- ரெ.ஆத்மநாதன், ஜிடன்ஸ்க், போலந்து
அந்த ஒப்பந்ததாரர் சாப்பிடக்கூட நேரமின்றி ஆலாய்ப் பறந்து கொண்டிருந்தார்! ஒப்பந்ததாரர் என்றால் சாலை போடுபவர்; பாலங்கள் கட்டுபவர்; கட்டிடங்கள் நிர்மாணிப்பவர் என்று நீங்கள் தவறாகக் கணக்குப் போட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை. இவர் சற்று வித்தியாசமான கான்ட்ராக்டர். அதாவது கட்சிகளின் பொதுக் கூட்டம், மாநாடு, நடைப் பயணம் என்று எல்லாவற்றுக்கும் லாரிகள், டிராக்டர்கள், வேன்கள் என்று, ஏற்பாட்டாளர்கள் தேவைக் கேற்ப ஆட்களை அனுப்புவதுதான் இவர் வேலை! ஆனால் தொழிலில் நாணயத்தைக் கடைப் பிடிப்பவர். நூறு பேர் கேட்டால் நூற்றி ஐந்தாகத்தான் அனுப்புவார். எண்ணிக்கையில் எப்பவும் இவர் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. அந்த ஐந்து பேருக்கும் சேர்த்துக் காசைக் கறந்து விடுவார் என்பது வேறு விஷயம்!
குறுவை சாகுபடிப் பகுதிகளில் பெய்யாமல் ஏமாற்றும் மழை இவர் காட்டில் இப்பொழுது நன்றாகவே பெய்து கொண்டிருக்கிறது! மாநாடு, பொதுக் கூட்டம், நடைப் பயணமென்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்து கொள்ள, ஒவ்வொரு ஏற்பாட்டாளரும் எங்களுக்கு ஆயிரம், ஐநூறு என்று ஆர்டர் செய்ய, இவர் ஆட்களைச் சேர்க்கப் படும் கஷ்டம், இவர் மட்டுமே அறிந்தது.
ஓரளவுக்கு நஞ்சை நிலங்களை பெற்றோர் இவருக்காக விட்டுச் சென்றனர். ஒரே பிள்ளை என்பதால் செல்லமாக வளர்ந்த இவர், படிப்பில் சோபிக்கவில்லை. ’போகிறது கழுதை! வராததுடன் எதுக்கு வம்புக்குப் போக வேண்டும்?’ என்ற எண்ணத்தில் அதனை ஒதுக்கி விட்டு, விவசாயத்தில் குதித்தார். தமிழக விவசாயத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும். ஒரு வருடம் விளைந்தால் மறு வருடம் பொய்த்து விடும். அறுவடைக்கு நாள் குறித்து ஆட்களுக்குச் சொல்லியதும், பெய்கின்ற மழையில், அவசரமாய்ப் பூப்படையும் பெண்களைப் போல், அறுவடை செய்யும் முன்னரே வயலிலேயே நெல் முளைக்க ஆரம்பித்து விடும். அப்புறமென்ன?கடன்காரர்களிடம் வாய்தா வாங்குவதே வேலையாகிப் போய்விடும்.
அப்படித்தான் இவருக்கும். முந்தின வருஷம் ஏமாற்றிய பருவ மழை அடுத்த வருடம் பக்குவமாய்ப் பெய்ய, அதிர்ஷ்ட தேவதையின் பார்வை இவர் மீது விழ, நல்ல மகசூல்!வந்த வருமானத்தைப் புத்திசாலித் தனமாக இன்வெஸ்ட் செய்ய நினைத்தவர், நீண்ட நாள்ஆசையான டிராக்டரை வாங்கத் திட்டமிட்டார். குறைந்த தொகையை ஈடுகட்ட வங்கிக் கடன் உதவ, வீட்டு வாசலில் கம்பீரமாக வந்து நின்றது டிராக்டர்!
படிப்புதான் இவருக்குக் குறைவேயொழிய பகுத்தறிவுக்கும், பலருக்கும் உதவி செய்யும் மனத்துக்கும் ஆண்டவன் குறை வைக்கவில்லை. கிராமத்திலுள்ள பலருக்கும் சமயத்தில் உழவடித்துக் கொடுத்து விட்டு, அறுவடை சமயத்தில் பணம் வாங்கிக் கொள்வார். ரொம்பவும் கஷ்டப்படுபவர்களிடம் பணமே வாங்க மாட்டார்.எனவே ஊரில், இவரும் இவர் டிராக்டரும் மிகக் குறுகிய காலத்திலேயே நல்ல பிரபலம்!
ஒரு முறை,கோடையில் பக்கத்து ஊரில் நடந்த அந்தக் கட்சிக் கூட்டத்திற்கு இவர் ட்ரக்கில் ஆட்களை ஏற்றிச் செல்ல, அது லாபகரமாக அமைய, அப்புறம் அதுவே தொடர ஆரம்பித்தது. ’ஆட்களை யாரோ ஏற்பாடு செய்ய ஏன் விட வேண்டும்? நாமே அதனையும் செய்தாலென்ன?’ என்ற இவரின் சிந்தனைக்கு நல்ல பலன் கிடைத்தது.
அப்புறமென்ன? இரண்டு, மூன்று ஆண்டுகளில் மூன்று, நான்கு லாரிகளையும் சொந்தமாக வாங்கி விட்டார். அவர் ஏதோ விவசாய வேலைகளுக்குத்தான் லாரிகளை வாங்குவதாக ஊரார் நினைத்திருக்க, அவருக்கு மட்டும்தான் அவர் அரசியல் கூட்டக் கணக்கு மனதுக்குள் உற்சாக வலம் வந்து கொண்டிருந்தது.
லாரிகள் வாங்கியதைப் போல, உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்களிலும் சிலரைத் தயார் செய்து கொண்டார். மொபைல் பிரபலமானது அவர் தொழிலுக்கு நன்றாக உதவ, நானூறு, ஐந்நூறு பேரைக் கூட ஓரிரு மணி நேரத்திற்குள்ளாகத் தயார் செய்யும் நிலைக்கு வந்து விட்டார். மேலும் சிந்தனையையோட்டி, பிரபல கட்சிகளின் சின்னங்கள் ஒட்டப்பட்ட அட்டைகள், கொடிகள்,பாடல்கள் என்று அனைத்தையும் ரெடி செய்து, அந்தந்தக் கட்சிகளின் கூட்டங்களுக்குச் செல்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டார்.
இப்பொழுதெல்லாம் அரசியல்வாதிகளும் அவரிடம் ‘மொத்த கான்ட்ராக்ட்’ விட ஆரம்பித்து விட்டார்கள். ‘A 2 Z’ கான்ட்ராக்ட்! எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொள்வார்! அதற்குத் தனி ரேட்! திருமண விழாக்களை மொத்த கான்ட்ராக்ட்டில் விடுவதைப் போல அரசியல்வாதிகளும் இப்பொழுது அவரிடம் மொத்த கான்ட்ராக்ட் பேசி விடுகிறார்கள். போக்குவரத்து, மதிய உணவு, தண்ணீர் பாட்டில், தண்ணி மற்றும் அன்றைய பேட்டா என்று எல்லாவற்றையும் அவரே கவனித்துக் கொள்வார்.
கட்டணம் சற்று கூடுதல் என்றாலும், எந்த அரசியல்வாதியும் காசைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அரசியல்வாதிகளிடம் காசுக்கா பஞ்சம்? பல, பெரும் பாலங்கள் கட்டும் ஒப்பந்ததாரர்களே வியந்து போகும் அளவுக்கு அவர் வருமானம் எகிறிக் கொண்டிருக்க, தனக்குக் கிடைக்காத கல்வி தன் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டுமென்பதில் உறுதி காட்டும் அவர், மகனை அமெரிக்காவின் சிறந்த பல்கலைக் கழகத்திலும், பெண்ணை ஐரோப்பாவின் உயரிய பல்கலைக் கழகத்திலும் படிக்க அனுப்பியுள்ளார்!
கையில் அவர் வைத்திருந்த இரண்டு மொபைல்களும் ஒரே நேரத்தில் சிணுங்க, ஒன்றை முதலில் எடுத்து ‘ஆமாப்பா! இரு நூறுதான். வண்டியில ஏறிட்டாங்கல்ல…என்ன? தலைக்கு ஐம்பது கூடக் கேட்கிறாங்களா? சரி…அண்ணங்கிட்ட சொல்றேன்னு சொல்லி வண்டியை அனுப்பு … பார்த்துக்கலாம்!’ என்று கூறி விட்டு, அடுத்த மொபைலில் பேச ஆரம்பித்தார்.
‘என்னங்க…போட்ட சோறு ஆறிக்கிட்டே இருக்கு…சீக்கிரம் வாங்க… வந்து சாப்பிட்டுட்டு அப்புறந்தான் பேசுங்களேன்!’ என்று தர்ம பர்த்தினி அழைக்க, ’இதோ வந்துடறேம்மா…கொஞ்சம் பொறு!' என்றபடி அவர் வாஷ் பேசினை நோக்கிச்செல்ல, மீண்டும் மொபைல் சிணுங்க… அவர் மறுபடியும் பேச ஆரம்பித்தார்!
பொதுக் கூட்ட மேடையில் கட்சியின் தலைவர் முழங்கிக் கொண்டிருந்தார். ’மக்கள் எங்க பக்கந்தான்! எங்களிடம் கோடி உறுப்பினர்கள் உண்டென்று சொன்னோமே!இந்தக் கூட்டத்தைப் பார்த்தாவது ஒத்துக் கொள்கிறீர்களா?’
கூட்டத்திலிருந்த இரண்டு பெண்கள் பேசிக் கொண்டார்கள். ’இவரு எந்தக் கட்சிடி? பேசறதைப் பாத்தா சீக்கிரம் நம்மளை விட மாட்டாங்க போலிருக்கே! நான் மாநாட்டுக்கும் வேற பேரு கொடுத்திட்டேன். மாநாடுங்கறதனால தொகை அதிகம்னு சொன்னாங்க…போயிடலாம்ல?’
‘பயப்படாதேக்கா… நானுந்தான் கொடுத்திருக்கேன்… எல்லாம் இதே லாரிதான்…நம்ம அண்ணன் கரெக்டா அழைச்சிக்கிட்டுப் போயிடுவாரு...!