
"சந்ததி இழை அறுபடாமல் தொடர்ந்து பெருகிக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குப் 'புத்' என்கிற நரகம் கிட்டும். அந்த நரகம் கிட்டிவிடாமல் காப்பாற்றுகிறவன்தான் புத்ரன்..." என்பதாக எப்போதோ கேட்ட பௌராணிகரின் உரை நினைவுக்கு வருகிறது.
இது மனிதர்களுக்கு மட்டுமே. அதுவும்கூட, உயர்சாதி என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கலாம். தாவரங்களுக்கும் விலங்குகள் பறவைகள் முதலானவற்றுக்கும் சுவர்க்கம் நரகம் எல்லாம் உண்டா என்பது தெரியவில்லை.
எல்லாமே உயிரினங்கள் இல்லையா? 'புனர் அபி ஜனனக் கோட்பாடு எல்லா ஜீவன்களுக்கும்தானே இருந்தாக வேண்டும்?
இந்த நந்தியாவட்டைச் செடியைச் சிறு பதியனாக வேலூரில் இருந்து சென்னைக்குக் 'கடத்தி' வந்தது நினைவிருக்கிறது.
அங்கே கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியின் குடியிருப்பு வளாகத்தில்தான் பறிப்பாரில்லாமல் எத்தனை பூச்செடிகள்!
நந்தியாவட்டை, பிச்சிப்பூ, செம்பருத்தி, பவளமல்லிகை... என்று! முப்பது ஆண்டுகளாகியிருக்குமா? நண்பர் இளங்கோவன் சொல்கிற மாதிரி செடிகள் நமக்காகவா பூக்கின்றன. அவற்றைப் பறிக்காமல் அப்படியே செடிகளில் விடுவதுதான் அழகோ?
கை துறுதுறுக்கிறது. கூடை கூடையாகச் சேந்தன் அமுதன் ஆண்டாள் கணக்கில் மலர்களைக் கொய்து மாலையாக்கி இறைவனுக்கு அர்ப்பணித்து மகிழவேண்டும் என்று.
இவனுக்கு இறைவன் வழிபாடு பூஜை எல்லாம் அந்நியப்பட்டவை. இருந்தாலும் மல்லிகை முல்லை, பவழமல்லிகை, நந்தியாவட்டை என்று அலுங்காமல் சேகரிப்பதிலும் மலர்களைத் தொடுத்து மாலையாக்குவதிலும் ஒரு மயக்கம் உண்டு.
தொடுத்துவைத்தால் வீட்டில் மனைவி மருமகளுக்கு ஒரு வேலை மிச்சம்தான். ஆனாலும் அவர்களும்தான் பூத்தொடுக்க வந்துவிடுகிறார்கள். யாருக்குத்தான் அந்த யோகத்தில் ஆசை இராது?
ஆம்.. அதுவும் ஒரு யோக சாதனையேதான். விரல்கள் பூக்கட்டுகிற மனோகரமான நேரத்தில் சுற்றிலும் என்ன நிகழ்ந்தாலும் தெரியாது. மனம் தன் போக்கில் எங்கெங்கெல்லாமோ சஞ்சாரம் பண்ணிக் கொண்டிருக்கும். அது ஒரு பரிபூரணமான சங்கீத சுகம்!
தாம்பரம் கடப்பேரியில் தரைத்தளத்தில் வீடு வாங்கியபோது பக்கத்தில் கொஞ்சம் 'பூமி'யும் கிடைத்தது. இரண்டுக்கு ஐந்தில் ஒரு துண்டு நிலம் சுவர் ஓரமாக.
வரிசையில் கடைசி வீடாக அமந்திருந்ததால் இந்த போனஸ்!
அதில் அந்த நந்தியாவட்டைப் பதியனை செடியை நட்டு வளர்த்தான். ஆறே மாதங்களில் அரும்பு கட்டி நன்றாகப் பூக்கத் தொடங்கிவிட்டது. அடுத்த வருஷம் கூடை கூடையாக... தொடுத்து மாளவில்லை.
பக்கத்திலேயே முளைத்திருந்த 'பிள்ளை'ச் செடியை அலுங்காமல் பெயர்த்தெடுத்து வளாகப் பொது இடத்தில் 'குடிவைத்து'... அதுவும் கனஜோராகப் பூக்கிறது.
அவனுக்கு வாய்த்தது என்னவோ நாடோடி வாழ்க்கைதான். கௌரவமாக 'ராஜ சக்கரயோகம்' என்று எதையாவது சொல்லிக்கொள்ளலாம்.
நான்கு தலைமுறைக்கு மேலாக அவனுடைய திருகோகர்ணத்தில் ஒரே பூர்விக வீட்டில் வாழ்ந்த இளமைக்காலம் பற்றிய நினைவுகள் சுகமான நினைவுத்தடத்தில் ஏறின.
அவனுடைய அப்பாவின் தாத்தா கட்டி வம்சங்கள் பல்கிப் பெருகிய ஆகிவந்த கிராமத்து வீட்டை அவன் பொறுப்பே இல்லாமல் விற்க நேர்ந்தது ஒரு பாவம்.
அதற்குப் ''புத்'தைவிட மோசமான நரகம் ஏதாகிலும் கிடைக்கு மானாலும் தகும்தான்.
அரசாங்க உத்தியோகத்தில் வாழ்க்கைப்பட்டதின் பலன் இந்த நாடோடி வாழ்க்கை.
அதிலும் ஜோகில்பட்டி தொடங்கி சென்னைவரை முப்பத்தெட்டு ஆண்டுகளில் பதினோரு இடங்களுக்குப் பந்தாடிப் பார்த்தது அரசாங்கம்.
இப்போது பிள்ளைகளின் காலம். அவன் பணி ஓய்வு பெற்றும் ஒரே இடத்தில் கிடக்க சிவனே என்று கிடக்கமுடியாமல் போனது.
சென்னை மாநகரில் மேற்கு மாம்பலம் பாரதி தெரு ஒற்றை அறைக் குடித்தனம் தொடங்கியபிறகு இது எட்டாவது வீடு. ஆனால் ஒரு வழியாகச் சொந்த வீடு என்கிற பெருமையோடு…
என்ன செய்ய? பத்து ஆண்டுகளில் இதுவும் கை நழுவியது. இரண்டு அறைகள் போதவில்லை என்று சற்றுப் பெரியதாக ஒரு வீட்டுக்கு இடம் பெயர நேர்ந்தது.
தாம்பரம் அருகில் பாரதி நகரில் ஒரு புதிய அடுக்கத்தில் முதல் மாடி அமைந்தது.
என்ன வேடிக்கை! 1974 இல் தருமமிகு சென்னையில் காலூன்றியது மேற்கு மாம்பலம் பாரதி தெருவில்! நாற்பது ஆண்டுகளில் புதிய வீடு அமைந்ததும் ஒரு பாரதி நகரில்.
கடப்பேரியின் எட்டாவது வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தபோது மனசில் வலியெடுத்தது நிஜம்.
செழித்துப்படர்ந்து இரண்டு நந்தியாவட்டைச் செடிகளும் அட்டகாசமாய்ப் பூத்துக் குலுங்குகிறபோது அவற்றைப் பிரிந்து வரவே மனசில்லை. ஆடுமாடாக இருந்தால் கூடவே ஓட்டி வந்திருக்கலாம். செடிகளையும் மரங்களையும் அப்படிப் பையில் போட்டு எடுத்து வரவா முடிகிறது?
இருந்தாலும் நந்தியாவட்டைத் தூறடியில் வளர்ந்திருந்த ஒரு சிறு கன்றை, அதனுடைய அடுத்த வாரிசாகப் பெயர்த்தெடுத்து வந்தான்.
புதிய மாளிகையில் தோட்ட வசதி இல்லை. விசாலமான மேல் மாடம் இருந்தது. மண்தொட்டிகளை வாங்கி அதில் சில பூச்செடிகளை நட்டு வைத்தான்.
அவற்றில் நந்தியாவட்டைக்கும் கௌரவமாக இடம் தந்தான். வேண்டா வெறுப்பாக வளர்ந்தது புதிய கன்று. நான்கு மாதங்களாகியும் பூக்கவோ தழைக்கவோ முயலாமல் சோம்பியே கிடந்தது.
தண்ணீர் ஊற்ற முயல்கிற போதெல்லாம் அது சோகமாக அவனோடு பேசும். 'இப்படித் தொட்டியில் என்னைச் சிறை வைக்கிறாயே.. சுதந்திரமாக பூமியில் எங்காவது இடம் பாரேன்..,'
அவனுக்கும் பாவமாகத்தான் இருந்தது. அதற்கும் ஒரு நாள் நல்ல வேளை வந்தது.
சில இயற்கை ஆர்வலர்கள் அந்தக் குறுகலான வீதியில் இருபுறமும் ஏழெட்டு இடங்களில் வட்ட வட்டமாகப் பாத்திகள் அமைத்து மரக்கன்றுகளை நட்டார்கள்.
ஆனால் தொடர் கவனிப்பின்றி மட்டுமில்லை ஆடுமாடுகள் கவனித்துவிட்டதாலும் எல்லா மரம் நடுவிழாக் கன்றுகளும் சீக்கிரமே காணாமல் போயின. அவற்றுக்காக எடுப்பித்த வட்டக்குழிகள் அனாதை ஆயின.
எங்கள் அடுக்ககத்தை ஒட்டியும் ஒரு மரக்கன்று வாடிக்கருகிப் போனதால் ஒரு வட்டப்பாத்தி காலியானது..
ஒரு மழைத்தூறலுக்குப் பிறகு அதை அவன் ஆக்கிரமித்தான். நந்தியாவட்டை அவன் நினைவுக்கு வந்தது.
'பூமி வேண்டும்' என்று கேட்ட சிங்காரியை வட்டப்பாத்தியை ஒழுங்காக ஆக்கி அந்தப் பள்ளத்தில் தொட்டி மண்ணோடு பெயர்த்து அமரவைத்துத் தண்ணீர் உபசாரம் செய்தான்.
'பொது இடத்தில் வைக்கிறாயே ஆடுமாடு மேய்ந்தால் என்ன செய்வாய்?' என்று கேட்டவள் பேத்தி சமாத்மிகாதான்.
அவள் அஞ்சியவாறு கால்நடைகளால் சேதம் ஏதுமில்லை. பத்து ஆண்டுகளாகப் பெரிதாகப் படர்ந்திருக்கிறது. புகழ்பெற்ற சென்னை வெள்ளத்திலும் ஐந்தடி உயரச்செடி மூழ்கி முத்தெடுத்துப் பிழைத்தது.
இப்போது படு கம்பீரமாகப் பூத்துச் சொரிகிறது. அவனுடைய மகன் இப்போது காலைவேளைகளில் அரைமணி நேரம் போல் பூக்கொய்கிறான்.
இப்போது முன்போல் அவனால் எதுவும் முடிகிறதில்லை. பூத்தொடுக்கவும் கூட.
வேலூர், கடப்பேரி, பாரதி நகர்... என்று நந்தியாவட்டையின் சந்ததி தழைக்கிறது.
இந்த வீடும் இடம் போதவில்லை என்று வேறு வீடு பார்ப்பார்களோ என்று பயமாக இருக்கிறது அவனுக்கு. அப்படி ஒன்று நிகழ்ந்தாலும் இந்தத் தெருச்செடியின் அடுத்த வாரிசையும் கூடவே எடுத்துப் போகவேண்டி யிருக்குமோ?
எப்படியோ, இந்த நந்தியாவட்டைக்கு அந்தப் 'புத்' நரகம் கிடைக்காமல் இருந்தால் சரி!