சிறுகதை: ஒரு முடிவில்... ஆரம்பம்!

ஓவியம்; மருது
ஓவியம்; மருது

-மதுமிதா

ங்கராஜன் இவரை ஆச்சர்யத்துடன் பார்த்தான்

"வாங்க சார்...! கடைசி நாள்கூட கரெக்ட் டயத்துக்கு வர்ற ஒரே ஆள் நீங்கதான்...!"

சற்று நேரம் எதை மறக்க நினைத்தாரோ அதையே ஞாபகப்படுத்தினான்.

ஆமாம். இன்று இவருக்குக் கடைசி நாள்தான். நாற்பது வருட உறவுச் சங்கிலி இன்று அறுபடுகிறது.

அலுவலகத்தில் வேறு யாருமில்லை. மின்விசிறிகளின் 'விர்ர்...' மெலிதாகக் கேட்கிறது. தன் சீட்டில் உட்கார்ந்தார்.

மிகுந்த வாஞ்சையுடன் தன் நாற்காலியைத் தொட்டுப் பார்த்தார்.

இன்றைக்கு ஒரு நாள்தான்.

அடிவயிற்றில் மெலிதாக ஒரு கலவரம் படர்ந்தது.

கலவரம் கோபமாய் உருமாறியது.

இந்த அலுவலகம் எனது நாற்பது வருட உழைப்பை உறிஞ்சி விட்டு இன்று சக்கையென்று துப்புகிறது.

சர்டிபிகேட்டில் வயது ஆகியிருக்கலாம். என் மனத்துக்கு என்றும் இருபதுதான். நேற்று வந்த இளைஞர்களைவிட அதிக உழைப்பை என்னால் தர முடியும். ஆனால்...

நாளையிலிருந்து நான் இங்கே அந்நியன்.

அவருக்குள் சுயபச்சாதாபம் எழுந்தது.

சிவப்பு நிற ஃபைலை உருவினார்.

எர்ணாகுளம் கிளைக்கு ஒரு பதில் எழுத வேண்டும்.

இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்க ஒழுங்கா நாலு வரி ஆங்கிலத்தில் எழுதத் தெரிகிறது?

எழுத ஆரம்பித்தார்... இவருக்கு இங்க் பேனாதான் செளகர்யம். பால்பாயிண்ட் பேனாவில் எழுதச் சொல்லி அலுவலகம் கட்டளையிடுகிறது.

"எல்லாம் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது!"

"ஹலோ... விஸ்வநாதன் சார்... குட்மார்னிங்!"

முதுகுக்குப் பின்னால் குரல் கேட்டது.

ரமணன் பெரிதாகச் சிரித்தான். இவனுக்குச் சிரிக்காமல் பேசவே தெரியாது.

ஆபீசிலுள்ள அத்தனை குட்டிகளுக்கும் இவன் மேல் ஒரு கிறக்கம். இந்தச் சிரிப்புக்கும், பேச்சுக்கும் எவள்தான் மயங்க மாட்டாள்?

"என்ன சார்... இந்தத் தொந்தரவை எல்லாம் வீசிட்டு இன்னைக்காவது கொஞ்சம் ரிலாக்ஸ்டாயிருக்கக் கூடாதா?"

"நாளைலேர்ந்துதான் ரிலாக்ஸ்டா யிருக்கப் போறேனே...!"

ரமணன் சிரித்துக்கொண்டே நகர்ந்தான்.

சற்று நேரத்தில் ஜி.எம்.மிடமிருந்து அழைப்பு வந்தது.

ஜி.எம். இவரை விடச் சின்னவர். ஆரவாரமாய் வரவேற்றார்.

''வாங்க சார்... உட்காருங்க...!"

அருகிலிருந்த இளைஞனை இவருக்கு அறிமுகப்படுத்தினார்.

''சார்... இது சூர்யா... புதுப் பையன்... இன்னைக்கு ஜாய்ன் பண்றார்... உங்க சீட்டுக்குத்தான் போட்டுருக்கோம். இவருக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கோ...!"

அந்தப் பையன் இவரைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான்.

இவருக்குப் பளீரென ஒரு கோபம் வந்தது.

"சூர்யா... சார் எல்லாம் சொல்லுவார்... ஓ.கே. ஆல் தி பெஸ்ட்...!''

வெளியே வந்ததும் அவன் இவருடன் கைகுலுக்கினான்.

இவருக்கு அவன் மேல் வெறுப்பாக வந்தது.

எதிரில் உட்காரச் சொன்னார்.

இதையும் படியுங்கள்:
ஆடை மற்றும் அணிகலன்கள் நழுவாமல் ‘நச்’ என்று இருக்க இந்த ஃபேஷன் டேப் பெஸ்ட்!
ஓவியம்; மருது

வத்சலா வேகமாக வந்து இவர் டேபிளில் கையூன்றினாள்.

சனியன்! விவஸ்தை கெட்ட ஜென்மம். ஒழுங்கா உடுத்தத் தெரியாது.

"சார் யாரு?  புதுசா... ?" அவனை ஊடுருவினாள்.

"ஆமாம்... போய் உன் சீட்டுல உட்கார்...!"

அவள் விருட்டென நகர்ந்தாள்.

அவன் இவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன படிச்சிருக்கே..?"

''எம்.காம். செகண்ட் இயர்ல நிறுத்திட்டேன்!"

படித்துக்கொண்டு இருப்பவனுக்கு இப்ப வேலை ரொம்ப அவசியமோ?

“உன் பேர் என்ன சூர்யாவா...? இங்க பாரு சூர்யா.. நாற்பது வருஷம் இங்க நாயா உழைச்சேன். திடீர்னு இன்னைக்குத் தூக்கி எறிஞ்சுட்டாங்க.. புதுசா நீ வந்திருக்கேன்னு... நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே... இந்தக் காலத்துப் பசங்களுக்கு என்ன தெரியுது?"

சூர்யா புன்னகையுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சற்று விருப்பமில்லாமலேயே வேலைகளைக் கொஞ்சம் கொஞ்சம் அறிமுகப் படுத்தி வைத்தார்.

சூர்யா நிறைய சந்தேகங்கள் கேட்டான் டைரியில் சிலவற்றைக் குறித்துக்கொண்டான்.

ம்பிரதாயப் பாராட்டுகளுக்குப் பின் எல்லோரும் இவரிடம் கைகுலுக்கி விடை பெற்றார்கள்.

அலுவலகம் காலியாகிவிட்டது.

சூர்யா இன்னும் இவர் எதிரில் உட்கார்ந்திருந்தான்.

"என்ன நீ போகலையா?"

"நீங்க எங்க இருக்கீங்க சார்?"

சொன்னார்.

''நானும் அந்தப் பக்கம்தான் போகணும். ஒண்ணா போலாமே...!"

"வேண்டாம்... நான் நடந்துதான் போவேன்... இனிமே நான் எதுக்குப்பா...!"

"இல்லே சார்... போகலாம்...!''

கிளம்பினார்கள்.

சனியன்! ஏன் கூடவே வருது?

மெளனமாக நடந்தார்கள்.

சூர்யா மெள்ள இவரது கையைப் பற்றினான்.

''சாருக்கு என் மேல ரொம்பக் கோபம்னு எனக்குத் தெரியும்...!"

"ச்சே... ச்சே ... எனக்கு என்ன கோபம்... வயசாயிடுச்சு... அனுப்பிட்டாங்க... உன் மேல் கோபப்பட்டு என்ன பிரயோஜனம்?"

"இல்ல... எனக்குத் தெரியும்... உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? எனக்கு இந்த வேலை கிடைக்கலேன்னா தற்கொலை பண்ணிட்டுருப்பேன்...!"

இதையும் படியுங்கள்:
ஃபேஷன் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் 'ஜம்ப்சூட்' ஆடைகள் (jumpsuit dress) !
ஓவியம்; மருது

விஸ்வநாதன் அதிர்ந்தார்.

"ஆமாம்... அப்பா ஹார்ட் அட்டாக்ல திடீர்னு இறந்துட்டார். பெரிதாகச் சேமிப்பு ஒன்றுமில்லே.. நான் எம்.காம் படிச்சுட்டு இருந்தேன். எனக்கு மேல ரெண்டு அக்கா. கல்யாண வயசு தாண்டிட்டாங்க. கீழ ஒரு தங்கை. நான் படிப்பைப் பாதில நிறுத்தினேன்...!"

விஸ்வநாதன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

''அம்மாவும், அக்காவும் அப்பளம், ஊறுகாய் போட்டு வித்தாங்க. எவ்வளவோ இண்டர்வ்யூ... ஒண்ணும் கிடைக்கலை. வீட்ல பொம்பளைங்க கஷ்டப்பட்டாங்க. நான் ஆம்பிளை தண்டச்சோறு. ஒரு முடிவோடதான் இந்த வேலைக்கு அப்ளை பண்ணினேன். இண்டர்வ்யூ வரைக்கும் வந்தேன். கிடைக்கலைன்னா, தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். நல்லவேளை தப்பிச்சேன்...!"

மேலும் தொடர்ந்தான்.

"எப்படியும் எங்க அக்காக்களுக்குக் கல்யாணம் பண்ணிடுவேன்.. இந்த வேலை என் குடும்பத்தைக் காப்பாத்திடும்...!"

சூர்யாவின் கண்களில் மெலிதான கண்ணீர்.

விஸ்வநாதனுக்குள் ஒரு மின்னல் வெட்டியது.

''ச்சே...! எவ்வளவு சுயநலம் நான்? இது என்னோட முடிவுன்னு புலம்பிட்டு இருந்தேன்...இது இந்தப் பையனோட ஆரம்பம்னு தெரியலையே... தெரிஞ்சோ, தெரியாமலோ ஒரு குடும்பத்தைக் காப்பாத்தியிருக்கோம்... காலைலேர்ந்து எவ்வளவு கோப வார்த்தைகள் இவன் மேல் வீசினேன் ...!

"ஸாரி... சூர்யா... நான் கொஞ்சம் கடுமையா நடந்துகிட்டேன்...!"

"என்ன ஸார் இது? என் அப்பா வயசு உங்களுக்கு. என்கிட்ட ஸாரி கேட்டுக்கிட்டு...!"

''வீட்டுக்கு வா சூர்யா... காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாம்...!"

''ஓ, யெஸ்!' சூர்யா மகிழ்ச்சியுடன் தலையாட்டினான்.

பின்குறிப்பு:-

கல்கி 15 நவம்பர்  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com