சிறுகதை; நன்னயம்...

Short Story in Tamil:  Nannayan...
kalki short story
Published on

-கிருஷ்ணா

பையனுக்கு பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்சில் இடம்கிடைக்க வேண்டும்.

தம் மகன் மோகனுடன், அந்தக் கல்லூரி வளாகத்தினுள் நுழைந்தார் சீதாராமன்.

மனத்திற்குள், இஷ்டதெய்வமான விநாயகர் தோன்றினார். சிதர்தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டார்..

வெள்ளை மாளிகையின் முகப்பு போல, பெரிய, பெரிய தூண்களுடன் காட்சியளித்தது கல்லூரியின் முன்புறத் தோற்றம்.

காரைக்குடி செட்டியார்களின் அறக்கொடையால் உருவான பெருமைமிகு கல்லூரி இது.

''மாடியிலே முதல் ஹால்."

சீதாராமன் வழிமறித்துக் கேட்டதற்கு வந்த பதில் இது.

'எங்க வீட்டுப் பிள்ளை' செட்டிங்போல மாடிப்படி, நடுவில் பிரிந்து இடதும், வலதுமாய்ச் சென்றது.

வலதுபுறம் திரும்பி, மாடி வெராந்தாவில் நடக்கும்போது காற்று பிய்த்துக்கொண்டு போனது.

தங்களுக்கு முன்பே வந்து காத்திருந்த கூட்டத்தில் ஐக்கியமானார்கள் இருவரும். ஒருகாலத்தில் பி.காம். சீட்டுக்கு இருந்த கவர்ச்சி, இப்போது கம்ப்யூட்டருக்கு.

''டி-பேஸ், யூனிக்ஸ்...."

தமக்குப் புரியாத பாஷையில் பேசிக் கொண்டிருக்கும் இளைஞர்களை நோக்கினார் சீதாராமன்.

"எத்தனை சீட் சார் மொத்தம்?"

அருகில் அமர்ந்திருந்தவரை விசாரித்தார்.

பட்டையாய் விபூதி இட்டு, ஏதோ முணு முணுத்துக்கொண்டிருந்தவர் (ஸ்லோகம்?), 'கொஞ்சம் பொறும் ஓய்' என்றார் சைகையில்.

"அறுபது சீட்" என்றார் மற்றொருவர், நடுவில் புகுந்து.

அறுபது சீட்டுக்கு, முந்நூறு பேர் போட்டியிடுகிறார்கள்!

திடீரென சலசலப்பு. சட்டென அமைதி.

''ஹெட் ஆஃப் தி டிபார்ட்மெண்ட் போறாரு.''

வளைந்த மூங்கில் கம்பு போல, லேசான கூன்முதுகுடன், நெடு நெடு உயரத்துடன் சிவப்பாய்...

'ஹெச் ஓ டி'யைக் கண்டதும் உச்சி முதல் பாதம் வரை வேர்த்துப் போனார் சீதாராமன்.

இவரா இந்தத் துறையின் தலைவர் கடவுளே!

நிச்சயமாய் சீட் கிடைக்கப் போவதில்லை.

மோகனை பரிதாபமாய்ப் பார்த்தார்.

இங்கு, நேர்முகத் தேர்வுக்கு, விநோதமாய் மாணவனையும், கூடவே பெற்றோரையும் அழைக்கிறார்கள்.

மாணவனின் நேர்முகத் தேர்வு முடிந்ததும் பெற்றவர்களை அழைத்துப் பேசுவார்கள்.

கல்லூரியின் விதிமுறைகள், மாணவா்களின் ஒழுக்கக்கேடான நடத்தைக்குக் கிடைக்கும் தண்டனைகள் பற்றி விளக்கிச் சொல்வார்கள்.

மிலிட்டரி ஸ்டைலில் கட்டுப்பாடுகள் எல்லாம் மாணவனின் மனத்தை ஒருமுகப்படுத்தவே என்பதால் எந்த எதிர்ப்புமில்லை இதுவரை கல்லூரி வளாகத்தினுள் சிகரெட் பிடித்தால் ஐம்பது ரூபாய் தண்டனை.

போன வருடம்,  ஹாஸ்டல் அறையில் குடித்துக்கொண்டிருந்த மாணவனை கல்லூரியை விட்டே சஸ்பெண்ட் செய்து விட்டார்களாம்.

இந்தக் கல்லூரியில் படித்து முடித்ததும் வேலைக்கு அள்ளிக் கொண்டு போகிறார்களாம், இதனாலேயே.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; ரெய்ட்!
Short Story in Tamil:  Nannayan...

ரிசையாய் கூப்பிட ஆரம்பித்தார்கள்.

'ஹெச் ஓ டி'யை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று பயந்து போய்க்கிடந்தார் சீதாராமன்.

போன மாதம் இவர், தமது அலுவலகத்துக்கு வந்த சம்பவம் நினைவில் ஆடியது.

வீட்டு வரைபடத்தின் அப்ரூவலுக்காக வந்திருந்தார்.

'ஸ்டேட் கவர்ன்மெண்ட்' திமிருடன் பேசினார் சீதாராமன். இரண்டாயிரம் ரூபாய் வெட்டினால் பழம் பழுக்கும் என்றார்.

வாக்குவாதம் முற்றிப்போனது.

"உன் வேலை நடந்துடுமா? நீ இந்த ஜன்மத்தில் வீடு கட்டிடுவியான்னு பாக்கறேன். என் மேலே புகாரா எழுதறே?"

இந்த ரேஞ்சில் சீதாராமன் எகிறி விட்டார். அப்போது யாருக்குத் தெரியும் இவர் இன்னாரென்று?

"அப்பா எனக்கு சீட் கிடைச்சிடும்தானே?"

டென்ஷனாய் கேட்ட மோகனைப் பார்த்து சோகையாய்ச் சிரித்தார்.

"ஹெச்.ஓ.டி. முகத்துல என்ன ஒரு அறிவுக்களை?”

ஸ்லோகம் முடிந்த வாயோடு பக்கத்து சீட் ஆள் திருவாய் மலர்ந்தார்.

உண்மைதான்!

தங்கம் தரையில் கிடந்தால் கவரிங்கோ என்று சந்தேகம் வரும். அதே, கழுத்தில் கிடந்தால் தகதகப்பாய்த் தோன்றும்.

அந்தந்த இடத்தில் அவரவரைப் பார்க்கும்போதுதான் மனிதர்களின் உண்மையான மதிப்பு தெரியவரும்.

ள்ளே போன மோகன் பத்து நிமிடத்தில் திரும்பி வந்தான்.

"பத்து கேள்விக்கும் சரியாய் பதில் சொல்லிட்டேன். சீஃப் கூட 'குட்' அப்படீன்னாரு.''

சந்தோஷத்தில் அவன் குதிக்கும்போதே சீதாராமனை அழைத்தார்கள். உள்ளே போனார்.

மொத்தம் மூன்று பேர் சேரில் அமர்ந்திருந்தனர். நடுநாயகமாய் அவர்.

கல்லூரி சட்டதிட்டங்கள், மாணவனின் ஒழுக்கம் இன்னபிற சமாசாரங்களை மற்ற இருவரும் பேச, கடைசி வரை அவர் வாயையே திறக்கவில்லை.

தம்மையே ஊடுருவிப் பார்த்த அவர் கண்களில், கோபம் பளிச்சிடுவதாய்ப் பட்டது சீதாராமனுக்கு கோபம் வரத்தானே செய்யும்?

இதையும் படியுங்கள்:
கண்ணதாசனும் 'கல்கி' வார இதழின் கடைசிப் பக்கமும்!
Short Story in Tamil:  Nannayan...

டுத்த ஒரு மணி நேரத்தில் 'செலக்ஷன் லிஸ்ட்' நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது.

நம்பிக்கையில்லாமல் பெயரைத் தேடினார்.

ஆச்சர்யம்! மோகன் தேர்வாகி விட்டான்.

முகமெல்லாம் பூரிப்பாய் நின்ற மகனை நோக்கியவர் மனத்தில் நெருடல்.

"மோகன் இங்கேயே இரு வந்துடறேன்.''

அவரைத் தேடிச் சென்றார் சீதாராமன். மாடியில் வலது கோடியில் அவர் அறை.

“என்ன?” என்றார் ஹெச்.ஓ.டி. முகத்தில் சுரத்தில்லாமல்.

சீதாராமனுக்கு எப்படி தமது நன்றியைச் சொல்வதென்று புரியவில்லை.

"நான்... எனக்கு... ரியலி யு ஆர் கிரேட் சார்..."

குரல் தழுதழுக்கச் சொன்னார்.

அவர் எதுவும் பேசாமல் தலையைத் திருப்பிக்கொண்டார்.

"என் மகன் தேர்வானதை என்னாலே நம்ப முடியலே. உங்க முன்னாடி நிற்கவே எனக்கு அருகதையில்லை."

 "இங்கே 'மெரிட்' மட்டும்தான் பேசும். வேற எதையும் நான் பார்க்க மாட்டேன். ஏன்னா, இது மாணவர்களோட வாழ்க்கைப் பிரச்னை."

கம்பீரமாய்க் கூறியவரைப் பார்க்கக் கண் கூசியது சீதாராமனுக்கு, அவரின் பார்வை பட்டு, தம் மனசுக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார்.

"வரேன் சார். இப்போது முதல் நான் புது மனுஷனாயிட்டேன்."

கைகூப்பி வணங்கிவிட்டு வெளியே வந்தார்.

"யார் சார் இது?''

ஹெச்.ஓ.டி.யின் உதவியாளர் கேட்டார், சீதாராமன் நகர்ந்ததும்.

''தெரியலே. வயசாயிட்டதுனாலே ஞாபக மறதி அதிகமாயிடுச்சு" என்றார் அவர் புன்சிரிப்புடன்.

பின்குறிப்பு:-

கல்கி 17  நவம்பர்  1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com