* சிறுகதை - அபார்ட்மென்ட் உறவு!

ஓவியம்; தமிழ்
ஓவியம்; தமிழ்

-ஜி.மீனாட்சி

‘அப்பா இறைவனின் திருவடியில் சேர்ந்துவிட்டார்’ என்ற தகவல் நள்ளிரவு ஒன்றரை மணிக்குக் கிடைத்ததுமே, சாருமதி குடும்பத்தினர் காலை 6 மணிக்குப் புறப்படும் கோவை எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் செய்துவிட்டு கிளம்ப ஆயத்தமாகினர். ஒரு வாரத்துக்குத் தேவையான உடைகளை இரண்டு லெதர் பேக்குகளில் நிறைத்து, ஏடிஎம் கார்டுகள், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், அவசரச் செலவு வந்தால் கையிருப்பில் இருக்கட்டுமே என்று பீரோ லாக்கரில் வைத்திருந்த இருபதாயிரம் ரொக்கப் பணம்… என்று எல்லாவற்றையும் எடுத்துவைத்தான் சுகுமார்.

வாரக் கடைசி ஞாயிற்றுக்கிழமை இரவு என்பதால், தாத்தாவின் இறப்புச் செய்தி வந்தபோது சங்கீதாவும் வீட்டிலிருந்தாள். விடுதியில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் சங்கீதா, வழக்கமாக வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்துவிடுவாள். மீண்டும் திங்கள்கிழமை காலையில்தான் கிளம்பிப் போவாள். இப்போது கோவைக்குப் புறப்பட வேண்டி இருந்ததால், அந்த நேரத்திலேயே தனது டீம் லீடருக்கும், மேனேஜருக்கும் நிலைமையை விளக்கி, மூன்று நாட்களுக்கு லீவ் மற்றும் அடுத்த இரண்டு வாரங்கள் WFH கேட்டு மெசேஜ் அனுப்பினாள்.

பல் துலக்கி, பிரிட்ஜிலிருந்த பாலைக் காய்ச்சி எல்லோரும் காபி குடித்து முடித்தபோது மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது.

``மறக்காம கேட்டுல கட்டியிருக்கிற பால் பையை எடுத்து உள்ளே வையுங்க. தெரியாத்தனமா பால்காரப் பையன் பாலை பையில போட்டுடப் போறான். பேப்பர்காரனுக்கு இப்ப போன் பண்ணா எடுக்கமாட்டான். 3சி வீட்டு மாமி ஆறு மணிக்குத்தான் கதவைத் திறப்பாங்க. அதுவரைக்கும் நாம காத்துட்டிருக்க முடியாது. இப்பப் போய் காலிங் பெல் அடிச்சா பயந்துடுவாங்க. என்ன பண்றது? ஒரு லெட்டரை எழுதி அவங்க வீட்டு கேட்டுல சொருகி வெச்சுட்டுக் கிளம்பலாமா?’’ சாருமதி பதற்றத்துடன் கேட்டாள்.

``எதிர்வீட்டு அபிலாஷ் ஜிம்முக்குப் போகறதுக்காக அஞ்சு மணிக்கு கதவைத் திறப்பான். அவன்கிட்ட சொல்லிட்டுப் போயிடலாம்.’’ என்றான் சுகுமார்.

``நாம இங்கிருந்து அஞ்சு மணிக்குக் கிளம்பினாத்தான் அஞ்சே முக்காலுக்குள்ள சென்ட்ரல் போக முடியும்.’’

``பதற்றப்படாதே… காலை நேரத்துல டிராபிக் இருக்காது. அரை மணி நேரத்துல சென்ட்ரல் போயிடலாம். கால் டாக்ஸிக்கு புக் பண்ணு. அதுக்குள்ள அபிலாஷ் வெளியே வரானான்னு பார்ப்போம். இல்லைனா கிளம்பிடலாம். டிரெய்ன்ல போகும்போதுகூட போன் பண்ணிச் சொல்லிடலாம்.’’ சமாதானப்படுத்தினான் சுகுமார்.

கால் டாக்ஸி புக் செய்து இவர்கள் புறப்படும்போது மணி ஐந்து பத்தாகியிருந்தது. நல்லவேளையாக இவர்கள் லிப்டிலிருந்து இறங்கி டாக்ஸியில் ஏறும்போது அபிலாஷ் ஷார்ட்ஸ், ஷூ அணிந்து மெயின் கேட்டுக்கு  வந்துகொண்டிருந்தான். ஓடிப்போய் சுகுமார் விஷயத்தை சுருக்கமாகத் தெரிவித்துவிட்டு வந்தான்.

``நாம வீட்ல இல்லாத நேரத்துலதான் கூரியர் வரும். பேப்பர்காரன் பில்லோட வந்து நிப்பான். அயர்ன் செய்யக் குடுத்திருக்கிற துணிகள் வரும். அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க தயவில்லாம அபார்ட்மென்ட் வீடுகள்ல வசிக்கிறது சிரமம்.’’ கால் டாக்ஸி டிரைவரிடம் சொல்வதுபோல் தன்னிலை விளக்கம் அளித்தவாறே பின் சீட்டில் சாய்ந்து அமர்ந்தான் சுகுமார்.

வர்கள் கோவையை அடைந்தபோது மணி 2.15. ஆட்டோ பிடித்து ஆர்.எஸ்.புரத்திலிருக்கும் சாருமதியின் அக்கா லலிதா வீட்டுக்குப் போய்ச் சேருவதற்குள், உறவு ஜனங்கள் எல்லோருமே வந்துவிட்டிருந்தார்கள். மின் மயானத்தில் அப்பாவுக்கு 6 மணி ஸ்லாட் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்பாவுக்கு 94 வயது. பி.பி., சுகர் என்று எதுவும் இல்லை. முந்தா நாள் வரை நல்லாத்தான் வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்திருக்கிறார். தன் கையாலேயே சோற்றைப் பிசைந்து சாப்பிடுவது, யாருடைய துணையும் இன்றி பாத்ரூமுக்குப் போய் வருவது என்று யாருக்கும் பாராமில்லாமல், தன்னோட வேலையைத் தானே செய்து கொண்டிருந்தவர், சனிக்கிழமை முழுவதும் கொஞ்சம் சோர்வாகவே படுத்திருந்தாராம்.

ஞாயிற்றுக்கிழமை காலை அரை தம்ளர் கஞ்சி குடித்திருக்கிறார். மதியம் எதுவும் சாப்பிடவில்லை. இரவு 9 மணிக்கு மீண்டும் அரை தம்ளர் கஞ்சி. திங்கள்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு பாத்ரூமுக்குப் போக எழுந்த  அக்கா, அப்பாவின் கட்டிலுக்குப் போய் தொட்டுப் பார்த்தபோது, பேச்சு மூச்சில்லாமல் இருந்திருக்கிறார். உறக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது.

``நல்ல சாவு… யாரையும் தொல்லைப்படுத்தாம பெரியவர் போய் சேர்ந்துட்டார்… கொடுத்து வெச்சவர்…’’ வந்தவர்கள் எல்லோரும் சொல்லிச் சொல்லி வியந்து போயினர்.

3சி வீட்டு மாமிக்கு போன் போட்டு மாமனார் காலமான தகவலைத் தெரிவித்து, சென்னை திரும்ப 10 நாட்களாகும் என்றும், வீட்டை கொஞ்சம் பார்த்துக்கொள்ளும்படியும் சுகுமார் தெரிவித்தான்.

இதையும் படியுங்கள்:
இளநீர் தாகம் தணிக்க மட்டும்தானா?
ஓவியம்; தமிழ்

ருவழியாக எல்லா காரியங்களும் முடிந்தபிறகு சாருமதி குடும்பத்தினர் சென்னை திரும்பினர். 15 நாட்களுக்கு மேல் வீடு பூட்டப்பட்டிருந்ததால், வீட்டைப் பெருக்கி துடைத்து, ஊருக்குக் கொண்டு போயிருந்த துணிகளைத் துவைத்து மடித்து, அபார்ட்மென்ட்டுக்கு எதிரே இருந்த மளிகைக்கடைக்குப் போய் காய்கறி வாங்கி வந்து சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு படுப்பதற்குள் ஒரு நாள் ஓடிப்போனது.

மறுநாள் அலுவலகத்திலிருந்து மாலை 6 மணிக்கு வீடு திரும்பிய சுகுமார், அபிலாஷ் வீட்டினர் எடுத்துவைத்திருந்த செய்தித்தாள்கள், கூரியர் கடிதங்கள் எல்லாவற்றையும் நன்றி கூறி வாங்கி வந்தான். 3சி மாமியின் வீடு பூட்டியிருந்ததால், அவரும் அவரது கணவரும் பூந்தமல்லியில் இருக்கும் மகள் வீட்டுக்குப் போயிருப்பார்கள் என்று யூகித்துக்கொண்டான்.

எதிர்வீட்டு அபிலாஷ்  ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறான். 32 வயதிருக்கும். பெரும்பாலும் வீட்டிலிருந்துதான் வேலை. அவன் மனைவி ஹரிணிக்கு 30 வயதிருக்கலாம். அவளுக்கும் ஐ.டி.யில்தான் வேலை. தாம்பரத்தில் அலுவலகம். தினமும் ஆபீஸ் கேபில் போய் வருகிறாள்.

எப்போதாவது அத்திபூத்தாற்போல் முன் கதவைத் திறந்து குப்பைக்கூடையை வெளியே வைக்க வருவாள். அத்துடன் சரி. எதிரில் சாருமதியைப் பார்த்தால் லேசாகப் புன்னகைப்பாள். புன்னகைக்க வேண்டுமா? வேண்டாமா என்பது போன்ற புன்னகை. அபிலாஷ் மட்டும் சுகுமாரைப் பார்க்கும்போது ஓரிரு வார்த்தைகள் பேசுவான். அவ்வளவுதான். சென்னையிலிருக்கும் அபார்ட்மென்ட் வீடுகளில் இதுவே அதிகம்.

சாருமதிக்குத்தான் மனசு தாளவில்லை. ``ஊருக்கு வந்து நாலைஞ்சு நாள் ஆகுது… ஒருத்தர்கூட விசாரிக்க வரலையே…’’ சுகுமாரிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.

இதையும் படியுங்கள்:
சுண்டைக்காயின் சூப்பர் பயன்கள்!
ஓவியம்; தமிழ்

``இந்தக் காலத்து ஆளுங்ககிட்ட அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? அவங்கவங்களுக்கு அவங்கவங்க பிரச்னை…’’

`` 3சி மாமிகூட போன்ல விசாரிக்கல பாருங்க…’’ ஆதங்கத்துடன் பேசியவளை, கனிவாகப் பார்த்தான்.

``சாரு, உலகம் மாறிட்டு வருது. உங்கப்பா இறந்தது உனக்குத்தான் சோகம்… அதனால மத்தவங்களுக்கு என்ன பாதிப்பு? அவங்களா விசாரிச்சா பதில் சொல்லு. இல்லைனா பேசாம நம்ம வேலையைப் பார்த்துகிட்டு போவோம்… யார்கிட்ட இருந்தும் எதையும் எதிர்பார்க்காதே… ஆறுதலைக்கூட!’’

ஆனாலும் அவளது மனது வலித்தது. என்ன மனிதர்கள்? அக்கம்பக்கம், எதிர்வீடு என்பதெல்லாம் எதற்காக? சக மனிதர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பதற்குத்தானே? அட! நல்லது கெட்டதுக்கு இல்லாத உறவு எதற்காக?

திடீரென்று ஒரு நாள், காய் நறுக்கிக் கொண்டிருந்தவள், சுகுமாரைப் பார்த்து, ``இங்கப் பாருங்க… இனிமேல் யாரோட சவகாசமும் நமக்கு வேண்டாம்… நாம உண்டு நம்ம வீடு உண்டுன்னு இருப்போம்…’’ என்றாள். சுகுமார் எதுவும் பேசாமல் புன்னகைத்தான்.

``உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் சிரிப்புதான்!’’ என்று முறைத்தாள்.

``வேற என்ன பண்ணணும்கிற?’’ என்று மீண்டும் புன்னகைத்தான்.

நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, தீபாவளிக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது, மாலை 6 மணிக்கு காலிங் பெல் சப்தம் கேட்டு கதவைத் திறந்தாள் சாருமதி. வெளியே அபிலாஷ் நின்று கொண்டிருந்தான்.

``ஆன்ட்டி, தீபாவளிக்கு ஊருக்குப் போறோம். வர ஒரு வாரமாகும். எங்க வீட்டுக்கு ஏதாவது கூரியர் வந்தா வாங்கி வெச்சிடுங்க…’’ என்றான் மெல்லிய குரலில்.

`சரி’ எனத் தலையாட்டினாள் சாருமதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com