
ஓங்கி உயர்ந்து கம்பீரமாய் நின்றுகொண்டிருந்த அந்த ஐந்து மாடிக் கட்டடத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்வேல். 'கதிர் எக்ஸ்போர்ட்ஸ்' என்று தங்கக் கலரில் மின்னிக்கொண்டிருந்த அந்தப் பலகை, அவனின் கடந்த கால உழைப்புக்குக் கிடைத்த பெருமையைப் பறை சாற்றிக்கொண்டிருந்தது. அவனின் பள்ளிக் காலத்திலும், கல்லூரிக் காலத்திலும், ஒரே ஒரு படுக்கை அறைகொண்ட வீட்டில் அவனின் ஆறு குடும்ப உறுப்பினர்களும் முடங்கிக் கிடந்தது ஞாபகம் வந்தது. ஏழ்மையும், வசதிக் குறைவும் எவ்வளவு கொடுமையானவை என்பதை, வசதி வந்த பிறகுதான் அவனால் முழுமையாக உணர முடிந்தது. கழுத்தைத் திருப்பி, சற்றுத் தள்ளிப் பணிவாக, சீருடையில் நின்றுகொண்டிருந்த டிரைவரை நோக்கியவுடன், அவர் அவனின் குறிப்பறிந்து ரேஞ்ச் ரோவரை கதிர்வேலை நோக்கி ஓட்டி வந்தார். கல்லூரிக் காலங்களில், உட்கார இடம் பிடிக்க பேருந்தின் பின்னால் ஓடியவனுக்கு, ஒரு கோடிமதிப்புள்ள காரா? என்று நினைத்து புன்முறுவலுடன் தன்னைத்தானே கிண்டல் செய்துகொண்டான் கதிர்வேல்.
அன்று காலையில் ஷேவ் செய்து கொண்டிருந்தபோது, அவனின் கைபேசி செல்லமாக அழைத்தது. ட்ரூ காலரில் 'சுப்ரமணியம்' என்ற பெயரும் அந்த அழைப்புடன் வந்திருந்தது.
'ஹலோ... கதிர்வேல் எப்படி இருக்கே? காலைல ரெண்டு தடவை கூப்பிட்டேன். நீ போனை எடுக்கவே இல்லை. ரொம்ப பிஸியோ?' அவனைப் பேச விடாமல் முந்திக்கொண்டது எதிர்முனைக்குரல். குரலில் இருந்த உரிமை, கதிர்வேலுவுக்குக் குழப்பத்தைக் கொடுத்தது.
'நீங்க…?' என்ற கதிர்வேலின் குரலில் தயக்கம் இருந்தது. இவ்வளவு உரிமையுடன் பேசும் அந்த 'சுப்ரமணியம்' யாராக இருக்கும்? 'என்னப்பா... என்னைத் தெரியலையா? குரலை வைத்துக்கூட கண்டுபிடிக்க முடியலையா? ட்ரை பண்ணி பாரேன்..' என்ற குரலில் சிறுபிள்ளைத் தனம் இருந்தது.
'தெரியலைங்க... சாரி…'
'சரி...சரி...நானே சொல்லிடறேன். ஒரு நாப்பது வருசத்துக்கு முன்னால, நீ பி.யு.சி. மேத்ஸ் படிக்குப்போது உன்னோட வகுப்பில படிச்ச இருபது பேரில் நானும் ஒருத்தன். என் பெயர் சுப்ரமணியம். நீங்க எல்லாம் என்னை முக்கா பேண்ட் சுப்ரமணியம்னுதான் கூப்பிடுவீங்க... இப்பவாவது ஞாபகம் வருதா?'.
கதிர்வேலுவுக்கு இப்போது சுப்ரமணியத்தை நன்றாக ஞாபகம் வந்துவிட்டது. எப்போதும் சுப்ரமணியம் அணிந்து வரும் பேண்ட், முழுக்காலையும் மறைக்காமல், கணுக்காலுக்கு மேலேயே இருக்கும். அதனால்தான் அவனுக்கு அந்த செல்லப் பெயர். முதல் பெஞ்சில் உட்கார்ந்து, நன்கு படித்து, எப்போதும் முதல் மார்க் வாங்குபவன்தான் இந்த சுப்ரமணியம்.
'அடடே… மாவுருட்டி(ஊரின் பெயர்) சுப்ரமணியம்தானே நீ? உன்னை மாத்திரமல்ல, நம்மோட படித்த அந்த இருபது பேரின் முகமும் இன்று வரை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால், அந்த இருபது பேரில் ஒருவரைக்கூட இந்த நாப்பது வருடத்தில் நான் சந்திக்கவில்லை என்பதுதான் விசித்திரம்...'.
'சுப்ரமணியம்... நான் ராத்திரிக்குக் கூப்பிடுகிறேன்… நாம நிறையப் பேசலாம்' என்று கூறி, இணைப்பைத் துண்டித்தான் கதிர்வேல்.
இரவில் கதிர்வேல் காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது, அவனின் பி.யூ.சி.கல்லூரி வாழ்க்கை ஞாபகத்தில் வந்து முட்டியது. பி.யு.சி.யில் இருபது பேர் ஒரே வகுப்பில் படித்திருந்தாலும், கதிர்வேலு அதிகம் நெருக்கம்கொண்டிருந்தது சுப்பிரமணியம், பழனி மற்றும் இளங்கோவிடம் மாத்திரம்தான். மதிய உணவை, இந்த நான்கு பேரும் வகுப்பறையில் ஒன்றாக உட்கார்ந்தே அருந்துவார்கள். நேரமின்மை காரணமாக கதிர்வேலுவின் தாயார் எப்போதும் தயிர் சாதமே மதிய உணவாகக் கொடுத்து அனுப்புவார். காற்றுப் புகாமல் இறுக அடைத்து வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸில் இருந்து, அதை மதியம் திறக்கும்போது தாங்க முடியாத அளவிற்கு புளித்திருக்கும். சில நாள் புளிப்பு தாங்காமல், கதிர்வேலு அதைக் கீழே கொட்டிவிட்டு, பட்டினி கிடப்பதைப் பார்க்க மற்ற நண்பர்களுக்கு கஷ்டமாக இருக்கும். விவசாய வேலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அம்மாவிடம் இதைச் சொல்லி, அவருக்கு மேலும் தொந்தரவு கொடுக்க கதிர்வேலுக்கு விருப்பம் இல்லாததால், புளிப்பு தயிர் சாதம் தொடர்ந்துகொண்டே இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழியாக, மற்ற மூன்று நண்பர்களின் ஏற்பாட்டில், கதிர்வேலுவின் தயிர் சாதத்தை நான்கு பேரும் பங்கு போட்டுக்கொண்டும், மற்ற மூன்று பேரின் உணவைக் கதிர்வேலுவோடு பங்கிட்டுக்கொள்வது என்றும் ஏற்பாடாயிற்று.
அடுத்த நாள் அலுவலகத்திற்குக் காரில் சென்றுகொண்டிருக்கும்போது சுப்ரமணியத்தை போனில் அழைத்தான் கதிர்வேல்.
'நாம நாலு பேரும் வர்ற ஞாயிற்றுக்கிழமை எங்காவது மீட் பண்ண ஏற்பாடு செய்யறயா?' என்றான்.
'நாலு பேரு இல்ல கதிர். மூணு பேருதான்... இளங்கோ இறந்து பல வருசம் ஆச்சு..'.
'என்ன சொல்றே? இறந்துவிட்டானா? எப்படி?' என்றான் கதிர்வேல் அதிர்ச்சியுடன்.
'கல்லூரி வாழ்க்கை முடிந்தவுடன் இளங்கோவுக்கு எதுவுமே நல்லது நடக்கல கதிர். அவனோட அப்பா, அம்மா நோய்வாய்ப்பட்டு, காலப்போக்கில் இறந்துட்டாங்க. அவனோட தங்கச்சி கணவனோட வாழாம, தன் இரண்டு குழந்தைகளோட பிறந்த வீட்டுக்கு வந்துட்டா... பிரச்சினைகள் இளங்கோவை நெருக்க, அவனும் நிறையக் குடிக்க ஆரம்பிச்சிட்டான். ஒரு நாள் நல்லா குடிச்சிட்டு, பைக்கில் வேகமாய்ப் போய் டிராக்டரில் மோதி, உயிரை விட்டுட்டான்..' சுப்ரமணியனின் குரல் கரகரப்புடன் தொலைபேசியில் கேட்டது.
இளங்கோவின் சிரித்த முகம் கதிர்வேலுவின் கண் முன் தோன்றி மறைந்தது. எவ்வளவு இனிமையானவன்? எப்பொழுதும், எதையும் சுலபமாக ஏற்றுக்கொண்டு, உற்சாகம் குறையாமல் இருக்கும் அவனுக்கு முடிவு இப்படியா வரவேண்டும்?
'சரி... நான், நீ, பழனி மூன்று பேரும் வரும் ஞாயிறன்று சந்திக்கலாம். பழனியிடம் பேசிவிட்டுச் சொல்லு. இடமும், நேரமும் பிறகு தீர்மானிக்கலாம்..' என்று கனத்த மனத்துடன் பேச்சை முடித்தான் கதிர்வேல்.
ஞாயிறன்று காரில் சென்றுகொண்டிருக்கும்போதே கூப்பிட்டுவிட்டான் சுப்ரமண்யம். 'நா பஸ் ஸ்டேண்ட் உள்ள நிக்கிறேன். நீ எந்த பஸ்சில வர்றே?' என்றான்.
அவன் இன்னும் கல்லூரிக் கதிர்வேலுவையே நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது அவன் பேச்சில் இருந்து தெரிந்தது. சஸ்பென்சை உடைக்க விரும்பாத கதிர்வேல், சிறிய புன்முறுவலுடன், 'நீ பஸ் ஸ்டேண்ட்டுக்கு வெளியே இருக்கும் மனோகரா ஹோட்டல் முன்னால நில்லு. இன்னும் பத்து நிமிடத்தில வர்ரேன்..' என்றான்.
ரேஞ்ச் ரோவரில் வந்து இறங்கும் கதிர்வேலுவைப் பார்க்காமல், கண்களால் அவனை வேறெங்கோ தேடிக்கொண்டிருந்தான் சுப்ரமணியம். அவன்தான் சுப்ரமணியம் என்பதை அவன் அணிந்திருந்த முக்கால் பேண்ட் காட்டிக் கொடுத்துவிட்டது. தொடர்ந்து நாற்பது வருடங்களாக அவனுக்கு யார் இது போன்ற குட்டைப் பேண்ட் தைத்துக் கொடுக்கிறார்கள் என்று வியந்து நின்றான் கதிர்வேல். மெலிந்திருந்த சுப்ரமணியத்தின் உருவத்தில் அதிக மாற்றங்கள் இல்லையென்றாலும், தலை முழுதும் நரைத்திருந்தது.
அருகில் சென்று 'சுப்ரமண்யம்' என்று அழைத்தவுடன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த சுப்ரமணியத்திற்கு தன் முன் நிற்பவன், தான் நாற்பது வருடங்களுக்கு முன் பார்த்த கதிர்வேல் என்பதை நம்பவே முடியவில்லை. கதிர்வேல் அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடை, அணிந்திருந்த கூலர், காலில் போட்டிருந்த விலையுயர்ந்த ஷூ மற்றும் அருகில் நின்றிருந்த விலையுயர்ந்த காரும் அவனை எதிர்பாராத அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க விரும்பாமல், 'என்ன என்னைத் தெரியவில்லையா? அவ்வளவு மாறி விட்டேனா நான்?' என்று சகஜமாகப் பேசினான் கதிர்வேல். 'ஆமாம்... ரொம்ப மாறிட்டீங்க...' என்றான். அதுவரை ஒருமையில் பேசியவன் பன்மைக்கு திடீரென்று மாறியதையும் கவனித்தான் கதிர்வேல்.
'சரி... வா... பேசிக்கிட்டே போகலாம்... பழனி வீட்டுக்கு எப்படிப் போகணும்கறத டிரைவர்கிட்ட சொல்லிட்டு வந்து உட்கார்...' என்றவாறு கார்க்கதவைத் திறந்து விட்ட டிரைவரிடம் ஜாடை காட்டினான். பின் சீட்டில் ஒடுங்கியவாறே, சீட்டின் நுனியில் உட்கார்ந்திருந்த சுப்ரமணியம் மெதுவாகக் கேட்டான்,
'நீங்க பிஸினஸ் பண்றீங்களா?'.
'ஆமாம். டெக்ஸ்டைல்ஸ்... எக்ஸ்போர்ட்... காலேஜில் டிகிரி முடித்தவுடன் மாமாவுடன் சேர்ந்து இந்தத் தொழிலில் இறங்கிவிட்டேன்... சரி.. உன்னைப்பற்றிச் சொல்லு' என்றான். தனக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் பரவிக்கிடக்கும் ஏற்றுமதிக் கம்பெனிகளைப் பற்றி முழுதும் சொன்னால் மிரண்டு விடுவான் என்பதால் சுருக்கமாக முடித்துக்கொண்டான் கதிர்வேல்.
'நானும் டிகிரி முடித்து விட்டு, அரசு வேலைக்குப் பரீட்சைக்குத் தயார் செய்துகொண்டிருக்கும்போது அப்பா இறந்து விட்டார். என்னோட இரண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் செய்து கொடுக்கும் பொறுப்பும் என் தலையில் விழுந்துவிட்டது. பக்கத்தில் உள்ள ரைஸ் மில்லில் கணக்கு எழுதும் வேலைக்குச் சேர்ந்தவன், இன்றைக்கு வரைக்கும் அங்குதான் வேலை செய்கிறேன். எனக்கு ரெண்டு பசங்க.. படிக்கிறாங்க..' என்றான் சுரத்தில்லாமல்.
அவன் இன்னும் முக்கால் பேண்டோடு இருப்பதன் காரணம் கதிர்வேலுவுக்கு அப்போதுதான் புரிந்தது. தான் பாஸ் மார்க் எடுக்கப் பிரம்மப் பிரயத்தனப் படும்போது, அலட்சியமாக கணிதத்தில் நூறு மார்க் சுப்ரமணியம் எடுத்தது ரைஸ் மில்லில் கணக்கு எழுதத்தானா? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் கதிர்வேல்.
'சரி...பழனி என்ன செய்கிறான்?' என்றான் கதிர்வேலு ஆர்வத்துடன். பழனியின் மேல் கதிர்வேலுவுக்கு எப்போதும் ஒரு வாஞ்சை உண்டு. படிக்கும் காலத்திலேயே, பழனி தோட்டத்தில் கடுமையான வேலைகளைச் செய்யும் உழைப்பாளி என்பது அவனின் சொரசொரப்பான உள்ளங்கைகளைப் பார்த்தாலே தெரியும். அது மட்டுமல்லாது, எதையும் மனதில் வைக்காமல் வெளிப்படையாகப் பேசும் எதார்த்தவாதி பழனி.
'அவன் நிலைமை என்னை விட மோசம். அவனுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கரில் பற்றாக்குறையோடு விவசாயம் செய்துகொண்டிருக்கிறான். போதாக்குறைக்கு மூன்று பெண்கள் வேறு. எப்படியோ மூன்று பேருக்கும் கல்யாணம் செய்து முடித்துவிட்டான். நேரில்தான் போறோமே.. நீங்களே பாருங்க...' என்றான் சுப்ரமணியம்.
'கதிரு, நீ எப்படி மாறிட்டே?' என்று கூவிக்கொண்டு வந்தான் பழனி. வயதைத் தவிர பெரிய மாற்றம் ஒன்றும் காணப்படவில்லை அவன் தோற்றத்தில்.
'பழனி... டிரஸ் மாற்றிக்கொண்டு வா... போகும் வழியில் எல்லாம் விபரமாகப் பேசிக்கொள்ளலாம். இன்னைக்கு லஞ்ச் என்னோட ட்ரீட்..' என்றான் கதிர்வேல்.
சிறிது நேரத்தில் மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் அணிந்து வந்தான் பழனி.
அந்த பெருநகரின் பிரசித்தி பெற்ற ஸ்டார் ஹோட்டலின் ஏழாவது மாடியில் உட்கார்ந்திருந்தனர் மூன்று நண்பர்களும்.
'இந்த மாதிரி பெரிய ஹோட்டலுக்கு உள்ளே இதுவரை நான் வந்ததே இல்லை… ஒரு சாப்பாடு ஐநூறு ரூபாய்க்கு மேலே இருக்கும், நீ பெரிய பிசினஸ் பண்றயா கதிரு?' என்றான் பழனி வெள்ளாந்தியாக.
மூன்றாம் தளத்தில் டைனிங்கில் நுழையும்போதே கோட் சூட் அணிந்திருந்த, அங்கிருந்த ஒரு நாகரீக நபர் கதிரை வரவேற்றார்.
டேபிளில் அழகாக வைக்கப்பட்டிருந்த, பெயர் தெரியாத, நான்வெஜ் ஐட்டங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் இரு நண்பர்களும். இப்படியும் கூட ஒரு சொர்க்க பூமி தங்கள் நாட்டில் இருக்கிறது என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டனர்.
'கூச்சப்படாம சாப்பிடுங்க… ஏதாவது வேணும்னா கேளுங்க...' என்று கதிர்வேல் சொன்னவுடன், குழப்பம் நீங்கி, நண்பர்கள் இருவரும் சாப்பிடத் தொடங்கினர்.
'உங்களோட பழைய உறவுகளைப் பக்கத்தில் நெருங்கவே விடமாட்டீங்க... பாதி சண்டேவை உங்க பழைய நண்பர்கள் கூட கழிச்சிருக்கிறீங்க... அதிசயமா இருக்கு?' என்றாள் கதிர்வேலுவின் மனைவி நளினி. பல கோடிகளுக்கு அதிபதியான கிரானைட் தொழிலதிபரின் ஒரே மகள்.
'அதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று, கல்லூரியில் என்னைவிட அதிக மார்க் வாங்கிய என் பழைய நண்பர்கள், வாழ்க்கையில் என்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறார்களா? என்பதைத் தெரிந்துகொள்ள. இரண்டு, கல்லூரி நாட்களில் புளித்த என் தயிர் சாதத்திற்கு மாற்றுச் சோறு கொடுத்து என்னை வெண்சோற்றுக் கடனாளியாக்கிய அவர்களின் சோற்றுக் கடனை, பதிலுக்கு அடைக்க நாற்பது வருடங்களுக்குப் பின் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள..' என்றான் கதிர்வேல் மனைவியிடம்.
'எப்படியானாலும், இது தொடராமல் பார்த்துக்குங்க... உங்களுக்கு அரசியலிலும், பிசினஸிலும், சினிமாத் துறையிலும் இருக்கும் நண்பர்களே போதும்...' என்றாள் நளினி.
'அதெல்லாம், அவங்க என்னை நெருங்கவே விடாம ஏற்பாடு பண்ணிட்டேன். கவலைய விடு' என்றான் கதிர்வேல்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு, இரண்டு பேர் அவனது அலுவலகத்திற்கு வந்து, கேட்டில் உள்ள செக்யூரிட்டியிடம் ஏதோ கேட்டுவிட்டுத் திரும்பிச் செல்வது அவனின் சி.சி.டி.வி.யில் தெரிந்தது. அதில் ஒருவன் வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டியிருந்தான். மற்றொருவன் முக்கால் பேண்ட் அணிந்திருந்தான்.
(முற்றும்)