
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்று உணவு ஆகும். உணவு இல்லாமல் மனிதன் உயிர்வாழ்வது சாத்தியமே இல்லை. இந்நிலையில் கிழக்கு ஆசியாவைத் தவிர, ஆசியாவின் துணைப் பகுதிகளில் ஏறக்குறைய பத்தில் ஒரு பங்கு பெண்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே இரத்த சோகை விகிதம் உலக சுகாதார சபை உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை விட இன்னும் குறைவாகவே உள்ளது. 2022ல் உலகின் சராசரியுடன் ஒப்பிடும் போது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 14.3 சதவீத குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 370.7 மில்லியன் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களில், 50% மக்கள் ஆசியா-பசிபிக் நாடுகளில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, உலகளவில் 5 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடக்கத்தக்கது. உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பசியும், பட்டினியும் தலையாய பிரச்சனைகளாக உள்ளன.
நிலத்தடி நீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பூமியில் உணவு மற்றும் வாழ்வின் முக்கிய ஆதாரமாக தண்ணீர் இருப்பதால், அதை மீண்டும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும்.
பசி, பட்டினி, உணவை வீணாக்குதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயமுறையை பின்பற்றுதல் ஆகியவை நம் முன்னே உள்ள முதன்மையான சவால்களாகும். பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், உணவுப் பாதுகாப்பையும், உற்பத்தியையும் மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
இந்தியப் பண்பாட்டில் விவசாயத்தின் முக்கியத்துவம் இன்றைய தலைமுறையால் மீண்டும் உணரப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இதைச் சார்ந்து மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிகளிலேயே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விளைநிலங்கள் இனியேனும் வீடுகட்டும் இடங்களாக மாறுவதை தவிர்க்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம், நவீன விவசாய நடைமுறைகள் போன்றவற்றைக் குறித்து விவாதிக்க மாநாடுகளும் கருத்தரங்குகளும் நடத்தப்பட வேண்டும். வருவாய் இழப்பிலிருந்து விவசாயிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்.ஊட்டச்சத்து குறைபாடு
இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு விரைவான நிவாரணம் வழங்கப்பட வேண்டும். உப்பு, வெள்ளம், வறட்சியை போன்றவற்றைத் தாங்கும் விதை வகைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகளை அரசுகள் வடிவமைக்க முன்வருதல் நல்லது.
தற்போதைய ஒற்றைப்பயிர் முறைக்கு அப்பால் மிகவும் மாறுபட்ட விவசாய அணுகுமுறையை நோக்கி நகர்வதன் மூலம் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்க முடியும். உலக மக்களை பசிக்கொடுமையில் இருந்து ஒரே நாளில் மீட்டுவிட முடியாது. ஆனால், முடிந்தவரை ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க முடியும்.
முதலில் தாங்கள் உண்ணும் உணவை வீணாக்குவதைத் தவிர்க்கலாம். ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை வீண் செய்யக்கூடாது என உறுதி இருக்கலாம். வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுப்போம். அதுமட்டுமன்றி, மீதமுள்ள உணவை வீணாக்காமல் பசியின்றி தவிக்கும் மக்களுக்கு தானமாக அளிக்க முன்வருவோம்.
உலக மக்கள் அனைவரும் சிறந்த, சத்தான உணவை பெறுவதற்கான நமது உறுதிப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம். ஒன்றாக இணைந்து நாம் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு பிரகாசமான பசியில்லா உலகத்தை படைப்பதில் அக்கறைக் காட்டுவோம். அப்போதுதான் நம்மால் பசியில்லா உலகத்தைக் காண முடியும்.