
-எஸ்.எஸ். பூங்கதிர்
இன்று மதியம் என் வண்ணக் கனவுகள் கறுப்பாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்போது ஓசை இல்லாமல் என் மனசு கிழிந்தது சாய்ராமிற்குத் தெரியாது...
மதியம் -
"தனியா பேசணும்னு கூப்பிட்டீங்களே..?" நான்.
எங்கிருந்தோ வந்து எனக்குள் படபடப்பு உட்கார்ந்து கொண்டது. எதை எதையோ எதிர்பார்த்து, எனக்குள் மிதந்துகொண்டிருக்கும் என்னை ஆழமாய்ப் பார்த்தார் சாய்ராம். தனியாகப் பேச ஆசைப்பட்டவர் தயங்குகிறார். ஏன்...? அதுதானா? நான் எதிர்பார்த்ததுதானா...? இருக்கலாம். எனக்குள் படபடப்பு மேலும் கூடியது.
சாய்ராம் எதுவும் பேசாமல் வானத்தைப் பார்த்தார். அசையும் மரக்கிளையைப் பார்த்தார். கிளையிலிருந்து பறக்கும் புறாவைப் பார்த்தார். அந்தப் புறாவுடன் பறக்கும் என் மனசையும் பார்த்தாரா..? தெரியவில்லை.
'சீக்கிரம் சொல்லுங்க...' என்று அவர் மனசை உலுக்க மனமில்லை. காத்திருந்தேன்.
"கோவிச்சுக்க மாட்டீங்களே..?" தயக்கம் கலந்த பீடிகை.
''உங்ககிட்ட கோவிச்சுக்க யாருக்குத்தான் மனசு வரும்....?"
என் மனத்தில் விரிந்து கிடக்கும் ஆர்வம் என் பேச்சில் வெளிப்பட ஆரம்பித்தது, லேசாய்...
"மிஸ் மீரா... உங்களுக்கே தெரியும். நான் இங்க ட்ரானஸ்ஃபர்ல வரும்போது எப்படி இருந்தேன்னு... இங்க வந்த பிறகுதான் நிம்மதி என்னைத் தேடி வந்துச்சு. எனக்கு நிம்மதி கொடுத்த இந்த ஊர்லேயே பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். இன்னும் ரெண்டு மாசத்துல எனக்கு வேற ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்துடும். அதுக்குள்ள கல்யாணத்தை வெச்சுக்கிட்டா நல்லா இருக்கும்.. ஸோ..."
எனக்குள் மின்னலா.. அல்லது சந்தோஷமும் மனசும் உரசிக்கொண்டதால் ஏற்பட்ட வெளிச்சமா...
'நம்ம பாங்க்லேயும் சரி... வெளியிலயும் சரி, உங்களைவிட அதிக பழக்கம் எனக்கு வேற யாரும் கிடையாது. அதனால்..."
மனிதர் பேசாமல் சஸ்பென்ஸ் கதை எழுத ஆரம்பிக்கலாம். 'டோன்ட் பி லேட்', மனசு அவரிடம் கெஞ்சியது. அதைப் புரிந்துகொண்டார் போலிருக்கிறது. சட்டென்று சொன்னார் -
''எனக்கு நல்ல பொண்ணா பார்க்க வேண்டியது உங்க வேலை..."
இடி என்னை நொறுக்கியது.
"வாட் டிட் யு ஸே?" அதிர்ச்சியில் வார்த்தை நடுங்கியது.
"எனக்காக நீங்க நல்ல பொண்ணா பார்க்கணும். பழகற விதம், பேசற பேச்சு, படிப்பு, அன்பு... எல்லாம் உங்களுக்கு ஈக்குவலா இருந்தாப் போதும். குறிப்பிட்டுச் சொல்லணும்னா உங்களை மாதிரி ஒரு பொண்ணணு...'
என்னை மாதிரிதான். ஆனால் நான் வேண்டாம்.
என் கனவுச் செடியில் ஆஸிட் மழை. தாங்குமா...? இப்பச் சொல்லுங்க. சாய்ராம் வெடிவைத்தது என் வண்ணக் கனவுகளுக்கு மட்டுமா... எனக்கும் சேர்த்துத்தானே...?
'என்ன நீ சாய்ராம் மேல தப்பு சொல்லிக்கிட்டு... எப்போதாவது உன்னை லவ் பண்றேன்'னு சொல்லியிருக்காரா?...' என் மனசு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு என்னை அதட்டியது.
அதுக்கென்ன தெரியும்... கூட சேர்ந்து கும்மாளம் போட்டுவிட்டு, இப்போது கிழிபட்டதும் ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அத்துடன் அதிகாரம் வேறு.
'லவ் பண்றேன்'னு சொன்னாத்தான் காதலா..? தொட்டுத் தழுவிப் பேசினாத்தான் காதலா...?
பார்வை போதாதா... உள்ளத்தை கூட்டி சுத்தப் படுத்துகிற மாதிரி சின்ன புன்னகை போதாதா...?
பிஸியான பாங்க் வேலைகளுக்கு நடுவே எதிர்பாராமல் எப்போதாவது இருவர் கண்களும் சந்தித்துக்கொண்டால், இரண்டு பேருமே பட்டும் படாமலும் சிரித்து வைப்போமே... இது காதல்தானே. 'நீங்க லீவு போட்டுட்டா அன்னைக்கு பூரா எனக்கு வேலையே ஓட மாட்டேங்குதுங்க...' என்று அவர் அசடு வழிந்தபோதெல்லாம் உச்சி குளிர்ந்ததே... இது காதல்தானே...? ஒருநாள் என் கர்ச்சீப்பை எடுத்து அவர் முகம் துடைக்க.. அன்று முழுவதும் எனக்குள்ளே நான் மிதந்துகொண்டிருந்தேனே... அது காதலால்தானே...?
நான் அப்படித்தான் நினைத்திருந்தேன். சாய்ராம் நினைக்கவில்லையா...
இரவு முழுவதும் சாய்ராம் நினைவு தூக்கத்தை ஓட ஓட விரட்டிக்கொண்டிருந்தது.
"என்ன மீரா... கண்ணெல்லாம் சிவந்திருக்கு?'
குளித்து முடித்துத் தலை துவட்டும்போது அம்மா கேட்டாள். ஏன் முரண்பாடு... மனசு கறுத்திருக்கு. கண் மட்டும் சிவந்திருக்கா...?
'ராத்திரி முழுக்க துளிகூட தூக்கம் இல்ல...' அம்மாவிடம் சொல்ல முடியுமா...? கேள்வி கேட்டுத் துளைத்து விடுவாள். 'ஏன்... உடம்புக்கு என்னாச்சு...? லீவு போட்டுட்டு வர்றீயா, டாக்டர்கிட்டப் போகலாம்...?"
"அம்மா ..."
அம்மா தோசையின் மேல் சட்னி வைத்தபடி ''ம்ம்?" என்றாள்.
''எங்க பாங்க் கேஷியருக்கு நல்ல பொண்ணா வேணுமாம். வரதட்சணை எல்லாம் எதுவும் அதிகமா எதிர்பார்க்கலே. பொண்ணு என்னை மாதிரியே அழகா... கொஞ்சம் படிச்சிருந்தா போதுமாம். உடனே கல்யாணத்தை வெச்சுக்கணும்னு இருக்கார். யாரைப் பார்க்கலாம்? நம்ம மாமா பொண்ணு சீதாவை முடிச்சுடலாமா?"
வெவஸ்தை கெட்ட கண்கள். நேரங்காலம் கிடையாதா? அம்மாவிடம் என்னைக் காட்டிக் கொடுத்துவிடும் போலிருக்கே... அம்மாவிற்கு தெரியாமல் பொங்கும் கண்ணீரை எப்படித் துடைப்பது? இம்சை.
''ஏண்டி... நல்ல இடம்ன்னு சொல்றே. எவளுக்கோ ஏன் பார்க்கணும்? உனக்கு முடிச்சுட்டா என்ன..?"
அதைக் காதால் கேட்பதில் எவ்வளவு இனிமை... கிழிந்து போன மனசுக்குத் தையல் போடுவது மாதிரி இருந்தது. பிறகுதான் உறைத்தது. வெறும் ஊசியில் நூல் இல்லாமல் போடும் தையல் இது.
அரை தோசையை அரைமணி நேரமாய் நான் சாப்பிடுவதைப் பார்த்து... "என்னாச்சு உனக்கு...?" அம்மா கேட்டாள், லேசான கவலையுடன்.
"பசிக்கலேம்மா..."
எழுந்தேன்.
".ஏன்..?"
''பசியை மனசு திண்ணுடிச்சு. "
அம்மாவுக்குப் புரிந்திருக்குமா?
"எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களா...?" லஞ்ச் அவரில் சாய்ராம் கேட்டார்.
"தயக்கமா இருக்கு...'' நான்.
"ஏன்?"
"என் செலக்ஷன்ல தப்பு நடந்திடுமோன்னு..."
"டோன்ட் ஒர்ரி, மீரா. நீங்க ஒரு கழுதையைக் கட்டிக்கச் சொன்னாலும் அதுகூட அட்ஜஸ்ட் பண்ணி குடும்பம் நடத்துவேன்..."
அடப்பாவி. அந்தக் கழுதை அளவிற்கு கூடவா நான் இல்லை...?
"சாப்பிடப் போகலையா..?" கேட்டேன்.
"பயமா..? உங்க சாப்பாட்ல பங்கு கேட்பேன்னு..."
"அப்படி நான் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை."
"ஏன்...?"
"சாப்பாடே எடுத்துட்டு வரலே... "
"வாங்க ஹோட்டலுக்கு போகலாம்..."
"சாப்பிட பிடிச்சா எடுத்துட்டு வந்திருக்க மாட்டேனா...?"
''புரியயலையே
''நீங்க ஆம்பளை. பொம்பள மனசு உங்களுக்கு புரியாது!
எவ்வளவு நேரம்தான் புரண்டு புரண்டு படுப்பது...
யாரையும் பகைத்துக் கொள்ளாத நான் தூக்கத்தை மட்டும் எப்படி பகைத்துக் கொண்டேன்...? தெரியவில்லை. என் உதடுகள்தான் புன்னகையைத் தொலைத்து விட்டன என்றால் கண்களும் போட்டி போட்டுக்கொண்டு தூக்கத்தைத் தொலைத்து விட்டு வந்து நிற்கிறதே... என்ன செய்ய? எனக்குள்ளேயே இன்னொரு மீராவை வளர விட்டது என் தவறுதானே...
'மீரா... மாமாகிட்டே பேசினேன். அவரை பெண் பார்க்க அழைச்சுட்டு வரச் சொன்னார். நாளைக்கு லீவுதானே... நல்ல நாளும் கூட... பேசி முடிச்சிடலாம்.'
அம்மா சொன்னதை இப்போது நினைத்தாலும் நெஞ்சை யாரோ அழுத்துவது மாதிரி இருந்தது. நாளை நல்ல நாளாம். அம்மாவிற்கு என்ன தெரியும்... என்னைப் பொருத்தவரை நாளை துக்கமான நாள் என்று.
இந்தக் கல்யாணம் முடியும் வரை என் மனத்தில் இருப்பதை முகம் எதிரொலிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்... எனக்குள் பயம் துளிர்விட ஆரம்பித்தது. சீதாவுக்கோ, மற்றவர்களுக்கோ என் மேல் சந்தேகம் வரக்கூடாது... இந்தக் கல்யாணத்தை நான் சந்தோஷமாக நடத்தி வைப்பது மாதிரி நடிக்க வேண்டும். எனக்கு நடிப்பு வருமா...?
எங்கேயோ கிளம்ப, கையில் பூட்டு சாவியுடன் தயாராய் இருந்த சாய்ராம் "வாங்க... வாங்க..." என்று என்னை உற்சாகமாய் வரவேற்றார்.
அவரைப் பார்க்க எனக்குப் பொறாமையாக இருந்தது. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்... நான் எப்போது இதுபோல் சந்தோஷமாக இருப்பேன்...? அப்படி ஒரு பாக்கியம் இனி கிடைக்குமா?... எனக்குள் வளர்ந்த கேள்விகள் அவர் வார்த்தைகளால் வெட்டப்பட்டன.
“ஏன் நின்னுட்டீங்க?... உள்ள வாங்க..."
'நின்னுட்டேனா?... இல்லையே, நல்லாப் பாருங்க. செத்துட்டேன்!' தொண்டைக் குழி வரை வந்த வார்த்தைக்குத் தடைபோட்டது எது?
"முதல் தடவையா இங்க வரீங்கன்னு நினைக்கறேன். ஐயாம் வெரி ஹாப்பி..." சாய்ராம் முகத்தில் பிரகாசிக்கும் புன்னகை.
'தயவுசெஞ்சு நான் இங்கிருந்து போகிற வரைக்கும் சிரிக்க வேணாம்'ன்னு சொல்லலாமா?... இல்லை என்றால் எனக்குள் இருக்கும் இன்னொரு மீரா விழித்துக் கொள்வாளே...
''உங்களுக்கு என் மாமா பெண்ணைப் பேசி முடிக்கலாம்னு இருக்கோம்... உங்களுக்குப் பிடிச்சிருந்தா! பெண் பார்க்கப் போ...க...லா...மா...?"
நெருப்பில்லையே அந்த வார்த்தைகள்... பிறகு ஏன் என் தொண்டைக் குழியிலிருந்து நுனி நாக்கு வரை சுட வேண்டும்...?
அவர் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் பாக்கியம் இன்னும் எத்தனை நாட்களுக்குக் கிடைக்கப் போகிறது...
மௌனத்தை உடைத்தேன்.
''என் சொந்தமே வேணாம்னு நினைக்கறீங்களா...? வேற பொண்ணு வேணா பார்க்கட்டுமா...?"
சாய்ராம் என்னை உற்றுப் பார்த்தார். கண்கள் தகதகத்தன. முகத்தில் என்றும் காணாத மாற்றம்.
"என்னாச்சு... பதிலே காணோம்?!...'' நான்.
''ஏன் இப்படி சொல்றீங்க...?"
'திக்'கென்றது.
"புரியலையே...?"
"நீங்க பொம்பள. ஆம்பள மனசு உங்களுக்குப் புரியாது!"
எனக்குள் சிலீரென்று எதுவோ பாய்ந்து குளிரவைத்தது. அவரை ஆசையுடன் நிமிர்ந்து பார்த்தேன்.
அவர் கண்களில் காதல் காத்திருந்தது, எனக்காக!
பின்குறிப்பு:-
கல்கி 15.09.1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக்கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்