-பா. ராகவன்
பசி வந்துவிட்டது. பாக்கட்டைத் தொட்டுப்பார்த்தேன். கடைசி கடைசியாக ஒட்டிக்கொண்டிருந்த இருபது ரூபாய் நோட்டு உள்ளேன் ஐயா என்றது. பறந்து போகப் போகிற நோட்டு.
நாட்டில் விலைவாசி எக்கச்சக்கமாக ஏறிவிட்டது. என் போன்ற சாமானியர்கள் ஹோட்டலிலெல்லாம் சாப்பிடுகிறபடி வைத்துக்கொள்ளத் தகாது. தேவதைகளால் சபிக்கப்பட்டவர்களுக்கு புளித்த மோர் சாதமும் நாரத்தங்காயும்தான் சரி. அல்லது சிங்கிள் சாயா வித் பொறை.
இப்படி இருக்க, ஒரு மணிக்கு சொல்லி வைத்தாற்போல் பிராண்ட ஆரம்பிக்கும் வயிற்றுக்கு விவஸ்தை கிடையாது. கவா கவா என்று பேய்க் கூச்சல். எட்டு மணிக்குச் சாப்பிட்ட நாலு இட்டிலி எங்கே போயிற்று அதற்குள்?
பிரசித்தி பெற்ற கத்தீட்ரல் ஹைரோடில் ஒரு உடுப்பி ஹோட்டல் கூட இல்லாதது யார் தப்பும் அல்ல; என் விதி. சோழாவும் மாரீஸும் காற்றில் ஏறி விண்ணைச் சாடிக்கொண்டிருக்க, கொஞ்சம் குள்ளமான ஹோட்டல் எதும் தென்படாதா என்று அலைந்தேன்.
சீனர்கள் குள்ளமானவர்கள். பெரும்பாலும் சீன ஹோட்டல் களும் குள்ளமாகவே இருக்கின்றன. ஆனால், பளபளப்புடன். கடவுள் அருளால் கண்ணில் பட்டுவிட்ட, அந்த ஓலை வேய்ந்த சீன ஹோட்டல் என்னை இழுத்தது. நட்சத்திர அந்தஸ்து ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இருபது ரூபாய்க்கு இரண்டு இட்டிலி கிடைக்காமலா போய்விடும்? டிப்ஸ் வைக்காமல் வந்துவிட்டால் திரும்பி குரோம்பேட்டை போக பஸ் சார்ஜ் மீதமாகலாம்.... வேறு வழி இல்லையென்றால் வித்-அவுட்...
'சீக்கிரம் போயேண்டா சோம்பேறி' என்ற ஸ்டொமக்கை சமாதானப்படுத்தி, முன்னேறி, பித்தளைக் கதவில் கைவைத்துத் தள்ளினேன்.
முகத்தில் அறைந்த ஏஸி, 'கோவிந்தா' என்றது.
சே! என்ன ஒரு ஏமாற்று! ஓலைக் கொட்டகைக்குள் வஸந்த மாளிகையை என்னத்துக்காக ஒளித்து வைத்திருக்கிறார்கள்? என் போன்ற அப்பாவி, போஸ்ட் கிராஜுவேட், வேலையற்ற, இன்டர்வியூ வேட்டையாளர்களை ஏய்க்கவா?
திரும்பி விடலாமா?
பேரவமானம். சீனர்கள், சின்னக் கண்களால் சிரிக்கக்கூடும். அதைவிட, உள்ளே நுழைந்ததும் திரும்பிப் பார்த்துவிட்ட அந்த மின்னல் பொம்மை....
விதியைச் சபித்தபடி வாகான மூலையைத் தேர்ந்தெடுத்து, சிம்மாசனத்தில் புதைந்தேன். என் பார்வையில் உயர்ந்து நின்ற கண்ணாடியில் பின்புறம் அந்த ஒயில் வடிவம்...
சின்னச்சின்ன மேஜை நாற்காலிகளில் பணக்காரர்கள் மௌனமாக மென்று கொண்டிருக்க, திடீரென்று எழுந்த சந்தேகத்தில் அவசரமாக என் இருபது முழு ரூபாய் நோட்டை ஒருதரம் எடுத்துப் பார்த்துக்கொண்டேன். கசங்கலாக, ஏழ்மையாக... நல்லவேளை, கிழிசலாக இல்லை.
பர்ஃப்யூம் மிதக்கிற ஏஸி குளிரில் மிதமான பலகார வாசனையும் கலந்து நாசியில் நுழைந்து நரம்புகளை மீட்டிய வேளையில் பேரர் என்னை வணங்கி வழுக்கும் மெனு அட்டையை வைத்துப்போனான். அவன் கடந்து போன வினாடிகளில் என்னை விடவும் சுத்தமாக, டீஸன்ட்டாகத் தெரிந்தான்.
பொறாமையாக இருந்தது. நாலு பைஸா பெறாத என் எம்.காம். பேசாமல் இந்தச் சீனனிடம் ஸலாமிட்டு வேலை கேட்கலாமா? இருபத்திநாலு மணி நேர ஏஸி வாசம். வேளைக்குச் சோறு. வேலைக்குக் கூலி, வெள்ளை ஆடை.....
படிப்பு அல்ல; உத்தியோகம் புருஷ லட்சணம். பிளேட் துடை. கலாய் பூசு. போஸ்டர் ஒட்டு. டிக்கெட் கிழி. பெல் அடித்தால் எழுந்து போ. ஸலாம் இடு. கார் கதவைத் திற. ரயிலில் கர்ச்சிப் விற்றுப்பார். அல்லது கடலை. ஓட்டை எம்காமை உடைப்பில் போடு.
மெனு கார்டைத் தடவியபடி இருந்தேன். பேரர் ஒரு தரம் வந்து ஜில்லென்று தண்ணீர் வைத்து போனான். உடனே எடுத்துக் குடித்து முடித்தேன். இதற்கு பில் தர மாட்டார்கள்....
கார்டு ஐட்டங்கள் எனக்கு முற்றிலும் அன்னியமாக இருந்தன. என் தகுதிக்கேற்ற இட்டிலி, தோசை வகையறாக்களை அச்சடிக்க மறந்திருந்தார்கள். பதினேழரை ரூபாய்க்கு உண்டான ஏழை உணவைத் தேர்ந்தெடுத்து பேரரிடம் காட்டினேன். மனதுக்குள் அவன் சிரித்துக்கொண்டிருக்கக் கூடும். படவா, உனக்கு டிப்ஸ் கிடையாது போ!
மறுபடியும் நான் கண்ணாடியைப் பார்க்க, பின் புறத்துப் பெண் வடிவம், நூடூல்ஸை கவிதை மாதிரி எடுத்து உதட்டில் படாமல் உண்ணும் நளினம் தெரிந்தது.
பெண்களுக்குக் கடவுள் சில விசேஷத் தன்மைகளை அருளி இருக்கிறார். லாகவம். நளினம். மென்மை. கூடுதலாக எதையும் சாதிக்கவல்ல ஒரு மின்னல் புன்னகை. ஒரு look.
எனது கல்லூரி நாட்களில் இதெல்லாம் எனக்குப் பேராச்சர்யங்கள். ஆண்களின் அணுகுமுறையில் ஏன் ஒரு 'வருடல்' தன்மை எப்போதும் இருப்பதில்லை?
பீங்கான் கிண்ணங்களை மேசையில் பரப்பி, வெண்ணுடை வேந்தன் போய் விட்டான். நான் திறந்து பார்த்தேன். அங்கிங்கெனாதபடி எல்லா டேபிள்களிலும் பல்வேறு ரேட் மற்றும் வடிவங்களில் இருக்கும் அதே நூடுல்ஸ்.மேற்புறம் அதென்ன, மிளகோ வேறென்னவோ. தொட்டுக்கொள்ள கொத்தமல்லி, புதினா மற்றும் சில பெயர் தெரியாத இலை,தழைகளின் கலவை. ஒரு துண்டு கேரட். கொஞ்சம் பச்சை மிளகாய்ச் சாறு.கடவுளே, இதென்ன காம்பினேஷன்?
பளபளக்கும் கத்தி, பிச்சுவாக்கள். ஒன்றை எடுத்துக் குத்தி, இன்னொன்றால் ஏந்தி உண்ண வேண்டிய அவலம்.
மறத்தமிழனுக்குக் கரங்களே ஆயுதம். ஆனால் இங்கு அது உதவுமா? பின்புற தேவதையின் நளினம் என்னை மேலும் கலவரப்படுத்திற்று. நான் எப்போது சாப்பிட்டு முடிப்பேன்!
என் இயல்புக்கு ஒவ்வாத சூழலில், என் பார்வைக்கு ஆகாத மனிதர்கள் மத்தியில் என் பழக்கத்தில் இல்லாத முறையில் உண்ண முனைவது எனக்கே வினோதமாக இருந்தது.
மெல்லிய ஸ்பூன் மற்றும் திரிசூல வஸ்துவில் நூடூல்ஸ் நிற்க மாட்டே னென்கிறது. எடுப்பதில் பாதி வழுக்கிவிழ, கொஞ்சம் வெளியே சிந்த, கொஞ்சம் என் மீசையில் ஒட்டிக்கொள்ள, முப்பத்து முக்கோடி தேவர்களும் என்னை வேடிக்கை பார்ப்பதாகப் பட்டது. மிகவும் குன்றிப் போனேன். ஸ்பூனால் சாப்பிடக் கூட உதவாத என் எம்காம்....
எனக்கு வியர்த்துவிட்டது. சூழ்நிலை மிகவும் இறுகிவிட்டதாகத் தோன்றியது. சீன தேசத்து சுவர்க்கடிகாரம் மணி இரண்டு என்று அறிவிக்க, காட்... முக்கால் மணி நேரமாக இங்கே உட்கார்ந்திருக்கிறேன்....
முற்பிறவிகளில் எந்த சீனனுக்கு வில்லனாக இருந்தேனோ, விதி என்னைப் பழிவாங்கிக்கொண்டிருந்தது.
நூடூல்ஸை முடித்து, என் பின்புற தேவதை ஐஸ்கிரீமுக்கு ஆர்டர் தருவது கண்ணாடியில் தெரிந்தது.
கடவுளே! என் சங்கடங்களை அவள் பார்த்திருப்பாளோ. பேன்ட் போட்ட பட்டிக்காடு என்று கருதியிருக்கக் கூடும்.
சரேலென்று ரத்தம் சூடேற, ஆயுதங்களை விட்டெறிந்து, இரண்டு கைகளாலும் அள்ளி அடைத்துக்கொண்டு, ஒரே ஓட்டமாக ஓடி விடலாமா என்று தோன்றியது.
அப்போதும் சீனன் சிரிப்பான்; சின்னப் பெண் சிரிக்கும்....
எனக்குப் பசி போய்விட்டது. பரபரப்பை அடக்க, நிறைய தண்ணீர் குடித்திருந்தேன். ஏகமாய் வியர்த்திருந்தது. இயல்பில் நான் மிகவும் அமைதியானவன். பரபரப்பெல்லாம் அடங்கி, அநேகமாக புத்தராகிக் கொண்டிருப்பவன். எனக்கும் சமூகத்துக்கும் இடையிலான மௌனப்போரை நானே ஒதுங்கி இருந்து ஒரு பார்வையாளனாக நோக்கும் பக்குவம் பெற்றிருந்தேன். ஆயினும் இன்றைய தினத்து, எனது பரபரப்புக்குக் காரணம் இருந்தது. அந்தப் பெண். அவளது இயல்பான நளினம். கண் - முன்னால் அவளிடம் எதற்கோ நான் தோற்றுக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. கடவுளே, நான் ஏன் இந்த ஹோட்டலுக்கு வந்தேன்?
பாதி பிளேட் காலியாகியிருந்தது, ஒரு வழியாக. பதினேழரை ரூபாய். மிச்சம் வைக்க மனம் வரவில்லை. இது மாதிரியான சந்தர்ப்பங்களை புத்திக் கொள்முதல் என்று அப்பா குறிப்பிடுவார். புண்ணியங்கள் பல செய்து அரசு உத்யோகத்திலிருந்து ரிடையராகி, பென்ஷன் வாங்கும் அப்பா. இந்தக் கசங்கல் இருபது ரூபாய்கூட அவரது பெருந்தன்மையின் வெளிப்பாடுதான்.'வயசுப் பையன் காசில்லாமல் வெளியே போகிறதாவது' என்கிற உன்னத சிந்தனை.
கண்ணாடியில் பெண் வடிவம் ஐஸ்கிரீமில் கரைந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவள் முகமும் தோரணையும் என்னை வெகு பாதித்தது. பணத்தின் போஷாக்கு கூந்தல் முதல் ஷூவரை தெரிந்தது. வாழ்க்கையில் கவலை என்கிற பக்கங்களைப் புரட்டிக் கூடப் பார்க்காதவளாக இருக்கக் கூடும். சட்டென்று எனக்கு உலகம் முழுக்க செழித்து, நான் மட்டும் உதிர்ந்துவிட்டதுபோல் ஒரு கனம் நெஞ்சை அடைத்தது. பதினேழரை ரூபாய். ஒழியட்டும். கையை உதறிவிட்டு எழுந்தேன். பேரர் தந்த பில்லை, நானே நேரில் கவுன்ட்டரில் கொடுத்து மறக்காமல் மீதி வாங்கிக்கொண்டு விரைந்து வெளியேறினேன்.
பஸ் பிடித்து வீடு சேரும்வரை சகட்டு மேனிக்கு யோசித்தபடி இருந்தேன். எப்போதும் போல என்னைப் பற்றி - என் எம்காம் பற்றி. நாம் நினைக்கிற எதுவுமே நடக்காமல் போவதற்கு பெயர்தான் வாழ்க்கையா என்று கேட்கத் தோன்றியது. யாரைக் கேட்பது? நின்று, யோசித்து பதில் சொல்வதற்கு என்னைப் போல் யாரும் 'சும்மா' இருக்கிறதில்லை...
வாசலில் என்னைப் பார்த்ததும் அம்மா எழுந்து வந்தாள். கடவுளே, இவள் கேள்வி ஏதும் கேட்காதிருந்தால் தேவலை.
கேட்கவில்லை. வாழ்க.
"கால் அலம்பிண்டு, சாப்பிட வா" என்றாள்.
நான் தேவதைகளால் சபிக்கப்பட்டவன். ஆனாலும் ஒரு பரிதாபத்தின் பேரில் அம்மா புளிக்காத மோர் சாதம்தான் போடுகிறாள்... உட்கார்ந்தேன்.
"இன்னிக்கு ஒரு சேஞ்ச்!" என்று அம்மா சிரித்தாள்.
ஆவி பறக்கக் கொண்டுவந்த தட்டில் வெள்ளைக் கோலமாக நூடூல்ஸ் இருந்தது.
எவர்ஸில்வர் ஸ்பூன் எகத்தாளமாகச் சிரித்தது.
பின்குறிப்பு:-
கல்கி 11 ஜூன் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்