

-ஜெயஸ்ரீராஜ்
"ஹும்! அந்தக் காலத்துலல்லாம் 'பெண் பார்க்கும் படலம்னா', பொண்ணு வீட்டுக்காரங்க டென்ஷனா இருப்பாங்க; பொண்ணைப் பையன் 'பாஸ்' பண்ணனுமேன்னு கவலைப்படுவாங்க... இப்பப் பாரு... எல்லாம் தலைகீழாயிருக்கு; உன் பிள்ளையை அந்தப் பொண்ணு ரிஜெக்ட் பண்ணிடப் போகுதேன்னு இவுங்க மண்டையை உடைச்சிக்கிறாங்க..." ரூமுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு, நாகராஜன் விசனப்பட்டார்.
வேதத்துக்கும் வேதனையாகத் தானிருந்தது; பேசாமல் உஜ்வலுடன் நிறுத்திக்கொள்ளாமல், பத்து வருட இடைவெளிக்குப் பின் இந்த இரட்டைவால் இரட்டையர்கள் சுஷ்மா - ரேஷ்மாவை அவனுக்குத் தங்கைகளாகப் பெற்றுத் தந்து பெரிய தப்புப் பண்ணிவிட்டோமோ என உள்மனது வெதும்பியது! மாப்பிள்ளைப் பையனை எப்படி ஆட்டி வைக்கிறதுகள்?
28 வயது உஜ்வல் இத்தனைக்கும் அச்சுப்பிச்சல்ல; கம்ப்யூட்டர் என்ஜினியரிங் முடித்து, எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருந்தபோதே, ஒரு பன்னாட்டு நிறுவனம் அவனை லபக்கியது! கை நிறையச் சம்பளம்; கெட்ட பழக்கம் ஏதுமில்லை; தானுண்டு தன் கம்ப்யூட்டருண்டு என்றிருந்தவனை, பெற்றோர் கல்யாண மார்க்கெட்டில் பேரம் பேச ஆரம்பித்ததும்தான், பிடித்தது தலைவலி! இன்னும் ஒரே மாதத்தில், பிரமோஷனில் மும்பைக்கு மாற்றலாகிப் போக இருந்ததால், வந்திருந்த ஜாதகங்களில், மும்பை பெண்ணான ஊர்மிளாவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.