

கோபாலன் செய்திதாள் படிப்பதை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இப்போதெல்லாம் காலை மணி ஆறு முதல் எட்டு வரை வீட்டு ஜன்னல் அருகே உட்கார்ந்து எதிர் வீட்டு புழக்கடை தோட்டத்தை கவனிப்பது தான் அவருடைய முக்கிய வேலை.
அந்த தோட்டத்தில் இருக்கும் செம்பருத்தி செடியை அவருக்கு மிகவும் பிடிக்கும். அதன் பரம விசிறி என்றே சொல்லலாம்..
இந்த செடியில் தினமும் குறைந்தது இருபது பூக்களாவது பூத்து குலுங்கும். ஒவ்வொரு பூவும் சேவல் கொண்டை போல தோற்றமளிக்கும்..
இதில் கோபாலனுக்கு என்ன ஒரு பெரிய வருத்தம் என்றால் இந்த செடியில் பூக்கும் அத்தனை பூக்களும் அரைமணி நேரத்தில் மறைந்து போகும்.
மணி ஏழு ஆனதோ இல்லையோ அந்த வீட்டுக்காரர் கையில் ஒரு பாத்திரத்துடன் வருவார். ஒரு பூ விடாது ‘வெடுக் வெடுக்கென்று’ பறித்து செடியை மொட்டை ஆக்கிவிடுவார்.
செடியை தன் கழுகு கண்களை வைத்து ஸ்கேன் செய்து ஒரு பூக்கூட விடுபட்டு போகவில்லை என்று உறுதி செய்த பிறகே, அந்த இடத்தை விட்டு அகல்வார். இது தினமும் அரங்கேறும் அராஜகம்..
'என்ன ஒரு புத்திகெட்ட செயல் இது' என்று தனக்குள் பொருமுவார் கோபாலன்.
சாமிக்கு தான் என்றாலும், ஒரு நான்கைந்து பூக்களையாவது செடியில் விட்டு வைக்கக் கூடாதா?
பாவம் அவர் கண் எதிரே பட்டாம் பூச்சிகளும், வண்டுகளும், தேனீக்களும் செடியை சுற்றி வந்து சோகமா போகும்.
பூக்களை வண்டுகளும், பட்டாம் பூச்சிகளும் மொய்க்கவில்லை என்றால் என்ன ஆகும்...?
இத்தனைக்கும் அந்த வீட்டுக்காரர் ஒரு படித்த சீனியர் சிட்டிசன். இதெல்லாம் சொல்லியா தெரிய வேண்டும்..
இப்படி பட்டாம் பூச்சிகளுக்கும், தேனீக்கள் மற்றும் வண்டுகளுக்கும் பூக்களை தர மறுத்தால் எப்படி தாவரங்கள் செழிக்கும். செடிகள் அழகாக இருக்க வேண்டும் என்பது ஒரு புறமிருக்க மகரந்த சேர்க்கை என்பது எவ்வளவு முக்கியம்.
ஒரு மூன்று மாதம் தேனீக்களில்லாமல் இருந்தால் உலகமே பாலைவனமாகிவிடும் என்பது உண்மை.
ஒவ்வொரு நாளும் எதிர் வீட்டுக்காரர் செம்பருத்தி செடியிலிருந்து பூக்களை ஒன்று விடாமல் பறித்து செல்வது கோபாலனால் தாங்க முடியவில்லை.
தினமும் அந்த செடி தன்னிடம், 'நீங்கள் ஏன் இந்த முரட்டு ஆசாமியிடம் பேசி என்னை இப்படி துன்புறுத்துவதை நிறுத்த கூடாது?' என்று கேட்பது போல தோன்றியது..
இந்த விஷயத்தை பற்றி மனைவி ருக்மணியிடம் பேசியவர், தான் எதிர் வீட்டுக்காரருக்கு அறிவுரை கூறலாம் என்றிருப்பதை பற்றி சொன்னார்.
ஆனால் ருக்மணி, 'அது அவர் வீடு, அவர் செடி, எதையாவது சொல்லி வாங்கி கட்டி கொள்ளாதீர்' என்று சொல்லி அவருக்கு ஊக்கம் அளிக்கவில்லை.
ருக்மணி சொல்வது போல 'மைண்ட் யுவர் பிசினஸ்' என்று எடுத்தெறிந்து பேசி விட்டால் என்ன ஆவது?
இப்போதுதான் எல்லோரும் ஈகோயிஸ்ட்களாக இருக்கிறார்களே!
ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார் கோபாலன்..
ஒரு மொட்டை கடிதம் எழுதி செடியில் மாட்டி விட தீர்மானித்தார்.
'அன்புள்ள ஐயா...
நான் உங்களுக்கு சொந்தமான செடிதான். இருந்தாலும் நீங்கள் தினமும் எல்லா பூக்களையும் பறிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தினமும் நீங்கள் பறித்து விட்டு போன பின் பட்டம்பூச்சிகளும், வண்டுகளும் வந்து ஏமாற்றமடைந்து போகின்றன. அதை பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது. மேலும் தாவரங்கள் பெருகுவதற்கு மகரந்த சேர்க்கை எவ்வளவு அத்தியாவசியம் என்பதை நான் சொல்ல தேவை இல்லை. ஆகவே பாதி பூக்களை விட்டு மீதியை கடவுளுக்கு எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...’
இப்படிக்கு,
உங்கள் செம்பருத்தி!
மறுநாள் பூ பறிக்க வந்த எதிர் வீட்டுக்காரர் கடிதத்தைப் படித்தார். முகம் சிவந்தார்.
எல்லா பூக்களையும் வழக்கத்துக்கு மேல் அதிக அலட்சியத்துடன் செடியிலிருந்து ‘வெடுக் வெடுக்கென்று’ பறித்து பாத்திரத்தில் போட்டு கொண்டு எங்கள் வீட்டு ஜன்னலை பார்த்து முறைத்து விட்டு போனார்..
கோபாலன் தான் அந்த கடிதத்தை எழுதி இருக்க வேண்டும் என்று ஊகித்து விட்டார் போலும்..
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்,
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்...
என்ற வாலியின் வரிகள் கோபாலனின் காதில் எதிரொலித்தது..