பதை அவர் இந்தியாவுக்கே உணர்த்தினார்.
2016-ஆம் ஆண்டு திரைப்பாடல்களிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். ஆனால் குரல்கள் ஓய்வு பெறுவதில்லை. சில குரல்கள் நினைவுகளுக்குள் குடியேறிவிடுகின்றன. இந்த மண்ணின் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு வானொலியிலும், ஒவ்வொரு விழாவிலும், ஒவ்வொரு தனிமையிலும் இன்னும் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
எண்பதுகளில் இசைஞானி இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், இசைப்பேரரசி ஆகிய மூவரின் இசைக் கூட்டணி ஒரு தலைமுறையின் வாழ்வியலை வடிவமைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல. காதலின் முதல் பரவசம் முதல் பிரிவின் கடைசிக் கண்ணீர் வரை, மகிழ்ச்சியின் சிரிப்பு முதல் தனிமையின் மௌனம் வரை, மனித மனத்தின் எல்லா பரிமாணங்களுக்கும் அந்தக் கூட்டணி இசை மொழி தந்தது.
எஸ். எம். சுப்பையா நாயுடு, கே. வி. மகாதேவன் ஆகிய இசை மேதைகளின் காலத்திலிருந்து இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான், இன்றைய தலைமுறையின் அனிருத் வரை பல தலைமுறைகளின் இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய பெருமை இவருக்கே உரியது. காலங்கள் மாறின; இசையின் வடிவங்கள் மாறின; ஆனால் அந்தக் குரலின் இனிமை மட்டும் மாறவில்லை. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தாமே எழுதி, இசையமைத்து, பாடிய பக்திப் பாடல்களும் அவரது பன்முக ஆளுமைக்கு அழியாத சான்றுகள்.
"சிங்காரவேலனே தேவா…" என்று நாதஸ்வர இசையோடு அவரது குரல் ஒன்றிணைந்தபோது, அது ஒரு திரைப்படப் பாடலாக இல்லாமல், இசை வழியே நிகழ்ந்த ஒரு ஆன்மிக அனுபவமாக மாறியது.
"அன்னக்கிளியே உன்னைத் தேடுதே…" என்று கிராமத்து மண்ணின் மண்வாசனையை இசையாக்கிய குரல், அதே திரைப்படத்தில் "மச்சானைப் பாத்திங்களா", "அடி ராக்காயி" போன்ற பாடல்களின் வழியாக நாட்டுப்புற இசைக்கும் புதிய உயிர் ஊட்டியது.
"செந்தூரப்பூவே…" பாடலில் திரையில் கதாநாயகி ஊஞ்சலாடினாள். ஆனால் உண்மையில் ஊஞ்சலாடியது ஒரு தலைமுறையின் இதயங்கள்தான். அந்த ஊஞ்சல் இன்னும் நிற்கவில்லை.
"காற்றில் எந்தன் கீதம்…" காற்றுக்கே இசை இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்று உணர்த்திய அற்புதம். ஒவ்வொரு சொல்லையும் மூச்சின் மென்மையால் வருடி, ஒவ்வொரு ஸ்வரத்தையும் இதயத்தின் ஆழத்தில் இறக்கி வைத்த அந்தக் குரல், மௌனத்திற்குக்கூட ஒரு மெட்டு உண்டு என்பதை உணர்த்தியது.
"ஊரு சனம் தூங்கிருச்சு…" என்று இரவு முழுவதையும் இசையாக்கியதும், "குயிலே கருங்குயிலே…" என்று தூது அனுப்பியதும், "உன்னை எண்ணி நானே…" என்று ஏக்கத்தை உருகவைத்ததும், "ஒத்தையிலே அத்தமக…" என்று தவிப்பைத் துடிக்க வைத்ததும் ஒரே குரல்தான்.
ஒரு பெண்ணின் மனதில் சொல்லப்படாமல் தேங்கியிருக்கும் காதல், காத்திருப்பு, ஏக்கம், பிரிவு, ஆற்றாமை, பரிதவிப்பு, புலம்பல், மெல்லிய நாணம், தாய்மை, பக்தி இத்தனை நுண்ணிய உணர்வுகளுக்கும் உயிர் கொடுத்த குரல் அது. அவர் பாடல்களைப் பாடவில்லை; மனித மனத்தின் மொழியைப் பாடினார்.
அதனால்தான் அவரைப் பற்றிப் பேசும்போது நமக்கு முதலில் நினைவுக்கு வருவது விருதுகள் அல்ல; நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு மாலைப்பொழுது, ஒரு மழைநேரம், ஒரு காதல், ஒரு பிரிவு, ஒரு தாலாட்டு, ஒரு கோயில் மணி ஓசை… அவற்றின் பின்னணியில் மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்த அந்தக் குரல்தான்.
மனிதர்கள் காலத்தை விட்டு மறைந்துவிடலாம். ஆனால் காலத்தையே இசையால் நிரப்பிய குரல்கள் ஒருபோதும் மறைவதில்லை.
இசையுலகின் நிலா இன்று நம் கண்களுக்கு மறைந்திருக்கலாம். ஆனால் நிலவு மறைந்த பின்னரும் அதன் ஒளி பூமியை வருடுவதுபோல, கானக்குயிலின் குரல் இன்னும் தலைமுறைகளின் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
சில குரல்கள் பாடுவதற்காகப் பிறப்பதில்லை; ஒரு தலைமுறையின் நினைவாக வாழ்வதற்காகப் பிறக்கின்றன.
மனிதர்களின் வாழ்நாள் முடிவடையலாம். ஆனால் சில குரல்கள் காலத்தின் ஆயுளைப் பெற்றுவிடுகின்றன. அவை வானொலிகளில் மட்டும் ஒலிப்பதில்லை; மக்களின் நினைவுகளில் தலைமுறைகள் கடந்து எதிரொலிக்கின்றன.
இசையுலகின் நிலா இன்று நம் பார்வையைவிட்டு மறைந்திருக்கலாம். ஆனால் அவர் குடிகொண்ட இசைநிலவு இனி ஒருபோதும் தேயாது.
இசைப்பேரரசி எஸ். ஜானகி மறைந்திருக்கலாம்;
அவரது குரல் மட்டும் இன்னும் காலத்தையே பாடிக் கொண்டிருக்கிறது.
காற்று வீசும் வரை…
மழை பெய்யும் வரை…
காதல் மலரும் வரை…
தாய் குழந்தையைத் தாலாட்டும் வரை…
பக்தி மனித இதயங்களில் நிலைக்கும் வரை…
அந்தக் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்…
இந்தத் தொகுப்பின் வாயிலாக, எண்பதுகளின் பொற்காலம் தொட்டு இன்று வரை உங்கள் வாழ்வின் ஒவ்வொரு உணர்வோடும் கலந்திருந்த ஒரு உன்னதக் குரலின் பயணத்தை மறுவாசிப்பு செய்து, இசை உங்களை எவ்வாறு செதுக்கியது என்ற ஆழமான ஆன்மீக மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவத்தை நீங்கள் அடைவீர்கள்.