சிறுகதை - ஐ மிஸ் யு!

ஓவியம்; ஜெ…
ஓவியம்; ஜெ…
Published on

-தமயந்தி

ர்த்தி ரொம்ப நாளாக வீட்டுக்கு வரச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஞாயிற்றுக் கிழமை போனால்தான் உண்டு. மற்ற நாட்கள் நேரமிருக்காது. ஞாயிற்றுக் கிழமை சரஸ்வதிக்கு மிகவும் பிடித்த நாள். சோம்பலாக விடியும் வானம். மெதுவாக வாசல் தெளிக்கப்படும் வீடுகள். சுதந்திரமான மனிதர்கள்.

எப்படியும் இன்றாவது ஆர்த்தி வீட்டுக்குக் கிளம்ப வேண்டும். ரொம்ப நாளாயிற்று போய். கடைசியாக தீபாவளியின்போது போனது. காலையிலேயே சாப்பிட்ட உடனே கிளம்பினாலும் மைலாப்பூரிலிருந்து பெரம்பூருக்கு வர நேரமாகிவிட்டது. பெரம்பூரின் நெரிசலான தெருக்களும் நாகரிகம் முழுவதும் தழுவாத மனிதர்களும் தாண்டி நடந்தாள்.

ஆர்த்தி வீட்டு காம்பவுண்ட் அருகே போனதும்தான் பூட்டு கண்ணில் தென்பட்டது. மனசுக்குள் இதுவரை அவள் வீட்டுக்கு வருவதற்காக எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களும் மெழுகாய்க் கரைய எரிச்சல் வந்தது.

ஒருவேளை அருகில் எங்காவது போயிருக்கக் கூடும். சுற்றுமுற்றும் பார்த்தாள். பக்கத்து வீட்டுக் கதவு திறந்திருந்தது. காலிங்பெல் அடித்து விட்டுக் காத்திருந்தாள். ரொம்ப நேரம் கழித்து முகம் துடைத்தபடி ஒரு முகம் எட்டிப் பார்த்தது.

"யாரு?"

"பக்கத்துல ஆர்த்தி வீட்டுல..."

"சரஸ்வதி... நீயா?"

இப்போது டவல் விலகி முகம் நன்றாகத் தெரிந்தது. பஷீர். இவன் எப்படி இங்கே?

"உள்ளே வா, சரஸ்வதி."

"பஷீர்... எப்படி இங்கே?"

“ஒரு மாசமாச்சு மாத்தி வந்து. எப்டி இருக்கே? அதே சரஸ்வதிதான். ஹைநெக் ப்ளவுஸும் அளவான புன்னகையுமா நான் அன்னிக்கு பார்த்த சரஸ்வதிதான்."

உள்நோக்கிக் குரல் கொடுத்தான். "சர்வத்... இங்க வா."

வெளுவெளுவென்று சின்னப் பெண்ணாய் ஒருமுகம் எட்டிப் பார்த்தது. "இது சரஸ்வதி. நான் சொல்லல? சின்ன வயசுல நெய்பர்ஸ்."

அவ்வளவுதானா?  நெய்பர்ஸ்... அவ்வளவுதானா? அத்தோடு அந்த உறவு முடிந்து போனது இல்லை. அதற்கும் மேலே. ரம்ஜானுக்கு பிரியாணியும் தீபாவளிக்கு பட்சணங்களும் மாற்றிக்கொண்ட உறவா? இல்லை, கண்ணில் கனவோடு பறந்த காலம். ஹிந்துவும் முஸ்லிமும் கல்யாணம் செய்துகொண்டு சுகவாழ்வு வாழும் கனா கண்ட சமயம்.

பஷீர்தான் முதலில் சொன்னான். சொன்னபோது மனசுக்குள் வெள்ளை தேவதை பறந்தாள். லால்லா பாடினாள். இரண்டு கிளிகள் முத்தமிட்டுக்கொண்டன. டீன்-ஏஜ். டீன்-ஏஜ்.

"ஐ லவ் யூ சரஸ்."

வெட்கம் வந்தது. வீட்டுக்குத் தெரியும்வரை. அப்பா நிதானி. கோபப்படவில்லை. ''யோசி சரசு. ஒத்து வருமா? அவன் கறி சாப்டறதை நீ ஒத்துப்பியா? உன்னால் சமைக்க முடியுமா?"

"சகிச்சுப்பேன்.''

''முடியாது."

''சகித்துப் போதலும் விட்டுக் கொடுத்தலுமே நல்ல வாழ்க்கைக்கு அடையாளம்."

அப்பா வாயடைத்துப் போனார்.

''எல்லாம் சரி சரசு. ஆனா... இது டீன்-ஏஜ். வெளுத்துக் கிடக்கற எல்லாம் பால்னு மனசுல தோணும். உன் காதலை மதிக்கிறேன். ஆனா காத்திரு. அவசரப்படாதே. இந்த இரண்டும்கெட்டான் பருவம் போகட்டும். பிறகு யோசி.''

சரியென்றே பட்டது. பஷீர் ஏற்றுக்கொள்ள மறுத்தான். நம் தெய்வீகக் காதலைத் தகப்பன் திசைமாற்றப் பார்க்கிறார் என்று பதினைந்து பக்கத்துக்குக் கடிதமெழுதினான். அப்பாவிடம் காட்ட அப்பா சிரித்தார்.

''பறக்கற வயசு சரஸ்வதி. பறக்கும். இப்படித்தான் பறக்கும். நான் பறந்திருக்கிறேன்."

பறக்கிற வயசு முடிந்ததும் சரஸ்வதி காதலில் திடமானாள். பஷீர் நழுவினான்.

"இது இன்ஃபாசுவேஷனோன்னு பயமாயிருக்கு சரஸ்வதி. இது ஒத்து வருமான்னு தோணுது."

"பிறகு ஐ லவ் யு சொன்னே. லெட்டர் எழுதினே?"

"நிஜம்னு ஆராயும்போது... உன்னால என்னோட பழக்க வழக்கத்தைச் சகிக்க முடியுமா?"

"முடியும்."

"எப்படி முடியும்? உன்னால கறி வாடை தாங்க முடியுமா? அவியும்போது ஒரு வாடை வரும். எனக்கு தேவாமிர்தம். உனக்கு?"

குமட்டிற்று. பஷீருக்காகச் சகித்துக்கொள்ளலாம். நல்ல கல்யாண வாழ்க்கைக்காகச் சகித்துக்கொள்ளலாம்.

"அம்மா ரொம்ப வற்புறுத்தறா சரஸ். துணிஞ்சு குதிக்கவும் பயமாருக்கு. விடவும் மனசில்லை."

''விட்டுரு.''

"சரஸ்...!"

''விட்டுட்டா எனக்கும் நிம்மதியாயிரும். நீ என்ன யோசிக்கிறியோ நினைக்கறியோன்னு பதைக்க வேணாம்."

"நான் கோழைங்கறியா?"

"இருக்கலாம்."

"நான் ஏமாத்திட்டேன்னு நெனைக்கிறியா?"

"இல்ல ஏமாந்துட்டேன் பஷீர்.''

வேலை கிடைத்த மறு மாசமே அவனுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்று. அவன் அம்மா படியேறி, முகம் மலரப் பத்திரிகை கொடுத்தாள். அம்மா சிரிக்க முயன்று வாங்கிக்கொண்டாள்.

"நீயும் வந்திடு சரஸ்வதி. பழசை நினைச்சிட்டு வராம இருந்துடாதே" சுளீர்!

"பொண்ணு யாரு?" அம்மா சகஜமாக்க முயன்றாள்.

"சர்வத்நிஸா. நல்ல நிறம். நிறைய தர்றாங்க."

பட்டியலிட்டாள். கோபம் வந்தது. கல்யாணத்துக்குப் போவதைத் தவிர்த்தாள். அப்பா அவள் மனநிலை புரிந்து மைலாப்பூரில் வீடு பார்த்தார்.

இதையும் படியுங்கள்:
மாரத்தான் பந்தயத்தின் வரலாறு - Pheidippides யார் தெரியுமா?
ஓவியம்; ஜெ…

ந்த சர்வத்நிஸாவா இது? இன்னும் சின்னப் பெண் மாதிரி - சின்னதாகச் சிரித்தபடி தலையசைத்தாள். பஷீர் அவசரமாக டவலை மேலே போர்த்திக்கொண்டான்.

"ஆர்த்தி உனக்கு ஃப்ரெண்டா?"

"ம். கலீக்."

"இஸிட் எங்கேயோ ஊருக்குப் போறதாச் சொன்னாங்க. சாவி இங்கதான் இருக்கு. வேணுமா?"

"இல்ல. போகணும்."

"காப்பி குடிச்சிட்டுப் போ சரஸ்வதி. காப்பி கொண்டு வா சர்வத்."

திரைச்சீலை விலக சர்வத் மறைந்தாள்.

"அப்புறம். எப்படி இருக்கே? எங்கே இருக்கே?

"மைலாப்பூர்தான்."

"ஃபேமிலி...?" தயங்கினான். கண் தானாகக் கீழ்நோக்கிப் பாய்ந்தது.

"அவர் பைலட் வாரத்துல ரெண்டு தடவை கட்டாயம் வருவார். அது போக சில சமயம்."

"தனியாவா இருக்கே சரஸ்வதி?"

"இல்லே... அம்மா இருக்கா.''

"அப்பா...?''

"நோ மோர்...”

"ஸாரி.... குழந்தைங்க...?"

"ரெண்டு. ரெண்டும் பொண்ணு. ஒண்ணு ஃபோர்த், அடுத்தது எல்.கே.ஜி."

''எனக்குக் கொடுத்து வைக்கல சரஸ்வதி!"

"ஸாரி.. வீடு சொந்த வீடா?"

"ம்ஹூம். போன மாசம்தான் இங்க வந்தோம்."

"உங்கம்மா இல்லையா?"

"இல்ல... சர்வத்துக்கும் அவளுக்கும் ஒத்துவரலை."

"ஸோ... இப்ப எங்கே இருக்காங்க...?"

"ஒரு முதியோர் இல்லத்துல. ஸண்டே போய்ப் பார்ப்பேன். இப்பகூட கிளம்பிட்டுத் தானிருந்தேன்."

காப்பி நீட்டப்பட்டது. இதமான வெயிலுக்கு லேசான சூட்டில் காப்பி உள்ளே இறங்கியது இதமாக இருந்தது.

''உன் வீட்டுல எப்படி சரஸ்வதி?"

''ஓ! கொடுத்து வச்சவ பஷீர் நான். நல்ல டேஸ்ட். நல்ல குணம். ஐ'ம் லக்கினு சொல்லணும்."

காப்பி கப்பை மேஜை மேல் வைத்தபோது பஷீரின் வெறிச்சென்ற பார்வை கண்ணில் பட்டது.

"எனக்குத்தான் திருப்தியில்லை சரஸ்."

"இருக்கறதுல நிம்மதியடையறவனே வாழ்க்கைல சந்தோஷமானவன் பஷீர்."

"நீ லக்கி சரஸ்வதி. ஐ மிஸ் யு."

இதையும் படியுங்கள்:
மகிழ்வுடன் செயல்படுங்கள்! மனம் மகிழுங்கள்!
ஓவியம்; ஜெ…

"பழசை நினைச்சிப் பிரயோஜனமில்லை பஷீர். நீ அப்போ கண்ணை மூடிட்டிருந்தே. ஆனா, நான் அதுக்காகக் கவலைப்படலை. ரொம்பவே நல்லாருக்கிறதுனால அப்படித் தோணலை எனக்கு.''

உள்ளே காலடி சப்தம் கேட்டு, பேச்சு நின்றது.

"நான் கிளம்பட்டா பஷீர்?"

"நானும் வர்றேன். ஹோமுக்குப் போகணும்.”

டிரஸ் மாற்றி வந்தான். சர்வத்திடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். பஷீர் ஒன்றுமே பேசாமல் நடந்தான். அந்த மௌனம் அவனையே குத்தித் தின்றுகொண்டிருக்கிறது என்பது புரிந்தது. அவனையே விழுங்கும் பேய் மாதிரி.

அவனது பஸ் வந்தது.

"உனக்கு பஸ் வர்ற வரை இருக்கட்டுமா சரஸ்வதி."

"இல்லை பஷீர். நீ போ.''

ஞாயிற்றுக் கிழமையின் காலியான பல்லவனில் அவன் ஏறி உட்கார்ந்ததும் பஸ் இரைச்சலாய்க் கிளம்பிற்று. அத்தனை இரைச்சல் மீறி மனசு அலறிற்று-

''எனக்கு இன்னும் கல்யாணமாகலை பஷீர்! ''

பஷீருக்கும் தெரியவரும். ஆர்த்தி தற்செயலாகச் சொல்லக்கூடும். ''சரசு அம்மாவுக்கு அவ கல்யாணம் கட்டாததுதான் பெரிய கவலை" என்று. அதுவரை அந்தப் பேய் அவனைக் குத்தித் தின்றுகொண்டிருக்கும். அவனை விழுங்கும் என்று நினைத்த போது

சிரிப்பு வந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 12 ஜூன்1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com