பரமானந்த சன்யாசி ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். அவர் ஆசிரமம் பெரும் புகழ் பெற்றது. ஆன்மிகவாதிகள் அவர் ஆசிரமத்தில் கற்க போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். அவர் வேதம் மற்றும் வேதாந்தம் பற்றி மிக எளிமையாகச் சொல்லித் தந்தார்.
விஷ்ணு என்பவர் சிறந்த ஆன்மிக பக்தர். அவருக்குப் பரமானந்த ஆசிரமம் சேர ஆசை. பயங்கர புத்திசாலி. முடிவு எடுத்து விட்டார். இன்று பரமானந்த குருவைச் சந்திக்க நேரில் சென்றார். ஆசிரமம் அமைதியான இடத்தில் இருந்தது. விஷ்ணு ஆசிரமம் வந்து சேர்ந்தார். பரமானந்த குரு ஒரு வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தார்.
விஷ்ணு பரமானந்த குருவின் வேதாந்தம் பற்றி அவர் எடுத்த வகுப்புகள் சிடியில் கிடைத்தது. அதைக் கேட்டு விட்டுத்தான் பரமானந்தவை மானசீக குருவாக எடுத்துக்கொண்டார். அவர் ஆசிரமத்தில் வேதம், வேதாந்தம் கற்க பேரார்வம் கொண்டிருந்தார்.
விஷ்ணு காத்து இருந்தார். வகுப்பு முடிந்தது. அரை மணி நேரத்தில் பரமானந்த குரு வந்தார். பின்னர் விஷ்ணு பற்றி கேட்டு அவரைப் புரிந்துக்கொண்டார்.
“நீங்கள் ஆசிரமத்திலியே தங்கி கற்க விரும்புகிறீர்களா..?” எனக் கேட்டார்.
“ஆம் ஜீ…!” என்று விஷ்ணு சொன்னார். பிறகு தொடர்ந்தார்.
“நான் ஒரு கேள்வி கேட்பேன்...! உங்கள் பதிலைப் பார்த்து நான் முடிவு எடுப்பேன்…!”
“சரி ஜீ… கேளுங்கள்…!” என்று தன்னம்பிக்கையுடன் பதில் சொன்னார்.
பரமானந்த குரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்து பின்னர் கேள்வி கேட்டார்.
“கடவுள் எங்கு இருக்கிறார்…?” என திடமாகக் கேட்டார்.
விஷ்ணு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. “ஜீ… கடவுள் எங்கு இல்லை? இதற்கு நீங்களே பதில் சொல்லுங்கள்!” என்று விஷ்ணு சொன்னார்.
பரமானந்த குருவுக்கு அதிர்ச்சி. விஷ்ணு, தனக்கே கேள்வி கேட்டுவிட்டார். பரமானந்த குருவுக்கு விஷ்ணுவை ரொம்பப் பிடித்து இருந்தது.
“நல்ல பதில். கடவுள் சர்வ வியாபி. அவர் இல்லாத இடமே இல்லை. உங்கள் பதில் எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது. நாளை முதல் நீங்கள் ஆசிரமத்திலேயே தங்கி கற்கலாம்” என்று சொன்னார்.
விஷ்ணுவிற்கு பேரானந்தம். மகிழ்ச்சி. சந்தோஷம். தான் தேடி வந்த காரியம் இனிதே முடிந்தது. கடவுள் இல்லாத இடமே இல்லை என்று விஷ்ணு சொன்னது பரமானந்த குருவுக்கு திருப்தியைக் கொடுத்தது.
மறுநாள்,
விஷ்ணு தனது பொருட்களுடன் வந்தார். பரமானந்த குரு விஷ்ணு தங்க வேண்டிய அறையைக் காட்டினார். மிகவும் நன்றியுடன் பவ்யமாக நடந்து கொண்டார்.
"இன்று காலை 9 மணிக்கு சிறப்பு வகுப்பு இருக்கிறது. நான் பிற சிஷ்யர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்" என்றார். காலை 7.30 முதல் 8.30க்குள் தங்களது காலை உணவை முடித்துக்கொள்ளுங்கள்."
விஷ்ணு மனம் சந்தோஷத்தில் துள்ளியது. டிபன் சாப்பிட்டார். பொங்கல் மற்றும் சட்னி. மிகவும் சுவையாக இருந்தது.
9 மணி. கூட்டம் நடக்கும் ஹாலிற்கு வந்தார் விஷ்ணு. இந்த கூட்டம் விஷ்ணுவிற்காகவே நடத்தப்பட்டது. குரு அனைவருக்கும் விஷ்ணு பற்றி அறிமுகம் செய்தார்.
"‘கடவுள் சர்வ வியாபி’ என்று சொன்னதால் விஷ்ணுவிற்கு ‘சர்வானாந்தா’ என்ற பெயரை வைக்கிறேன். ஆம். சர்வானந்தா! சர்வானாந்தாவிற்கு வாழ்த்துகள்!"
பெயர்கள் இப்படித்தான் வைக்கப்படுகின்றனவோ!?