சிறுகதை – காரணம்!

ஓவியம்; ஜெயராஜ்
ஓவியம்; ஜெயராஜ்

-ஆர். வெங்கடேஷ்

"சீக்கிரமா வந்து குளிங்களேன். பாத்ரூம் காலியாயிருக்கு.."

ரஞ்சனி குரல் கொடுத்தாள். கோபாலன், கலாவோடு உட்கார்ந்திருந்தான். கலாவுக்கு கணக்கு வராது. பக்கத்தில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.

"கலாவையும் கூட்டிட்டு வாங்க..."

"மேத்ஸ் பண்ணிட்டிருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணு."

''பாத்ரூம்ல யாராச்சும் போயிடுவாங்க. குளிப்பாட்டி உட்டுட்டு, சீக்கிரம் குளிங்க..."

குளித்துவிட்டு என்ன செய்ய? யாரையாவது போய்ப் பார்க்க வேண்டும். அக்கவுண்ட்ஸில் 12 வருடம் சர்வீஸ். எந்தக் கணக்கை எப்படியும் மாற்ற முடியும். அதிலெல்லாம் நான் சூரன். எனக்கு வேலை கொடுங்கள். கெஞ்ச வேண்டும். உனக்கு மேல் நான் சூரன், போடா என்று விடலாம்.

"இன்னும் குளிக்கப் போகலியா?"

 ரூமில் எட்டிப் பார்த்தாள் ரஞ்சனி.

இவன் தலைநிமிர்ந்தான்.

"போறேன்... இரு"

"என்ன, என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கவே மாட்டீங்களா? நீங்களும், அவளும் குளிச்சு துணியைப் போட்டாத்தானே நான் தோச்சுப் போட்டுட்டுக் கெளம்ப சரியாயிருக்கும்? மணி வேற ஓடிக்கிட்டே இருக்கு. என்ன மனுஷனோ...”

"ஆமா, இப்போ குளிச்சுட்டு என்ன பண்ணப் போறேன்?"

"ஒண்ணும் பண்ணப் போறதில்லைங்கறதுக்காக, அப்படியே உட்கார்ந்துக்கிட்டிருப்பீங்களா. அப்போ, உங்க துணியை நீங்கதான் தோச்சுக்கணும்!”

அசந்தர்ப்பமாய் வார்த்தை வந்து விழுந்துவிட்டது. எரிச்சல். இரண்டரை மாத எரிச்சல். கூடவே காலை அவசரமும் இணைந்துவிட்டது. நரசம்மாவை வேலையிலிருந்து நிறுத்திவிட்டதிலிருந்து எரிச்சல் இன்னும் ஓவர்டோஸ்.

நரசம்மா பெரிய துணை. துணி, பாத்திரம், மொஸைக் துடைத்தல் எல்லாம் அவள் டிபார்ட்மெண்ட். ஒரு சம்பளம் மட்டுமே என்றானபோது, அவள் நிறுத்தப்பட்டாள்.

"நாம ரெண்டு பேருமே செஞ்சுப்போம். அடுத்த வேலை கெடச்சு செட்டில் ஆனவுடனே, திருப்பியும் அவளைக் கூப்பிட்டுக்கலாம்."

கோபாலன் சொன்னதுதான் நியாயமாகப்பட்டது. பேப்பர், கேபிள் டீ.வி. போன்ற உபரி செலவு கட்டுப்பாட்டில் இதுவும் ஒரு அங்கமானது.

"அம்மா பவுடர் போடு..."

கலா துண்டைக் கட்டிக்கொண்டு நின்றாள்.

"குளிச்சாச்சாடி கண்ணு? அப்பா குளிக்கறாங்களா?"

"ம்..."

பவுடர் போட்டு, ஸ்கூல் கவுனை மாட்டிவிட்டாள். அப்புறம் வேலை சரசரவென பறக்கத் துவங்கியது. கோபாலன் பேசவில்லை. கலாவை ஸ்கூலில் விட்டுத் திரும்பினான். ரஞ்சனி போவதையும் பார்த்துக்கொண்டிருந்தான். எதுவும் சொல்லவில்லை.

நெரிசல் அவ்வளவாயில்லை. இன்னும் ஒன்றிரண்டு ஸ்டாப்பிங்குக்குப் பின் சீட் கிடைத்தாலும் கிடைக்கலாம். கம்பியோரம் சாய்ந்துகொண்டாள் ரஞ்சனி. மீண்டும் கோபாலன் ஞாபகமே வந்தது.

எல்லாம் திமிர். வேகம். கல்யாணம் ஆகி, ஒரு குழந்தை இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால், பவ்யம் வந்திருக்கும். சண்டை வந்திருக்காது. பன்னிரெண்டு வருட வேலையை விட்டு விட்டு வந்திருக்கத் தோன்றாது. அப்படித் தோன்றியது என்றால் என்ன அர்த்தம், திமிர் தவிர? வேலை கிடைக்காமலா போய்விடும்? அதுவும் என் பன்னிரண்டு வருட சர்வீஸ் சாமர்த்தியத்துக்கு என்ற பேச்சு. தொட்டாற்சிணுங்கி. எப்படி பனிரெண்டு வருடம் ஒரே கம்பெனியில் குப்பை கொட்டினார் என்பதே ஆச்சரியம்.

பிடிக்காமல்தான் இருந்தார். வாய்ப்புக்காகக் காத்திருந்தார் என்றுதான் தோன்றுகிறது. எந்த அலுவலகத்தில் பிரச்னை இல்லாமல் இருக்கிறது? ஆனால், எல்லாமே இவருக்கு பூதாகாரமானவை. அதைவிட, தான்தான் புத்திசாலி என்ற நினைப்பு வேறு.

ராமசாமி உருவில் வாய்ப்பு வந்தது. சண்டை போட்டுவிட்டு, டைப் பண்ணி ரெசிக்னேஷனைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.

"திறமையிருக்கறவனுக்கு எங்கே போனாலும் வேலை உண்டும்மா, பாரு, எம்.டி.யே ஓடி வரானா இல்லியான்னு."

யாரும் வரவில்லை. வீணான சண்டை என்றுதான் வழியில் பார்த்த கெளரி சொன்னாள். இவர் ஏதோ செலவுகளை, வேறு வேறு எண்ட்டிரிகளாய் மாற்றிப் போட, ராமசாமி கேள்வி கேட்க, திமிராய் பதில். 'இதை இப்படித்தான் அக்கவுண்ட் பண்ணணும்னுகூட தெரியாதவனை யெல்லாம் அக்கவுண்ட்ஸ் சீப்பா போட்டா உருப்படுமா கம்பெனி!'

இதையும் படியுங்கள்:
கோடைகாலத்தில் சருமம் அழகு பெற சில டிப்ஸ்!
ஓவியம்; ஜெயராஜ்

கம்பெனி, ராமசாமி பக்கம்தான் நின்றது. பெரிய தவறைக் கண்டுபிடித்து விட்டதாகக்கூட பாராட்டினார்களாம். இருக்கலாம். இவர் செய்வது பலதும், எல்லா நேரமும் சரியாயிருப்பதில்லை. குறைந்தபட்சம் சண்டை போடாமலிருந்திருக்கலாம். அம்மா, ஐயா என்று காலில் விழுந்தாவது வேறு துணை நிறுவனங்களுக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கலாம். எம்.டி.க்கும், கோபாலன் மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

பஸ்ஸின் இறங்கு படியிடம் போய் நின்றுகொண்டாள். அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும். இன்னும் பதினைந்து நிமிடம் இருக்கிறது. சீக்கிரமாகத்தான் வந்து விட்டோம்.

"என்னம்மா, இப்படி வர?"

திரும்பிப் பார்த்தாள். ராமசாமி. ஒன்றிரண்டு முறை வீட்டுக்கு வந்திருக்கிறார். ஞாபகம் இருந்தது.

"நீங்க எப்படி சார், இந்த பஸ்ல?"

"இங்க ஒரு கிரகப்பிரவேசம். அவசரமா போயிண்டிருக்கேன்."

சந்தோஷமாய் இருந்தது. பழையது நினைவில் வைத்துக்கொள்ளாமல் சரளமாய்ப் பேசுகிறார். இப்படி ஒரு மனுஷனோடவா இவர் சண்டை போடுவார்?

பஸ் நிற்க, ராமசாமியும் இறங்கினார்:

"எப்படி இருக்கார் உங்க ஹஸ்பெண்ட்?"

மெல்லச் சிரித்தாள். என்ன சொல்வது? அக்கறையோடு விசாரிக்கிறார்.

"வீட்டுலதான் சார் இருக்காரு!"

"வேற எதுவும் கெடைக்கலியா?"

இல்லையெனத் தலையாட்டினாள். "அப்போ நீதான் பாரம் சுமக்கறியா?" தலையாட்டினாள்.

"கஷ்டந்தான். எனக்கு ஒண்ணும் மனசில இல்லன்னு வெச்சிக்கோ. காப்பி சாப்பிடலாமா?"

மணி பார்த்தாள்.

"நேரம் இருக்கோல்லியோ. போலாமோன்னோ?"

போகலாம். அவசரமில்லை. லேட்டானால் ஹெச்.எம்.மிடம் சொல்லிக்கொள்ளலாம். முதல் பீரியடும் இல்லை.

மின்விசிறிக்குக் கீழே அமர்ந்துகொண்டார்கள். காப்பி போதுமென்றாள் ரஞ்சனி.

"வருத்தமாதான் இருக்கும். என்ன பண்றது? பெரியவாளுக்கு மரியாதை கொடுக்கணும்னு தெரியணும். ஆபீஸ் முழுக்க சண்டைதான். எவனாவது இவனை நல்லவன்னு சொல்லச் சொல்லு பார்க்கலாம்." காப்பி வந்தது. குடிக்கத் துவங்கினார்கள்.

"நான் ஒண்ணும் பெரிசா கேட்டுடலை. ஏண்டாப்பா, இப்படி மாத்தி எண்ட்ரி போட்டு அட்ஜஸ்மெண்ட் வேலையெல்லாம் பண்றேன்னேன். சண்டைக்கு வந்துட்டான்!"

செய்திருப்பார். காப்பி தம்ளரைக் கீழே வைத்தாள்.

"சண்டை போடாம இருந்தாலாவது, ஏதாவது பண்ணலாம். இப்பவும் ஒண்ணும் குடி முழுகிப் போயிடலை. என்னை வந்து பாக்கச் சொல்லேன். இந்தக் கம்பெனி இல்லன்னா, ஆயிரம் கம்பெனி. நான் சொல்றேன். உன்னைப் பார்க்கறச்சேவே கஷ்டமான்னா இருக்கு. என்னமா இருந்தவ. எளச்சு போனாப் போல இருக்கியே? சரியா சாப்பிடறதில்லியா?"

அப்பாகூட இவ்வளவு அன்பாய்க் கேட்டதில்லை. கண்ணோரம் நீர் திரண்டுவிட்டது. கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"அழாதம்மா. அவன் நல்ல டேலண்டட் ஆள்ம்மா. என்கிட்ட அனுப்பிவை. நான் சொல்றேன், என்ன பண்ணலாம்னு. வீணா மனசைப் போட்டுக் கொழப்பிக்காதே. நான் இருக்கேனோல்லியோ?"

ன்ன மிஸ், உங்க ஹஸ்பெண்ட் பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாரா?"

ஜோதி டீச்சர். டிபன் பாக்ஸிலிருந்து ரஞ்சனி தலைநிமிர்த்தினாள்.

''இன்னும் பைனான்ஸ் செட்டில் ஆகலை."

"இரண்டு மாசத்துக்கு மேல ஆவுதுல்ல?"

வெறுமனே தலையாட்டினாள். மரியாதைக்குச் சொன்ன பொய். பிசினஸ் ஆரம்பிக்கப் போகிறார். அதனால்தான் வேலையை விட்டு விட்டார். மேலே மேலே இப்போது பொய்யைத் தொடர வேண்டும்.

"எங்க ரிலேடிவ் ஒருத்தர் இருக்காருங்க. அவுரு பைனான்ஸ் வாங்கித் தரது, போக்குவரத்து எல்லாம் பாத்திட்டிருக்காரு. அவர வேணா வரச் சொல்லட்டுங்களா."

"இன்ட்ரஸ்ட் எவ்ளோ இருக்கும்?"

"நமக்கு அதெல்லாம் தெரியாதுங்க. சும்மா வீட்டுக்கு வருவாரு. எங்க வீட்டுக்காரர் பக்கச் சொந்தம். நல்ல மனுஷன்."

"இல்ல. இப்போது வட்டி நெறைய கேக்கறாங்க. அதான் பிரச்னை. இவருகூட ரெண்டு மூணு பேரை காண்டாக்ட் பண்ணாரு. அப்புறம்,  இப்போ பேங்க்ல டிரை பண்ணிட்டிருக்காரு."

எவ்வளவு சரளமான பொய்கள்? வெட்கமாக இருந்தது. பரிதாபமாக இருந்தது. தன் நிலை இவ்வளவு தாழும் என்று நினைத்ததில்லை. எல்லாம் சீக்கிரம் நடந்துவிடும் போல்தான் தோன்றியது. என்னவோ மறு மாசமே வேறொரு வேலை கிடைத்துவிடும்போல் பேசினார். அவ்வளவு சுலபமில்லை என்பது போகப் போகத்தான் தெரிந்தது.

பேப்பரில் விளம்பரம் கூடக் கொடுத்தார். தம் திறமையையும், அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ளும்படி. யாரும் பதிலே போடவில்லை. அதுதான் நிலைமை. ஆனால், அவரால் அதை ஏற்க முடியவில்லை. யார் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பார்கள் சண்டைக்காரனை?

வேறு வழியே இல்லை. ராமசாமியைத்தான் போய்ப் பார்க்கச் சொல்ல வேண்டும். நிச்சயம் முரண்டு பிடிப்பார். சமாளித்து விடலாம். நிலைமை சொல்லி. இரண்டரை மாத வெறுமை நிச்சயம் மனதை மாற்றியிருக்கும். மாறவில்லை யென்றால்? இல்லை. மாற்றியே ஆக வேண்டும்.

இனி இந்தப் பொய்கள், அவமானங்கள் தாங்க முடியாது. இதைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வேறு வார்த்தையில்லை. வாழ்வதற்கு மானம் முக்கியம். அதற்கு சொந்த வேலை, சம்பளம், கெளரவம் அவசியம். நாலு பேர் மதிப்பது அவசியம். கோபங்களை மூட்டை கட்டு. பவ்யம் பழகு. ராமசாமியைப் போய்ப் பார்.

அழுதேனும் சாதித்து விட வேண்டும்.

டேரங்க கத்தரிக்காய் வாங்கிக்கொண்டாள். எண்ணெயில் வாட்டி துவையல். கோபாலனுக்குப் பிடிக்கும். அங்கேயிருந்துதான் விஷயத்தை ஆரம்பிக்க வேண்டும். ரங்கநாதன் தெரு இடித்துக்கொண்டிருந்தது. கலாவுக்கு புடலங்காய்த் துண்டு வாங்கிக்கொண்டாள். இடிகளைச் சமாளித்தபடி நடக்கத் துவங்கினாள்.

என்ன ஆனாலும் பரவாயில்லை. குடும்பத்துக்காக விட்டுக் கொடு என்று கேட்க வேண்டியதுதான்.

"ஏய், பார்த்து போக மாட்ட..."

விகாரமாய்க் குரல் வரவே,  அரண்டு போய்ச் சட்டென நின்றாள். திரும்ப, பாஷா!

"ஐயோ.... நீங்களாம்மா, சாரி.... யாரோன்னு..."

கோபாலன் ஆபீஸ் பியூன். சைக்கிளிலிருந்து இறங்கினான்.

இதையும் படியுங்கள்:
வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கவனிக்க வேண்டியவை!
ஓவியம்; ஜெயராஜ்

"ஐயா எப்படிம்மா இருக்காரு... பாப்பா?"

- மெல்லப் புன்னகைத்தாள். கூட நடக்கத் துவங்கினான்.

"வேலைக்குப் போறாருங்களா?"

"பாத்துக்கிட்டு இருக்காரு.''

"காலையிலே ராமசாமி சாரைப் பாத்தீங்களா?"

மெல்லச் சிரித்தான். என்னவோபோல் இருந்தது.

"ஹோட்டலுக்கு எல்லாம் போனீங்களாம்?"

"ஆமா, அதுக்கென்ன?"

"இல்ல, சொன்னாரு."

மறுபடி இளித்தான்.

"ஆபீஸ் புல்லா அதான் பேச்சு இன்னிக்கு. கூப்ட்ட எடத்துக்கெல்லாம் வருவீங்கன்னு..."

தவறு சட்டென உறைத்தது. வேறு ஏதோ அர்த்தமல்லவா இதற்கு? கோபம் கொப்பளித்தது.

"எவன்டா சொன்னது?"

பாஷா திகைத்தான். ரஞ்சனி கண்கள் கலங்குவது, என்னவோபோல் தோன்றியது.

"ராமசாமி சார்தாம்மா. அவுருதான் எல்லார்கிட்டேயும் சொன்னாரு. அவரை உங்களுக்கு நல்ல பழக்கமாம். சிரிச்சு சிரிச்சு பேசுவீங்களாம். நான் கூட்டா வராளா இல்லியான்னு பாருடான்னு சொல்லிட்டிருந்தாரும்மா."

அதிர்ச்சியாய் இருந்தது. ஜீரணிக்க முடியவில்லை. தொண்டையைத் துக்கம் இறுக்கியது.

"முன்ன இதுபோல சொல்லி, தகராறு ஆயிதானம்மா, சாரு ரிசைன் பண்ணாரு? தெரியாதுங்களா உங்களுக்கு?"

மற்றுமொரு அதிர்ச்சி. இரண்டரை மாதமாய் இதைச் சொல்லாமலா புழுங்கிக்கொண்டிருக்கிறார்? கண்ணீர் வழியத் துவங்கியது. இந்த முறை அதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பின்குறிப்பு:-

கல்கி 16  அக்டோபர் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com