சிறுகதை; ரெய்ட்!

Tamil short story
ஓவியம்; மகேஸ்
Published on

-என்.சி. மோகன்தாஸ்

"முன்னாள் அமைச்சர் வேலப்பனை எப்போ கைது பண்ணப் போறீங்க?"

பத்திரிகை நிருபர்கள் துளைத்தெடுக்க, கணேசமூர்த்திக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவர் சிறப்புப் புலனாய்வுத்துறை அதிகாரி. சங்கடமான கேள்வி.

இதே கேள்வியை கடந்த மூன்று மாதங்களாக எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓர் அரசியல் தலைவரைக் கைது என்னும்போது எதிர்ப்புக் கிளம்புவதற்குப் பதில்... 'எப்போ... எப்போ' என்று கேட்குமளவிற்கு ஜனங்களிடம் ஒரு விழிப்புணர்வு எழுந்திருக்கிறது.

அது குறித்து அவருக்கு சந்தோஷம்தான். ஆனால் மாஜியை கைது பண்ண ஆதாரம் வேண்டாமா?

வேலப்பன் ஊழல் பேர்வழி என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமுமில்லை. சரித்திரம் காணாத அளவில் பணம் சேர்த்திருக்கிறார். தமிழ்நாடு முழுக்க அவருக்கு சொத்துக்கள்!

ஆனால் எல்லாமே பினாமி பெயர்களில்.

வேலப்பனின் கடந்த காலத்தைப் பார்க்கும்போது, அதிகாரிகளுக்கு வியப்பு. ஏதோ ஒரு கிராமத்தில் வெறும் கூலித் தொழிலாளியாகவும், பனை மரங்களில் பதநீர் கட்டுபவராகவும் இருந்திருக்கிறார். ஏதோ ஒரு திருட்டு கேஸில் ஊரை விட்டு விரட்டப்பட்டு, டவுனுக்கு ஓடி, அங்கே கட்சியில் சேர்ந்து வளர்ந்து, தேர்தலில் நின்று, ஜெயித்து, யம்மாடி! இன்று பல கோடிகளுக்கு அதிபதி!

எல்லாம் ஊரை அடித்த காசு. அதுவும் பச்சையாக – வெளிப்படையாக - உன்னால் முடிந்ததைப்பார் என்கிற திமிரில் சேர்த்தது.

ஆட்சி போயும் கூட இன்னும் எதுவும் செய்ய முடியவில்லை. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஆதாரத்திற்கு வேண்டி ஆளாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

கணேசமூர்த்தியைப் பத்திரிகையாளர்கள் தாளித்துக்கொண்டிருக்கும்போது போன்!"

எடுத்துப் பேசினவரின் முகத்தில் பிரகாசம்! “அப்படியா... சந்தோஷம். இன்னும் நான்கு மணி நேரத்தில் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வருகிறேன்!"

"என்ன சார் விஷயம்."

அவர் போனை வைத்துவிட்டு, "மாஜியின் பினாமி வீடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது... அங்கே உடனே ரெய்டு நடத்தப் போகிறோம்!''

"நாங்களும் வரலாமா...?" நிருபர்களுக்கும் குஷி பிறந்தது. தினசரி அவர்களுக்கும் ஏதாவது பரபரப்புச் செய்திகள் வேண்டுமே!"

''ஓ...தாராளமாய் வாருங்கள்!"

இதையும் படியுங்கள்:
சிறுகதை; அழியத்தொடங்கும் அழுத்தமான தடங்கள்!
Tamil short story

ரெய்டு என்கிற விஷயம் மாஜிக்கு எப்படி தெரிந்ததோ தெரியவில்லை. அந்த பங்களாவில் அப்போது அவர் ஆஜர்!

வீடு இன்னமும் சிமெண்ட் வாசம் மாறாமல் பொலிவுடன் இருந்தது. புது வர்ணம். புதுகேட். பின் பக்கம் தோட்டம். அதில் பழ மரங்களும் தென்னையும் ஓங்கி உயர்ந்திருந்தன .

சுற்றிலும் கம்பிவேலி. எங்கு பார்த்தாலும் பசுமை. நிழல். ஜில் காற்று. யாருடைய வயிற்றில் அடித்து அந்த இடத்தை வாங்கினாரோ தெரியவில்லை. காவிரியின் செழுமை அங்கே பளிச்சிட்டது.

வேலப்பனின் முகத்தில் அதிர்ச்சி இல்லை. மாறாக புன்னகை! அவர் கொஞ்சங்கூட கலங்கினதாய்த் தெரியவில்லை.

“உங்கள் வீட்டைச் சோதனையிடணும்!" என்றதும், "ஓ... பேஷா!" என்று ஒதுங்கி வழிவிட்டார். எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக, "காப்பி பலகாரம் சாப்பிடுங்க!" என்று வரவழைத்துக் கொடுத்தார்

அதிகாரிகள் மறுக்க, "பயப்படாமல் .சாப்பிடுங்க. உடுப்பி ஹோட்டல் டிபன்தான்!"

நான்கு மணி நேரம் வீடு, பரண், டாய்லட், தோட்டம், படுக்கை என்று ஒரு இஞ்ச் விடாமல் அலசியும் கூட எதுவும் சிக்கவில்லை. கணேசமூர்த்திக்கு ஏமாற்றம்.

ரெய்ட் விவரமறிந்து மாஜி முன்பே எச்சரிக்கையாய் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். தோல்வியை மறைத்துக்கொண்டு, “உங்களுக்கு இது மட்டுந்தானா இல்லை... வேறு...."

"இன்னும் இரண்டு சின்ன வீடுகள் உண்டு!"

"என்ன?"

''நிஜமாத்தான் சொல்கிறேன். எனது இளம் வயதில் இரண்டு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். இப்போதும் அவர்கள் என்னை நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கும் தனித் தனியாய் வீடு!'' என்று அட்ரஸ்கள் கொடுத்தார்.

கணேசமூர்த்திக்கு அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

"மாஜியின் சின்ன வீடுகள், பஸ் ஆபீஸ், தொழிற்சாலை, ரைஸ்மில், வைக்கோல் போர் என்று அலசாத இடமே பாக்கியில்லை. மாஜியின் ஒத்துழைப்பு அதிகாரிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

றுவாரத்தில் அவருக்கு ஊர் எல்லையில் மாந்தோப்பு உள்ள தகவல் கிடைத்தது. உடன் ரெய்டு. ம்ஹும். பலனில்லை. அப்புறம் தென்னந்தோப்பு; கேரளத்தில் ரப்பர் தோட்டம்!

எல்லா இடங்களிலும் தோல்வி!

கணேசமூர்த்தி தலையை பிய்த்துக் கொண்டிருந்தபோது, டெல்லியிலிருந்து ஏதோ ஒரு வெளிநாட்டுத் தொழிலதிபரின் மோசடி வழக்கில் வேலப்பனுக்கும் பங்கு இருப்பதாகச் சொல்லி கைது பண்ண உத்தரவு பறந்து வந்தது.

இதையும் படியுங்கள்:
கவிதை: போற்றப்படும் வாழ்வுக்கு போட்டிகள்தானே புகலிடம்!
Tamil short story

எந்த வழக்கென்றால் என்ன, கைதுதான் இப்போது முக்கியம். ஜனங்களின் வாயை எப்படியாவது அடைத்தாக வேண்டும்.

ராத்திரியோடு ராத்திரியாக ஏற்பாடுகளைச் செய்து, விடியற்காலையில் மாஜியின் வீட்டிற்கு பயணப்படும்போது தனியார் மருத்துவ மனையிலிருந்து அவருக்கு போன்.

“சார்! மாஜி மாடியிலிருந்து விழுந்து கால் உடைஞ்சு படுக்கையில் கிடக்கார்!"

அவரால் அதை நம்ப முடியவில்லை. கைது என்றவுடன் நெஞ்சுவலி வருவது அரசியலில் வாடிக்கையாகி விட்டது. எல்லாம் ஒரு நாடகம். தற்காப்பு!

இதுவும் அப்படித்தான் இருக்கும் என்று ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரித்தபோது, அதிர்ச்சி. நிஜமாலுமே மாஜியின் கால் உடைந்திருந்தது. எதற்கும் இருக்கட்டுமே என்று நம்பிக்கையான டாக்டர்களை வைத்தும் பரிசோதித்தாயிற்று.

எக்ஸ்ரேயும் அதை உறுதிப்படுத்தியது. மாஜி வலி தாங்காமல் முனகிக்கொண்டிருந்தார். "கால் உடைந்தால் என்ன, கைது பண்ணி சிகிச்சை தரலாமே!" என்று பத்திரிகைகள் விமர்சித்தன.

என்ன செய்வது என்று கணேசமூர்த்தி யோசித்துக்கொண்டிருந்தபோது, மாஜியை பரிசோதித்த டாக்டர் அவசரமாய் அவரைப் பார்க்க வந்தார்.

"சார்! மாஜி விழுந்ததும், அடிபட்டதும் உண்மை. ஆனால் மாடியிலிருந்துதான் விழுந்தாரா... என்பதில்தான் சந்தேகம்."

"சந்தேகிக்கக் காரணம்?"

"மாஜியின் நெஞ்சு, வயிறு பகுதிகளில் சிராய்ப்புக்கள் உள்ளன. அவர் விழுந்ததோ வீட்டில். அங்கே வீடு முழுக்க பளிங்குத்தரை! பளிங்கில் விழுந்திருந்தால் சிராய்ப்பு எப்படி…?"

டாக்டர் கேட்க, கணேசமூர்த்தியின் மூளையில் உடன் ஒரு மின்னல்! "டாக்டர்! யு ஆர் கரெக்ட்! ஐ காட் த பாயிண்ட்!”

அவர் சற்றும் தாமதிக்கவில்லை.

கடைவீதிக்குப் போய் அங்கே இளநீர் வெட்டிக் கொண்டிருந்தவனை அள்ளி ஜீப்பில் போட்டுக்கொண்டார். அவன் மிரண்டு போனான். "சார்! நான் எந்தத் தப்பும் பண்ணலே!"

அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நேராய் மாஜியின் பனந்தோப்பிற்கு வண்டியை விட்டு, "உனக்கு மரம் ஏறத் தெரியுமில்லே?”

"தெரியும் சாமி!"

"அப்போ ஏறு!"

அவரது யூகம் பொய்க்கவில்லை. நான்காவது மரத்தில் கட்டப்பட்டிருந்த 'பதநீர்' பானையில் தங்க பிஸ்கட்கள்! பண நோட்டுக்கள், அதன் பின் மரத்தில் தங்கப் புதையல்! வீடியோ காமிரா அவற்றையெல்லாம் படம் பிடித்து கோர்ட்டில் சமர்பிக்க, இம்முறை மாஜி தப்பிக்க முடியவில்லை. அவருக்கு ஜெயில்!

இதையும் படியுங்கள்:
சிறுகதை; காதல் நெகடிவ்!
Tamil short story

"பனை உச்சியில் மாஜி தங்கத்தைப் பதுக்கி வைத்திருப்பதை எப்படி ஊகித்தீர்கள்?"

நிருபர்கள் கேட்க, கணேசமூர்த்தி பெருமிதத்துடன் -

"ஆஸ்பத்திரியில் அடிபட்டுக் கிடந்த மாஜியின் மார்பில் சிராய்ப்பு என்றதும் உடன் அவரது கடந்த காலம் என் மனதில் ஓட ஆரம்பித்தது. இயல்பில் அவர் மரமேறிப் பதநீர் கட்டும் ஒரு தொழிலாளி!

ரெய்டு என்றதும் தமது சம்பாத்யத்தையெல்லாம் யார் கண்ணிலும் படாமல் மர உச்சியில் ஒளித்து வைக்க ஆரம்பித்திருக்கிறார். அன்றும் அப்படி பனை மரம் ஏறி இறங்கும்போது கால் தவறி விழுந்திருக்கிறார். அதனால்தான் கால் உடைந்திருக்கிறது. அதை மறைக்க வேண்டி மாடியிலிருந்து விழுந்து விட்டதாய் அவர் நாடகம்! ஆனாலும் கூட அந்த சிராய்ப்பு காட்டிக் கொடுத்துவிட்டது!''

 பின்குறிப்பு:-

கல்கி 01 டிசம்பர் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com