

-க.ஒப்பிலியப்பன்
இன்டர் காலேஜ் மீட் ஒன்றில் தற்செயலாகச் சந்தித்தது இப்படித் தொடரும் என்று ரமேஷும் ராதாவும் எதிர்பார்க்கவில்லை.
பி.ஈ. முடித்த கையோடு ஒரு தனியார் கன்ஸ்ட்ரக்ஷனில் இன்ஜினியராக வேலைக்குச் சேர்ந்தான் ரமேஷ்.
ஒரு 'த்ரீ ஸ்டார்' ஓட்டல் கன்ஸ்ட்ரக்ஷன்... அப்போது ராதா அவனைப் பார்த்தாள்.
"அட ஏது இந்தப் பக்கம்" அவன் கேட்டான்.
"இந்த ஓட்டல் கட்டுவதே எங்கப்பாதான்..."
"உங்கப்பாவா பெயர்..."
"தனசேகரன்..."
"தனசேகரனா... கேள்விப்பட்ட பெயரா இருக்கே..."
"எங்கப்பா சினிமா புரொடியூசரும்கூட...."
"அடேயப்பா... பெரிய பட அதிபரின் மகளா நீங்க..."
"இதோ பாரு ரமேஷ்... எங்கப்பா யாராயிருந்தா என்ன...? நாம ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் மனமார விரும்பறோம்... கல்யாணமும் பண்ணிக்கப் போறோம்..." இறுதியாகச் சொன்ன ராதா, அதை உறுதி செய்வதுபோல, அவனை ஒருநாள் தன் பங்களாவிற்கு அழைத்துச் சென்றாள்!
"அப்பா... இவர் ரமேஷ்..." - தன் அப்பாவிடம் நேரடியாக அறிமுகப்படுத்தினாள்...
ரமேஷை ஏற இறங்கப் பார்த்தார் தனசேகரன்.
"சரி... சொல்லுமா..."
"அப்பா இவர் நேற்று என்னை ஒரு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றினார்... இவர் மட்டும் நேற்று இல்லாதிருந்தால், ஆட்டோ ஏறி நான் செத்தே போயிருப்பேன்...'"
பதறிப் போனார் தனசேகரன்.
"என்னம்மா சொல்றே...? விபத்தா... இவர் காப்பாற்றினாரா...?"
''ஆமாம்ப்பா... ஷாப்பிங் முடித்து நான் என் கார்கிட்டே போயிக்கிட்டிருந்தேன்... சட்டென்று குறுக்கே வேகமாக ஓர் ஆட்டோ வந்தது... ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த இவர் சட்டென்று என்னைத் தள்ளிவிட்டார்.... இல்லாதிருந்தால் என் மீது ஆட்டோ ஏறியிருக்கும்..."
"அப்படியா...?" என்ற தனசேகரன் ரமேஷ் பக்கம் திரும்பி, "ரொம்ப ரொம்ப நன்றி சார்..." என்றார்.
இதற்குள் டெலிபோன் மணி அலறவே, "எக்ஸ்கியூஸ் மீ... நீங்க பேசிக்கிட்டிருங்க, இதோ வரேன்" என்று அறைக்குள் நுழைந்தார்.
ஹாலில் தனித்து விடப்பட்ட நிலையில் ரமேஷ் ராதாவிடம் கேட்டான்...
"என்ன ராதா... உங்கப்பாவிடம் ஏதோ விபத்து, ஆட்டோ, நான் காப்பாற்றினேன் என்றெல்லாம் ரீல் விட்டிருக்கே. எனக்கு ஒன்றுமே புரியலே. நீ ஏன் இப்படிப் பேசினே..."
''உங்களுக்கு இதெல்லாம் சட்டென்று புரியாது.... எங்கப்பா சினிமா படத் தயாரிப்பாளர்... எத்தனையோ மசாலாப் படங்களை எடுத்தவர்... எல்லாப் படங்களிலும் கதாநாயகன் நாயகியை ஏதாவது விபத்துலேர்ந்து காப்பாற்றி விட்டுத்தான் காதலிக்க ஆரம்பிப்பான்... நம்ம காதலுக்கும் இப்படியொரு சம்பவம் நடந்தமாதிரி சொன்னாத்தான் எங்கப்பா நம்ம காதலை ஏற்பார்..."
"சபாஷ்... மகளே சபாஷ்..."
ரமேஷ் ராதா இருவருக்குமே தூக்கி வாரிப் போட்டது. "உங்கப்பாவைப் பற்றி இவ்வளவு நல்லா புரிஞ்சு வச்சிருக்கிற உன்னோட சாமர்த்தியத்தைப் பாராட்டறேன். ஒத்துக்கறேன். கதாநாயகன் நாயகியை ஆபத்துலேர்ந்து காப்பாத்தின பிறகுதான் காதலிப்பான். அதன்படி ஆபத்துலேர்ந்து உள்னை ரமேஷ் காப்பாத்திட்டான். ஆனா ஒன்ன நீ மறந்துட்டயே. எந்தக் காதலுக்கும் ஒரு வில்லன் உண்டு. சரிதானே... இப்ப உங்க காதலுக்கும் ஒரு வில்லன் வரப் போறான். என்னோட நண்பன் ராஜலிங்கத்தின் மகன் சேகருக்கு உன்னைக் கல்யாணம் பண்றதா நான் ஏற்கெனவே முடிவு பண்ணிட்டேன். வர்ற தையில கல்யாணம், சேகர்... அதாவது உன்னோட வில்லனை எப்படிச் சமாளிக்கப் போறே.. பார்த்துடறேன்.." தனசேகரன் போய் விட்டார்.
ரமேஷும் ராதாவும் ஒன்றும் புரியாமல் குழம்பித் தவித்தனர்!
"ராதா என்னை மன்னிச்சுடு. பிரபல பட அதிபரோட பணபலம், படைபலம் இதுக்கு முன்னாடி எதிர்த்துப் போராட எனக்கு சக்தி கிடையாது."
"இதோ பாருங்க ரமேஷ்... நான் உங்களை மனமார நேசிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களைத்தான் பண்ணிப்பேன்.. இல்லேன்னா தற்கொலை பண்ணிப்பேன்... இது சினிமா வசனம் இல்லே... நிஜமான வார்த்தைகள்."
தை பிறந்துவிட்டது.! ஆனால் தப்பிக்க ராதாவுக்குத்தான் வழி தெரியவில்லை!
கல்யாண நாள் நெருங்க நெருங்க அவளுக்குத் தற்கொலை உணர்வுதான் அதிகமானது.
கல்யாண நாளும் வந்துவிட்டது.
முகூர்த்தத்திற்கு இன்னும் ஒரு மணி நேரமே பாக்கி.
கட்டாய அலங்காரத்தில் களையிழந்து காணப்பட்டாள் ராதா...!
அப்போதுதான் அந்தக் கல்யாண ஹாலில் திபுதிபுவென்று போலீஸ் நுழைந்தது..
தனசேகரன் பதறிப் போனார்.
"இன்ஸ்பெக்டர்... என்ன இது...?"
"சார்_ உங்க மகள் பெயர் ராதாவா... அவங்கள நான் அரெஸ்ட் பண்ண வந்திருக்கேன்.."
"ஏன் சார்... ஏன்...? அவள் என்ன தப்புப் பண்ணினாள்...?"
''தற்கொலை பண்ணிக்கொள்ள முயற்சி செய்யறதும் சட்டப்படி குற்றம்தான்..."
"தற்கொலையா...? சார். என் மகளுக்கு இன்னிக்குக் கல்யாணம்... இருந்து பார்த்து ஆசீர்வதித்துவிட்டு, விருந்து சாப்பிட்டு விட்டுப் போங்க.." தனசேகரின் பேச்சில் ஏளனம் எக்காளமிட்டது..
"சார் இந்த வாய்ஸ் யாருது சொல்லுங்க." இன்ஸ்பெக்டர் டேப்பை போட்டார்.
ராதாவின் குரல் அந்த மண்டபம் முழுவதும் கேட்டது.
"இதோ பாருங்க ரமேஷ்... நான் உங்கள மனமார நேசிக்கிறேன்... கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களத்தான் பண்ணிப்பேன். இல்லேன்னா தற்கொலை பண்ணிப்பேன். இது சினிமா வசனம் இல்லே. நிஜமான வார்த்தைகள்..."
அடுத்த ஐந்தாவது நிமிடம் பிள்ளை வீட்டார் சத்திரத்தை காலி செய்து விட்டிருந்தனர்!
சரியான நேரத்தில் ரமேஷ் உள்ளே நுழைந்தான். "இவர்தான் எங்களிடம் உங்க மகளோட பேச்சு அடங்கிய கேசட்டை கொடுத்து புகாரும் கொடுத்தார்...." - இன்ஸ்பெக்டர் சொன்னார்...
"சார்... உங்க பொண்ணு ஒரு மேஜர்... கட்டாயப்படுத்தி அவங்கள கல்யாணம் செய்துகொள்ள நீங்க நிர்பந்தப்படுத்தறது தப்பு... நீங்க சொன்ன மாதிரி வில்லனை. விரட்டியாச்சு... இதுல இன்னொரு விசேஷம்... படத்தில் கடைசி நேரத்துலதான் போலீஸ் வருவாங்க... எங்க காதலிலும் அப்படித்தான்...ஆனா ஒரு சின்ன வித்தியாசம்... இவங்களோட உதவியினாலதான் நான் உங்க மகளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்... வணக்கம்...!"
-கல்கி 08.11.1998