சிறுகதை - அடையாளம்!

ஓவியம்; அரஸ்
ஓவியம்; அரஸ்

-தமயந்தி

ப்பாவின் சைக்கிள் தொலைந்துவிட்டது. பழைய கறுப்பு ராலே சைக்கிள். பச்சை நிற சீட்டும் சாவி போடாமலேயே திறந்து,  மூடக்கூடிய பூட்டும் உள்ளது. வ.உ.சி.மைதானம் எதிரில் உள்ள இந்தியன் வங்கி எதிரே சைக்கிளை நிறுத்திவிட்டு, உள்ளே போய்ப் பணம் எடுத்துவிட்டு வரும்போது, சைக்கிள் நிறுத்தின இடத்தில் இல்லை.

அப்பா பதறிப் போனார். கிருஷ்ணமூர்த்திக்கு சைக்கிள் தொலைந்து போனதன் ஆக்ரோஷம் புரிய கொஞ்ச நேரமாயிற்று. புரிந்ததும் மனசு கனத்துப் போனது. எத்தனை வருஷங்கள் கூடப் பிறந்த உறவு மாதிரி வீட்டு வாசலில், கேட்டருகே உள்ள வேப்பமரத்தின் நிழலில், வெராந்தாவில் என்று அநேகமாய் வீட்டின் சகல இடங்களிலும் அது நிறைந்திருந்திருக்கிறது.

பக்கத்தில் உள்ள கடைகளில்,  ஹாய்யாக நின்று சிகரெட் பிடித்தபடி பத்திரிகைகளைப் படித்துக்கொண்டும், அரசியல் பேசிக்கொண்டு மிருந்தவர்களிடம் அப்பா கவலையோடு விசாரித்தார்.

"இங்கு ஒரு ராலே சைக்கிள் பாத்தீங்களா?"

"இல்லையே சார். ஏன் காணலையா?"

''ம். ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னதான் விட்டுட்டு பாங்க் போனேன்."

"பூட்டலையா?"

"அது சரியான பூட்டு இல்ல. சாவி போடாதயே திறக்கும். மூடும்."

"ஜாக்கிரதையா இருந்திருக்க வேணாம்?"

''இப்படித்தான் சார்... லாக்குக்குச் செலவாகும்னு பாத்தம்னா சைக்கிளே போயிரும்.

"போன மாசம் என் மச்சினன் வீட்டு வாசல்ல புது சைக்கிளை விட்டுட்டுப் போயிட்டான். சாப்பிட்டு வந்தா இல்ல. யாரச் சொல்ல பாய்?  நம்ம சொத்தை நாமதானே பாக்கணும்."

அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அப்பா உச்சிவெயில் முகத்தில் பளபளக்க, முகத்தில் வேதனை சுமந்து நின்றார். மனசு கணக்குப் போட்டிருக்கும்.

ஒரு சைக்கிள் இப்போது ஆயிரத்துக்கும் மேல். முடியுமா?  இன்னொன்று வாங்க முடியுமா? மனசு கேள்வி கேட்டிருக்கும். பழைய சைக்கிள் என்றாலும் அது சைக்கிள் என்கிற வாகனமாய்ச் சுமந்துபோனது. கூட்டத்தில் பலர் "புதுசா சார்" என்றார்கள். இல்லையென்றதும் நிம்மதியடைந்தார்கள். அப்ப என்ன என்கிற தினுசில் கூட்டம் கலைந்தது.

"இரு மூர்த்தி. இன்னொரு தடவை தேடிறலாம்."

அப்பா இன்னொரு முறை கூட்டமாய்க் குவிந்திருந்த சைக்கிள் மத்தியில் தேடினார். சிவப்பும் மஞ்சளும் இருந்த சீட்டுகள் மத்தியில் பச்சை சீட் கண்ணில் தென்படவில்லை.

"எப்படி வீட்டுக்குப் போகப்பா?"

'பஸ்ல போயிடுவோம் மூர்த்தி. வா."

அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டான். ரோட்டுக்கு எதிர்ப்பக்கம் போய் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டார்கள். அப்பாவின் கண்கள் சைக்கிள் நிறுத்திய இடத்தையே மேய்ந்து கொண்டிருந்தன. அவ்வப்போது தலையைக் குனிந்துகொண்டார்.

கிருஷ்ணமூர்த்தி வருகிற போகிற சைக்கிள்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். எடுத்துப் போன ஆள் திரும்ப இந்த வழியே வருவானா? எத்தனை முட்டாள்தனம் இப்படி நினைப்பது.

"ப்பா..."

"என்னடா..."

"யார் எடுத்திருப்பா?"

"யாராச்சும் நாம சாவியில்லாம லாக் பண்றதை கவனிச்சிருக்கணும்."

“ஏம்ப்பா நீ லாக் மாத்தலை?"

அப்பா மௌனமாய் மீண்டும் ரோட்டையே வெறித்தார். புகை கக்கிக்கொண்டு லாரிகள் கடந்து போயின.

"போலீஸ்ல சொன்னா பிடிச்சிருவாங்களாப்பா?"

''தெரிலை. பாக்கணும்."

தூரத்தில் ஐந்தாம் நம்பர் பஸ் வருவது தெரிய, அப்பா மூர்த்தியுடன் ஏறுவதற்குத் தயாரானார்.

செய்தி சொன்னதும் வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். அண்ணன் அப்பாவிடம் நிறைய கோபப்பட்டான்

''பார்த்து வைக்கக்கூடாது. இந்த மூர்த்திய காவலுக்கு விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது?"

"பயங்கர வெயில் சண்முகம்."

"போலீஸ்ல கம்ப்ளெண்ய்ட் கொடுத்துறலாமா?"

"கொடுக்கணும்."

அம்மாவுக்குத் திடீரென்று சந்தேகம் தீப்பொறியாய்த் தட்டியது.

"ஒருவேளை யாராச்சும் மாத்தி எடுத்திட்டுப் போயிருப்பாங்களோ?"

''அப்படி யார் எடுப்பா?"

''ஏதும் யோசனையா,  மறதியா எடுத்திருக்கலாமில்லே?"

"இப்ப என்ன செய்ய?"

"கஷ்டத்தைப் பார்க்காம இன்னொரு தரம் போயிட்டு வந்துடறது."

அப்பா மறுபடி பஸ்ஸில் கிளம்பினார். மூர்த்தியும் தொற்றிக்கொண்டான். அப்பா அந்த சைக்கிளை எவ்வளவு நேசித்தார் என்று அவனுக்குத் தெரியும். பழைய சைக்கிளானாலும் அவருக்கு அதனோடு உண்டான தொடர்பு அலாதியானது.

இன்னும் அவனுக்கு அந்த சைக்கிள் வீட்டுக்கு வந்த முதல் நாள் நன்றாக ஞாபகமிருக்கிறது. அது ஒரு அழகான சாயங் காலம். ஸ்நேகிதர்களோடு விளையாடிக்கொண்டிருக்கும்போதே மனசு அடிக்கடி சிலிர்த்துக்கொண்டது. விளையாட்டில் மனசு லயிக்கவில்லை.

"என்னடா கிருஷ்ணமூர்த்தி,  விளையாடப் பிடிக்கலே?"

“எங்கப்பா வர்றச்சே புது சைக்கிள் வாங்கிட்டு வருவார் ஹரி."

அப்போது அவர்கள் இருந்தது நெரிசலான புதுப்பேட்டை தெருவில். இப்போதிருப்பதுபோல அங்கே ஒவ்வொரு வீட்டையும் பிரிக்கும் காம்பவுண்ட் சுவர்கள் கிடையாது. ஒவ்வொரு வீட்டுக்கென தனி தோட்டம் கிடையாது. ஒவ்வொரு வீட்டுக்கென தனி ரகசியங்களும் கிடையாது. அப்பா சைக்கிள் வாங்கப் போவது அம்மா மூலம் மற்ற அம்மாமார்களுக்கும், அண்ணன் மூலம் வாலிபப் பையன்களுக்கும் தெரிந்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
காஷ்மீரி மலைப்பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
ஓவியம்; அரஸ்

அப்பா அன்றைக்கு வீட்டுக்கு வர எட்டரை மணி ஆகிவிட்டது. கூடவே ஜன்னத் ஹோட்டல் பிரியாணியும் வந்திருந்தது. அம்மா சைக்கிளைத் தொட்டுப் பார்த்தாள். அண்ணன் அடுத்த தெருவரை போய் வந்தான். கிருஷ்ணமூர்த்தியைக் காரியரில் வைத்து அப்பா ஒரு சுற்று போய் வர தெரு வேடிக்கையாய்ப் பார்த்தது.

தினமும் அப்பா அந்த சைக்கிளைத் துடைத்தார். வாரா வாரம் எண்ணெய் போட்டார். கிருஷ்ணமூர்த்தியை ஸ்கூலில் கொண்டு போய் விட்டார். பக்கத்தில் யாரும் சுகமில்லை என்றால் ஆட்டோ கூட்டி வர, டாக்ஸி கூட்டி வர, டாக்டர் கூட்டி வர அப்பாவிடம் சைக்கிள் கேட்டார்கள். என்ன அவசரமானாலும் அப்பாதான் போய் வருவார்.

"ஏன்ப்பா நீங்களே போறீங்க?"

"எங்கேயாவது கொண்டு போய் ஏத்தி வப்பான். ஹேண்டில்பாரை வளைச்சி வப்பான். செலவு நம்ம தலைல விழும். அவனை ஒண்ணும் சொல்ல முடியாது. நீதானே கொடுத்தேம்பான் அப்ப."

அண்ணன்கூட எப்பொழுதாவதுதான் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கி சைக்கிளைக் கொண்டு போவான். அவன் கேட் தாண்டிப் போகிற வரை அப்பா பத்துத் தடவை சொல்லி விடுவார்.

"பத்திரம் சண்முகம். பார்த்துப் போ. அவன் கேட்டான் இவன் கேட்டான்னு கொடுத்துறாதே."

"சரிப்பா."

 திடீரென்று மூர்த்திக்கு அப்பாவின் பெயரை, சில சைக்கிள்களில் உள்ளது போல் எழுத வேண்டும் என்றிருந்தது. லீவ் விட்ட சனிக்கிழமை மத்யானம் அப்பா தூங்கிப் போன பிறகு, அமைதியாய் ஒரு ஆணியை எடுத்துக்கொண்டு செயின் கார்டில் பெரிசாய் சிவசுப்ரமணியன் என்று கிறுக்கினான். கறுப்புநிற பெயிண்ட் பெயர்ந்து வெள்ளைக் கோடுகளாய் மாறியது. ஆனாலும் பெயர் தெளிவாய் இல்லை. அப்பா சாயங்காலம் எழுந்து, கடை வரைக்கும் போகக் கிளம்பியவர், ஸ்டாண்டைக் கழற்றியதும் சட்டென்று நின்றார்.

"லக்ஷ்மி."

"என்னங்க?"

"மூர்த்தி எங்கே?"

"டேய்... அப்பா கூப்பிடுறார்."

மூர்த்திக்கு உள்ளூர பயம். அதையும்மீறி வெளியே போனான். "என்னப்பா?"

"இதார் வேலை?"

“பேர் எழுதணும்னு... நான்தாம்ப்பா..."

முதுகில் பளாரென்று அடி விழுந்தது.

"செய்வியா ராஸ்கல்?"

"தெரியாம செஞ்சிட்டேன்ப்பா. விட்டுறுப்பா. விட்டுறுப்பா.”

அப்பாவும் என்னென்னலாமோ செய்து பார்த்தார். அந்த வெள்ளைக் கிறுக்கல் கோடுகள் மறையவில்லை. அவ்வப்போது 'ரீ-பெயிண்ட்' பண்ண வேண்டும் என்றார். சமயம் வரும்போது பணமில்லை. பணமிருக்கும் போது சமயம் இல்லை என்று வருத்தப்பட்டார்.

அது குறித்து அவருக்கு மூர்த்தி மீது வருத்தம் உண்டு.

இப்போதும் அந்த இடத்தில் மற்ற சைக்கிள்கள்தான் நின்றன. முன்பு நின்றி ருந்த சைக்கிள்களில் சிலது மட்டும் நின்றிருந்தன. மற்றதெல்லாம் அதற்கப்புறம் வந்து நிறுத்தப்பட்டவை.

அப்பா பக்கத்திலிருந்த கடையில் மறுபடியும் விசாரித்தார்.

"அப்ப வந்த சார்தான? நாங்களும் பார்த்தோம். யாரும் வரலை."

"ஒருவேளை யாராச்சும் தெரியாம மாத்திக்கொண்டு போயிருக்கலாம்னு..."

இதையும் படியுங்கள்:
பட்டர் பீன்ஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
ஓவியம்; அரஸ்

"அதெல்லாம் இருபது வருஷத்துக்கு முந்தியிருக்கும் வாத்யாரே. இப்ப கலி காலம். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போ. பத்து ரூவா கேப்பான்.
கொஞ்ச நாள் கழிச்சு வருவான். திரும்ப ரூவா கேப்பான். திரும்ப கொஞ்ச நாள் கழிச்சு வந்து ஒரு சைக்கிள் கிடக்கு. இருநூறு ரூபா கொடுத்து எடுத்துக் கம்பான். எடுத்துக்க. பாடாவதியாயிருக்கும். பரவால்லையோ?"

மற்றவன் அதட்டினான். "த்ச். நீ சும்மாரு. நீங்க எதுக்கும் கையோட ஒரு கம்ப்ளெய்ண்ட் ஃபைல் பண்ணிருங்க சார்."

"போயிறலாமாடா?" அப்பா மூர்த்தியைக் கேட்டார். பெரிய மனுஷத்தனத்தோடு மூர்த்தி தலையசைத்தான்.

போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். கூட்டமில்லை. பத்து நிமிஷம் காக்க வைத்துவிட்டு ஏட்டு "என்ன...?" என்றார்.

''சைக்கிள் காணாம போயிடுச்சு."

"இந்தியன் பாங்க் முன்னயா?"

"ம்."

"இதுல ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதிக் கொடுங்க. சைக்கிள் நம்பர் தெரியுமா?'

"ம்ஊும்."

"பச். ஏதும் அடையாளம் உண்டா?"

அப்பா யோசித்தார். மூர்த்தி சட்டென்று ''செயின் - கார்ட்ல ஆணி வச்சுக் கிறுக்கிருக்கும்" என்றான்.

அப்பா ஏனோ அவன் தோள் மீது கைவைத்து நம்பிக்கையுடன் சிரித்தார்.

 பின்குறிப்பு:-

கல்கி 26  ஜுன் 19933 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com