சிறுகதை - ராசாத்திக்கு நன்றி!

ஓவியம்; ஜெயராஜ்
ஓவியம்; ஜெயராஜ்

-என். பாஸ்கர்

"என்னங்க, சிவராஜ் உங்களைத் தேடிக்கிட்டு வந்தாரு" என்று வீட்டினுள் நுழையும்போதே சொன்னாள் உமா. தலையை மட்டும் ஆட்டியபடி பாத்ரூமுக்குக் கை கால் கழுவச் சென்றேன்.

"நீங்க அவரிடம் கடன் ஏதேனும் வாங்கியிருக்கீங்களா?" என்று கவலையுடன் கேட்டபடி பின் தொடர்ந்தவளை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, முகத்தில் தண்ணீரை விட்டுக் கழுவினேன். பக்கத்து ஊர் வரை சென்று வந்த கசகசப்பு, முகத்தில் நீர்பட்டதும் மறைந்து, கொஞ்சம் மலர்ச்சி ஏற்பட்டது. இன்று கடைக்கு விடுமுறை. அதனால் கொஞ்சம் ஓய்வாய் இருக்கலாம். துண்டால் முகத்தையும், உடம்பையும் துடைத்தபடி ஹாலில் வந்து அமர்ந்தேன்.

"காப்பி கொண்டு வாயேன் உமா " என்றேன் அயர்ச்சி முழுதும் விலகாத குரலில்.

ரெடியாய் வைத்திருந்திருப்பாள் போலும். உள்ளே போன நிமிடத்திலேயே காப்பியுடன் வந்தாள். சர்க்கரை லேசாகத் தூக்கலாய் இருந்தது. கசப்பும், இனிப்புமாய்க் கலந்த கலவை. சூடாய் உள்ளே போனதும் ஒரு சுறுசுறுப்பு.

அது வரை அருகில் நின்றவள், "சொல்லுங்க" என்றபடி அமர்ந்தாள். காற்றில் படபடக்கும் காலண்டராய் என் மனது... எத்தனை நாள் மறைக்க முடியும்? இவளுக்கும் விஷயம் தெரிந்திருப்பது நல்லதுதான். இவள் மூலமாய் வந்த சீதனம்தானே இந்தக் கடை. உண்மையில் பார்த்தால் இவள்தான் முதலாளி.

பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கும்போது, சுமைதாங்கிக் கல்லாய் வந்தார் என் மாமா. பெண்ணையும் கொடுத்து, மளிகைக் கடையையும் ஆரம்பித்து, வியாபாரம் செய்ய முதலையும் கொடுப்பதாக என் பெற்றோரிடம் ஆசை காட்டினார். அவரும் மளிகை வியாபாரிதான்.

மளிகைக் கடை வேலையா என்ற என் தயக்கத்தை உமாவின் அழகும், வாழ்க்கையின் புரிபடாதபோக்கும்,  பெற்றோரின் வற்புறுத்தலும் கரைத்துவிட்டன.

இந்த ஊரில் மளிகைக் கடை வைத்துக் கொடுத்து தனிக்குடித்தனம் நடத்தச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டனர் அனைவரும்.

ஆரம்பத்தில் ஜோராய்த்தான் இருந்தது. திடீர்ப் பணப்புழக்கம், முதலாளி அந்தஸ்து,  அழகான இளம் மனைவியின் நாணம், தடைசொல்ல யாருமில்லாத தனிக் குடித்தனம் ... தலை நிமிர்ந்து நடந்தேன், சிறிது நாள். கடந்த ஆறு மாதமாய் வியாபாரம் டல்லடித்தது. ரோஜாப்பூ பாதை மறைந்து, நெருஞ்சி முள் பாதத்தைக் குத்த ஆரம்பித்தது.

இதையும் படியுங்கள்:
இங்கே ஒரு பாம்பு கூட இல்லையாம்... ஆச்சரியமாக இருக்கா?
ஓவியம்; ஜெயராஜ்

சிவராஜ் எனது தூரத்துச் சொந்தம். வட்டிக்குப் பணம் கொடுத்துக் கொழிப்பவர்.

கொஞ்சம் பணம் கடன் வாங்கிப் போட்டு மீண்டும் நிமிர முயற்சி செய்தேன். ஆனால் இறக்கம் தொடர்கிறது.

உமாவிடம் சொன்னேன் எல்லாவற்றையும்.

"எவ்வளவு கடன் வாங்கினீங்க?" என்றாள் கண்களை விரித்துக் கவலையாய்.

'ஏழாயிரம் ரூபாய்" என்ற என்னை மிரட்சியுடன் பார்த்தாள்.

"கவலைப்படாதே, சமாளிச்சுடலாம்" என்று ஆறுதல் சொன்ன என் குரல் பிசிறடித்தது.

சிவராஜைப் பார்க்கக் கிளம்பினேன்.

சிவராஜ் கையில்லாத பனியனும், வேட்டியும் அணிந்திருந்தார். சாய்வாக ஈசிச்சேரில் சாய்ந்திருந்தார்.

அப்போதுதான் சாப்பிட்டிருப்பார் போலும். வாயில் வெற்றிலை.

நான் இன்னும் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது.

“வாப்பா” என்றார் கொழு கொழுத்த குரலில்.

"நீங்க வீட்டுக்கு வந்ததா உமா சொன்னா...."

"ம், ம்! வியாபாரம் எப்படிப் போகுது?"

"பரவாயில்லை."

''அரிசிமில் கோபாலுக்கு இந்த மாசம் பணம் வரலியாமே" என்றார் கேள்விக் குறியுடன்.

அவரிடம் நான் கடன் வைத்திருப்பதைக்கூட தெரிந்து வைத்திருக்கிறாரே!

"அ... அது... பணத்தை நாளைக்குக் கொடுத்துடுவேன். ஒரு செக் வரதுக்குத் தாமதம் ஆயிடுச்சு."

இதையும் படியுங்கள்:
சப்பாத்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!
ஓவியம்; ஜெயராஜ்

"பொய் சொல்லாதேப்பா. இதோ பாரு, நானும், நீயும் சொந்தக்காரங்க. அந்த உரிமையிலே சொல்றேன். வியாபாரம் நல்லாப் போச்சுன்னா செய். இல்லை, ஏறக்கட்டிடு. இல்லேன்னா, கடன் ஏறி மென்னியை முறிக்கும். பிசினஸ்னா தனி சாமர்த்தியம் வேணும்," என்று என்னை உறுத்துப் பார்த்தார்.

மேலே எதுவும் பேசத் தோன்றாமல் கிளம்பினேன்.

சித்திரை வெயிலின் தகிப்பு மனத்தில் எரிக்க, வீட்டுக்குப் போக மனசில்லாமல் நடந்தேன்.

"ஐயா, கிளி ஜோசியம் பார்க்கறீங்களா?" என்று குரல் தடுக்கவே பார்த்தேன். சற்றுத் தள்ளி ஓரமாய் மரநிழலில் ஓர் ஆள் அமர்ந்திருந்தான். கீழே சிறிய விரிப்பு. அருகில் கிளிக் கூண்டு.. சீட்டுக்கட்டாய் ஜோசியக் கட்டு.

இதுவரை கிளி ஜோசியம் பார்த்ததில்லை. பார்த்தால் என்ன....?

அருகில் போய் அமர்ந்தேன்.

"ராசாத்தி கண்ணு, ஐயா உன்னைத் தேடி வந்திருக்காரு. அவர் பாரு மனசு குளிரும்படி சீட்டு எடுத்துக் கொடு" என்று சொல்லியபடி கூண்டைத் திறந்து விட்டான்.

"கீ, கீ' என்ற குரலுடன் கீழே சிதறிக் கிடந்த நெல்லைக் கொத்தியது கிளி. பிறகு என் முகத்தைப் பார்த்தது. மடமடவென,  அடுக்கியிருந்த சீட்டுக்களை கலைத்து, ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்தது.

"மவராசி, உள்ளே போம்மா ராசாத்தி" என்று அவன் கொஞ்சியவுடன் கூண்டுக்குள் சென்றது.

சீட்டைப் பிரித்தான். நான் வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தை மட்டுமே காட்டினேன், அந்த ஜோசியத்தில் நம்பிக்கையில்லாமல்.

"ஐயா, சிக்கல் சிங்காரவேலன் வந்திருக்காரு. யோகம்தான்."

"ப்ச்" என்றேன் அலுப்பாய்.

''ஐயா, இப்ப நான் சொல்றது முருகன் மேலே சத்தியம். கடந்த ஒரு வருஷமா உங்க வாழ்க்கையிலே இறங்கு முகம். அதனால ஒரு சலிப்பு. ஆனால் அதெல்லாம் இரண்டே மாசத்துல நீங்கப் போகுது. முருகன் அருள் கிடைக்கப் போகுது" என்றவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

"நிஜமாவா சொல்ற?"

"என் தொழில் மேலே ஆணையாச் சொல்றேன்."

''ஏம்பா, கிளி ஜோசியம் என்ன பெரிய தொழிலா? ஒரு நாளைக்குப் பத்து ரூபாய் கிடைக்குமா இதுல? இதுமேலே ஆணை இட்டு நம்பச் சொல்றியே?" என்றேன் அவனை மடக்க நினைத்து.

"ஐயா, நீங்க என்னைத் திட்டுங்க, பரவாயில்லை. என் தொழிலை அவமதிக்காதீங்க.செய்யற தொழில்தான் தெய்வம். அதுல நாம காட்டும் அக்கறையும், துடிப்பும்தான் செல்வம்" என்றான் பட்டென்று.

எனக்குள் ஊதுபத்தியால் சுட்டமாதிரி இருந்தது.

"மத்தவங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான் இதை நம்பிக்கையோட செய்யறேன். என்னோட நம்பிக்கை என் வாக்கிலும் வருது. அதனால் ஜோசியம் கேட்கறவங்க நம்பறாங்க. நீங்க கூட முதலில் ஆர்வம் காட்டலே. நான் குறி சொன்னதும் அக்கறை வந்ததா இல்லையா?"

மடக்க நினைத்த நானே மடங்கி விட்டேன்.

"தினசரி எனக்கு முப்பது ரூபாய் கிடைக்குது."

"அப்படியா?" என்றேன் ஆச்சர்யமாய்.

''எல்லாம் நம்ம கையிலேதான் இருக்குது" என்றவனிடம், ஐந்து ரூபாய் நோட்டை நீட்டினேன்.

"ராசாத்தி ஐயாவுக்கு வணக்கம் சொல்லு" என்றான் முகம் முழுக்கச் சிரிப்பாய். கிளி 'கீ, கீ' என்றது.

என்ன எளிமையாய் என் தோல்வியின் காரணத்தை விண்டு வைத்துவிட்டான் இவன்!

என்னை நானே ஆராய்ந்தேன்.

இதையும் படியுங்கள்:
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபேஷியல் மசாஜ் தேவையா? அதை செய்தாலும் பலன் கிடைக்குமா?
ஓவியம்; ஜெயராஜ்

பட்டப்படிப்பு படித்துவிட்டு மளிகைக் கடை வேலையா என்ற தயக்கம், என் தொழிலில் என்னை முழுமையாய் ஈடுபாடு கொள்ள விடாமல் தடுப்பதை உணர்ந்தேன். அந்தத் தயக்கத்தின் சங்கிலியாய் அக்கறையின்மை, அதனால் நினைத்தால் கடைக்கு விடுமுறை விடுவது, அதன்மூலம் வாடிக்கையாளரை இழந்தது என்ற யதார்த்தங்கள் வலம்வர தலை சிலுப்பிக்கொண்டேன்.

இதுதான் என் வாழ்க்கை. எந்தத் தொழிலும் கேவலமில்லை.

ஞானமாய் மனத்தில் உண்மை உறைக்க இறுக்கம் தளர்ந்து மனம் லேசானது. புது நம்பிக்கை ஊற வீட்டை நோக்கி நடந்தேன்.

உமா வாசலிலேயே நின்றிருந்தாள் கவலையுடன்.

''ராசாத்தி, முகம் ஏன் வாடிப் போயிருக்கு?"

''ராசாத்தியா? என்ன இது புதுசா?" என்றாள் வியப்புடன்.

என் குரலில் தெரிந்த உற்சாகம் கண்டு, அவள் வியப்பு புன்னகையாய் மாறுவதை ரசித்தபடி நின்றேன்.

பின்குறிப்பு:-

கல்கி 13  செப்டெம்பர் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com