சிறுகதை; காதல் பலி

Short Stories in Tamil
ஓவியம்; ஜெ…
Published on

-கிருஷ்ணா

சேரில் அமர்ந்தபடி ஏதோ டைரியை புரட்டிக் கொண்டிருந்த ரேணுகாவை, அறையின் வாசலிலிருந்து கவனித்தான் ரகு.

ஆறுநாள் முன்பு கைப்பிடித்த ரோஜா. முள்ளில்லாத ரோஜா.

பூனை நடை நடந்து, அவள் பின்புறம் சென்று, புறங்கழுத்தில் முகம் பதித்து உரசினான்.

"ஸ்! கதவு திறந்திருக்கு'

சிணுங்கிய மனைவியை விஷமமாய்ப் பார்த்தான்.

"கதவை மூடிடவா?"

"பகலிலேயேவா? சரியான பெண்டாட்டிதாசன்னு இப்பவே கிண்டலடிக்கறா உங்க அக்கா''

"அவ கிடக்கா. கல்யாணமான மூணு மாசமும், அத்தானே கதின்னு கிடந்தது எனக்குத் தெரியாதா? என்ன இது மரிக்கொழுந்து வாசனை? உன் மேலேயிருந்தா வருது?"

''ச்சூ! என்ன இது, தமிழ்ப் பட ஹீரோ மாதிரி மூக்காலே வாசம் பிடிக்கறீங்க?"

"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டான்னு பார்க்கறேன்"

அவள் மடியிலிருந்து டைரி கீழே விழுந்தது. குனிந்து எடுத்தாள்.

"என்ன எழுதறே டைரியிலே? 'அந்த' அனுபவங்களையா?"

"சீய்ய்!"

டைரியை புரட்டிப் பார்த்தான்.

"என்ன இது? ஏதோ தேதியா போட்டு இனிஷியல் மட்டுமிருக்கு?''

"எனக்கு நெருங்கின உறவுகள், தோழிகளோட பிறந்த நாள், திருமண நாளை எழுதி வைச்சிருக்கேன். முடிஞ்சா நேரில் போய் வாழ்த்துவேன். இல்லேன்னா வாழ்த்து அனுப்புவேன்."

"நல்ல பழக்கம்தான். அடாடா, வந்த விஷயத்தை மறந்துட்டேனே!"

"என்ன?"

"நம்ம ஹனிமூன் திட்டம்தான். நாளை மறுநாள் கொடைக்கானல் போறோம். அஞ்சு நாள் ஸ்டே. ஜாலிதான்"

அவன் கண் சிமிட்டவும், அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

"உங்களிடம் ஒண்ணு கேட்கணும்"

டைரியைப் பிரித்தபடி சொன்னாள்.

"நாளைக்குக் காலையில எங்க வீட்டுக்குப் போகலாமா?"

''போச்சுடா, அதுக்குள்ளே அம்மா ஏக்கமா?"

"அதில்லை. நாளைக்கு தேதி பதினேழு ஏப்ரல் பதினேழு"

"அதுக்கென்ன? அடேடே, உங்க வீட்டுல யாருக்காவது பிறந்த நாளா? டைரியைக் கொடு''

இதையும் படியுங்கள்:
உலகில் 10 பேரில் ஒருவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு! பசியில்லா உலகத்தைக் காண முடியுமா?
Short Stories in Tamil

வாங்கிப் பார்த்தான்.

"என்ன இது 'நரேந்திரன்'னு போட்டு சுழிச்சிருக்கு? யாரு அந்த நரேந்திரன்?"

"எங்க காலனியிலே குடியிருந்த பையன்,"

“பையனா?"

"ஆமாம். இங்கிருந்து ஒரு மணி நேரம் பயணம்தானே எங்க ஊரு. போகலாமா நாளைக்கு?"

கெஞ்சும் குரலில் கேட்டவளை உற்றுப் பார்த்தான்.

அவள் கண்களில் காதலோ, கபடமோ இல்லை. இரக்கம் மட்டுமே தெரிந்தது.

"யார் இந்த நரேந்திரன்? இப்ப எங்கிருக்கான்?"

டபடப்பாய் கேட்டவனுக்கு, உடனே பதில் சொல்லாமல், தரையை வெறித்தாள். டைரியை மூடி வைத்தாள்.

''நீங்க காதலிச்சிருக்கீங்களா?"

மனைவியிடமிருந்து எழுந்த கேள்வி அவனை திடுக்கிட வைத்தது.

"அப்படியானால் ரேணுகா காதலித்திருக்கிறாளா?'

அவன் உடலுக்குள் இயக்கங்கள் 'ட்ராபிக் ஜாம்' ஆயின. முள் உள்ள ரோஜாதானா இவள்?

'அந்த ஏழு நாட்கள்' படம் விர்ரென்று மனசுக்குள் பிரிண்ட் ஓடியது.

"நீங்க இன்னும் பதில் சொல்லலே? உங்களுக்கு காதல் அனுபவம் உண்டா?"

"இல்லை! உனக்கு?"

நடுங்கியது குரல். மூளையின் செல்கள் ஸ்தம்பித்து நின்றன அவள் பதிலுக்கு.

''நானும் யாரையும் காதலிச்சதில்லே''

ஜில்லென்று அருவி பாய்ந்தது அவனுக்குள்.

"ஆனால், காதலிக்கப்பட்ட அனுபவம் உண்டு!"

அருவி நீர் சட்டென ஐஸ் பாறையாய் மாறிப்போனது.

"என்ன சொல்ற ரேணு?"

"நான் காதலிச்சதில்லே யாரையும். ஆனால் நரேன் என்னை உயிருக்குயிராய் காதலிச்சிருக்கான்னு தெரிஞ்சது."

அவளுக்குள் நரேந்திரனின் உருவம் உருவெடுத்தது, பேசும் சித்திரமாய்.

"ரேணுகா, இதோ பாரு"

முழுக்கை சட்டையின் கைப்பகுதியை விலக்கிக் காண்பித்தான், நரேந்திரன்.

ஆங்கில 'ஆர்' எழுத்து பச்சை குத்தப்பட்டிருந்தது.

"ஆர் ஃபார் ரேணுகா " என்று சொல்லி, சிரித்தவனை கோபத்துடன் பார்த்தாள்.

"நரேன், நீ என்ன முட்டாளா? எதுக்கு இப்படி கோமாளி மாதிரி நடந்துக்கற?"

"கோமாளியோ, பேமானியோ, நான் உன் அபிமானி! அனுமார் மாதிரி நெஞ்சைக் கிழிச்சுக் காண்பிக்கவா?"

இதையும் படியுங்கள்:
சிறுகதை; தள்ளித் தள்ளி நீ இருந்தால்!
Short Stories in Tamil

"எதுக்கு?"

"உன் உருவம் அதுலே தெரியும். நீ பார்க்கத்தான்.

''ரப்பிஷ்!"

"இல்லை ரேணு. என் காதல் தெய்வீகமானது."

"அப்ப ஏதாவது தெய்வத்தைப் போய் காதலி, ஆண்டாள்மாதிரி"

"ப்ளீஸ் ரேணுகா, என் காதலை ஏத்துக்க!"

விடாமல் துரத்தியவனை எரிச்சலுடன் பார்த்தாள்.

"இதோ பாரு நரேன். ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மி. நான் உன்னை காலிக்கலே!"

"அதுதான் ஏன்?"

"நான் விரும்பற ப்ரொஃபைலில் நீ இல்லே. அதாவது என் மனசு உன்னை காதலனாய் ஏத்துக்க மறுக்குது'

"அதுதான் ஏன்? உன் மனசு என்னை ஏத்துக்கணும்னா என்ன செய்யணும், சொல்லு"

மடத்தனமாய் பிடிவாதம் பிடிக்கும் நரேன் மேல் பொசுபொசுவென்று கோபம் பொங்கியது.

''நம்ம ஃப்ளாட்டு மேலே படிவழியா ஏறாமல், பல்லி மாதிரி சுவர் வழியா ஏறிப் போ''

அந்த நாலு மாடி கட்டடத்தை வெறித்தான் நரேந்திரன்.

"அப்படி ஏறி மொட்டை மாடிக்குப் போனால், என்னை ஏத்துப்பியா?"

பதிலேதும் சொல்லாமல் 'விடுவிடு'வென்று நடந்து விலகினாள் ரேணுகா.

"அடுத்து என்ன நடந்தது ரேணுகா? அவன் ஏறினானா? - ரகு கேட்டதற்குத் தலையசைத்தாள்.

"அரை மணி நேரத்துல அந்த செய்தி கிடைச்சது. அப்ப நான் காலேஜ்லே இருந்தேன்"

"என்னாச்சு?"

"கால் தவறி விழுந்துட்டான் நரேன். மூன்றாவது மாடி ஜன்னலிலிருந்து விழுந்தவன், அங்கேயே...

ரேணுகாவுக்குள் விம்மல் வெடித்தது.

"நான் நரேந்திரனை காதலிக்கலேங்கறது எவ்வளவு உண்மையோ, அதே அளவு நிஜம், நான் அவனை வெறுக்கலேங்கறதும்"

ரகுவும் அதிர்ந்து போய் நின்றான், அந்த விபத்து கேட்டு.

“கிட்டத்தட்ட ஆறேழு வருஷமாய் நானும், நரேந்திரனும் பழகறோம். அடுத்தடுத்த 'டோர்' அந்த ஃப்ளாட்டிலே. எனக்காக, நான் சொன்னேன்ற ஒரே காரணத்துக்கா சுவர் வழியாய் ஏறி, கீழே விழுந்து, உயிர் பிரிஞ்ச அவனை நினைக்கறப்ப, என் மனசெல்லாம் பதறும், நடுங்கும்."

குரல் தழைந்து போய் சொன்னாள்.

கொஞ்சநாள் பாதி தூக்கத்திலே தூக்கி வாரிப்போடும். 'இப்பவாவது என் காதலைப் புரிஞசுக்கிட்டியா'ன்னு நரேன் காது பக்கத்துல வந்து கேட்கிற மாதிரி இருக்கும். அப்பாவிடம் சொன்னேன். உடனே வீடு மாறிட்டோம். கொஞ்சம் தள்ளி.

ரகு அவளை அணைத்து தேற்ற முயன்றான்.

"அவனை எப்படி மறக்க முடியும், சொல்லுங்க?”

ரகு அவளை இறுக்கிகொண்டான்.

''நிச்சயமாய் மறக்க முடியாது ரேணுகா."

''அவன் செஞ்சது பைத்தியக்காரத்தனம்தான். ஆனால் அதுக்கு நான் காரணமாயிருந்துட்டேனோ? ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் பதினேழாந்தேதி, அன்னிக்குத்தான் அந்த நாள், நான் அந்த ஃப்ளாட் வாசலில் நின்னு அவன் ஆத்மாவுக்காக பிராத்தனை செய்வேன். நாம் நாளைக்குப் போகலாம் ப்ளீஸ்?"

"நிச்சயமாய் ரேணுகா இந்த வருஷம் மட்டுமில்லே. இனி ஒவ்வொரு வருஷமும் நாம சேர்ந்தே போவோம்" என்றான் ரகு.

பின்குறிப்பு:-

கல்கி 09.03.1997 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக்கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com