
முத்துப்பாண்டியன் எனது பாலிய நண்பன். நான் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்த காலம் அது. முத்துப்பாண்டியன் கொஞ்சம் வசதியில்லாத குடும்பத்தைச் சார்ந்தவன் ஆகையால் ஐந்தாம் வகுப்பிற்குமேல் அவன் படிக்கவில்லை. அது எங்களது நட்பிற்கு எவ்விதத்திலும் இடையூறாக இருக்கவில்லை. நான் வேலையில்லாமல் இருந்த காலத்திலேயே அவனுக்குத் திருமணம் நடந்துவிட்டது.
சிறிது காலத்தில் எனக்கு அரசாங்க வேலை கிடைத்து நான் மதுரைக்கு வந்துவிட்டேன். சில ஆண்டுகளில் எனக்கும் திருமணமாகி மதுரையிலேயே இருந்துவிட்டேன். ஏதாவது விசேஷங்களை முன்னிட்டு எப்போதாகிலும் ஊருக்குப் போய்வருவதுண்டு. எனது தந்தை இறந்தபின்பு எனது தாயார் மட்டுமே ஊரில் இருந்தார். அவரை நான் பார்க்கச் செல்வதைவிட அவர் என்னைப்பார்க்க வருவதே அதிகம்.
வெகுநாட்களுக்குப் பின்பு நான் ஊருக்கு வந்திருந்தேன். அது முத்துப்பாண்டியனின் மகள் திருமணத்திற்காக. பழைய நட்பை மறக்காமல் வீடு தேடிவந்து பத்திரிக்கை வைத்துவிட்டுச் சென்றிருந்தான். மகிழ்ச்சியோடு அந்தத் திருமணத்திற்கு வந்திருந்ததற்கு அதுமட்டும் காரணமல்ல. அந்த மணப்பெண் உயிரோடு இருப்பதற்கே நான்தான் காரணம் என்ற பெருமிதம்தான் உண்மையான காரணம். அவள் பிறந்தபொழுது, பெண்ணாகப் பிறந்துவிட்டாள் என்பதற்காக, அவளுக்குக் கள்ளிப்பால் கொடுத்துக் கொன்றுவிட முடிவெடுத்தனர் முத்துப்பாண்டியனின் குடும்பத்தினர். அவனுக்கும் அதில் உடன்பாடு இருந்தது.
“பெத்த பிள்ளைய கொன்னுட்டு இந்த உலகத்துல நீ என்னத்தடா பெருசா வாழ்ந்துறப் போற?” என்று தொடங்கி அவன் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்தேன். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே! கரைந்துவிட்டான் அவன். குடும்பத்தினரையும் சமாளித்துக்கொண்டான். அன்று நான் காப்பாற்றிய அந்தப் பூ இன்று பூவையாகிப் பூமாலை சூடிக்கொள்ளவிருக்கிறது. இருக்காதா பெருமிதம் எனக்கு!
திருமணம் உசிலம்பட்டியில் உள்ள ஒரு சிறிய திருமண மண்டபத்தில் எளிய சடங்குகளுடன் இனிதாக நடந்து முடிந்தது. முத்துப்பாண்டியனுக்கு இன்னொரு மகளும் பிறந்திருந்தாள். என்னுடைய ஆலோசனையின் பேரில் இரண்டாவது மகளையும் கொல்ல நினைக்காமல் அன்போடு வளர்த்துவந்தான். இறுதியாக அவன் எதிர்பார்த்த ஒரு ஆண் குழந்தையும் அவனுக்குப் பிறந்திருந்தது.
திருமணம் முடிந்து ஏழெட்டு மாதங்கள் கழிந்திருக்கும்; அம்மா வீட்டிற்கு வந்திருந்தார்கள். வழக்கம்போல் ஊர்நிலவரம் விசாரித்தேன். இந்தவருடம் வெள்ளாமை சரியில்லை; சாராயக்கடை இராமசாமி இறந்துவிட்டார்; சுப்பிரமணியன் வீட்டு வைக்கோல்போர் தீப்பிடித்து எரிந்துபோனது போன்ற செய்திகளைச் சொன்னார். அனைத்தையும் சராசரிப் பரிதாபங்களோடு கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியாக ஒரு செய்தியைச் சொன்னார். நான் இடிந்து போனேன்.
“முத்துப்பாண்டியனின் மக, பாவம் நெறமாத்தக்காரி, அநியாயமா செத்துப்போனா!”
என்ன ஏதென்று விபரமாகக் கேட்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அம்மா தொடர்ந்தார்.
“எழவு மக! நாண்டுக்குச் செத்துப் போனான்டு ஊரு சொல்லுது. அவ புரசன்தான் எத்திக் கொன்டுவிட்டான்டு செலபேரு சொல்றாக”
தொடர்ந்து அம்மா கூறிய விபரங்களின் சுருக்கம் இதுதான்: திருமணத்தின் போது 25 பவுன் நகை போடுவதாக முத்துப்பாண்டியன் ஒப்புக்கொண்டுள்ளான். ஆனால் திருமணத்தன்று அவனால் 15 பவுன் நகை மட்டுமே போட முடிந்திருக்கிறது. அடுத்த வெள்ளாமையில் மீதியைப் போட்டுவிடுவதாக உறுதியளித்திருக்கிறான். ஆனால் வெள்ளாமை அவனை ஏமாற்றிவிட்டது. இதையறிந்த மருமகனும் அவனது தாயாரும் மீதி நகையைக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிட்டனர். மருமகனின் தாயார் வேறு யாருமல்ல; முத்துப்பாண்டியனின் உடன் பிறந்த அக்காள்தான். இருந்தால் என்ன! கொடுக்க வேண்டியதைக் கொடுத்துத்தானே ஆக வேண்டும்!
மாமியார் கொடுமை தாங்க முடியாமல், கணவனின் அடி உதை தாங்கமுடியாமல், பிறந்த வீட்டைப்பற்றி அவர்கள் கேவலமாகப் பேசுவதைப் பொறுக்க முடியாமல் என்று அடிக்கடி தகப்பன் வீட்டிற்கு வந்துவிடுவாள் முத்துப்பாண்டியனின் மகள். அவளுக்கு ஏதாவது சமாதானத்தைச் சொல்லி முத்துப்பாண்டியனும் அவனது மனைவியும் அவளைக் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். இப்படியொரு சூழ்நிலையில்தான் அவளது மரணம் நிகழ்ந்துள்ளது.
அன்றுமுதல் நான் மன அமைதியை இழந்துவிட்டேன். என் நண்பனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்! காவல் நிலையத்திற்குக்கூட அவன் போகவில்லை. மகளே போய்விட்டாள். அக்காள் குடும்பத்தை வழக்குப் போட்டு வதைப்பதால் என்ன லாபம் ஏற்படப் போகிறது என்று கருதியிருக்கலாம். நீதிமன்றத்திற்கும் காவல் நிலையத்திற்கும் அலைந்து காசுபணம் செலவு செய்ய வழியில்லாமல் கூட சும்மா இருந்திருக்கலாம்.
ஏதோவொரு குற்ற உணர்வு என்னை அலைக்கழித்தது. அந்தப் பெண் பிறந்த பொழுதே அவளது குடும்பத்தார் விருப்பப்படி கள்ளிப்பாலுக்கு இரையாகி இருந்தால் இன்று இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்காதல்லவா! நான்தான் அவர்களது இயல்பான வாழ்க்கைப் போக்கின் திசையை மாற்றிவிட்டேனோ! ஒரு மனிதனுடைய சூழ்நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இலவச ஆலோசனை வழங்கி அவனை இம்சித்துவிட்டேனோ! என்று எண்ணத் தோன்றியது.
“இது என்ன அபத்தம்! அதற்காக ஒரு பெண் சிசுவைப் பிறந்தவுடன் அழிப்பது மனிதத்தனம் ஆகுமா! படித்த, பண்புள்ள யாரும் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா! நீ செய்தது சரிதான். வருத்தம் வேண்டாம்” என எனது ஆழ்மனம் அறிவிப்பதை உணர்ந்தேன்.
என்னதான் இருந்தாலும் மனதை ஏதோவொன்று பிசைந்து கொண்டுதான் இருந்தது. நான் அன்று செய்தது சரி என்பதில் மட்டும் நான் உறுதியாக இருந்தேன். அந்தப் பெண் குழந்தையின் துர்மரணத்திற்குக் கண்ணுக்குத் தெரிந்த காரணங்களாக வரதட்சணையும் அதை ஒட்டிய வன்முறையும் இருந்தபோதிலும், கண்ணுக்குத் தெரியாத அரூபமான காரணகங்கள் சிலவும் மானிட வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன என்பதும் உண்மைதான்.
ஒருசில மாதங்கள் கழித்து முத்துப்பாண்டியன் திடீரென எனது வீட்டிற்கு வந்தான். என்னை நேரடியாகச் சந்தித்துத் திட்டித் தீர்க்கத்தான் வந்திருக்கிறான் என்று நினைத்தேன். அவனை எதிர்கொள்ள மனதளவில் சிரமப்பட்டேன். பேச்சை நானே ஆரம்பித்தேன். மகள் இறந்தது குறித்த எனது வேதனையைத் தெரிவித்தேன். இரண்டு கண்ணீர்த் துளிகள் அவனது கண்களைவிட்டு வெளியேறத் துடித்தன. சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அவனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற முற்பட்டேன். அனைத்தையும் அவன் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான். எந்த நேரத்திலும் அவன் என்மீது பாயக்கூடும் என்று எதிர்பார்த்தேன். அவன் என்னென்ன கேள்விகள் கேட்கக்கூடும் என்பதை யூகித்து அவற்றிற்குத் தக்க பதில்களை மனதிற்குள் தயார் செய்துகொண்டிருந்தேன்.
கைகால்களைக் கழுவச் சொல்லி சாப்பாடு போடுவதற்கு என் மனைவி ஆயத்தமானார். இருவரும் சேர்ந்தே சாப்பிட்டோம். மகளின் மரணத்தை விடுத்து வேறு விபரங்களைப் பேசத் தொடங்கினான் முத்துப்பாண்டியன். மகள் இறந்த சோகத்தை மறக்க நினைக்கிறான் என்று எண்ணினேன். ஊர் விவகாரங்களை மிக உற்சாகமாகப் பேசத் தொடங்கினான். மகள் இறந்த சோகத்தை முற்றாக மறந்துவிட்டான் என்று தோன்றியது. என் மனதிலிருந்த குற்ற உணர்வும் குறைந்து மனம் இலகுவாவதை உணர்ந்தேன். அவன் என்னை நிற்கவைத்துக் கேள்வி கேட்பதற்காக வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அகால மரணங்கள் உலகில் அன்றாடம் நிகழ்பவைதான் என்ற மனப் பக்குவம் அவனுக்கு வந்துவிட்டது போலும். சாப்பாடு முடிந்துவிட்டது. இன்னும் என்ன காரியமாய் வந்திருக்கிறான் என்பதை அவன் தெரிவிக்கவில்லை. என்ன காரியமாக வந்திருப்பான் என்று நான் யூகிக்க முற்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கையில் வைத்திருந்த மஞ்சள் பையிலிருந்து பத்திரிக்கை ஒன்றை எடுத்து நீட்டிடக்கொண்டே,
“என் ரெண்டாவது மகளுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். குடும்பத்தோடு அவசியம் வந்துறணும்” என்று புன்னகை பூத்த முகத்துடன் சொன்னான்.
எனது மனச்சுமை முழுவதுமாக இறங்கிவிட்டது. நிம்மதிப் பெருமூச்சோடு பத்திரிக்கையைப் பெற்றுக்கொண்டேன். சமையக்கருப்பு சுவாமி துணை, கொக்குளம் ஆதிசிவன் துணை, மானூத்து பெத்தணசாமி துணை என்று ஆரம்பித்த பத்திரிக்கை அதை அச்சடித்த அச்சகத்தின் பெயரோடு முடிந்திருந்தது. அது எட்டுப் பக்கங்களைக் கொண்டிருந்தது. மணமக்கள் பெயர்கள், திருமண நாள், திருமணம் நடைபெறும் இடம் ஆகியவை மட்டும் கொட்டை எழுத்துகளில் அச்சடிக்கப் பட்டிருந்தன. மாப்பிள்ளையின் தாய்மாமன்மார்கள், தந்தைவழிப் பாட்டனார், தாய்வழிப் பாட்டனார் மற்றும் வரவேற்பாளர்கள் அதேபோல் மணமகளின் உறவினர்கள் ஆகியோரது பெயர்ப் பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. மொத்தம் நூற்றி முப்பத்து மூன்று பெயர்களைத் தாங்கி இருந்தது அந்தப் பத்திரிக்கை. எனது பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது. அவ்வளவு பெயர்களுக்கு மத்தியில் ஒரே ஒரு பெயர் என் கண்ணை உறுத்தியது. மாப்பிள்ளையின் பெயர்தான் அது.
“மாப்பிள்ளையின் பெயர் சிவனாண்டின்னு போட்டிருக்கே…” என்று நான் இழுத்தேன். பட்டென்று முத்துபாண்டி சொன்னான்,
“பழய மாப்பிள்ளைதான்! மூத்த பொண்ணுக்கு விதி முடிஞ்சு போச்சு, போய்ட்டா. அதுக்கு அவர் என்ன செய்வார்! அக்கா மகன்தானே! நிலம் பொலம்னு நல்லா வசதியா இருக்காக. நாலஞ்சு வருசமா வெள்ளாம வெளச்சல் சரியில்ல. இருபது பவுனு இருவத்தஞ்சு பவுனுன்னு போட்டு சின்னப் பிள்ளைய வேறொரு எடத்துல குடுக்க வசதி இல்ல. நீ போடுறதப் போடுடா தம்பின்னு அக்கா சொல்லிருச்சு. எம் பொஞ்சாதிக்கு வேற ஒடம்பு சரியில்ல. வயித்துல கட்டி, ஆப்ரேசன் பண்ணணும். பொழைக்குறது ரெண்டாநிச்சயம்னு சொல்லுறாக. ஒரு மகன் இருக்கான். அவன் அடுத்த வீட்டுல பண்ணைக்கிருந்துகூட பொழச்சுக்கிறுவான். இந்தப் பொட்டப் புள்ளய சும்மா விடமுடியுமா? பொறுப்பா ஒருத்தன்கிட்ட ஒப்படச்சுறுவோம். தலை எழுத்து நல்லா இருந்தா நல்லா பொழைக்கட்டும். இல்லண்டா தெய்வம் விட்ட வழி……”
எப்பொழுது பேசி முடித்தான். எப்பொழுது விடைபெற்றுச் சென்றான் என்பது எனக்குத் தெரியாது.