சிறுகதை - பாட்டில்களுக்கு ‘பை பை’!

ஓவியம்: வேதா
ஓவியம்: வேதா

-வி.தே.விக்டர்

முதுக்குட்டி! பிள்ளையார் கோயிலு முருகன் அண்ணனை அம்மா வர சொன்னாங்கனு சொல்லிட்டு வா என்றாள் மீனாட்சி,

அம்மா! என்று சொல்லிக்கொண்டே வேகமாக ஓடினாள் அமுதா. வீட்டுக்கு எதிரே உள்ள பிள்ளையார் கோயிலில் கடந்த ஒரு வருடமாக முருகன் இருக்கின்றான்.  அவன் பகல் முழுவதும் குப்பையைப் பொறுக்கி, அதனால் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருபவன். அவனை எல்லாரும் பிள்ளையார் கோயில் முருகன் என்று அழைப்பார்கள். அவனுக்கு காலையில் மட்டும் சாப்பிட ஏதாவது மீனாட்சி கொடுப்பாள். அதனால் மீனாட்சி குடும்பத்தோடு அன்பும், பாசமும் வைத்து பண்பு உள்ளவனமாக பழகி வந்தான் முருகன்.

கடிகாரத்தில் அலாரம் அடித்து வெகுநேரமாகியும் ஏன் கணவன் எழுந்திருக்கவில்லை என்று நினைத்துக்கொண்டே படுக்கை அறைக்குள் நுழைந்து என்னங்க! என்னாச்சு! அலாரம் அடிச்சும் எழுந்திருக்கலே! ஆபிஸ் போகலையா! என்றாள் மீனாட்சி.

நேத்து ஒருத்தர் ரிட்டையர்மெண்ட்! அந்த விழாவிலே கலந்துக்கிட்டேன்! அதனாலே கொஞ்சம் அசதியா இருக்கு என்று சொல்லிக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தான் மதிவாணன்.

ஒகோ! பார்ட்டினு சொல்லுங்க, நீங்க திருந்தமாட்டீங்களா! நமக்கு ஒரு பெண் குழந்தை இருக்குங்கறதை நினைப்பு வைச்சிக்குங்க. எப்ப திருந்தப் போறீங்களோ என்றாள் மீனாட்சி.

பார்ட்டினா கொஞ்சம் குடிக்கத்தான் செய்வாங்க! அதுக்கு ஏன் இப்படி சத்தம் போட்டு கத்துறே. இன்னைக்கு நம்ம கல்யாண நாளு, அதனாலேதான் ஆபீஸ்க்கு கொஞ்சம் லேட்டா போகலாம்னு இருந்தேன் என்று புன்முறுவலுடன் சொன்னான் மதிவாணன்.

இன்னைக்கு நம்ம கல்யாண நாளுனு தெரியுதுல்லே.  இன்னைக்கு ஒரு நாளாவது குடிக்காம இருங்க என்று கோபமாக சொல்லிய மீனாட்சி சமையலறைக்குள் சென்றாள்.

திருமணத்துக்கு முன்பே மதுப்பழக்கம் உள்ளவன் மதிவாணன். திருமணத்திற்கு பிறகு ஆபீஸ் விடுமுறையில் மட்டும் வாரம் இருமுறை குடித்தவன், பிறகு நாளடைவில் தினமும் குடிக்க ஆரம்பித்துவிட்டான்.

மீனாட்சி மிரட்டியும் பார்த்தாள். கெஞ்சியும் பார்த்தாள். மதிவாணன் குடிப்பதை நிறுத்தவில்லை நாட்கள் செல்ல செல்ல அவன் அதிகமாகவே குடிக்க ஆரம்பித்ததால் கணவனிடம் குடிப்பதை நிறுத்துங்கள் என்று சொல்வதையும் விட்டுவிட்டாள் மீனாட்சி.

பிள்ளையார் கோயில் முருகனை அழைக்கப்போன அமுதுக்குட்டி இன்னும் வரவில்லையே என்று வாசலைப் பார்த்தாள் மீனாட்சி. முருகனும் அமுதுக்குட்டியும் வந்துக்கொண்டிருந்தார்கள்.

அமுதுக்குட்டி தொல்லைப்பண்ணி என்னை அழைச்சிட்டு வந்துடுச்சிம்மா என்று சிரித்துக்கொண்டே வந்தான் முருகன்.

நான்தான் உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னேன். உட்காரு முருகா டிபன் சாப்பிடலாம் என்ற மீனாட்சியிடம்,

அம்மா! சாப்பிடறதுக்கு முன்னாலே அய்யாவுக்கு, கல்யாண நாளுக்கு பரிசு ஒண்ணு கொடுத்துடுறேம்மா என்றான் முருகன்.

இதையும் படியுங்கள்:
அமைதியான வாழ்க்கையை எது கற்றுக் கொடுக்கும் தெரியுமா?
ஓவியம்: வேதா

எங்களுக்குக் கல்யாண நாளுன்னு உனக்கு எப்படிப்பா தெரியும் என்று அருகில் இருந்த மதிவாணன் கேட்டான் முருகனிடம்.

உங்களுக்கு இன்னைக்கு கல்யாண நாளுனு அமுதுக்குட்டிதான் சொன்னுச்சி அய்யா என்றான் முருகன்

புன்முறுவலுடன், அய்யாவுக்கு அப்படி என்னாப்பா பரிசு கொடுக்கப் போறே என்ற மீனாட்சியிடம்,

மகாத்மா காந்தியோட சத்தியசோதனை புத்தகம்மா என்ற முருகனிடம் முகத்தில் மகிழ்ச்சி பொங்க சத்திய சோதனை புத்தகம்மா என்று ஆச்சரியமாய் கேட்டாள் மீனாட்சி.

முருகா! உனக்கு மகாத்மா காந்தியை தெரியுமா! என்றான் மதிவாணனும் ஆச்சரியமாய்

அய்யா! நான் எட்டாவது வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். நான் படிச்சுப்ப பேச்சுப்போட்டியிலே முதல் பரிசா வாங்குனதுதான் மகாத்மா காந்தியோட இந்த, சத்திய சோதனை புத்தகம் என்று சொல்லிக்கொண்டே புத்தகத்தை மதிவாணன் கையில் கொடுத்தான் முருகன்.

அப்படியா! எட்டாவது படிச்சிருக்கியா! அதிர்ச்சியா இருக்குப்பா என்று சொல்லிக்கொண்டே சத்திய சோதனை புத்தகத்தை வாங்கினான் மதிவாணன்.

முருகா! நீ எனக்கு பரிசு கொடுத்த மாதிரி நானும் உனக்கு பரிசு ஒண்ணு கொடுக்குறேன் என்ன தெரியுமா, அந்த மாமரத்துக்கிட்ட நிறைய காலி மதுப்பாட்டுலு இருக்கு. சாப்பிட்டுட்டு போறப்ப எடுத்துட்டுப் போப்பா என்றான் மதிவாணன் பெருமையுடன்,

ஓவியம்: வேதா
ஓவியம்: வேதா

அய்யா, என்னை மன்னிச்சிடுங்க! குப்பை பொறுக்குறவன் எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேனு சொன்னவுடனேயே ஆச்சரியப்பட்டீங்க! வயித்து பிழைப்புக்காக குப்பை பொறுக்குற நான் சாராயப்பாட்டுலை மட்டும் பொறுக்கமாட்டேங்கற, என்னோட கொள்கையை சொன்னா உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும் என்றான் கண்கள் கலங்க முருகன்.

என்னப்பா சொல்றே! சாராயப் பாட்டுலை பொறுக்கமாட்டீயா… ஒண்ணுமே புரியலையே என்று ஆச்சரியப்பட்ட மதிவாணனிடம்,

அய்யா நான் இன்னைக்கு பள்ளிக்கூடம் போகாம,  படிப்பை பாதியிலே நிறுத்தி குப்பை பொறுக்க காரணமே, இந்த சாராயப் பாட்டுலுதான். எனக்கு வருமானமே இல்லாம போனாலும் என் இடதுக்கையாலேக்கூட சாராயப் பாட்டுலை தொடமாட்டேன் அய்யா என்றான் முருகன் சோகத்துடன்,

இந்த சின்ன வயசுலேயே சாராயப்பாட்டுலை இடதுக்கையாலேக்கூட தொடமாட்டேனு சொல்றியே! உனக்கு எவ்வளவு நல்ல உள்ளம்! உயர்ந்த சிந்தனை! ரொம்ப சந்தோசமா இருக்கு என்றாள் முருகனிடம் சிரித்துக்கொண்டே மீனாட்சி.

அம்மா! அதுக்கு காரணமே எங்க அப்பாதான். எங்கப்பா ஒரு ஆட்டோ டிரைவர். மதுவுக்கு அடிமையாகி ராத்திரி, பகலா போதையிலேதான் இருப்பாரு. வீட்டு செலவுக்கு போதுமான அளவு பணம் கொடுக்க மாட்டாரு. அதனாலேதான் எங்கம்மா, வீட்டு வேலைக்குப் போயி குடும்பத்தை கவனிச்சாங்க, சர்க்கரை நோயாளியான எங்கம்மா, ஓய்வு இல்லாம உழைச்சி, உழைச்சி, மாத்திரை மருந்து வாங்கக்கூட வழியில்லாமல் செத்துப்போயிட்டாங்க! எங்க அம்மா செத்தும் எங்க அப்பா திருந்தலே. கல்யாண வயசுலே இருந்த எங்க அக்காவும். கல்யாணமாகாத ஏக்கத்துலேயே தற்கொலை செஞ்சிடுச்சி. எங்க அக்கா செத்தும் எங்க அப்பா திருந்தலே. ஒரு நாளு எங்க அப்பா குடிச்சிட்டு படுத்தவர் படுத்தவர்தான், செத்துப்போயிட்டாரு, என்று கண்களில் நீர் வழிய முருகனிடம், இந்த சின்ன வயசுலே உன் மனசுலே இவ்வளவு சோகக் கதையா! என்றான் மதிவாணன்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருவதில் வெளுத்துவாங்கும் வெள்ளை டீ!
ஓவியம்: வேதா

அய்யா! இந்த சோகக் கதையாலேதான் என் வாழ்க்கை வீணாப் போயிடுச்சி! என் படிப்பும் பாதியிலேயே நின்னுப்போயிடுச்சி எங்கப்பா செத்ததுக்கு அப்புறம் சொந்தம் பந்தம் இருந்தும், எனக்கு உதவி செய்ய என்னைப் படிக்க வைக்க யாருமில்லை. எங்கப்பாவைத் திருத்த முயற்சி செஞ்சேன். முடியலே எங்கப்பாவுக்குக் குடிப்பழக்கம் இல்லன்னா என் நிலைமை இப்படிப் போயிருக்காது. நல்லா படிச்சி வேலைக்குப் போயி எங்கக் குப்பத்தை வளர்ச்சி அடைய வைக்கனும்னு அப்துல் கலாம் அய்யா சொன்ன மாதிரி கனவு கண்டேன். என் கனவெல்லாம் வீணாப் போயிடுச்சு. நான் ஏன் சாரயப்பாட்டுலைப் பொறுக்க மாட்டேங்கற காரணம், இப்ப புரியுதாய்யா என்ற முருகன் குலுங்கி குலுங்கி அழுதான்.

உயர்ந்த எண்ணத்துடனும் அறிவார்ந்த சிந்தனையுடனும் பேசிய முருகனை பார்த்து, மீனாட்சி கண்கள் மட்டும் அல்ல, மதிவாணன் கண்களும் கலங்கின.

முருகா! உங்க அப்பா திருந்தலன்னு வருத்தப்படாதே. நீ என்னை திருத்திட்டே! நான் திருந்திட்டேன். ஒரு சின்ன தவறைக்கூட செய்யக்கூடாதுனு உண்மையாய் இருந்து உண்மையை பேசி மாமனிதனா வாழ்ந்த மகாத்மா காந்தியோட இந்த சத்திய சோதனை புத்தகம் மேல சத்தியமா சொல்றேன்... இனிமே நான் குடிக்கமாட்டேன். மதுக்கடைக்குப் போக மாட்டேன். பாட்டில்களுக்கு ‘பை’ சொல்லிட்டேன் என்றான் கண்களில் நீர் வழிய மதிவாணன்.

என்னங்க சொல்றீங்க! இனிமே குடிக்க மாட்டீங்களா என்றாள் ஆனந்தக் கண்ணீருடன் மீனாட்சி.

ஆமாம் மீனாட்சி! இனிமே கனவுலக்கூட மதுப்பாட்டுலைத் தொடமாட்டேன். உன்னோட ரொம்ப நாளு கோரிக்கையை நிறைவேத்தப் போறேன் என்ற மதிவாணனிடம்,

ரொம்ப சந்தோசமா இருக்குங்க! என்னாலே நம்ப முடியலேங்க என்று சொல்லிய மீனாட்சி, மதிவாணன் கைகளை பிடித்துக்கொண்டாள்.

மீனாட்சி இனிமே முருகன், பிள்ளையார் கோயில் முருகன் இல்ல. அவன் நம்மவீட்டு முருகன்! முருகா! இனிமே நீ குப்பை பொறுக்க வேண்டாம். உன் ஆசைப்படியே உன்னைப் படிக்க வைக்கிறோம்! இனிமே நீ எங்க வீட்டுப்பிள்ளை என்று சொல்லிய மதிவாணன் முருகனின் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

அய்யா! அம்மா என்று சொல்லிக்கொண்டே மதிவாணன் மீனாட்சி இருவரின் கால்களை தொட்டு வணங்கினான் முருகன்.

அருகில் நின்ற அமுதுக்குட்டி எனக்கு அண்ணன் கிடைச்சிட்டான் என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com