சிறுகதை - ‘என்னால் முடியாது!’

short stories...
short stories...

-அஸ்வினி

மெயின் காட் பஸ் ஸ்டாப்பில்,  ஸ்ரீனிவாச நகர் வழியாகச் செல்லும் வயலூர் பஸ்ஸுக்காகக் காத்திருந்தாள் அம்சவல்லி. இரு கைகளிலும், காய்கறிப் பைகளைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டிருந்தாள். தெப்பக்குளத்தின் இரு பக்கங்களிலும் விற்கும் 'பசபசவென்ற காய்கறிகளை வாங்குவதற்கென்றே வாரம் ஒருமுறை அம்சவல்லி இங்கு வந்து விடுவாள். அப்படியே குறுக்கே புகுந்து, சத்திரம் பஸ் நிறுத்தத்திற்குச் சென்றால் பஸ்ஸில் உட்காருவதற்கு இடம் கிடைக்கும். அவ்வளவு தூரம், கையில் பைகளையும் தூக்கிக்கொண்டு நடப்பது சிரமமாக இருந்ததால். இங்கு வந்து விட்டாள்.

'பஸ்ஸுலே உட்காருவதற்காவது இடம் கிடைக்குமோ, இல்லே, நம்ம ராசி அதுலேயும் நின்னுட்டுதான் போகணுமோ' மனசுக்குள் புலம்பல்.

நல்ல நெரிசலுடன் வயலூர் பஸ் வந்ததும், எப்படியோ ஏறிவிட்டாள். உட்காருவதற்கு சீட்டே காலியாக இல்லை. சுற்றுமுற்றும் கண்களை ஓட விட்டாள். நல்லவேளை, ஏதோ கல்லூரி மாணவி போலிருக்கிறது. பையுடன் நிற்கும் அம்சவல்லியைப் பார்த்ததும், எழுந்து இடம் விட, "நன்றிம்மா," என்றபடி உட்கார்ந்ததும்தான் உயிரே வந்தது.

இதையும் படியுங்கள்:
கம – கம ‘கட்டா – மிட்டா டேஸ்ட்டி சட்னி’!
short stories...

‘வீட்டுக்குப் போனதும் உட்காரவா முடியும்' என்ற நினைப்பே ஆயாசத்தைத் தந்தது. இரவு சமையலை ஆரம்பிக்க வேண்டும். அவள் மகன் பார்த்திபனுக்கு எல்லாம் சூடாக இருக்க வேண்டும். மருமகள் லக்ஷ்மி வருவதற்கு இன்று நேரமாகும் என்று சொல்லி இருந்தாள். அவள் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தாள். வேலை பார்க்கும் பெண்ணை மகனுக்குத் திருமணம் செய்து வைத்தது தான் செய்த பெரும் தவறு என்று இப்போது தோன்றியது அவளுக்கு. பார்த்திபன் வந்ததும், இரண்டிலொன்று இன்று கேட்டுவிட வேண்டும்என்று தீர்மானித்துக்கொண்டு, சமையலைக் கவனிக்க ஆரம்பித்தாள் அம்சவல்லி.

மகன் வந்ததும், காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். அருகில் வந்து அமர்ந்த தாயை, 'என்ன?' என்பது போல் நிமிர்ந்து பார்த்தான், பார்த்திபன்.

"பார்த்திபா! வர, வர என்னால ரொம்ப முடியல்லேப்பா. எனக்கும் வயசாகுது இல்லை. மெயின்காட் போய் காய்கறி வாங்கிட்டு வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு. வந்ததும் வராததுமா ராத்திரி சமையல். ஓய்வு, ஒழிச்சல் இல்லாம ரொம்பக் கஷ்டமா இருக்கு" சலித்துக்கொண்டாள் அம்சவல்லி.

''ஏம்மா, இங்கே பக்கத்தில கிடைக்கற காய்கறியை வாங்கிக்கன்னா,  கேட்க மாட்டேங்கிறே. எங்க ரெண்டு பேராலேயும் முடிய மாட்டேங்குது. நேரமும் கிடைக்கறதில்லை."

''உன் பொண்டாட்டி ராத்திரி சமையலாவது செய்யக்கூடாதா? எல்லாம் நானே செய்ய வேண்டி இருக்கு. முக்கால்வாசி நாள் லேட்டா வர்றா."

''அதுக்கு என்னம்மா பண்றது? ஆபீஸுக்குப் போற பொண்ணுன்னா, அப்படித்தான். நீதானே வேலை பார்க்கற பொண்ணா இருந்தாத்தான் இந்தக் காலத்துல சமாளிக்கலாம்னு பார்த்துப் பண்ணி வெச்சே. இப்பப் புலம்பினா எப்படிம்மா?"

"அதுக்காக எல்லாமே மாமியாரே செய்யட்டும்னு விட்டுட வேண்டியதுதானா? நானும் சின்னப் பொண்ணா?"

"அவ செய்யறேன்னாலும் நீ விட மாட்டேங்கறே. அவ செய்யறது உனக்கு மனசுக்குப் பிடிக்கலே. அதுதான் அவ ஒதுங்குறா.”

அதனால், ரொம்ப நல்லதுன்னு அப்படியே விட்டுடறதா? 'பரவாயில்லே அத்தே! நான் பார்த்துக்கறேன் நீங்க உட்காருங்க'ன்னுதான் சொல்லணும்.'

அம்மா எந்த நேரத்தில் எப்படிப் பேசுவாள் என்று அவனுக்கே புரியவில்லை.

''இன்னிக்கு லக்ஷ்மி வந்ததும் நானே சொல்லிடறேன்மா."

"நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். நாளைக்கு நான் மதுரைக்கு, நம்ம சுமித்ரா வீட்டுக்குக் கிளம்பறேன் . ஒரு பத்து, பதினைஞ்சு நாள் நிம்மதியா இருந்துட்டு வரப் போறேன், அப்ப லக்ஷ்மிதானே கவனிச்சு ஆகணும். சுமித்ராவும அங்கே ஒண்டியா கிடந்து அல்லாடறா."

இதையும் படியுங்கள்:
வடு மாங்காய் ஊறுதுங்கோ தயிர் சாதம் சாப்பிடுங்கோ! – (வடு மாங்காய் ரெசிபீஸ்)
short stories...

"தாராளமாப் போயிட்டு வாம்மா. பதினைஞ்சு நாள் என்ன. ஒரு மாசம் வேணும்னாலும் இருந்துட்டு வா," என்றான் பார்த்திபன்

ன்று இரவு மனைவி வந்ததும் விஷயத்தைச் சொன்னான்.

"அதனால என்னங்க, அத்தைக்கும் பாவம், எங்கே ரெஸ்ட் கிடைக்குது? வேலை சரியாத்தான் இருக்கு. இப்படிக் கட்டாயமா ரெஸ்ட் எடுத்துட்டாத்தான் உண்டு. நாம எப்படியாவது சமாளிச்சுக்கலாம்," என்ற லக்ஷ்மியைப் பரிவோடு அணைத்தான் பார்த்திபன்.

றுநாளே அம்சவல்லி மதுரைக்குக் கிளம்பிவிட்டாள். சுமித்ராவின் வீடு போய்ச் சேர்ந்தபோது, சுமித்ரா வீட்டில் இல்லை. எங்கோ வெளியில் போயிருந்தாள் .

அவள் மாமனார் கோபாலன் கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டிருந்தார். பேரன் சரவணகுமார் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான்.

"அடடே! வாங்க சம்பந்தி! என்ன இவ்வளவு தூரம்?" மாவு அரைத்த கையுடன் வந்து உபசரித்தார் கோபாலன்.

வாங்கி வந்த பிஸ்கட்டுகளையும், பழங்களையும் பேரன் கையில் கொடுத்தாள்.

“சுமித்ரா வீட்டுல இல்லியா? நீங்க போய் கிரைண்டரில் மாவு அரைச்சிட்டு...”

"அதனால என்ன சம்பந்தி? நம்ம வீட்டு வேலையைத்தானே செய்யறோம். சுமித்ரா லேடீஸ் கிளப் ஃபங்ஷன் ஏதோ இருக்குன்னு போயிருக்கு. ராத்திரி அதுதானே வந்து திண்டாடணும். எனக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்."

“அதுக்காக... ஆம்பளை, நீங்க போய் இதெல்லாம் செய்யணுமா?"

"நம்ம வீட்டு வேலை செய்யறதுல ஆம்பளை என்ன, பொம்பளை என்ன? மத்தியான வேளைல பொழுது போகாம திண்டாடிச்சு மருமக. லேடீஸ் கிளப் போகட்டுமா மாமான்னு கேட்டுது. போயிட்டு வாம்மான்னு அனுப்பி வைச்சேன். இருங்க... காப்பி கலந்து எடுத்துட்டு வரேன்," என்றவாறு கையை அலம்பிக்கொண்டு வந்தார் கோபாலன்.

"நீங்க பேசாம உட்காருங்க. நானே போய்க் கலந்து எடுத்துட்டு வரேன்" - சமையலறைக்குச் சென்று இரண்டு தம்ளர்களில் காப்பி கலந்து எடுத்து வந்தாள்.

"உங்களை வேலை செய்ய விட்டுட்டு,  அவ எதுக்கு வெளியே போறா?" காப்பியை எடுத்து உறிஞ்சியவாறு கேட்டாள் அம்சவல்லி.

"இதுல தப்பு ஒண்ணுமில்லே சம்பந்தி. அவ போனப்புறம் - அதான் எங்க வீட்டு அம்மா - சும்மா உட்காரவே பிடிக்கல்லே. வயசாக ஆக, ஆகப் பாருங்க சும்மா உட்கார்ந்தா சோம்பல் ஜாஸ்தியாகும். மத்தவங்க செய்றதுல எல்லாம் குத்தம் கண்டுபிடிக்கத் தோணும். நம்ம மனசு இருக்கே, அது குரங்கு. நிமிஷத்துக்கு நிமிஷம் தாவும், மாறும். ஏதாவது வேலைல மூழ்கிட்டோம்னு வைங்க, வேறே எதுக்கும் நேரம் இருக்காது பாருங்க.

''சுமித்ராவுக்கு என்ன சின்ன வயசுதானே! அதுக்கும் நாலு இடத்துக்குப் போகணும், வரணும், அனுபவிக்கணும்னு ஆசை இருக்காதா என்ன? நாமளும் அந்த வயசைத் தாண்டி வந்தவங்கதான் இல்லியா சம்பந்தி!" என்றபடி சரவணனை அழைத்து அவனுக்குப் பிஸ்கட், பழம் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
ருசியான ஸ்பெஷல் ‘க்ரீன் மூங்தால் சமோசா'!
short stories...

“நம்ம பேரப் பிள்ளை இருக்கானே, அவனைப் பார்த்துப் பார்த்து வயத்துக்குக் கொடுக்கணும். இல்லேன்னா, ஏமாத்திப் புடுவான்." அம்சவல்லி மலைத்துப் போனாள்.

ரவு சுமித்ரா வீடு திரும்பியதும், அம்மாவின் திடீர் வருகையைப் பார்த்து ஆச்சரியம்.

சுமித்ராவின் கணவன் கணேஷம் வியப்போடு கேட்டான்.

"என்ன, அத்தே! திடீர் விசிட்?"

''ஒண்ணுமில்லே, மாப்பிள்ளே. ஏதோ திடீர்னு தோணிச்சு. உங்க எல்லாரையும் பார்த்துட்டுப் போகலாம்னு புறப்பட்டு வந்தேன்" என்றாள்.

"பத்துப் பதினைஞ்சு நாள் இருந்துட்டுத்தான் போகணும்" - உபசரித்தான் கணேஷ்.

இரவு, வேலை முடிந்ததும், அம்சவல்லி மெதுவாக சுமித்ராவிடம் கேட்டாள். ''ஏன் சுமித்ரா! உன் மாமனார், வீட்டுல எல்லா வேலையும் செய்வாரா என்ன?"

"ஆமாம்மா. அவர் மட்டும் இல்லேன்னா எனக்கு ரொம்பத் திண்டாட்டம்தான். மாமியார் இருந்தா, எப்படிச் செய்வாங்களோ அப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்யறார். காய்கறி நறுக்கறதிலேருந்து, சரவணனைப் பார்த்துக்கறதிலேருந்து எல்லா வேலையும்... வெளியிலே போக, வர எனக்குச் சர்வ சுதந்திரம்தான். உண்மையிலேயே நான் ரொம்ப கொடுத்து வைச்சவம்மா," என்ற மகளை மகிழ்ச்சியுடன் பார்த்தாள், அம்சவல்லி.

றுநாளே, அவர்களது வேண்டுகோளையும் மீறி அங்கிருந்து கிளம்பி விட்டாள். பஸ்ஸில் வரும்போது, அவள் மனத்தில் தடையில்லாமல் எண்ணங்கள் புரண்டன.

'சுமித்ராவோ வேலைக்குச் செல்லாதவள். அவளுக்கு அவள் மாமனாரே அவ்வளவு உதவிகளை, தானே மனப்பூர்வமாகச் செய்யும்போது, வேலைக்குப் போய் உழைத்து விட்டு ஊதியம் கொண்டுவரும் தன் மருமகளுக்குத் தான் எவ்வளவு உதவிகள் செய்ய வேண்டும்! அதுவும் அவ்வளவு பணிவான பெண்ணுக்கு... எல்லாமே, நம் எண்ணங்களின் வக்ரம்தான் சுமித்ராவின் மாமனார் சரியாகத்தான் சொன்னார்.'

பத்துப் பதினைந்து நாள் கழித்துத்தான் வருவேன் என்று கிளம்பியவள், மறுநாளே புறப்பட்டு வந்து நின்றதும் அல்லாமல், வந்தவுடன் சமையலறைக்குள் நுழைந்ததன் காரணம் புரியாமல், விழித்தனர் பார்த்திபனும், லக்ஷ்மியும்.

பின்குறிப்பு:-

கல்கி 09 ஆகஸ்ட்  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com