சிறுகதை - நம்பிக்கை தொடர்கிறது!

ஓவியம்: கரோ
ஓவியம்: கரோ

-மதுமனோ

விடிகாலையில் எழுந்தவன் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். ஐந்து மணி ஆகியிருந்தது. வெளியே மார்கழிப் பனி அடர்த்தியாய் மூடியிருந்தது.

இப்போது தயாராகிப் புறப்பட்டால்தான் சரியாக இருக்கும். எப்படியும் இரண்டு மணி நேர நடையில் அந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தை அடைந்துவிடலாம்.

சட்டையை அணிந்துகொண்டு வெற்றுப் பாக்கெட்டை தடவிப் பார்க்க, அம்மா எழுந்து வந்தாள்.

அவள் முகத்தில் ஏகமாய் ஆதங்கம். முந்தானையிலிருந்து ஒரு ரூபாய்த் தாளை எடுத்து, அவனிடம் கொடுத்தாள்.

''நல்லபடியாப் போயிட்டு வாப்பா. அப்பா விட்டுட்டுப் போன குடும்ப பாரம் உன் தலையில் விழுந்திடுச்சு. கடவுள் புண்ணியத்துல உனக்கு ஒரு வேலை கிடைக்கட்டும். நீ வேலைக்குப் போய்த்தான் தங்கச்சி வசந்தாவுக்குக் கல்யாணம் நடக்கணும்.'

அம்மாவின் குங்குமம் இல்லாத நெற்றி அவள் மனத்தைப் போலவே வெறிச்சோடிக் கிடந்தது. சத்தியா தலையசைத்துவிட்டுப் புறப்பட்டான்.

நடந்ததில் களைப்பாக இருந்தது. பசித்தது. சமாளித்துக்கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தை அடைந்தான். அங்கு ஏற்கெனவே நிறையப் பேர் வரிசையாய் நின்றிருந்தார்கள். சத்தியா அவர்களைப்போல் வேலை வாய்ப்புக்குப் பதிவு செய்யவோ அல்லது வேலை வாய்ப்பு அட்டையைப் புதுப்பிக்கவோ வரவில்லை. வேலை வாய்ப்பு அதிகாரியைச் சந்தித்துக் கேட்க வேண்டும். பதிவு செய்துவிட்டுப் பல வருடங்களாய்க் காத்திருந்தும் ஒருமுறை கூட நேர்முகத் தேர்வுக்கு கார்டு அனுப்பவில்லையே என்ற ஆற்றாமையை வெளிப்படுத்த வேண்டும்.

வாசலில் நின்றிருந்த பியூன் அவனை ஆயிரம் கேள்விகள் கேட்டான். பிறகு ஒரு மணி நேரம் காக்க வைத்து விட்டு உள்ளே அனுப்பினான்.

அதிகாரி அனந்தராமன் அப்படியொன்றும் கடூரமானவராய்த் தெரியவில்லை. நெற்றியில் சந்தனப் பொட்டுடன் பார்க்க அமைதியானவராய்த் தெரிந்தார்.

"என்னப்பா... இன்டர்வியூ கார்டு வரலையா?"

"ஆமா சார். நான் பதிவு பண்ணி ஏழு வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சு. இதுவரைக்கும் ஒரு கார்டு கூட வரலை."

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியில் திளைக்கும் பின்லாந்து நாடு பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்...!
ஓவியம்: கரோ

"வாஸ்தவம்தான். நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்றோம். ஆனா நாளுக்கு நாள் வேலைக்குப் பதிவு செய்யறவங்க எண்ணிக்கை உயர்ந்துக்கிட்டே போகுது. லட்சக்கணக்குல கார்டுங்க குவிஞ்சு போயிருக்கு.''

''கொஞ்சம் கருணை காட்டுங்க சார். என் குடும்பம் என்னைத்தான் நம்பிக்கிட்டிருக்கு."

"எனக்குப் புரியுதுப்பா. நான் என்ன பண்ணமுடியும்?  உனக்குச் சலுகை காட்றதுக்கோ இல்லை முக்கியத்துவம் கொடுக்கிறதுக்கோ உனக்கு ஏதாச்சும் அனுபவம் இருக்கா?''

''இல்லை சார். எல்லோருமே வேலை கொடுக்காம அனுபவம் இருக்கான்னு கேட்டா எப்படி சார்?"

"சரி வேற ஏதாச்சும் தகுதியிருக்கா?''

"வேறன்னா...?"

“தாழ்த்தப்பட்ட ஜாதி, உடல் ஊனமுற்றோர், பர்மா அகதிகள், எக்ஸ்சர்வீஸ்... இப்படி ஏதாச்சும்."

அவனுக்கு அந்த வேதனையிலும் சிரிக்கவேண்டும் போலிருந்தது. அடக்கிக்கொண்டான்.

"சார் நீங்க சொல்ற தகுதியெல்லாம் எனக்குக் கிடையாது. நான் பி.காம். முதல் வகுப்புல பாஸ் பண்ணியிருக்கேன். நான் வறுமையான குடும்பத்துல பிறந்தவன். அதுவுமில்லாம இன்னும் ரெண்டு மாசத்துல எனக்கு வேலை வாய்ப்புக்கான வயது வரம்பு தாண்டப் போவுது.''

வேலை வாய்ப்புத் துறை அதிகாரி யோசனையாய்ப் பார்த்தார். அவர் முகத்தில் தெரிந்தது பச்சாதாப உணர்வா அல்லது கடமை உணர்வா என்பது தெரியவில்லை.

"சரி. நீ எதுக்கும் உன்னுடைய வேலை வாய்ப்பு அட்டை எண், பதிவு பண்ணின தேதி இதையெல்லாம் ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுத்துட்டுப் போ. என்னால் முடிஞ்சதைச் செய்யறேன்."

சத்தியா நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினான்.

இதையும் படியுங்கள்:
இளைஞர்கள் மனம் கவர்ந்த அனிமே நாயகன் நரூட்டோவின் சிறப்புகள் என்ன?
ஓவியம்: கரோ

ரு மாதத்திற்குப் பிறகு இன்டர்வியூ கார்டு வந்தது. நம்ப முடியாமல் பார்த்தான். அதுவும் ஒரு பெரிய தனியார் நிறுவனத்திற்கு.

வீட்டில் அம்மாவுக்கும் தங்கைக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. சத்தியா அந்த நிறுவனத்தில் என்னென்ன கேட்பார்கள் என்று யோசித்துப் பார்த்தான். தன்னிடமிருந்த பொது அறிவுப் புத்தகங்களைப் புரட்டினான். லைப்ரரிக்குச் சென்று அந்த கம்பெனி தயாரிக்கும் இரசாயனப் பொருட்களைப் பற்றி படித்துத் தெரிந்துகொண்டான்.

இன்டர்வியூ நாள் வந்தது. அம்மாவிடம் ஆசி பெற்றுக்கொண்டு ஆதங்கத்துடன் புறப்பட்டான். இன்டர்வியூ ஆரம்பம் ஆவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே கம்பெனியை அடைந்தான்.

கம்பெனியின் கட்டடம் அவனுக்கு பிரமிப்பைத் தந்தது. அப்பா! எவ்வளவு பிரம்மாண்டமான கட்டடம்!

ரிசப்ஷனை அடைந்தபோது அங்கு ஏற்கெனவே பத்துப் பேருக்கு மேல் வந்து உட்கார்ந்திருந்தனர். அத்தனை பேரும் அதே இன்டர்வியூவுக்கு வந்திருந்தார்கள்.

மானேஜர் எங்கோ வெளியில் சென்றிருப்பதாகவும் இன்டர்வியூ நடக்க இன்னும் ஒரு மணி நேரமாகும் என்றும் ரிசப்ஷனில் அமர்ந்திருந்தவள் சொன்னாள். சத்தியா அவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்திருக்க விரும்பவில்லை.

குடிக்கலாம் என்று வெளியே வந்தான். அருகே இருந்த ஒரு டீக் கடைக்குச் சென்றான். அங்கே யாரோ இருவர் சீரியஸாய் இன்டர்வியூவிஷயமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"என்ன சுந்தரம் நிறையப் பேர் இன்டர்வியூவுக்காக வந்திருக்காங்க போலிருக்கு?'

'அப்படியா! என்ன இன்டர்வியூ?” ''சரிதான் போ. மானேஜருக்கு செகரட்ரியா இருந்துக்கிட்டு இது கூடவா தெரியலை? எல்லோரும் ஜூனியர் அகௌண்டெண்ட் வேலைக்கு வந்திருக்காங்களாம்.''

"ஓ அதுவா? அந்த வேலைக்கு எப்பவோ ஆளை செலக்ட் பண்ணியாச்சே. நம்ம மினிஸ்டர் பரமானந்தத்துக்கு யாரோ வேண்டிய ஆளாம். அவரு மூலமாத்தான் கம்பெனிக்கு எக்ஸ்போர்ட் லைசென்ஸ் கிடைச்சுதாம். நேத்தே அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் டைப் பண்ணி தபால்ல போட்டாச்சே."

"அப்ப வந்திருக்கிறவங்கல்லாம்?"

"தெரிஞ்ச கதைதானே? சும்மா ஒப்புக்கு ரெண்டு மூணு கேள்வியைக் கேட்டுட்டு அனுப்ப வேண்டியதுதான். ஒழுங்கா முறைப்படி இன்டர்வியூ நடக்கலைன்னு பின்னால கம்பெனிக்குக் கெட்ட பேர் வரக் கூடாது பாரு, அதுக்குத்தான்."

சத்தியா இடிந்து போனான். இப்படியொரு ஏமாற்றத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

டீ கூட குடிக்கத் தோன்றாமல் அப்படியே நடந்தான். நடக்க நடக்க அவனுக்குக் கண்கள் இருட்டின. கால்கள் தடுமாறின. தன்னையும் அறியாமல் அவன் சாலையைக் கடக்க இருந்த நேரத்தில், பின்னாலிருந்து வேகமாய் வந்த லாரி ஒன்று, அவனை அடித்துத் தூக்கிப் போட்டது.

சத்தியா அதே இடத்தில் நினைவிழந்தான். பாதசாரிகள் அவனைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

இதையும் படியுங்கள்:
“எம்.ஜி.ஆர் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் உருவத்தைச் செதுக்குவது மிகவும் கடினம்!”
ஓவியம்: கரோ

றுநாள் கண் விழித்துப் பார்த்தவன் அதிர்ந்தான். காலை அசைக்க முடியாதபடிக்கு ஒரு பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. தலையிலும் பேண்டேஜ் சுற்றப்பட்டிருந்தது. நேற்றைய சம்பவம் நினைவுக்கு வந்தது. எதிரே அம்மாவும் தங்கையும் கண்கலங்க நின்றிருந்தனர். சத்தியா அந்த நிலையிலும் அம்மாவைச் சமாதானப் படுத்த முயன்றான்.

'அழாதீங்கம்மா. எல்லாம் விதி. இல்லேன்னா எதுக்கு இந்த விபத்து நடக்கணும் ?"

"சாதாரண உடல் காயமா இருந்தாலும் பரவாயில்லேப்பா. இப்படி முழங்காலை எடுக்க வேண்டிய அளவுக்குக் கொடூரம் நடந்து போச்சேன்னுதான் மனசு பதறுது.''

சத்தியா பொங்கி வந்த துக்கத்தை அடக்கிக்கொண்டான். பிறகு நிமிர்ந்தான்.

''உங்க வேதனை எனக்குப் புரியுதும்மா. எப்படியாச்சும் எனக்கு வேலை கிடைக்கும்னு இத்தனை நாளாக் காத்துக் கிட்டிருந்தீங்க. கடைசியில எனக்கு இந்த கதி ஆயிடுச்சு. இதுவும் ஒரு வகையில் நல்லதுதான்னு நினைக்கிறேன்.'

"என்னப்பா சொல்றே?"

''ஆமாம்மா. எனக்கு வேலைக்கான வயசு வரம்பு இன்னும் கொஞ்ச நாள்ல தாண்டப் போவுது. இந்த நேரத்துல இப்படியொரு விபத்து ஆயிட்டதாலே இதுவும் எனக்குச் சாதகம்தான். உடல் ஊனமுற்றோர் பிரிவிலயாச்சும் இனி வாய்ப்புக் கிடைக்கும்மா. நிச்சயம் வேலை கிடைக்கும்."

அம்மாவும் தங்கையும் பேச்சின்றி நின்றிருந்தார்கள். அவர்கள் கண்களும் அழுது ஓய்ந்துவிட்டன.

இனி?

புதிய விடியலாய் அவர்கள் வாழ்வில் மீண்டும் ஒரு நம்பிக்கை தொடரும்.

பின்குறிப்பு:-

கல்கி 08 நவம்பர் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com