சிறுகதை - அப்பா ஒரு புதிர்!

ஒவியம் : உமாபதி
ஒவியம் : உமாபதி

-வாசன்

 "வாங்க அண்ணா, வாங்க.'' ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் எனக்கு வரவேற்பு பலமாகவே இருந்ததில் வியப்பில்லை. வரவேற்றது என் இரண்டாம் தங்கை சங்கரிதான். விமான நிலையத்துக்குத் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தாள்.

"சௌக்யமா சங்கரி? ஜகன் எப்படி இருக்கார்?" என்று அவளுடைய கணவனைப் பற்றிக் கேட்டேன்.

"எல்லாம் உங்க புண்ணியம்தானே, அண்ணா... எல்லோரும் சௌக்யம்தான். அவருக்கு ஆபீசில் முக்கியமான வேலை. ஏர்போர்ட்டுக்கு வரமுடியலே" என்றாள்.

சங்கரியே காரை ஓட்டினாள். ஆறு வருசத்துக்கு முன் நான் பார்த்த என் குட்டித் தங்கை சங்கரியா இது? கல்யாணமாகி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி,  குடும்பப் பொறுப்பை ஏற்று... மாற்றங்கள்.... மாற்றங்கள். இன்னும் என்னென்ன மாற்றங்களோ?

சங்கரிக்குச் சென்னையில் வசதியான வீடு. எனக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசதிகளையும் சங்கரி செய்ய ஆசைப்பட்டு, அவர்களுடனேயே தங்கும்படி எனக்கு எழுதியிருந்தாள். ஏற்றுக்கொண்டேன்.

"அண்ணா... உனக்கு அமெரிக்காவுலே இருக்கிற வசதியிலே கால்பங்கு கூட இங்கே இருக்காது.... முடிஞ்சவரைக்கும் செய்யறோம். எங்களோடயே தங்கணும்" என்று வீட்டுக்குப் போவதற்குள் பத்துமுறை சொல்லியிருப்பாள்

"எப்பவோ சரின்னு சொல்லிட்டேனே" என்று நானும் பத்துமுறை ஒப்புக்கொண்டேன்.

வீட்டில் எனக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. என் முதல் தங்கை மாலதியும், தம்பி மூர்த்தியும் அவரவர் குடும்பத்துடன் வெளியூரிலிருந்து வந்திருந்தனர். எல்லாம் சங்கரியின் முன்ஏற்பாடாகத்தான் இருக்க வேண்டும்.

 "வாங்க அண்ணா, வாங்க..."

''உங்க ஃப்ளைட் எல்லாம் சௌகரியமா இருந்திச்சா?"

"அண்ணி, பசங்க எல்லாரும் எப்படி இருக்காங்க? அவங்களையும் கூட்டி வந்திருக்கலாமே..." என்று வரவேற்பும், கேள்விகளும் தொடர்ந்தன.

நிதானமாகப் பதில் சொன்னேன். குழந்தைகளைக் கொஞ்சிவிட்டு, பரிசுகளை வரிசையாகத் தந்தேன். ஒவ்வொன்றும் குதித்துக்கொண்டு தன்னுடைய புதிய பொம்மையுடன் விளையாட ஓடின.

வீட்டில் குதூகலம்தான். மாலதி, சங்கரி, மூர்த்தி என்று மாறி மாறிப் பேசினார்கள். பேச்சுக்குப் பேச்சு, "அண்ணாதான் எல்லாமே... அண்ணா இல்லேன்னா நாம இன்னிக்கி இப்படி இருக்க முடியுமா....' என்ற ஒரே கருத்து என் மீது அவர்கள் வைத்திருந்த மதிப்பைக் காட்டியது.

இதுவரைக்கும் அதிகமாகப் பேசாத நான் குறுக்கிட்டேன். “அப்பா எங்கே?"

என் கேள்வியை யாரும் எதிர்பார்க்கவில்லையோ? திடீரென்று அறையில் அமைதி ஏற்பட்டது. மாலதி சங்கரியைப் பார்க்க, அவள் மூர்த்தியைப் பார்த்தாள். மூர்த்தி எனக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வந்தது.

"அப்பா சாயங்காலம் வருவார்.''

''சாயங்காலமா?  ஏன்?" என்றேன்.

"ஆமாம்... சங்கரியின் புருஷன் வேலையிலிருந்து திரும்பும்போது அப்பாவை அழைச்சிக்கிட்டு வருவார்" என்றான் மூர்த்தி.

"அப்பா உங்க மூணுபேர்ல யாரு கூடவாவது இருப்பார்னு நினைச்சேன். உங்களோட இல்லையா?" எனக்கு அதிர்ச்சி,  வருத்தம், கோபம் எல்லாம் ஒரே சமயத்தில் உண்டாக என் குரல் சிறிது கடுமையானது.

இதையும் படியுங்கள்:
ருசிக்க ருசிக்க பேபி கார்ன் மஞ்சூரியன்!
ஒவியம் : உமாபதி

"அப்பா தனியாத்தான் இருக்கார்." மூர்த்திதான் தயக்கத்துடன் பேசினான்.

இத்தனை நேரம் சூழ்ந்திருந்த குதூகலம் பட்டென்று பறந்து,  இறுக்கம் பரவ ஆரம்பித்தது. அப்பாவின் விஷயத்தில் என் தம்பி தங்கைகள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? எனக்கு இது பெரிய புதிராகத்தான் இருந்தது. இதற்கு ஒரு பதில் வேண்டும். அப்பா எங்கே இருக்கிறார் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

"அண்ணா... நீங்க ரொம்பக் களைப்பா இருப்பீங்க. குளிச்சிட்டு வந்தீங்கன்னா சாப்பிடலாம். அப்பாவைப் பத்தி அப்புறமாப் பேசலாமே..." என்று மாலதி வழக்கமான உபசரிப்பைச் செய்து, பேச்சை மாற்றப் பார்த்தாள்.

"நான் தயாரானதும் நானே போய் அப்பாவை இங்கே கூட்டிட்டு வரப் போறேன். அப்பா இங்கே வர்ரதுலே உனக்கு ஏதாவது 'அப்ஜெக்ஷன்' இருக்குதா சங்கரி?" என்று நேரடியாகவே கேட்டுவிட்டேன்.

"இருந்தா நான் அவர்கிட்ட சொல்லி அப்பாவை அழைச்சிக்கிட்டு வர ஏற்பாடு செஞ்சிருப்பேனா அண்ணா?" என்றாள் சங்கரி.

''ஜகனுக்குப் போன் பண்ணிடு. அவர் நேரா வீட்டுக்கு வந்துடட்டும். நான் அப்பாவை...." என்று நான் முடிக்குமுன், மூர்த்தி முந்திக்கொண்டான்.

"அண்ணா.... நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நானே போய் வர்றேன்" என்று புறப்பட்டான்

மொத்தத்தில் அப்பா இருக்குமிடம் இவர்களுக்குத் தெரிந்தே ஏற்பாடாகியிருந்தது. அப்பா ஏன் இவர்களில் ஒருவருடன் தங்கியிருக்கவில்லை?

ஒவியம் : உமாபதி
ஒவியம் : உமாபதி

ப்பாவும் மூர்த்தியும் வர நேரமாகவில்லை. கைத்தடியை ஊன்றியபடி அப்பா படியேறினார். அவரைக் கைத்தாங்கலாய் நான் உள்ளே அழைத்து வந்தேன். அவர் உட்கார்ந்ததும், அவர் காலைத் தொட்டு வணங்கினேன்.

"நீ நல்லா இருக்கணும்" என்று எப்போதும்போல் அப்பா என்னை வாழ்த்தினார்.

"எப்படி இருக்கீங்க அப்பா?” என்று பொதுவாக விசாரித்தேன்.

''எல்லாம் உன் புண்ணியத்துலே நல்லா இருக்கேண்டா." பழுப்பு நிற பிரேம் போட்ட கண்ணாடி வழியாகத் தெரிந்த அவர் பார்வையில் நீர்த்திரை.

"என்னப்பா இது? பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க...." என்றேன் மெல்ல.

அதற்குள் அப்பாவுக்குச் சாப்பாடு போட எல்லாம் தயாராகி, மாலதியும் சங்கரியும் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். மூர்த்தி குழந்தைகளை ஒருமுறை அடக்கிவிட்டு வந்தான். வெளியே இரைச்சல் குறைந்தது. என் உள்ளே குமைச்சல் கூடியது. அப்பா மேலே பேசினார்.

"உனக்கு இதெல்லாம் எதுக்குடா ... அவசியமும் இல்லை. நீ அமெரிக்காவிலே நிம்மதியாய் இருக்கறவன்" என்றார்.

என் இதயத்தை ஊசியால் குத்தியதுபோல இருந்தது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவனில்லையா! படிக்கப் போனவனுக்குப் பணம்,  வாழ்க்கை வசதி இவை கிடைக்கவே அமெரிக்காவிலேயே நான் தங்கிவிட்டது உண்மைதான். அதற்காகக் குடும்பத்திலிருந்து ஒதுக்கப்பட்டேனா? தம்பி, தங்கைகள் எனக்குப் புகழ்மாலையாகப் போட, அப்பா இப்படிப் பேசுகிறாரே... குழம்பினேன்.

இதையும் படியுங்கள்:
விசிலடிக்கும் வில்லேஜுக்கு ஒரு விசிட் அடிக்கலாம் வாங்க!
ஒவியம் : உமாபதி

"மனசைப் போட்டுக் குழப்பிக்காதேடா... நீ ஆறு வருசத்துக்கப்புறம் வந்திருக்கே...எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம், திருப்தி எல்லாம். ஏதோ வந்திருக்கே. ஒரு மாசம் இருப்பியா? எல்லாரோடையும் சந்தோசமா இருந்துட்டுப் போவியா..... இந்தப் பிரச்னையெல்லாம் உனக்கு எதுக்கு?" என்று நிதானமாய்ப் பேசினார் அப்பா.

“எந்தப் பிரச்னை அப்பா?" கேட்டது மாலதிதான்.

"சாப்பாடெல்லாம் நல்லா இருக்கும்மா... இப்ப எதுக்கும்மா... அப்புறம் பேசலாமே."

"நீங்கதானே அப்பா ஆரம்பிச்சீங்க" என்று சங்கரியும் மாலதியுடன் சேர்ந்துகொண்டாள்.

''உங்க மனசிலே இருக்கிறதைச் சொல்லிடுங்க அப்பா. அண்ணனும் தெரிஞ்சுக்கட்டும். எங்களுக்கு அண்ணாதானே எல்லாம்" என்றான் மூர்த்தியும்.

"அவனுக்கு ஏண்டா இதெல்லாம்? அவன்தான் செய்ய வேண்டியதெல்லாம்  ஒழுங்காச் செஞ்சிட்டானே,  இன்னும் செய்யறானே. நிம்மதியாய் இருக்கட்டுமே" என்று சொன்னதையே திரும்பச் சொன்னார் அப்பா.

"நாங்களும் இதைத்தானே சொல்றோம். அண்ணாதான் எல்லாத்தையுமே செஞ்சார். சந்தேகம் என்ன?"  மாலதியின் குரலில் சூடேறியது.

"அண்ணா இல்லேன்னா எது நடந்திருக்கும்? அக்காவுக்கும் எனக்கும் கல்யாணம், கார்த்தின்னு நீங்க சமயத்துலே செஞ்சிருக்க முடியுமா? இன்னிக்கு இவ்வளவு வசதியோட நாங்க இருக்கத்தான் முடியுமா?" சங்கரியும் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பேசினாள்.

"மூணு வருசத்துக்கு முன்னாலே எனக்கு பிசினஸ் ஆரம்பிக்க ஆயிரக்கணக்கில் டாலர் அனுப்பிச்சதும் அண்ணன்தானே. அந்தச் சமயத்துல டாலர் வரலேன்னா இன்னிக்கும் அதே கிளார்க்கு வேலையிலேதானே நான் முட்டிக்கிட்டு இருக்கணும்!" மூர்த்தியும் உரக்கவே பேசினான்.

அப்பாவிடம் இல்லாத பணம் அமெரிக்க அண்ணனிடம் இருந்ததால் 'லாயல்டி'  என் பக்கம் திரும்பியது. அப்பா இவர்களுக்கு எதுவுமே செய்யவில்லையாம். இதையே காரணமாக வைத்து, அப்பாவைத் தனியாக ஒரு வாடகை வீட்டில்... ஒதுக்கப்பட்டது அப்பாதான் என்று இப்போது எனக்குப் புரிந்தது. மாலதி, சங்கரி, மூர்த்தி இவர்கள் அப்பாவைத் தங்களிடத்தில் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு, அவருடைய தேவைகளைக் கவனிப்பதாய் நான்தான் தவறாக நினைத்திருந்தேன். இதுவரை அப்பாவும் அவனுக்கு எதுக்கு வீண் கவலை' என்று எனக்கு எழுதாமலே இருந்தாரே என்பதும் வருத்தம் அளித்தது.

நான் அப்பாவை ஏறிட்டுப் பார்த்தேன். அவர் சாவதானமாக மூக்குக்கண்ணாடியை எடுத்துக் கைக் குட்டையால் துடைத்துக்கொண்டார். என்னைப் பார்த்துப் பேசினார். "டேய் ... நீ வந்ததும் வராததுமாய் இப்படியெல்லாம் நடந்துடிச்சி. எதையும் மனசிலே வைச்சிக்காதே" என்றார். மெல்லச் சிரித்தார். சிரிப்பில் வேதனையா, இல்லை வேதனையே சிரிப்பாயிற்றா என்று எனக்குப் புரியவில்லை.

"என் மனசிலே இருக்கிறதை நான் சொல்லிடறேன். அப்புறம் இவங்க மூணு பேரும் இதுமாதிரி பேசறாங்களான்னு பார்க்கலாம்," என்றேன்.

"அதெல்லாம் எதுக்குடா இப்போ..." அப்பா இழுத்தார்.

"இப்பத்தான் சொல்லணும்" என்று உறுதியாகவே சொன்னேன்.

இதையும் படியுங்கள்:
ட்ரெண்ட் ஆகிவரும் பெண்களுக்கான கண்கவர் ஹெட்பேண்ட்கள்!
ஒவியம் : உமாபதி

மற்ற மூவரும் என்னையே உற்றுப் பார்த்தனர். நான் பேசாவிட்டால், அப்பா மீது நான் காட்டும் மதிப்பும் பரிவும் இவர்களுக்கு என்றுமே ஒரு புதிராகத்தான் இருக்கும் என்று அவர்கள் பார்வையே சொல்லியது.

''நான் சொல்றது நடந்து இருபது வருசமாச்சு. அப்ப நீங்க மூணுபேரும் ரொம்பச் சின்னவங்க. எனக்கு மெட்ராசுலே படிப்பு முடிஞ்சதும் அமெரிக்கா போக வாய்ப்புக் கிடைச்சது; ஆசை யாரை விட்டது? ஆனா பயணத்துக்கு ஐயாயிரம் ரூபாய் தேவையாயிருந்தது. அப்பாகிட்டே ஏது அவ்வளவு பணம்? ஒரு பாங்கிலே கடன் வாங்கலாம்னு போனேன். ஏற்பாடு செஞ்சாங்க. என்மேல இருக்கிற நம்பிக்கையிலே அப்பாவும் கடன் வாங்கக் கையெழுத்துப் போட்டார். அன்னிக்கு அப்பா கையெழுத்துப் போடலேன்னா நான் அமெரிக்கா போயிருக்கவே முடியாது... இன்னிக்கு நாம எல்லாருமே இந்த அளவு வசதியோட இருக்கவும் முடியாது. விவரம் தெரியாம எனக்குப் புகழ் பாடறீங்க. அப்பா இல்லேன்னா உங்க அண்ணனுக்கு அமெரிக்கா இல்லே. பெருமை எல்லாமே அப்பாவுக்குத்தான்... எனக்கில்லே. நீங்க இனிமேயாவது புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கணும்" என்று நான் முடித்தபோது, என் குரல் தழுதழுத்தது.

அப்பா எழுந்து வந்து என்னைக் கட்டிக்கொண்டார். அப்பாவின் காலைத் தொட்டு வணங்கிய என் தம்பி, தங்கைகளை நான் குனிந்து எழுப்பினேன்.

பின்குறிப்பு:-

கல்கி 05 ஜூலை  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com