சிறுகதை - கோப முடிச்சுகள்!

ஓவியம்; கரோ
ஓவியம்; கரோ
Published on

-மதுமிதா

குந்தவைக்கு மூச்சு வாங்கியது. கைகளைத் தரையில் ஊன்றி மெள்ள எழுந்தாள்.

ஒரு கை இடுப்பைத் தாங்கியிருக்க, சின்னச் சின்ன அடி எடுத்து நடந்தாள். இப்பொழுதெல்லாம் வேகமாக நடக்க முடியவில்லை.

இவளது சரிந்த வயிற்றைப் பார்த்து, பக்கத்து வீட்டுப் பாட்டி தீர்மானமாய்ச் சொல்லிவிட்டார்.

'கட்டாயம் இரட்டைக் குழந்தைதான்.’

சூர்யாவிடம் இந்தச் செய்தியைச் சொன்னபோது அட்டகாசமாய்ச் சிரித்தான்.

"ரொம்ப  சௌகர்யமாப் போச்சு... இதோட முடிச்சுக்குவோம்... நாமிருவர்... நமக்கு இருவர்...!”

"போப்பா... எல்லாமே உங்களுக்குக் கிண்டல்தான்...!"

சுவர் கடிகாரம் இவள் சிந்தனையைக் கலைத்தது.

கொஞ்ச நேரத்தில் சூர்யா அலுவலகம் விட்டு வந்துவிடுவான். வெறும் காப்பி மட்டும் அவனுக்குப் பிடிக்காது.  துணைக்கு டிபன் வேண்டும். இன்றைக்குத் தோசை வார்த்துக் கொடுத்து விடலாம்.

சமையலறையில் ஒற்றைக் காலை நீட்டியவாறு அமர்ந்தாள். வெங்காயத்தைச் சின்ன துண்டுகளாக நறுக்க ஆரம்பித்தாள். நெடி தாங்காமல் கண் பொங்கியபோது சடாலென அம்மா ஞாபகம் வந்தது.

அம்மா ஒவ்வொரு முறையும் வெங்காயம் நறுக்கும்போது தாரை தாரையாய்க் கண்ணீர் வடிப்பாள்.

புறங்கையால் துடைத்துக்கொண்டே ஒவ்வொரு முறையும் இவளிடம் விளையாட்டாய்ச் சொல்வாள்:

"இங்க பாருடி... இந்த மாதிரி நிறைய பங்கு உங்கப்பா என்னை அழ வச்சிருக்காரு...!”

அப்பா சுபாவத்தில் கொஞ்சம் முசுடுதான். ஆனால் இவளிடம் கொள்ளைப் பிரியம். அதே அப்பாதான் சூர்யாவைக் கன்னத்தில் பளாரென அறைந்தார்.

இவள் குறுக்கே விழுந்திராவிட்டால் மிகவும் அசிங்கமாகியிருக்கும்.

இவளை வார்த்தைகளால் அடித்தார்.

''ஏண்டி... உனக்கு மேல பெரியவ இருக்கறப்ப உனக்கு எதுக்குடி இவ்வளவு அவசரம்... அப்பன் பெரிசையே கட்டிக் கொடுக்கல்லே. நம்பளுக்கு எப்ப நடக்குமுன்னு நீயா முந்திக்கிட்டியா...?"

பதிவுத் திருமணம் செய்துகொண்டு வந்தவர்களை முன் ஹாலில் நிற்க வைத்தே பேசினார்.

அம்மாதான் சமாதானம் பேசினாள். அக்காகூட சற்று முறைப்பாகத்தான் இருந்தாள். அவள் கவலை அவளுக்கு - சும்மாவே அவளுக்கு வந்த எல்லா வரன்களும் தட்டிக்கொண்டே போயின - இதில் தங்கைக்குக் காதல் திருமணம் என்றால் இன்னமும் சிக்கல்...

ன்றைக்குப் பார்த்ததுதான் அம்மாவை.

டாக்ஸியில் ஏறும்போது ஜன்னலில் அம்மா முகம் தெரிந்தது.

முழுவதாக ஒரு வருடம்.

இப்பொழுதெல்லாம் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வெறியாய் மாறிவருகிறது. எதிர் வீட்டுக் கயல்விழி தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுவாள்:

"ஆமாம் குந்தவை... இந்த நேரம் மனசு அம்மா வீட்டுப் பக்கம்தான் தாவும். அதுதான் பெண்ணுக்குச் சௌகர்யம். உடம்பு முழுக்க ஒரு சோம்பல் படர்ந்திருக்கும். அம்மா கையால் தலைபின்னிக் கொண்டு, நினைத்த நேரம் நேரம் தூங்கி, விச்ராந்தியாய் இருக்க அம்மா வீடுதான் சௌகர்யம்... பாவம் நீ... இங்க தனியா ரொம்ப சிரமப்படறே!"

கயல் சொல்லச்சொல்ல அம்மா பற்றிய ஏக்கம் வளர்ந்துகொண்டே போனது.

சூர்யாவின் வீட்டிற்கு இவர்கள் மேல் அவ்வளவு கோபமில்லை. ஆனால் பெரிய அளவில் பிரியமுமில்லை.

சூர்யாவின் அம்மா இரண்டு தடவை வந்துபோனாள். சம்பிரதாயமாய்ப் பேசிப் போனாள். அவளிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது.

ழைப்புமணி அலறியது. கை ஊன்றி எழுந்தாள். மெள்ள நடந்து போய்க் கதவு விலக்கினாள்.

அப்பா!

வயிற்றுக்குள் அமிலம் பாய்ந்தது. நிதானித்துக் கொண்டாள்.

“வாங்கப்பா... உள்ள...!”

அப்பா தயங்கினார். மென்மையாய்ச் சிரித்தார்.

நாற்காலி தட்டி நகர்த்தினாள்.

அப்பா இவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

''எல்லாரும் சௌக்யமா அப்பா? அம்மாவை அழைச்சிட்டு வரலையா?"

அப்பா சடக்கெனத் தலைகுனிந்தார். இந்த ஒரு வருடத்தில் அவர் நிறைய மாறியிருந்தார். உடம்பு இன்னும் மெலிந்திருந்தது.

“குந்தவை எப்படிம்மா இருக்கே?"

"நல்லாயிருக்கேம்பா...!"

"அவரு உன்னை எப்படி வச்சிருக்காரும்மா?''

"உங்க மாப்பிள்ளை தங்கம்பா. நல்லா பார்த்துக்கறார். நீங்க ஒதுங்கிட்டதுதான்பா அவருக்குப் பெரிய குறை."

அப்பா மௌனமாய் இருந்தார்.

"அவர் அடிக்கடி சொல்வார்ப்பா... குழந்தை பிறந்துட்டா உங்க அப்பா கோபம் மறைஞ்சிடும்னு. அது பலிச்சிடுச்சுப்பா...!”

அப்பா சங்கடமாய்ப் பேசினார்.

"எனக்கு உன் மேல கோபமில்லே குட்டிமா. கோபம் என் மேலதான். என்னோட கையாலாகாத்தனத்தின்மேல். உன் அக்காவுக்கே கல்யாணம் பண்ணி வைக்கிற யோக்யதை இல்லை. அது கேவலமில்லையா. அத மறைச்சுக்கத்தான் கோபப்பட்டேன்...!''

"பழைய கதைய விடுங்கப்பா. அக்கா எப்படியிருக்கா?"

"ப்ச்... இருக்கா... என்னை மன்னிச்சிம்மா...”

குந்தவை பதறினாள்.

“என்னப்பா இது... நீங்கதானே எங்க ரெண்டு பேரையும் மன்னிக்கணும். நாங்க கொஞ்சம் அவசரப்பட்டுத்தான் நடந்துகிட்டோம். அக்கா கல்யாணம் முடிஞ்சிருந்தா... நீங்க ஒத்துக்கிட்டிருப்பீங்க... எந்த தகப்பனும் இதைத்தான் செய்ய முடியும்!”

அப்பா தலையசைத்தார்.

வாசலில் ஸ்கூட்டர் சப்தம் கேட்டது.

சூர்யாதான்.

அப்பா சடக்கென எழுந்துகொண்டார்.

அப்பாவைப் பார்த்த சூர்யா ஆச்சர்யமானான்.

“வாங்க...!” - தயக்கமாய்க் கூப்பிட்டான்.

“உட்காருங்க...!”

அப்பா அமர்ந்தார்.

"சௌக்யம்தானே...!"

சூர்யா தலையசைத்தான்.

"குந்தவை உண்டாயிருக்கிற விஷயம் ரெண்டு நாளுக்கு முன்னாலதான் தெரியும்... இந்தக் கோபம், வருத்தம் எல்லாவற்றையும்விட பாசம்தானே முக்கியம். குந்தவையோட அம்மா ஒவ்வொரு ராத்திரியும் நா தூங்கிட்டதா நினைச்சிக்கிட்டு அழுவா... நானும் இவ்வளவு நாளா கல்லா இறுகிக்கிடந்தேன். நீங்க மறுதடவை வந்திருந்தாக்கூட நான் மனசு மாறியிருந்திருப்பேன். ஏதோ வறட்டுப் பிடிவாதம்!"

அப்பா நீளமாய்ப் பேசினார்.

"எங்களுக்கும் ஆசைதான். உள்ளுக்குள்ள ஒரு பயம். குந்தவை உங்கள் மகள்தான். ஆனால் அவள் என் மனைவியான பின் யாரிடமும் - அவள் தகப்பனாரிடம் கூட அவமானப்படக் கூடாது என்று என் மனசுக்குள் ஒரு வைராக்கியம். அதான் வரலை...!"

அப்பா சூர்யாவையே பார்த்துக்கொண்டிருந்தார். மெள்ள நகர்ந்துபோய் அவன் விரல்களைப் பற்றிக்கொண்டார்.

பின்குறிப்பு:-

கல்கி 12 டிசம்பர் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com