சிறுகதை; நினைவுகளே சுகமாக..!

Artist: suman
Short Story in Tamil
Published on
Kalki Strip
Kalki Strip

-சி.என்.ராஜராஜன்

மெயின் ரோட்டிலிருந்து விலகி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிற மண் சாலையில் காலடி வைத்தாள் மைதிலி.

அந்த மண் சாலைக்கு இணையாக தெற்கும் வடக்குமாக நீண்டு சென்ற தண்டவாளத்தையும், சற்று தூரத்தில் மரங்களின் மறைவில் தெரிந்த ஸ்டேஷன் கட்டடத்தையும் பார்த்தவுடன் அவள் உடம்பிலும், மனத்திலும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டாற் போலிருந்தது.

இப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவிக்கத்தான் அவசரமாக வந்திருக்கிறாள் அவள்

"இப்ப ஏன் உங்கம்மா வீட்டுக்குப் போகணும்னு துடிக்கிறே? நான் மூணு நாள்ல பெங்களூர்லேருந்து திரும்பிடுவேன். அதுவரை தனியா இருக்க பயமா?" என்று அவள் கணவன் ரவி கேட்டபோது மைதிலி பிடிவாதமாகச் சொன்னாள்.

"சேச்சே... அதெல்லாம் இல்லை. எனக்கு எங்க ஊருக்குப் போனாப் போதும்னு இருக்கு!''

"ஏன் மெட்ராஸ் உனக்குப் பிடிக்கலையா?"

பிடிக்கவில்லை என்று அவனுக்கு எப்படிப் புரியவைப்பது என்று விழித்தாள் அவள்.

அவள் பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாம் கிராமத்தில். அதுவும் தஞ்சாவூர் மாவட்டக் கிராமம். காவிரி பாய்கிற ஊர். அங்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிற மண் சாலையில் ரயில்வே லைனைப் பார்த்தபடி ஒரு தோட்டத்திற்கு மத்தியில் அவள் வீடு இருக்கும்.

மண்சாலைக்கும், வீட்டுக்கும் நடுவே ஒரு வாய்க்கால். அதில் ஒரு மூங்கில் பாலம்.

வீட்டின் முன்பக்கம் கனகாம்பரமும், நந்தியாவட்டையும் பூத்திருக்கும். இன்னொருபுறம் கத்தரியும், வெண்டையும் பூத்தோ, காய்த்தோ கிடக்கும்.

எல்லாம் அவள் கைவண்ணம் அந்தச் செடிகளுக்கு வாய்க்காலிருந்து வாளி வாளியாகத் தண்ணீர் எடுத்து ஊற்றுவாள் மைதிலி. எவ்வளவு தண்ணிர் ஊற்றினாலும் திருப்தியே வராது அவளுக்கு. இன்னும் இன்னும் ஊற்ற வேண்டும் என்றே ஆசைப்படுவாள்.

கொல்லையில் ஒரே மரங்கள்மயம்.

கிணற்றடியில் இரண்டு நெல்லி மரங்கள். சற்றுத் தள்ளி ஒரு முருங்கை. அப்புறம் பூவரசு. ஏழெட்டு வாழைகள். கொல்லைக் கடைசியில் மூங்கில்கள்.

எப்போதும் நிழல். கண்களும், மனமும் நிறைந்து போகிற மாதிரி குளிர்ச்சி.

ஆனால் அவள் திருமணமாகி சென்னையில் குடியேறியிருப்பது அடுக்கு மாடிக் கட்டடத்தின் உச்சியில் ஒரு ஃப்ளாட்டில்

அது ஒரு வீடாகவே தோன்றவில்லை அவளுக்கு. கொல்லையோ, திண்ணையோ இல்லாத கூண்டு ஒன்றில், அந்தரத்தில் மாட்டிக்கொண்டு விட்டது போல இருந்தது.

சென்னைக்குத் தனிக்குடித்தனம் வந்த இந்த நான்கு மாதங்களில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தருணத்தில் அவளுக்குத் தன் பிறந்தகத்து நினைவு வந்துகொண்டே இருந்தது.

செடிகொடிகள் சூழ, நிழல்களால் நிரம்பி. பசுமையும் குளிர்ச்சியும் அரவணைத்திருந்த அந்த ஓட்டு வீட்டையும், அங்கே வாழ்ந்த இருபத்தி நான்கு வருட வாழ்க்கையையும் நினைத்தபோது அவள் மனம் இருப்புக்கொள்ளாமல் தவித்தது.

'எத்தனை இனிமையான வாழ்வுக் காலம் அது!'

அங்கே சாதாரண சப்தங்களும்கூட சங்கீதமாக இருக்கும் அவளுக்கு.

கிணற்று ராட்டின ஓசை, அம்மா துணிகளை 'தொப் தொப்' என்று அடித்துத் துவைக்கிற சப்தம், பலமான காற்றில் மூங்கில்களின் இன்னிசை, அப்புறம் ஸ்டேஷனில் அடிக்கிற மணி ஓசை... எல்லாவற்றிற்கும் மேலாக ரயிலின் பேரோசை...

ரயிலை ரொம்பவும் பிடிக்கும்.

தினம்தோறும் ரயில்கள் அவளது பார்வையில் பட்டபடி இப்படியும், அப்படியுமாகப் போய் வந்துகொண்டிருந்தன.

ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும், ஏதோ முதன்முறையாகப் பார்க்கிற மாதிரியே ரயிலைப் பார்ப்பாள். எந்த ஊருக்குப் போனாலும் ரயிலில் போய் வரவே ஆசைப்படுவாள்.

"என்ன பதிலையே காணோம்? மெட்ராஸ் உனக்குப் பிடிக்கலையா?"

"பிடிக்கலைதான். எனக்கு எங்க ஊர்தான் பிடிச்சிருக்கு.''

''அந்தப் பட்டிக்காட்ல போரடிக்காதா உனக்கு?"

"என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? அங்கே கிடைச்ச சந்தோஷம் இங்கே கிடைக்குமா? அங்கே போய் நான் வளர்த்த தோட்டத்தைச் சுத்திப் பார்ப்பேன். பூச் செடிகளுக்குத் தண்ணி ஊத்துவேன். நெல்லி மரத்திலேருந்து நெல்லிக்காய் பறிப்பேன். எங்க வீட்டுக்கு எதிர்ல ஒரு அரசமரம் இருக்குல்ல... சின்ன வயசில் அந்த மரத்தடியில்தான் தெருப்பிள்ளைகளோடு விளையாடுவேன். அப்ப எனக்கு ரொம்பப் பிடிச்சது ரயில் விளையாட்டுதான்!"

"சரிதான். இப்ப மறுபடி ரயில் விளையாட்டு விளையாட ஆசையா இருக்கா?" என்று ரவி சிரித்தான்.

அதைக் கேட்டு அவளுக்கும் சிரிப்பு வந்தது.

"இனிமே அந்த மாதிரியெல்லாம் விளையாட முடியுமா? அந்தக் காலமெல்லாம் போயிடுச்சு. ஆனா அந்த ஞாபகங்கள் மட்டும் மனசில் அப்படியே இருக்கு. அதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு. மறுபடியும் அந்த வாழ்க்கை கிடைக்காதான்னு ஏக்கமா இருக்கு. அந்த மரத்தடியில் போய் நின்னுட்டா அந்தக் காலத்துக்கே நான் திரும்பிப் போய்ட்ட மாதிரி இருக்கும்!" என்றாள் மைதிலி.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: "நாங்க வேறெ மாதிரி...!"
Artist: suman

அப்போது ரவி சப்தமாகச் சிரித்தான்.

"மெட்ராஸ் வெயில் உனக்கு ஒத்துக்கலை. அதான் இப்படிப் பேசறே?''

அவள் அவனது கிண்டலை லட்சியம் செய்யாமல், தன் லயிப்பிலிருந்து விடுபடாமலேயே தொடர்ந்தாள்.

"பழசை, பால்ய காலத்தை நினைச்சுப் பார்க்கிறது எவ்வளவு இனிமையான விஷயம் தெரியுமா!"

யோசித்தபடியே நடந்து கொண்டிருந்த மைதிலி தன் வீடு வந்ததும் சுயஉணர்வு பெற்றாள்.

வாசலிலேயே அம்மாவும், அப்பாவும் அவளைப் பார்த்துவிட்டார்கள்.

அம்மா வேகமாக அவளை நெருங்கி சூட்கேஸை வாங்கிக்கொண்டாள்.

"வா மைதிலி, மாப்பிள்ளை வரலியா?"

''ஆமாம்மா" என்றவள் அப்பாவிடம் வந்தாள்.

"சௌக்கியமா இருக்கீங்களாப்பா?"

''ம்... ம்... நீ எப்படிம்மா இருக்கே? மாப்பிள்ளை வரலியா?"

"அவர் ஆபீஸ் வேலையா பெங்களூர் போயிருக்கார். வர மூணு நாளாகும். எனக்குத் தனியா இருக்கப் போரடிச்சுது. அதான் வந்தேன்" என்றவள் திரும்பி கனகாம்பரச் செடிகளைப் பார்த்தாள்.

"அம்மா.. இதுக்கெல்லாம் தினமும் தண்ணி ஊத்தறியா?"

அம்மா புன்சிரிப்புடன், "ம்ம்.. ஊத்திக்கிட்டுத்தான் இருக்கேன். சரி வா" என்று வீட்டுக்குள் போக, மைதிலி தொடர்ந்தாள்.

"மைதிலியா? வா வா.." என்ற அண்ணி அவளை நெருங்கி அன்போடு கைகளைப் பற்றிக்கொண்டு அவளை ஏற இறங்கப் பார்த்தாள்.

''ஏதும் விசேஷம் உண்டா?" என்று கேட்டாள் குரலைத் தணித்து.

மைதிலி வெட்கத்துடன் புன்னகைத்தாள்.

"நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்லை.'"

"மாப்பிள்ளை எங்கே?" என்றபடி அண்ணி வாசலை எட்டிப் பார்த்தாள்.

"அவர் ஆபீஸ் வேலையா பெங்களூர் போயிருக்கார். வர மூணு நாளாகும். அதான் நான் கிளம்பி வந்தேன்."

"ஒரு லெட்டர் கூட போடாம திடீர்னு வந்திருக்கியே... இரு மைதிலி காப்பி கொண்டு வரேன்" என்று உள்ளே போனாள்.

மைதிலி அவசரமாக புழக்கடை கதவைத் திறந்து கொல்லைக்குப் போனாள்

அந்தியின் பரிபூரணமான அமைதியில் ஆழ்ந்து சலனமற்றிருந்தது கொல்லை.

கிணற்றடிக்கு வந்தாள் மைதிலி.

தரையின் ஈரம் பட்டு உள்ளங்கால் சில்லென்றது.

துணி துவைக்கும் கல் அவள் பார்வையில் பட்டது.

பள்ளி நாட்களில் அந்தக் கல்லின் மேல் அமர்ந்து தமிழ்ச் செய்யுட்களை வாய் விட்டுப் படித்து மனப்பாடம் செய்வாள் அவள்.

இதையும் படியுங்கள்:
ராஜாவின் விருப்பமும் நாராயணனின் வரமும்! - ஶ்ரீ சத்ய சாயிபாபா கூறிய சிறிய கதை...
Artist: suman

நிமிர்ந்து நெல்லி மரங்களைப் பார்த்தாள் .

"என்ன மைதிலி, இருட்டுற நேரத்துல கொல்லைல வந்து நின்னுக்கிட்டு" என்ற அம்மாவின் குரல் கேட்டுத் திரும்பினாள்.

"அம்மா... நெல்லி மரத்துல காய் இருக்கா?''

"இருக்கு இருக்கு. அதைக் காலைல பார்த்துக்கலாம் வா."

அண்ணி தந்த காப்பியைக் குடித்துக்கொண்டிருந்தபோது ரயில் சப்தம் கேட்டது.

அந்தச் சப்தத்தால் இழுக்கப்பட்டவள் மாதிரி மைதிலி விரைந்து வாசலுக்குப் போய் நின்றுகொண்டாள்.

திருப்பதி எக்ஸ்பிரஸ் பெரிய இரைச்சலோடு அவள் கண்களுக்குப் பிடிபடாமல், அந்த ஸ்டேஷனைக் கடந்து போயிற்று.

அந்த ரயில் சப்தத்தையே சுவாசித்து வாழ்பவள் மாதிரி மைதிலி அப்படியே பிரமையுடன் நின்றிருந்தாள்.

பிறகு வீட்டின் எதிரிலிருந்த அரச மரத்தடியில் வந்து நின்றாள்.

தெரு விளக்கின் வெளிச்சத்தில், அந்த மரத்தடி அவள் மனத்தில் எத்தனை எத்தனையோ ஞாபகங்களைத் தட்டி எழுப்பியது.

அவள் மனம் ஒருகணம் விம்மியது.

மறுகணம் கொஞ்சம் கொஞ்சமாக சந்தோஷம் அதிகமாகி மனம் முழுவதிலும் நிரம்பி, அப்படியே அது கண்ணீராக வழியப் பார்த்தது.

இரவு எட்டு மணிக்கே சாப்பாடு முடிந்து தாழ்வாரத்திலேயே படுத்துக்கொண்டாள் மைதிலி.

நெடு நேரமாகியும் தூக்கம் வரவில்லை அவளுக்கு.

பழைய நினைவுகள் பலவும் அவளுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தன.

சுவர்க் கடிகாரம் பதினோரு மணி அடித்ததும் எழுந்து உட்கார்ந்தாள் அவள்.

வாசல் கதவு திறந்திருந்ததைப் பார்த்தாள். பேச்சு சப்தம் மெல்லக் கேட்டது.

'இன்னுமா தூங்காமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!' என்று நினைத்து எழுந்து போனாள்.

வாசலை நெருங்கியவள் அப்படியே நின்றுவிட்டாள்.

அங்கே அவளைப் பற்றித்தான் பேச்சு நடந்து கொண்டிருந்தது.

மைதிலி அவர்கள் பார்வையில் படாமல் அனிச்சைச் செயலாக நின்றுவிட, அவர்கள் பேசுவது அவளுக்குத் தெளிவாகக் கேட்டது.

இதையும் படியுங்கள்:
கின்னஸ் சாதனை படைத்த மலைப்பாம்பு: அதன் பின்னணியில் இருக்கும் மர்மம்!
Artist: suman

"ஒரு லெட்டர் கூடப் போடாம, மாப்பிள்ளையும் கூடவராம தன்னந்தனியா, கையில் ஒரு சூட்கேஸோட திடீர்னு வந்து மைதிலி நின்னதைப் பார்த்ததுமே எனக்கு 'திக்'குன்னு ஆயிடுச்சு. அவ முகத்தைப் பார்த்தா பேயடிச்ச மாதிரி இருக்கு. மலங்க மலங்க முழிக்கிறா. வந்ததும் வாசல்லயே நின்னுக்கிட்டு 'கனகாம்பரச் செடிக்கு தண்ணி ஊத்தறியா'ன்னு எங்கிட்ட கேக்கறா. எது கேட்டாலும் மழுப்பலா பதில் சொல்றா. வீட்டுக்குள்ள போனதும் என்ன பண்ணினா தெரியுமா? நேரா கொல்லைக்குப்போய் நின்னு கிணத்தையே வெறிச்சுப் பார்க்கறா!" என்று அம்மாவின் குரல் கவலையுடன் வெளிப்பட்டது.

அப்போது அண்ணன் குறுக்கிட்டான். 'கல்யாணத்துக்குப் போடறதாகச் சொன்ன நகையிலே இரட்டை வடம் சங்கிலி பாக்கி இருக்கு... அதை ஞாபகப்படுத்தத்தான் மாப்பிள்ளை அவளை அனுப்பி வச்சிருக்காரோன்னு நினைக்கறேன்."

"இப்ப என்ன பண்றது? ஆயிரம் ரெண்டாயிரத்துக்குக்கூட இப்ப வழியில்லையே" என்றார் அபபா கவலையாக.

"அவ திரும்பிப் போறதுக்காக வந்திருக்காளா? அல்லது..."

மைதிலிக்கு அந்தக் கணத்தில்தான் நிகழ்காலம் என்பதே நினைவுக்கு வந்தது. தன் வருகை அவர்களை எப்படிக் கலவரப்படுத்திவிட்டது என்பதை எண்ணி திகைத்துப்போனாள் அவள்.

அவர்களது லௌகீகக் கவலைக்கு முன் தனது எல்லாச் சந்தோஷங்களும் அர்த்தமற்றுப் போய்விட்ட மாதிரி இருந்தது அவளுக்கு.

என்ன சொல்லி அவர்களுக்கு விளக்குவது என்று அவளுக்குள் ஒரு கவலை ஏற்பட்டது.

இப்படி ஓர் சூழலில், தான் இங்கே வராமலேயே இருந்திருக்கலாம் என்று அப்போதுதான் அவளுக்குள் ஒரு குற்ற உணர்வு தோன்றியது.

அவர்கள் பார்வையில் படாமல் ஓசையின்றி மெல்லத் திரும்பி நடந்தாள் மைதிலி.

அப்போது அவளுக்குப் பிடித்தமான ரயிலோசை - எங்கோ போகிற ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் தூரத்தில் வருகிற சப்தம் - அந்த இரவைத் துளைத்து ஊடுருவிக்கொண்டு வந்து அவளுக்குக் கேட்டது.

-கல்கி 01.03.1998

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com