சிறுகதை; டீக்கடை ஞானம்!

Tea shop Gnanam!
kalki short stories
Published on

-கிருஷ்ணா

"எலேய், இன்னும் எதுக்கு நிக்கறே?"

குவளையிலிருந்து டீயை 'சர்'ரென்று ஊற்றியபடி கேட்டார் அண்ணாமலை.

ராசு, வறண்டு போன உதட்டை நாக்கால் தடவிவிட்டபடி அந்தரத்தில் அருவி போலத் தோன்றி மறையும் 'டீ'யை ஏக்கத்தோடு பார்த்தான் .

"நாளைக்குத் தந்துடறேண்ணே. பசிக்குது."

கோகோகோலாவை பாட்டிலைச் சாய்த்து உள்ளே அனுப்பிக்கொண்டிருந்த ஆள் ராசுவையும், அண்ணாமலையையும் வேடிக்கை பார்த்தான்.

'டீ, காப்பி, கூல்ட்ரிங்ஸ் இவ்விடம் கிடைக்கும்' என்று சாக்பீஸால் எழுதப்பட்டிருந்த சிறிய போர்டு காற்றில் ஆடியது.

"இவ்வளவு கெஞ்சறானே, கொடுத்துத் தொலையுங்களேன்."

கோகோகோலா, ராசுவின் சிபாரிசுக்கு வந்தான்.

''காசு வராதுங்க. வெட்டிப்பய இவன். நான் என்ன இங்கே தர்மசத்திரமா நடத்தறேன்?"

பெஞ்சில் அமர்ந்திருந்த மூன்று பேரிடம் கிளாசை நீட்டியபடி கேட்டார் அண்ணாமலை.

டீ குடிப்பவர்கள் ராசுவின் பார்வைபட்டு சங்கடமாய் நெளிந்தனர்.

காசு கொடுத்துவிட்டு, கோகோகோலா, ஸ்கூட்டரில் பறந்ததும், அண்ணாமலை எச்சிலைத் துப்பினார்.

"வந்துட்டான் சிபாரிசுக்கு. ஏன், தன் காசைக் கொடுத்து டீ வாங்கித் தர்றது? துரை மாதிரி உடையையும், கூலிங்கிளாசையும் பாரு? "  வடிகட்டி வழியே வெந்நீரை ஊற்றி, டீ துணியை இறக்கினார்.

எலேய், இன்னும் ஏண்டா இங்கேயே நிக்கறே. போ,போ. இல்லாட்டி வெந்நீரை மேலே ஊத்திப்புடுவேன்."

வேறு வழியின்றி ராசு நகர்ந்தான். வயிறு பகவென்று இரைந்தது. காலையிலிருந்தே உடம்பு முழுதும் அடித்துப் போட்டாற்போல வலிக்கிறது. காய்ச்சல் வந்து விடுமோ என்று பயமாயிருந்தது அவனுக்கு.

குடிசைக்குத் திரும்பினான். அம்மா வயல்வேலைக்குப் போயிருக்கும். பழைய சோற்றுத் தண்ணி மட்டும் சின்ன எவர்சில்வர் பாத்திரத்தில் மீதமிருந்தது.

நெஞ்சில் சளி. இருமி, இருமி தொண்டைப்புண் வேறு. சூடாய் ஏதாவது குடித்தால் இதமாயிருக்கும். ஹூம்! வழியில்லையே!

மண்தரையில் படுத்தான். கண்கள் செருகிக்கொண்டன.

ரு வாரம் பாடாய்ப்படுத்திய பிறகுதான் காய்ச்சல் விட்டது.

அம்மாதான் பாவம், மிகவும் கஷ்டப்பட்டு விட்டாள்.

அரசு மருத்துவமனைக்கு ரிக்ஷாவில் கூட்டிப் போய், கஞ்சி வைத்துக் கொடுத்து, வேலைக்கும் போய், ப்ச்! உடம்பு சரியானதும் ஏதாவது ஒரு வேலையில் போய் ஒட்டிக்கொண்டேயாக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கவிதைகள் - மாக்கிரி தவளையும் மிரியான் வண்டும்!
Tea shop Gnanam!

யோசித்தபடி குடிசையை விட்டு வெளியே வந்தான்.

பத்தடி நடந்தால் மெயின் ரோடு. இவன் மெயின் ரோடுக்கு வரவும், அருகில் கார் வந்து நிற்கவும் சரியாயிருந்தது.

வெள்ளை அம்பாசிடர் கார். முன் சீட்டிலருந்து ஓர் ஆள் இறங்கி வந்தான்.

"முனியம்மா வீடு இங்கே எதுப்பா?"

காருக்குள் எம்.எல்.ஏ. மனைவி உட்கார்ந்திருப்பது கண்டான் ராசு.

இரண்டு மாதம் முன்பு நடந்த எலெக்ஷனில் இந்தம்மா முழு மூச்சாய் இறங்கி" எல்லா குடிசைக்குள்ளும் வந்து வோட்டு கேட்டது நினைவுக்கு வந்தது.

"அவ புருஷன்கூட பத்து நாள் முன்னாடி இறந்துட்டாரே... முனியம்மா வீடு..."

"ஓ, அந்தம்மாவா? இப்ப அது அதோட அண்ணன் வீட்டுல இருக்குது. நேத்துதான் போச்சு.”

பெரிய குரலில் அழுதபடி நேற்று காலையில் அந்த இடத்தையே கலக்கிவிட்டாள் முனியம்மா.

"அம்மா பார்க்கணும்னு வந்திருக்காங்க. உனக்கு இடம் தெரியுமா?"

தலையாட்டினான் ராசு.

"அப்ப வண்டியிலே ஏறு."

முன்சீட்டில் இவனையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது கார்.நரியன் தெருவுலதான் இருக்காரு, அதோட அண்ணன். சீனிவாச நகர் தாண்டிப் போகணும்."

ராசு வழியைச் சொல்லும்போதே எம்.எல்.ஏ. மனைவி காரை நிறுத்தச் சொன்னாள்.

"தாகமாயிருக்கு, அந்தக் கடையிலே 'ஜில்லு'னு ஏதாவது கிடைக்குமான்னு பாரு."

ராசு திரும்பிப் பார்த்தான்.

"அட, நம்ம அண்ணாமலை கடை. நான் போய் வாங்கிட்டு வரேம்மா.''

இருபது ரூபாயை வாங்கிக் கொண்டு ராசு காரை விட்டு இறங்கினான்.

ராசுவை எதிர்பார்க்காத அண்ணாமலை திகைத்தான்.

"என்னப்பா தடபுடலாய் வந்து இறங்கறே? ஒரு வாரமாய் ஆளையே காணோம்?"

"ஸ், சட்டுனு ஒரு பாட்டிலை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுங்க. அம்மா 'வெயிட்' பண்றாங்க."

குரலில் அவனையறியாமல் ஒரு விரட்டல் தொனி வெளிப்பட்டது ராசுவிடமிருந்து.

குடித்து முடித்ததும் கார் புறப்பட்டது.

"பரவாயில்லை, மிச்ச பணத்தை நீயே வைச்சுக்கப்பா. டிரைவர் கொஞ்சம் சீக்கிரம் போப்பா."

கார் சவாரி புதிது ராசுவுக்கு. உள்ளுக்குள் மெல்லிய குரலில் வெளிப்பட்ட சினிமா பாட்டுக்குத் தாளம் போடத் தோன்றியது. அடக்கிக்கொண்டான்.

"நீங்களே நேரிலே வரணுமாம்மா?"

ராசுவின் பக்கத்திலிருந்த ஆள் தலையைத் திருப்பிக் கேட்டான்.

"நம்ம வீட்டுலே பத்து வருஷமா வேலை செய்யறவ. தாலி துக்கம் வேற. பாவம்."

எம்.எல்.ஏ. மனைவி பதில் சொல்லும்போதே இடம் வந்துவிட்டது.

குளிர்பானம் போக மிஞ்சிய காசில் குஷியாய் மேட்டினி ஷோ போய்விட்டு மாலையில் திரும்பினான் ராசு.

கையில் இன்னும் மூன்று ரூபாய் இருந்தது.

அண்ணாமலையின் டீக்கடைக்குள் நுழைந்தான்.

ஜம்பமாய் பெஞ்சில் அமர்ந்தான். எல்லாம் காசு கொடுத்த தைரியம்.

"ஸ்ட்ராங் டீ!"

அண்ணாமலையின் திடீர் பவ்யம் கண்டு திகைத்தான்.

"என்னப்பா ராசு, பெரிய ஆளாயிட்டே போலிருக்கு?''

ராசுவுக்கு அவர் கேள்வி புரியவில்லை.

குழப்பமாய் பார்த்தபடி பையைத் துழாவினான். ஐயோ! காசு என்னாயிற்று? ஓ, சட்டைப்பை ஓட்டை! இப்போது காசுக்கு என்ன பதில் சொல்வது?

"பழைய ராசுன்னு நினைச்சிடாதீங்க இவனை! புளியங்கொம்பாய்ப் புடிச்சிட்டான்."

ராசுவின் பெருமையை விஸ்தாரமாய் ஊதினார் அண்ணாமலை.

"அண்ணே, காசு...''

"அட, காசு இருக்கட்டும்பா. அது எப்படி ஒரே வாரத்துல உள்ளே புகுந்துட்ட

"எங்கண்ணே?"

"எம்.எல்.ஏ. வீட்டுக்குள்ளேதான். ஒரு வாரமாய் உன்னைக் காணோமேன்னு பார்த்தால், திடீர்னு காரில் வந்து இறங்கறே. உன்னை என்னமோன்னு நினைச்சது தப்பு. தம்பியை சாதாரணமாய் எடை போட்டுடாதீங்க.''

'டீ' குடித்துக் கொண்டிருந்த கஸ்டமரிடம் அண்ணாமலை அள்ளி விட ஆரம்பிக்க ராசுவின் மூளைக்குள் ஏகப்பட்ட மின்னல்கள்.

திகைப்புடன் அண்ணாமலையின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவன் முகத்தில், பளீர் வெளிச்சம்.

இதையும் படியுங்கள்:
பிப்ரவரி 13: உலக வானொலி தினம் - அன்று முதல் இன்று வரை இதன் மவுசு குறையவில்லை!
Tea shop Gnanam!

எழுந்தான் ராசு.

"எங்கேப்பா கிளம்பிட்டே?"

"எம.எல்.ஏ. வீட்டுக்கு" என்றபடி நடக்க ஆரம்பித்தான்.

எப்படியாவது அரசியல் வட்டத்துக்குள் புகுந்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் அவன் நடையில் தெரிந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 08 டிசம்பர் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com