சிறுகதை - தூரப் பார்வை!

ஓவியம்; லலிதா
ஓவியம்; லலிதா

-உதா திபன்

பேருந்து குலுக்கலுடன் நின்றது. "நெடுங்கல் பிரிவு ரோடு கேட்டது யாரு. எந்திரிச்சி வாங்க..." என்றார் கண்டக்டர். நான் இறங்கினேன். பேருந்து நகர்ந்தது.

முப்பத்தியாறு மணி நேர பிரயாண களைப்பு சட்டென விலகி புது உற்சாகம் பிறந்தாற்போல உணர்ந்தேன்.

நெடுஞ்சாலையிலிருந்து வெட்டிக்கொண்டு பிரிந்த குறுகிய மண் பாதை. கசகசவென்ற நெரிசலோ, இரைச்சலோ, ஓயாது நுரையீரலை நிரப்பும் டீசல் புகையோ, வாகனம் ஏதாவது மேலே மோதி விடுமோ என்ற பயமோ.... ஏதுமின்றி நடந்தேன். வெறும் கட்டடங்களையும், இயந்திரங்களையும் பார்த்து அலுத்துவிட்ட கண்களுக்கு இருபுறமும் தெரிந்த வயல்வெளிகள் இதமாய்ப் பட்டது.

வெயிலின் கடுமை தெரியாதவாறு சிலுசிலுவென்று காற்று. நெல் வயல்களை நோக்கிச் செல்லும் வாய்க்காலில் காவேரியின் சலசல.

"அட யாரு.. கணேசா... வாப்பா. இப்பத்தான் வர்றியா?" எதிர்ப்பட்ட சம்புலிங்கம் மாமா கேட்டார். எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளியிருப்பவர்.

''ஆமாம் மாமா."

"போ... போ. உங்கம்மா காலையிலிருந்தே வாசலை வாசலை பாத்துக்கிட்டிருக்கா..."

புன்னகையுடன் நடந்தேன். எட்டடியான் கோயிலைத் தாண்டியதும் செந்திலின் வயல்காடு வந்தது. வயலையொட்டியே ஓட்டு வீடு. வேப்பமர நிழலில் கட்டில் போட்டு செந்தில் படுத்திருந்தான். எனது பால்ய நண்பன். இருவரும் திருச்சி கல்லூரியில் ஒன்றாகத்தான் படித்தோம். அவன் வேலைக்குச் செல்லாமல் விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கிறான். என்னுள் லேசான பொறாமை துளிர்த்தது.

அமைதி, மரியாதை, மனிதாபிமானம் என எல்லா வற்றையும் தொலைத்துவிட்ட நகர வாழ்க்கையை விட கிராமம் எத்தனை சுகமானது.

“செந்தில்....”

"ஏய்... கணேஷ்... வா... உட்கார்" கட்டிலைக் காட்டினான்.

"எப்படிடா இருக்கே?"

"எனக்கென்ன....நீதான் ஆள் இளைச்சிக்கிட்டே போறே.''

"சாப்பாடே சரியில்லடா செந்தில்."

"கல்யாணம் பண்ணி பெண்டாட்டியைக் கூட்டிட்டுப் போயிடு."

"ச்சு! பேசாம வேலையையே விட்டுடலாம்னு இருக்கேன்."

''இப்படித்தான் ஒவ்வொரு தடவை வர்றப்பவும் சொல்ற. விட்டபாடில்லையே."

"இந்தத் தடவை எங்கம்மாகிட்ட சொல்லிடப் போறேண்டா. சொல்லிட்டு பாம்பே போய் ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு ஒரேயடியா வந்துடுவேன். இங்க வந்து விவசாயந்தான்..."

"உனக்கென்னடா. அஞ்சு ஏக்கர் நஞ்சை. பத்து ஏக்கர் புஞ்சை. அதை ஒழுங்கா கவனிச்சாலே போதும். இன்னும் நாலு குடும்பம் உட்கார்ந்து சாப்பிடலாம். இப்ப பாவம் உங்கம்மாதான் ஒத்தையாளா அல்லாடறாங்க..."

உண்மை. அம்மாவுக்குதான் சிரமம். நான்கு வருடங்களுக்கு முன் எனக்கு வேலை கிடைத்தபொழுதே போக மாட்டேனென்றுதான் சொன்னேன். அம்மாதான் வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.

செந்தில் இளநீர் சீவிக் கொடுத்தான். குடித்து விட்டுக் கிளம்பினேன்.

செருப்பு சப்தம் கேட்டதுமே அம்மா எட்டிப் பார்த்தாள்.

"வாப்பா கண்ணு...." சந்தோஷம் பொங்க ஓடிவந்து கன்னத்தை வழித்து நெட்டி முறித்தாள்.

"அண்ணா..." என்றவாறு தங்கை செல்வியும் வந்தாள். ப்ளஸ் டூ முடித்து விட்டாள். பதினெட்டு வயதாகிறது.

இரண்டு பேருக்கும் வாங்கி வந்திருந்த துணிமணிகளை எடுத்துக் கொடுத்தேன்.

செல்விக்கு தனியே ஒரு ஜோடி வளையல்.

"சரி... முதல்ல குளிச்சிட்டு வா. அண்டாவில சுடுதண்ணி வைச்சிருக்கேன்."

"வேண்டாம்மா. பச்சைத் தண்ணியே போதும்."

குளித்து விட்டு வந்ததும் சாப்பாடு தயாராயிருந்தது. பச்சரிசி சாதம், வெந்தயக் குழம்பு, எலுமிச்சை ரசம், வாழைக்காய் காரக்கறி, சுரைக்காய் பால் கூட்டு, வெள்ளரிக்காய் பச்சடி.

திருப்தியாய் சாப்பிட்டு விட்டு அலுப்புத் தீர பகல் தூக்கம். அதன்பின் எழுந்து பழைய நண்பர்களைப் பார்த்து விட்டு வந்தேன்.

இரவு எல்லோரும மொட்டை மாடியில் படுத்துக்கொண்டோம்.

"அண்ணா... எத்தனை நாள் இருப்பே?''

"இருப்பேன். பத்து நாள் லீவ் போட்டுட்டு வந்திருக்கேன்."

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அம்மாவும், செல்வியும் தூங்கிப் போக, நான் கண்களை மூடினேன்.

இதையும் படியுங்கள்:
அட, அதெல்லாம் மறந்தே போச்சுங்க! எதெல்லாம்?
ஓவியம்; லலிதா

பம்பாயில் தினம் விடியற்காலையே எழுந்து க்யூவில் நின்று குளித்து காய்ந்த சுக்கா ரொட்டியை விழுங்கிவிட்டு, ஏழு மணிக்குள் மின்சார ரயிலைப் பிடிக்க வேண்டும். கூட்டம் நெரியும். இரவு அறைக்குத் திரும்ப எட்டாகி விடும். படுக்கையில் விழுந்தால் அடித்துப் போட்டாற்போல் இருக்கும். படிக்க, பாட்டு கேட்க, வெளியே போக எதற்கும் நேரமிருக்காது. இயந்திர வாழ்க்கை.

இன்னும் பத்து நாட்களுக்கு அந்த பரபரப்பு இல்லை. இஷ்டப்பட்ட நேரத்திற்கு எழலாம், சாப்பிடலாம். படிக்கலாம், வயல்வெளியில் சுற்றலாம்.

நிரந்தரமாக கிராமத்திலேயே இருந்துவிட்டால் எப்பொழுதுமே ஆனந்தம்தான். நாளைக்கு அம்மாவிடம் எனது முடிவைச் சொல்லி விட வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

றுநாள் மாலை. வயலுக்குப் போய் வந்து முகம் கழுவிக் கொண்டேன். அம்மா எனக்குப் பிடித்த தேங்காய்ப் போளியையும், நெய் முறுக்கையும் கொண்டு வந்து கொடுத்தாள். +

"செல்வி எங்கம்மா?"

''வெள்ளிக் கிழமை இல்லியா... கோயிலுக்குப் போயிருக்கா..."

"அம்மா... உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்."

"என்னப்பா...."

நான் சொல்வதற்குள் வாசலில் குரல் கேட்டது.

"எதிர்த்த வீட்டு அம்சவேணி வர்றா... இரு பார்த்துட்டு வந்திடறேன்..." அம்மா அகன்றாள்.

"வாடி வேணி..."

"என்ன கமலத்தம்மா கணேஷு தம்பி வந்திருக்கா?''

"ஆமா..."

"அதான் இன்னிக்கு பூரா உங்களை வெளிய பாக்கவே முடியலியா?"

இதையும் படியுங்கள்:
பணக்காரர்களின் 9 விதமான வெற்றி ரகசியங்கள் தெரியுமா?
ஓவியம்; லலிதா

"பிள்ளை வருஷத்துக்கு ஒரு தடவை இல்ல ரெண்டு தடவைதான் வர்றான். அவனோட பேசிக்கிட்டிருக்க வேணாமா?"

"அது சரி... ஏன் அடிக்கடி ஊருக்கு வர முடியாதா?"

"அவன் என்ன தோட்ட வேலையா பாக்கறான்? பெரிய கம்பெனியில ஆபீசரா இல்ல இருக்கான். நினைச்சப்ப எல்லாம் 'லீவ்' போட்டுட்டு வர முடியாதுடி..."

"அப்படியா....?"

''இரு... பலகாரம் செஞ்சேன். கட்டித் தர்றேன். பசங்களுக்கு கொடு..."

சில வினாடிகளில் அம்சவேணியின் கொலுசு சப்தம் உள் அறையை நோக்கி வரவே நிமிர்ந்து பார்த்தேன்.

"தம்பி... சௌக்கியமா இருக்கீங்களா?"

"இருக்கேங்க..."

"நல்லது தம்பி. வர்றேன்."

அவள் போய் விட்டாள்.

"கணேஷ்... இங்க வா..." அம்மா

எழுந்து போனேன்.

"கிழக்கே பாத்து நில்லு..."

நின்றேன். அம்மா திருஷ்டி சுற்றி அடுப்பில் போட்டாள்,

"என்னம்மா இதெல்லாம்?" "எல்லார் கண்ணும் ஒரே மாதிரி இருக்காது. உன் வயசுப் பசங்க நிறையப் பேர் படிச்சிட்டு வெயில்லயும், மழையிலயும் கஷ்டப்பட்டுக்கிட்டு விவசாயம் பாத்துக்கிட்டிருக்கிறப்ப, நீ ஒருத்தன் மட்டும் வெளியூர்ல ஆபீசரா இருக்கேங்கிறதில ஏற்கெனவே கிராமத்து ஜனங்களுக்குப் பொறாமை. என் காது படவே எத்தனை பேர் பேசியிருக்காங்க தெரியுமா? ஆனா சும்மா சொல்லக் கூடாது... என்ன பேசினாலும் மதிப்பு, மரியாதை குறையறதில்ல. எல்லாம் உன்னாலதான்..." அம்மாவின் குரலிலும், முகத்திலும் ஒருவித பெருமிதம் தொனித்தது. இதுதான் ஒவ்வொரு முறையும் என் வாயை அடைத்து விடுகிற ஆயுதமாகிறது.

"என்னவோ சொல்லணும்னியேப்பா..."

''ஒண்ணுமில்லம்மா" என்றேன்.

அடுத்த முறை வரும்பொழுது அம்மாவிடம் நிச்சயமாகச் சொல்லி விட வேண்டும் என நினைத்துக்கொண்டேன், வழக்கம்போல.

பின்குறிப்பு:-

கல்கி 05  நவம்பர் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com