சிறுகதை - உயிர்த் தேர்!

ஓவியம்; ம.செ.
ஓவியம்; ம.செ.
Published on

-திருவாரூர் பாபு

"நீ அவசியமா போய்த்தான் ஆகணுமாய்யா...?"

கமலா கவலையாய் கணவனைப் பார்த்துக்கேட்டாள். செவத்தான் வேஷ்டியால் முகத்தை நிதானமாய் துடைத்துவிட்டு, கைலி எடுத்து கட்டிக்கொண்டு அவளைப் பார்த்து சிரித்தான்.

''என்ன இப்படி ஒரு கேள்வி...?"

"இதெல்லாம் பழக்கமானவங்க செய்யற வேலை... தேருக்கு முட்டு போடறது சாதாரண காரியமா...? நான் நேத்தி ஜோடிச்சி வச்சிருக்கிற தேரப் போய்ப் பார்த்தேன். சக்கரம் மட்டும் ரெண்டாளு உசரத்துக்கு இருக்கு... எனக்கு என்னவோ பயமா இருக்குய்யா...” என்றாள் கவலை தோய்ந்த குரலில்.

செவத்தான் படபடத்தான்.

"பண்ணை வீட்டு ஐயா சொல்றப்ப தட்ட முடியுதா...? ஐயா பேச்சுக்கு எதிர் பேச்சு பேச முடியுமா? வருஷா வருஷம் `முட்டு போடற ஆளுங்கள்ல ரெண்டு பேருக்கு உடம்பு முடியலையாம். அதான் என்னை வரச் சொன்னாங்க. எல்லாத்துக்கும் காரணம் இந்த உடம்புதான்" என்றான். இரண்டு கைகளையும் உயரத் தூக்கி நெஞ்சு நிமிர்த்திக் காட்டினான்.

கமலா ஓரிரு விநாடிகள் எல்லாவற்றையும் மறந்து, பொங்கி நின்ற கணவனின் உடம்பைப் பூரிப்பாய்ப் பார்த்தாள் .

"எதையாச்சும் சொல்லி தட்டிக் கழிக்க முடியாதா...?" மறுபடியும் முகம் சுருங்கிக் கேட்டாள்.

"பைத்தியம் மாதிரி பேசாத. வரேன்னு சொல்லிட்டு மறுபடி மாட்டேன்னு சொல்லச் சொல்றியா? அசடு. அசடு. பெரிய ஐயாகிட்ட ஒரு காரியத்துக்கு அடி போட்டிருக்கேன். அவுங்ககிட்ட எத்தினி மில்லு, ஃபேக்டரிங்க இருக்கு? அதுல ஏதாச்சும் ஒரு வேலை கேட்கப் போறேன். இப்பப் போயி மாட்டேன்னு சொன்னா நல்லாயிருக்குமா? அதுவுமில்லாம தேர் நிலைக்கு வந்தோன்ன முட்டு போட்டவங்களுக்கு வேஷ்டி, துண்டு கொடுத்து மரியாதை செய்வாங்களாம். நீ ஒண்ணும் கவலைப்படாத. எல்லாத்தையும் அந்த தியாகேசன் பார்த்துப்பான்..."

"முட்டுப் போடத்தானுங்களே, வரேங்க...." என்று சொல்லிவிட்டானே தவிர பிரம்மாண்டமாய் நின்ற தேரையும், நிமிர்ந்து பார்க்க வைத்த அதன் சக்கரத்தையும் இரும்புக் கம்பிகளால் வடத்துக்காக வளைக்கப்பட்ட முறுக்கு கம்பியையும் சீறிப் பாய்ந்துகொண்டிருந்த குதிரைகளையும் அருகே நின்று பார்க்கக் கொஞ்சம் பிரமிப்பு கலந்த பயமாகத்தான் இருந்தது.

கூட்டம் வீதி முழுதும் அடைத்துக்கொண்டு நிற்க, தேரைச் சுற்றி போலீஸ்காரர்களாய் நின்றார்கள். இரண்டு சின்னத் தேர்களும் நகர்த்தப்பட்டிருக்க, வீதி இன்னும் விசாலமாய், மனிதத் தலைகளாய் இருந்தது.

இதையும் படியுங்கள்:
படைப்புத் திறனே நம் குறைகளைக் தீர்க்கக் கூடிய சாத்தியக் கூறுகள்!
ஓவியம்; ம.செ.

"என்ன செவத்தான்... இதுக்கு முன்னாடி தேருக்கு முட்டுப் போட்டிருக்கியா?" என்றான் பழனி.

"போட்டிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முந்தி... எங்க ஊர் வாமனர் தேருக்கு போட்டிருக்கேன். அது சாதாரண தேரு. இவ்வளவு பெரிசு கிடையாது. முட்டும் இத்தினி பெரிசா இருக்காது" என்றான் பக்கத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிது பெரிதான முட்டுகளைப் பார்த்துக்கொண்டே.

"நேத்தி நான் சொன்ன மாதிரிதான் உடம்பு வலுதான் முக்கியம். ஐயா அத வச்சிதான் ஒன்ன கூப்பிட்டிருக்காங்க. எல்லாராலும் முடியாது. வலு இருந்தாலும் நேக்கா செய்யணும். புல்டோசர் தள்ளும். சக்கரம் அலைபாயும். ரோட்டை வுட்டு எறங்கிடாம, ரொம்ப வேகமா சக்கரம் சுத்த விடாம, ஐயா கைய ஆட்றப்ப முட்ட சக்கரத்து நடுவுல கொடுக்கணும்."

"புரியுது...." என்ற செவத்தான் மேலே தொங்கிய சணல் முறுக்கைப் பார்த்தான்.

பக்கத்தில் கிடந்த முட்டுக் கட்டையைத் தூக்கிப் பார்த்தான். கொஞ்சம் பலம் கூட்டி தூக்க முடிந்தது. ஒரு கையால், தொங்குகின்ற கயிற்றைப் பற்றித் தொங்கிக்கொண்டே இன்னொரு கையால் முட்டுக்கட்டையை இழுத்துக்கொண்டே செல்ல வேண்டும். தேர் சற்று வேகமாக ஓடினாலோ அல்லது சாலையை விட்டு விலகுகிற மாதிரி தெரிந்தாலோ சரக்கென்று சக்கரத்தினூடே முட்டை செருக வேண்டும்.

தோளில் மெத்தென்று அடி விழ, செவத்தான் திரும்பினான்.

பெரிய ஐயா நின்றிருந்தார். "என்னடா.. ரெடியா இருக்கியா?"

"இருக்கங்க.." என்று சிரித்தான் கும்பிட்டபடி.

தேருக்குப் பின் இரண்டு சக்கரங்களையும் கிட்டத்தட்ட அணைத்தபடி இரண்டு புல்டோசர்கள் நின்றுகொண்டிருந்தது. நான்கு சக்கரங்களுக்கும் ஹைட்ராலிக் பிரேக். சிங்கத் தோல் சுற்றப்பட்ட பிரேக்கின் கம்பிகளைப் பிடித்துத் தொங்கினால் சரக் என்று தேர் நிற்கும். கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுக்க... பின்னால் புல்டோசர்கள் தள்ள... கடகடவென ஓடும் தேரை கட்டுப்படுத்தி ஓட்ட வேண்டும். தேருக்கு முன்னே கூட்டம் நகர... நகர... பத்தடி பத்தடியாக தேரை நகர்த்த வேண்டும். ஒரேடியாக கிடுகிடுவென தேரை ஓட விடக்கூடாது. கூட்டம் நெருக்கும்.

தேருக்குப் பின்னால் டிராக்டர்களில் முட்டுக் கட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இரண்டு லாரி நிறைய - தேர் உட்காரும் என்று கருதப்படுகின்ற இடங்களில் போடுவதற்கு - பெரிய பெரிய மர வார்ப்புகள் தயாராய் இருந்தன.

றங்காவலர் மணி பார்த்து கையை ஆட்ட... சடார் சடார் என்று சிதறு காய்கள் சாலையில் நொறுங்கின. திடீர் என ஒரு பரபரப்பு ஏற்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டு, சில ஊர் முக்கிய பிரமுகர்களும் நாசூக்காய்த் தேர் வடத்தை பற்றிக்கொள்ள, அறங்காவலர் கையை உயரத் தூக்கி தேருக்குப் பின்னால் சைகை காட்ட, படபடவென புல்டோசர்கள், இன்ஜின்கள் உதறத் தொடங்கின.

முட்டுப்போட நின்ற அனைவரும் நெடுஞ்சாண் கிடையாக சாலையில் விழுந்து தியாகராஜரை வணங்கினார்கள்.

முன்னால் நின்றவர் பச்சைக் கொடியைத் தூக்கி ஆட்ட... உற்சாக மக்கள் கூட்டம், "தியாகேசா..." என்றபடி வடம் தூக்கி இழுக்க... புல்டோசர்கள் எத்தி விட, தேர் அழகாய், மிக அழகாய்... மெதுவாய் நிலையடியில் இருந்து வழுக்கியது. தேரில் கட்டப்பட்டிருந்த மணிகள் சன்னமாய் சத்தம் போட்டது. தொம்பைகள் அசைந்தன. குதிரைகள் இடதும் வலதுமாய் லேசாக ஆடி, கட்டியிருந்த கயிறுகளை கரகரக்க வைத்தன.

இதையும் படியுங்கள்:
பழநியிலிருந்து முருகன் தாண்டிக் குதித்த இடம் எங்குள்ளது தெரியுமா?
ஓவியம்; ம.செ.

அறங்காவலர் போதும் என்பதுபோல் கைகட்ட... புல்டோசர் நின்றது. சிவப்புக் கொடி மேல் ஏறியது. தேர் நின்றது. விடுபட்ட வடம் இழுவிசையால் படார்படார் என சாலையைத் தேய்த்தது.

தேரோட்டத்தை துவக்கி வைக்க வந்தவர்களும், தியாகராஜருக்கு முகம் காட்ட வந்தவர்களும் நகர்ந்து கொள்ள...

தேர் அழகாய் ஓடத் தொடங்கியது.

தெற்கு வீதியில் அந்த இடம் கொஞ்சம் குறுகலான இடம். இரண்டு பக்கமும் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அடைத்துக்கொண்டு நின்றாலும், தேரைச் சுற்றி காவலர்கள் கைகோத்து நின்றாலும் கூட... சக்கரத்திற்கு அருகே மக்கள்.

புல்டோசர்கள் ஆவேசமாய் உறுமிக்கொண்டு சக்கரத்தை நோக்கி வந்தன. செவத்தான் கயிற்றில் தொங்கிக்கொண்டே முட்டுக்கட்டையை ஒற்றைக் கையால் சாலையில் இழுத்துக்கொண்டே வர... தேர் கிடுகிடுவென ஓடி வர....

அப்போதுதான் அது நிகழ்ந்தது.

சாலையின் ஓரத்தில் வீட்டோடு வீடாய் ஒண்டிக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்த அந்த சின்னஞ் சிறுவன் எப்படியோ நழுவி... கைகோர்த்து நின்ற காவலர்களுக்கிடையே புகுந்து தேரை மிக அருகே பார்க்கும் ஆசையில், கரகரவென நகர்ந்துகொண்டிருந்த தேர் சக்கரத்திற்கு வெகு அருகே வந்துவிட...

செவத்தான் அந்தச் சிறுவனை மிக அருகே பார்த்தான். அந்தச் சிறுவன் நிற்காமல் மேலும் மேலும் சக்கரத்தை நோக்கி வர... தூரப்பார்வை பார்த்துக்கொண்டிருந்த போலீஸ்காரர்கள் அந்தச் சிறுவனை கவனிக்கவில்லை. அந்தச் சிறுவனுக்குரிய பெண் மட்டும் கை நீட்டிக் கத்த... வேட்டுத் சத்தத்தில் அவள் சத்தம் அடங்கிப் போயிற்று.

என்றாலும், செவத்தான் செயல்பட்டான். கட்டையைக் கீழே விட்டுவிட்டு கயிற்றில் தொங்கியபடி காலால் அந்தச் சிறுவனை எட்டி உதைத்தான். சிறுவன் பறந்து தூரமாய் விழ... நிலைமை உணர்ந்து காவலர்கள் உஷாராகி லட்டியை வீச.... கயிற்றில் தொங்கிய செவத்தான் கயிற்றை விட்டால் பாலன்ஸ் இழக்கலாம்... சக்கரத்தில் மாட்டலாம் என்பதால் தொங்கிக்கொண்டே, உருண்டு கொண்டிருந்த சக்கரத்தில் இரண்டு முறை மோதினான். திடும் திடும் என்று உடம்பு அடிபட...

நிலைமை புரிந்து தேரின் நான்கு பிரேக்குகளும் ஏககாலத்தில் அழுத்தப் பட... தேர் நின்றது. செவத்தான் கீழே விழுந்தான். யாரோ பிடித்துத் தூக்கினார்கள். எங்கோ தூக்கிக்கொண்டு ஓடினார்கள். பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸில் படுக்க வைக்கப்பட்டு புஜத்தில் சுருக் என்று ஊசி குத்தப்பட்டதை செவத்தான் உணர்ந்தான்.

"என்னய்யா இது...?" என்றாள் கமலா பதறி, உடம்பில் ஆங்காங்கே கட்டோடு வந்த கணவனைப் பார்த்து.

செவத்தான் வலியைக் காண்பித்துக்கொள்ளாமல் சிரித்தான்.

''ஒண்ணுமில்ல புள்ள... முட்டுக் கட்டை உடைஞ்சு சிதறி மேல பட்டுட்சி அவ்வளவுதான்..." என்றான்.

''நான் சொன்னேன்ல... இந்த வேலை வேணாம்னு..." என்றவள் பதறியபடி அவசரமாய் அவன் உடம்பைப் பற்றி, காயத்தை பார்த்தாள்.

"அதான் ஒண்ணுமில்லேங்கிறேன்ல?" என்றவன் அவளைப் பற்றி, கட்டிலில் உட்கார வைத்தான். மனைவியையே உற்றுப் பார்த்தான். அவன் பார்வை புரிந்து, ''என்னய்யா அப்படிப் பார்க்கிற...?" என்றாள் கிறக்கமாய்.

தலையை ஆட்டினான்.

"நீ போன பிறவு நான் ஒரு எடத்துக்குப் போனேனே..." என்றாள் சிணுங்களாய்.

'எங்கே' என்பது போல் பார்த்தான்.

"டாக்டரம்மாகிட்ட..."

"ஏன்... உடம்புக்கு என்ன செய்யுது...?" என்றான் பதட்டமாய்.

"உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்ல... காலையில நானு தேர் பார்க்க வரலேன்னு சொன்னேனே, ஒனக்குப் புரியலியாய்யா... கர்ப்பஸ்திரிங்க தேர் பார்க்கக் கூடாதுய்யா..."

''என்னடி சொல்ற... தெளிவாச் சொல்லு!''

"இந்த தடவ தங்கிட்டுய்யா... அம்பது நாளு... ரெண்டு தடவ சரியா வரலியேன்னு பயந்துக்கிட்டே, உன்கிட்ட கூடச் சொல்லாம நான் மட்டும் டாக்டரம்மாகிட்ட போனேன். இந்த தடவ உறுதியாம்... டாக்டரம்மா சொல்லிட்டாங்க..."

செவத்தான் மகிழ்ச்சி பொங்க அவளை அணைத்துக்கொண்டான்.

பின்குறிப்பு:-

கல்கி 29  மே  1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com