சிறுகதை – பய சரிதை!

ஓவியம்; நடனம்
ஓவியம்; நடனம்

-அகிலா கார்த்திகேயன்

"யோவ் சுப்பு! எனக்கு எல்லாம் தெரியுமய்யா... அந்த அம்பது லட்சம் விவகாரம் பத்தி நீ எழுதாம இருக்கமாட்டே... உனக்கு சேர வேண்டிய தொகையை அப்பவே பைசல் பண்ணியாச்சு. இன்னும் வேணும்னாலும் கேட்டு வாங்கிட்டுப் போ... அதை வுட்டுட்டு சுயசரிதை எழுதறேன் பேர்வழின்னு எதையாவது எழுதித் தொலைக்காதே... அப்புறம் நீயும் சேர்ந்துதான் கம்பி எண்ண வேண்டியிருக்கும், ஜாக்கிரதை!" நல்லசிவத்திடமிருந்து போன் மூலம் வந்த மிரட்டலை சுப்புசாமி லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை.

ஆளவந்தாரின் அணுகுமுறையே வேறுவிதமாக இருந்தது. ஒரு பெரிய தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ என்று சுமந்துகொண்டு சுப்புசாமியிடம் சம்பந்தமே பேச வந்து விட்டார்.

இதையும் படியுங்கள்:
கோடைகாலத்தில் சருமம் அழகு பெற சில டிப்ஸ்!
ஓவியம்; நடனம்

''என் முழு சொத்தோட என் பொண்ணை உன் பிள்ளைக்குக் கட்டிக் குடுத்திடறேன்... நீ ஏதோ பொஸ்தகம் எழுதப் போறதாக் கேள்விப்பட்டேன். ஏதோ வயசுக் கோளாறுலே உன் கூட 'சேர்ந்து நான் இப்படி அப்படின்னு பொம்பளைங்க விவகாரத்திலே இருந்தது என்னமோ வாஸ்தவம்தான்... இப்போ நான் ஒரு பொஸிஷனுக்கு வந்துட்டேன். அதையெல்லாம் நீ எழுதினா, என் 'இமேஜ்' போயிடும்! கொஞ்சம் யோசனை பண்ணி எழுது!" என்று கெஞ்சாத குறையாக முறையிட்டார்.

"எடத்தை காலி பண்ணுய்யா... இதை எழுது, அதை எழுதாதேன்னு நீங்களெல்லாம் சொல்லிதான் நான் எழுதணுமாக்கும்?" என்று ஆளவந்தாரை விரட்டியனுப்பினார்.

பரதேசி நாயே' என்று ஆரம்பித்து எழுதப்பட்டிருந்தது அந்த மொட்டைக் கடிதம். 'உனக்கு என்ன தெனாவெட்டு இருந்தா சுயசரிதை எழுத நினைப்பே... சோமாறி! உனுக்கெல்லாம் இது ஒரு கேடா...? எங்க கட்சி தங்கத் தலைவர் தர்மலிங்கத்தோட நீ பழகிகீறே... அவரு இதுலே ஊழல் பண்ணினாரு, அதுலே உழப்பறி பண்ணினாரு, சின்னமுத்து கொலைக்கு இவருதான் காரணம், கற்பகத்தை கற்பழிச்சவரும் இவருதான்னு எதுனா எழுதி கிழுதி வைச்சே, பேமானி, உன்ன என் கட்சி ஆளுங்க சொம்மா வுட்டுடுவோம்னு நினைக்காதே... மவனே உடனே 'எழுதறதை நிறுத்திட்டேன்'னு உங்கிட்டேயிருந்து அறிக்கை வரலேன்னா உன் னோட அரை கை காணாத பூடும்.. ஆமாம்!"

'என்னையாடா மெரட்டறீங்க' என்று கொக்கறித்தபடி அந்தக் கடிதத்தை சுக்குநூறாகக் கிழித்து எறிந்தார் சுப்பு.

த்தனைக்கும் சுப்புசாமி அப்படியொன்றும் அரசியல் சாணக்கியம் தெரிந்தவரல்ல. அந்தக் காலத்தில் சாணிக் கையால் எதிர் அணித் தலைவரின் போஸ்டரை அசிங்கப்படுத்த ஆரம்பித்து, படிப்படியாக முன்னேறி அதே தலைவரின் ஒரிஜினல் முகத்தையே ஆஸிட் தெளிப்பால் அசிங்கப்படுத்தும் நிலைக்கு உயர்ந்த ஒரு அடாவடி அரசியல் பேர்வழி. நாளொரு கட்சியும் பொழுதொரு தலைவருமாக அரசியலை கேலிக்கூத்தாக்கியவர். அனேகமாக எல்லா கட்சியையும் ருசித்துப் பார்த்தவராகையால், அனைத்து தலைவர்களின் ஆசாபாசங்களும் இவருக்கு அத்துப்படி.

இந்தக் காரணத்துக்காகத்தான் 'அதிரடி பப்ளிகேஷன்'காரர்கள் இவரை ஒரே அமுக்காக அமுக்கி ஆதாயம் தேட முயன்று, வெற்றி கண்டனர். தங்களைப் பற்றி சுப்புசாமி தாறுமாறாக எப்படியும் எழுதி வைப்பார் என்று எல்லா தலைவர்களுக்கும் பயம் கண்டது. பயந்துகொண்டே சுயசரிதை எழுத வேண்டிய நிலையில் இருக்கும் இன்னாளில், சுப்புசாமி எழுதிக்கொண்டிருந்த சுய சரிதை பலருக்கு பயசரிதையாகி இம்சித்தது.

'வாழ்வே அபாயம்' என்ற அமர்க்களமான டைட்டிலோடு சுப்புசாமியின் சுயசரிதை எழுதி முடிக்கப்பட்டு வெளியீட்டு விழாவிற்கு தேதியும் குறிக்கப்பட்டாயிற்று. புத்தகத்தின் உள்ளடக்கம் ரகசியமாகக் காப்பாற்றப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஜாலியா சோத்துப்பாறை அணைக்கு ஒரு விசிட் அடிக்கலாமே!
ஓவியம்; நடனம்

அனைத்துக் கட்சிகளும் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தன. நாட்டின் எந்தத் தலைபோகிற சமாசாரத்துக்கும் ஒன்று. கூடி தீர்வு காணாதவர்கள் இந்தப் பிரச்னைக்கு அவசரமாய்க் கூடி படுஒற்றுமையாக ஒரு முடிவெடுத்தனர்.

அதன்படி, 'அதிரடி பப்ளிகேஷன்'காரர்களிடம் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டன. வெளியீட்டு விழா அன்றே பத்திரிகை விமர்சனப் பிரதிகள் உள்பட அனைத்துப் பிரதிகளையும் தங்களுக்கே விற்று விடும்படி கேட்டுக்கொண்டனர். அப்படியே மொத்தமாக வாங்கி எரித்துவிட்டால் பிரச்னை தீர்ந்து விடுமென்று அவர்கள் எண்ணம். பிரசுர கர்த்தாவிற்கு கசக்குமா! ஒவ்வொரு பிரதியும் ரூ.350 என்று விலை வைத்திருந்தார். விநியோக, விற்பனைக் கணக்குகளைக் கட்டிக் காத்து, பணம் புரண்டு, லாபம் காண எத்தனை வருடம் ஆகுமோ? இந்த வழியில் ஒரே நாளில் ஜாக்பாட் போல ஐந்து லட்சம் லாபம்! இப்படி யாரும் பிரிக்கவோ, படிக்கவோ இல்லாமல் தன் கற்பின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் சுப்புசாமியின் 'வாழ்வே அபாயம்' தீக்குளித்தது.

துகுறித்து சுப்புசாமியிடம் பத்திரிகைக்காரர்கள் பேட்டி கண்டபோது அவர் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்: "அவனுங்க பொழப்பத்த பசங்க சார்! அரசியல் அசிங்கத்தைப் பத்தி நான் ஒண்ணுமே எளுதலை! 'ஏதோ வாழ்க்கைக் குறிப்பு'னு கேட்டாங்களேன்னு என் சொந்த வாழ்க்கைபத்தி எழுதிக் கொடுத்தேன். நாற்பது வயசிலே குழந்தை பெத்தது, ஐம்பதில் முடி நரைத்தது, அறுபதில் பல் விழுந்ததுன்னு மொத்தம் பத்து அத்தியாயம் என் சுய வாழ்க்கையைப் பத்திதான் எழுதியிருக்கேன்... பைத்தியக்காரங்க, அவங்கதான் இது தெரியாம குதிக்கறானுங்க. பயந்துகினு அத்தனை புத்தகத்தையும் கொளுத்தறானுங்க... நீங்களும் வந்து இப்பிடி கேட்கறீங்களே!"

மிகவும் சர்வசாதாரணமாக 'வாழ்வே அபாயம்' புத்தகம் எழுதியவர் சொல்லிக்கொண்டே போக, பத்திரிகைக் காரர்கள் கூட்டத்திலிருந்து 'வம்பு தும்பு' நிருபர் அவர் கழுத்தை நெறிக்கத் துணிந்த அபாயம் ஏற்பட்டது!

பின்குறிப்பு:-

கல்கி 04  டிசம்பர் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com