சிறுகதை; அழியத்தொடங்கும் அழுத்தமான தடங்கள்!

Lifestyle stories!
Short Story in tamil
Published on

-சத்தியகிரிராஜன்

காராச்சேவுப் பொட்டலத்தை அவளிடம் அவன் நீட்டினான். பதிலுக்கு அவனை அவள் முறைத்தாள்.

"இன்னும் எத்தனை நாள் இப்படி ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் காண்டீன்லே காப்பி குடிச்சிட்டு, காராச்சேவு வாங்கிக் கொறிச்சுக்கிட்டு, இப்படி முக்கொம்பிலே வந்து உக்காந்து எந்திரிச்சுப் போயிட்டிருக்கிறது.

"என்ன செய்யறது? நானும் சொல்லிப் பார்த்திட்டேன். மிக்சர், பகோடா, எல்லாம் போட மாட்டேங்கிறாங்களே?"

"குமார்! பி சீரியஸ்! எங்க வீட்லே கிரீன் சிக்னல் கிடைச்சு ரெண்டு மாசமாயிடுச்சு. நீங்க என்னடான்னா..."

"லீலா! நான் சொல்றதைக் கேளு…"

"நோ! லீலா, மாலா இதெல்லாம். வேண்டாம். என்னைப் பெத்தவங்க எனக்கு வச்ச பேரு அஞ்சலை' என்னை லவ் பண்ற நீங்க என்பேரையும் லவ் பண்ணித்தான் ஆகணும்!"

"சாரி. ஓ.கே. அஞ்சலை! உங்க வீட்லே உனக்குக் கிரீன் சிக்னல் கிடைச்சாச்சு' எங்க வீட்லே போன வாரம்தான் எனக்கு ஆம்பர் சிக்னல் கிடைச்சிருக்கு! இன்னும் ரெண்டு மாசத்திலே நிச்சயம் எனக்கும் கிரீன் சிக்னல் கிடைச்சிடும்! அது என்ன ரெண்டு மாசம் கணக்குன்னு நீ கேக்கும் முன்னாடி நானே விளக்கமாச் சொல்லிடறேன்."

சொன்னான் குமார் விளக்கமா… ஆனால் அஞ்சலைக்கு வேம்பாக இருந்தது. அண்ணனாகிய இவன் வெறும் பி.எஸ்ஸியாக ஒரு பெயிண்ட கம்பெனியில் கெமிஸ்ட்டாக இருப்பதால், இவனைப் புறத்தேயொதுக்கி, எம்.பி.ஏ முடித்து ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி நிருவாகியாக இருக்கும் இவன் தம்பியை முற்றுகையிடுகின்றனராம் பெண்களைப் பெற்றவர்கள். தம்பிக்கு வழி விடுவதற்காக, இவன் திருமணத்தைச் சீக்கிரம் நடத்திவிட இவன் பெற்றோர் காட்டிய வேகத்திற்கு இவர்களுடைய காதல் 'ப்ரேக்' போட்டு விடவே, தம்பி தன்னை முந்திக்கொள்ளட்டும் என்று கூறிவிட பெற்றோரும் சம்மதித்து விட்டனராம்!

"எதுக்குக் காத்திருக்கணும்? நம்ம விஷயத்தை உங்க வீட்லே சொல்லி, நம்ம கல்யாணத்தை முன்னாடி நடத்திட வேண்டியதுதானே?"

“நம்ம விஷயத்தை முழுசாச் சொல்லல்லே... தம்பி கல்யாணம் முடிஞ்சதும் சொல்லிடறேன். 'எனக்கு நீங்க பெண் பார்க்க வேண்டாம்! நானே பார்த்து வச்சிருக்கேன்'னு மட்டும் எங்க வீட்லே சொல்லியிருக்கேன்.”

"அந்தப் பெண் யாரு? என்ன ஜாதி?ன்னு கேட்டிருப்பாங்களே?"

"யெஸ்..."

"அதெல்லாம் உங்க தம்பி கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் சொல்றதாச் சொல்லியிருக்கீங்க... அப்படித்தானே?"

சங்கடமாகப் பார்த்தான் குமார்.

இதையும் படியுங்கள்:
உயிர்க்காக்கும் முதலுதவி: வீட்டில் எப்போதும் இருக்க வேண்டிய ஃபர்ஸ்ட் எய்ட் பெட்டி!
Lifestyle stories!

"ரிலாக்ஸ் குமார்! இப்பவே சொல்லிட்டா, உங்க தம்பி கல்யாணத்துக்கு இடைஞ்சல் ஏற்படலாம்னு நினைக்கிறீங்க... இல்லையா?"

"என் தம்பி கல்யாணத்துக்கப்புறம் நிச்சயமாச் சொல்லத்தானே போறேன்!"

"அப்போ... நீங்க ஏதோ செய்யக்கூடாத தப்பான காரியத்தைச் செய்யப்போவதாகவும் அதனாலே உங்க தம்பி கல்யாணம் தடைப்பட்டுப் போகும்னும் நினைக்கிறீங்க..."

"செய்யக்கூடாதுன்னு இதுவரையிலே எல்லாரும் சொல்லிக்கிட்டிருந்ததை இப்போ நான் செய்து காட்டப்போறேன்... இதை என் தம்பிக்குப் பெண் கொடுக்கப் போறவங்க ஏத்துக்கிடுவாங்கன்னு என்னாலே நிச்சயமாச் சொல்லமுடியாது. அதனாலதான் தாமதிக்கிறேன். ஆனா அவன் கல்யாணம் முடிஞ்சபிறகு தங்களோட பேரப் பிள்ளைங்க எதிர்காலம் பிரகாசமா இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டதும் என்னைப் பெத்தவங்க நிச்சயம் நம்ம கல்யாணத்துக்குச் சம்மதிப்பாங்க!"

''குமார்... நீங்க என்ன சொல்ல வரீங்க?''

தன் விருப்பத்தை, ஆசையை, இலட்சியத்தை விளக்க ஆரம்பித்தான் குமார்.

பொறியியல் கல்லூரியில் சேர வேண்டும் என்ற அவனுடைய வண்ணக் கனவு வானவில்லாய் மறைந்து, பெயிண்ட் கம்பெனியில் வண்ணக்கலவையில் ஈடுபட நேர்ந்துவிட்டது, நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண்கள் அவன் குறைவாகப் பெற்றதனால்! அதே சமயத்தில் அவனைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குப் பொறியியல் கல்லூரியில் சேரும் வாய்ப்புக் கிட்டியது இட ஒதுக்கீட்டுச் சலுகையினால்! அப்போது அவனுள் எழுந்த வெறி எப்படியாவது தன் முதல் குழந்தையை ஆணோ, பெண்ணோ எதுவாயினும், இன்ஜினியராக அல்லது டாக்டராக ஆக்கிவிட வேண்டும் என்பது! இப்போது அதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது!

நான்கைந்து மாதங்களுக்கு முன் அலுவலக நண்பர்களுடன் கல்லணை சென்றிருந்த குமாருக்கு அங்கே தோழிகளுடன் சுற்றுலா வந்திருந்த அஞ்சலையின் அறிமுகம் கிடைத்தது. அவள் கம்பெனி டைப்பிஸ்ட் அனுராதா, அஞ்சலையை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். அனுராதாவும் அஞ்சலையும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். மறுநாள், அனுராதா அவனிடம், அஞ்சலை ஜாதியில்தான் தாழ்த்தப்பட்டவள் என்றும், வசதியில் உச்சியில் இருப்பவளென்றும், அஞ்சலையின் தந்தைக்கு ஒரு சினிமா தியேட்டரும், ஒரு ரைஸ்மில்லும், மூன்று லாரிகளும், ஐந்து டாக்சிகளும் சொந்தமாக இருக்கின்றன என்றும் கூறியதும், அவன் மனத்துள் மின்னலிட்ட அந்த ஒளியில் அவன் லட்சியத்தை அடைவதற்கான பாதை அவனுக்குத் தெரிந்தது!

இதையும் படியுங்கள்:
AI மோசடி - ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை மணக்க ரூபாய் 7.40 கோடி இழந்து தவிக்கும் பெண்!
Lifestyle stories!

அஞ்சலையைச் சந்திக்க விரும்புவதாக அனுராதா மூலம் குமார் தகவல் அனுப்பினான். அரசுப் பொருட்காட்சியில் நிகழ்ந்த அவர்களின் முதல் சந்திப்பின்போது, சுற்றி வளைத்து ஏதேதோ பேசிவிட்டு, முத்தாய்ப்பாக,

'ஐ லவ் யு' என்று அஞ்சலையிடம் சொன்னான் குமார்! தன்னைப் பற்றி எல்லாம் தெரியுமா என்று அஞ்சலை கேட்டதற்கு, அதனால்தான் அவளை அவன் விரும்புவதாகக் குமார் கூறியபோது, அதன் உள்ளர்த்தம் அப்போது அவளுக்குப் புரியவில்லை!

"குமார்! என் ஜாதியைப் பத்தித் தெரிஞ்சதுனாலேதான் என்னை நீங்க லவ் பண்றதா நம்ம முதல் சந்திப்பிலே நீங்க சொன்னதோட முழு அர்த்தமும் இப்பத்தான் எனக்குப் புரியுது!"

"இதிலே என்ன தப்பு? உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்டு, நம்ம குழந்தை உன் ஜாதின்னு காட்டி அரசாங்கம் கொடுக்கிற சலுகையினாலே நம்ம குழந்தை மேலே வரணும்னு நான் விரும்பறதுல என்ன குற்றம்? கலப்புக் கல்யாணம் செய்துக்கிடறவங்க குழந்தைகளைத் தாயார் ஜாதி, இல்லை தகப்பனார் ஜாதின்னு எப்படியும் காட்டலாமே?"

"குமார்! உங்களை நினைச்சா எனக்குப் பரிதாபமாக இருக்கு. நீங்க சட்டத்தையே சரியா புரிஞ்சுக்கலை. தகப்பனார் ஜாதிதான் குழந்தைக்குன்னு சட்டம் சொல்லுது. இந்த விஷயத்துல பெண்ணுக்கு சமஉரிமை தர இன்னும் சட்டம் தயாராகலே. அப்படியே சட்டம் அனுமதிக்கிறதா வைச்சுக்கிட்டாலும் என்னைக் கல்யாணம் செய்துக்கிடப் போறவர், என் ஜாதியைக் காட்டிச் சலுகை வாங்கிக் கிடறதுலே எனக்கு விருப்பமில்லே! இன்னும் சொல்லப்போனா, நானும் மெடிக்கல் நுழைவுத் தேர்வு எழுதினேன். தாழ்த்தப்பட்ட ஜாதிங்கற முத்திரையோட நான் டெஸ்ட் எழுதலே. அந்த முத்திரை வேண்டாம்னு பொதுப் பட்டியலிலேதான் எழுதினேன்! அதனால் அட்மிஷன் கிடைக்கலே..."

"அதைப் பற்றி நீ கவலைப்படாம் இருக்கலாம், ஏன்னா ஜாதியில் தாழ்த்தப்பட்டிருந்தாலும் பொருளாதாரத்தில முன்னேறிய குடும்பம் உன்னுது."

"அது உண்மைதான் குமார். ஆனால் அதையே திருப்பிப் போடவும் செய்யலாம். பொருளாதாரத்தில் ஏழையாக இருந்தாலும் ஜாதியாலும் மனசாலும் உயர்ந்தவனா இருக்கலாமே?"

"நான் அப்படி இல்லேங்கிறியா?"

''ஒரு சம்பவம் சொல்றேன், கேளுங்க, குமார்! என் தம்பி பிளஸ் டூ படிக்கிறான். அவன் வகுப்பிலே ஒரு பையனாலே பரீட்சைப் பணம் கட்ட முடியல்லே... அந்தப் பையன் உங்க ஜாதி. பணம் கட்டாட்டி பரீட்சை எழுத முடியாதுன்னு ஹெட்மாஸ்டராலே - அவரும் உங்க ஜாதிதான் - பயமுறுத்தத்தான் முடிஞ்சதே தவிர, அந்தப் பணத்தைத் தாமே கட்டிடலாம்னு அவருக்குத் தோணல்லே! என் தம்பி எங்க வீட்டிலேயிருந்து பணம் வாங்கிட்டுப் போய் அந்தப் பையனுக்காகக் கட்டிட்டான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஒன் டே மேட்ச்!
Lifestyle stories!

ஆனா... அந்தப் பையன் இனாமா அந்தப் பணத்தை ஏத்துக்கிடல்லே. பணத்துக்குப் பதிலா ஒரு மாசமா என் தம்பிக்குத் தினமும் பள்ளிக்கூடத்திலே லஞ்ச் டயத்திலே கணக்குச் சொல்லிக் கொடுக்கறான்! அந்தப் பையனும் நீங்களும் ஒரே ஜாதிதான். ஆனா.... நீங்க ரெண்டு பேரும் ஒரே ரகமா? அதனாலே, குமார், நீங்க எதிர்பார்த்தபடி நான் தாழ்த்தப்பட்ட ஜாதியுமில்லை! உங்களை உயர்ந்த ஜாதியா நான் நினைக்கவும் இல்லை. இதை யெல்லாம் யோசிக்கும்போது, நீங்க வேறே இடம்தான் பார்க்கணும்!

அஞ்சலை எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

பின்குறிப்பு:-

கல்கி 01 டிசம்பர் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com