ஒரு அபார்ட்மென்ட்டில் மொத்தம் மூன்று பிளாக்குகள். பிளாக்குகளின் பெயர் A, B மற்றும் C. ஒவ்வொரு பிளாக்கிலும் மூன்று மாடிகள் உள்ளன. Ground floorஐ சேர்த்தால் நான்கு. ஒவ்வொரு பிளாக்கிலும் 8 வீடுகள். ஆக மொத்தம் இந்த அபார்ட்மென்டில் 24 வீடுகள் உள்ளன. சரி, இந்த அபார்ட்மென்டில் உள்ள ஒரு வாட்ச்மென் ஐயா என்ன பாடு படுகிறார் என்று பார்ப்போமா...
துரைசாமி ஐயா காலையில் எழுந்து மட மடவென குளித்து விட்டு நெற்றியில் விபூதி பட்டையை போட்டு கொண்டு மனைவி கொடுத்த காப்பியை குடித்துவிட்டு, யூனிபார்மை மாட்டி , சாப்பாடு மூட்டையை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார். அபார்டமென்ட்டின் உள்ளே நுழைந்தும் விட்டார்.
பால்கனியிலிருந்து பார்த்து விட்டார்கள் இந்த ஐயா வந்ததை..
இப்போது முதல் வாட்ஸ் அப் மேசேஜ் ஆரம்பம்..
"துரைசாமி, A block door no. 7, சீக்கிரமா ½ kg உருளைக் கிழங்கு வாங்கிண்டு வாங்க..."
"சரி" என்று பதில் கொடுத்து ஓடுவதற்குள்,
"துரை, c block, door no 3, பிரஸ்காரன் கிட்ட 4 உருப்படி துணி கொடுத்திருக்கேன், வாங்கிண்டு வா.."
துரை ஒரே நேரத்தில் இரண்டு வேலையையும் முடித்து விட்டு டீ கடைக்கு போனார் டீ குடிக்க..
பாதி டீ குடிப்பதற்குள் 'டோய்ன்.. டோய்ன்..' என ஐந்து மேசேஜ்கள் வந்து விட்டன. டீயை குடித்து முடிப்பதற்குள் போனும் செய்து விட்டார்கள்.
துரை டீயை குடித்து விட்டு மேசேஜ்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்தார்.
புளி வேணும், பையன் ஆட்டோ வரல, ஸ்கூல்ல கொண்டு விடணும், ஸ்கூட்டரில் ஆயில் நிரப்பணும் என்று அடுக்கடுக்காக மேசேஜ்கள். துரை இதை எல்லாம் முடிப்பதற்குள் மணி 12 ஆகி விட்டது.
சிறிது நேரம் உட்காரலாம் என்று உட்காரப் போனார். உடனே 'டோய்ன்.. டோய்ன்..' சத்தம் ஆரம்பம். எரிச்சலோடு மறுபடியும் கடைக்கு போய் கேட்டதை எல்லாம் வாங்கி கொண்டு வந்து கீழுக்கும் மேலுக்குமாக அலைந்தார். இப்படியே மாலை 7 மணி வரை தினமும் சோறு கூட சாப்பிட முடியாமல் இந்த வாட்ஸ் அப் மேசேஜோடு திண்டாடினார் துரைசாமி.
ஒரு நாள் யோசித்து ஒரு முடிவை எடுத்தார். வாட்ஸ் அப்பையே நீக்கி விட்டார் தன்னுடைய மொபைலிலிருந்து. மேலும் மொபைலை சைலன்ட்டில் வைத்து விட்டார். காலையிலிருந்து மேசேஜை போட்டு கொண்டிருந்தவர்கள், 'மேசேஜும் போகவில்லை, துரைசாமி மொபைலையும் எடுக்கவில்லை' என்று ஒருவருக்கொருவர் போனில் பேசி விட்டு பிறகு ஆத்திரத்தோடு கீழே இறங்கி வந்தார்கள்..
"ஏய்.. துரை, என்னாச்சு உனக்கு, எத்தனை வாட்டி கால் பண்ணினோம், மேசேஜ் போட்டோம், ஒரு பதில் இல்லை?"
"ஆமாம் சார், you are absolutely right" என்று ஒரு பெண்மணி ஜால்ரா அடித்தாள்..
"சார், நாம இங்க கத்திக்கிட்டு இருக்கோம், ஆனா துரை நிம்மதியா ஸ்டூலில் உட்காந்துண்டு இருக்கார்" என்று இன்னொருத்தர் சொன்னார்.
இத்தனை நேரமாக மௌனமாக இருத்த துரை பதில் கொடுக்க ஆரம்பித்தார்..
"சார், என்னோட வேலை வெறும் காவல் காக்கிறது மட்டும் தான். புதுசா யாராவது வந்தால் புக்ல என்ட்ரி போட வேண்டும். அவர்களின் விவரத்தை வாங்கிக்க வேண்டும். கொரியர் பார்சல் வந்தால் வாங்கி வைக்க வேண்டும். இவ்வளவுதான் என் வேலை. சரி, போனால் போகட்டும் என்று உங்களுக்காக கொஞ்சம் உதவி பண்ணலாம் என்று பார்த்தால், ஒரு ஐந்து நிமிடம் கூட உட்கார முடியல.. சாப்பிட முடியல..
"சார், எனக்கு வயது 65 ஆகிறது. வயிற்று பிழைப்புக்காக இந்த வேலையை செய்கிறேன். நீங்க வாட்ஸ் அப்பில் எத்தனை மேசேஜ் அனுப்பினாலும் அதற்கு ஒன்றுமாகாது. ஆனால், அதை பார்த்து பார்த்து எல்லா வேலையும் செய்தால் நான் ஆஸ்பத்திரியில்தான் போய் படுத்துக்க வேண்டியதாக இருக்கும். அதனால்தான் மொபைலை ஸைலன்ட்டில் போட்டு விட்டேன். அந்த வாட்ஸ் அப்பையும் என மொபைலிலிருந்து நீக்கியே விட்டேன்" என்றார் துரை.
வந்திருந்த அனைவரும் அவரிடம் sorry சொல்லி விட்டு குற்ற உணர்வோடு தலை குனிந்து கொண்டே போய் விட்டார்கள்.