
-இரா. முருகன்
நெற்றி நிறைய விபூதியும் நடுவில் குங்குமமுமாக, மஞ்சள் டெர்லின் சட்டையில் ஒரு சீனாக்காரப் பையன். ஏழெட்டு வயது இருக்கும். அவன் கையைப் பிடித்தபடி, மடித்துக் கட்டிய வேட்டியும், மஞ்சள் டெர்லின் சட்டையும், கக்கத்தில் குடையுமாக ஒரு நரை மீசைக்காரர். கொஞ்சம் பின்னால், அவசரமாகப் புடைவையைச் சுற்றிக் கொண்டது போல, இடுங்கிய கண்ணும் ஒல்லியான உருவமுமாகப் பையனின் ஜாடையில் ஒருத்தி. அம்மாவாக இருக்கும். கடைசியாக, தகர டப்பாவைச் செல்லமாக அணைத்துப் பிடித்தபடி, ஓட்டமும் நடையுமாக ஒரு மத்திய வயசுப் பெண்.
ஏழு 'ஆ' பிரிவுக்கு பூகோளப் பாடம் எடுக்க உலக உருண்டையோடு புறப்பட்ட வேதையா வாத்தியார் ஆபீஸ் அறை வாசலில் நின்றார்.
"கண்ணாடியை மாத்தித் தொலைக்கணும்... கண்ணு ஏதோ கொறக்களி காட்டுது!''
"இங்கே எட்மாஸ்டர் சாரு..."
நெருங்கி வந்த மீசைக்காரர் அவரைத்தான் கேட்டார்.
''நான்தான்... என்ன விஷயம்?''
சகல கம்பீரத்தோடும் பூமிப்பந்தை இடவலமாகச் சுழற்றியபடி கனிவாகப் புன்னகை பூக்க வேதையா வாத்தியார் முற்பட்டபோது, இடைஞ்சலாக 'ஏழு -ஆ'விலிருந்து உயர்கிற சத்தம்.
"எங்கேயிருந்து வர்றீங்க?''
வேதையா வாத்தியார் சீனாக்காரியைப் பார்த்துக் கேட்டார்.
"பர்மா... மாண்டலேயிலிருந்து வராங்க..." கூட வந்தவள் சொன்னாள்.
சீனா இல்லை... என்றாலும் அன்னிய தேசம் ...
"பர்மாக்காரப் புள்ளையைப் பள்ளிக்கூடத்துலே போடச் சட்டம் எடம் தராதேம்மா..."
வேதையா வாத்தியார் அவர்களைத் தவிர்த்துவிட்டு நடக்க முற்பட்டார். இன்னும் தாமதமானால், 'ஏழு - ஆ'வின் குட்டிப் பிசாசுகள் பள்ளிக்கூடத்தையே இரண்டுபடுத்திவார்கள்.
"பையனுக்கு அப்பன் தமிளுதான் சார்... என் தம்பி..."
நரை மீசை வேட்டியைத் தழையவிட்டபடி மரியாதையோடு சொன்னார்.
தமிழ்ப் பிள்ளையா மூக்குச் சப்பையும் இடுங்கிய கண்ணுமாக..?
"யாவாரத்துக்குப் போன எடத்துலே இந்தப் பொம்பளையைக் கல்யாணம் கட்டிக்கிட்டான்."
மீசைக்காரர், வேதையா வாத்தியார் காதருகில் சொன்னபோது கிராம்பு வாசனை.
எல்லோர் கண்ணும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து அந்தப் பெண் சங்கடப்பட்டபடி இரண்டு கைகளையும் குவித்து வேதையா வாத்தியாருக்கு வணக்கம் சொன்னாள். கையில் பளபளத்த தங்க வளையல்கள் செழிப்புக்குச் சாட்சி சொல்லிக் குலுங்கின
''தமிள்க்காரங்க எல்லாரையும் பர்மாவை விட்டுப் போகச் சொல்லி, அங்கித்து கவர்ன்மெண்ட் உத்தரவு... அங்கே நம்ம ஆளுங்களை மதிக்கவே மாட்டாங்க சார்... நான்கூட கொஞ்ச நாள் இருந்துட்டு சரிப்படாதுன்னு திரும்பிட்டேன்... தம்பிக்கு இப்ப திரும்பி வர வேண்டிய கட்டாயம்... மர யாவாரம்... லட்ச லட்சமாய்ப் பணம் புரளறதை எல்லாம் வித்துட்டு வரான்... குடும்பத்தை முன்கூட்டியே கப்பல்லே அனுப்பிச்சுட்டான்... போன வாரம்தான் பட்டணத்துலே போய்க் கூட்டியாந்தேன்...''
மீசைக்காரர் தம்பி சம்சாரத்திடம் அன்னிய பாஷையில் ஏதோ சொல்ல, அவள் பிடித்திருந்த பையிலிருந்து, நாலாக மடித்த காகிதத்தை எடுத்து நீட்டினாள்.
"சர்ட்டிபிகேட்டுங்க... மாண்டலேயிலே செட்டியார் ஸ்கூல்னு தமிழ்ப் பள்ளிக்கூடம்தான்..."
மீசைக்காரர் சொல்லிக்கொண்டே இருக்க, வேதையா வாத்தியார் வாங்கிப் பார்த்தார்.
நாலு வகுப்பு முடித்திருக்கும் பையன்.
"தமிழ் படிப்பியாடா தம்பி?"
பையன் கூச்சப்பட்டு நெளிந்தான்.
“உள்ளே ரைட்டர் இருப்பாரு. பீஸ் கட்டிச் சேர்த்துட்டு, நாலாங்கிளாஸ்லே உக்காரச் சொல்லுங்க... ஒரு பத்து நாள் பார்த்து எல்லாம் சரியாப்பட்டா மேலே அனுப்பறேன்...''
வேதையா வாத்தியார் நடக்க, மத்திய வயதுப் பெண் தகர டப்பாவை அவசரமாகத் திறந்து ஒரு கை இனிப்புகளை அவருக்கு முன் நீட்டினாள்.
"கொளுந்தியா கொண்டாந்தா... இங்கே பிள்ளைங்க எல்லாருக்கும் கொடுக்கணுமாம்... பர்மா மிட்டாயி..."
ஒன்றைப் பிரித்து வாயில் போட்டபடி வேதையா வாத்தியார் கேட்டார் "பெயர் என்னடா தம்பி?"
''மாமாந்தா."
நாலு பையன்கள். தலையெல்லாம் கலைந்து கண் சிவந்து வழிந்து, சட்டை கிழிந்து...
ஒருத்தன் விசும்பி அழுது கொண்டிருந்தான்.
'நாலு - ஈ' அம்சவள்ளி டீச்சர் மாமாந்தாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு பின்னாலேயே வந்தார்.
"கொரங்குப்பய எல்லாப் பிள்ளைங்களையும் போட்டு அடிக்கறான். இன்னிக்கே டி.சி.யைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பினாத்தான் சரிப்படும்... நேத்து பெஞ்சு மேலே ஏறிக் குதிச்சு உடைச்சு வச்சிருக்கான்... நீங்களே விசாரியுங்க சார்..."
டிரஷரிக்கு அனுப்ப சம்பளப் பட்டுவாடா பட்டியலைச் சரிபார்த்துக் கொண்டிருந்த வேதையா வாத்தியார், கூட்டுத் தொகையின் இரண்டாம் ஸ்தானத்துக்குக் கீழே பென்சிலால் புள்ளி வைத்துவிட்டு மாமாந்தாவை நிமிர்ந்து பார்த்தார்.
இவனுடைய மீசைக்காரப் பெரியப்பா, இரண்டு மாதம் முன்னால் படபடவென்று மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கி, பையனை ஐந்தாம் கிளாசுக்கு அனுப்பச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வந்தது.
"தமிழ்லே மார்க் போதாதே... கணக்கும் சுமார்தான்... ஒரு வருஷம் இருந்தே வரட்டும்... கால் வருசப் பரீட்சை வேறு முடிஞ்சாச்சு... ''
அப்படித் தீர்மானமாகச் சொல்லி அனுப்பாமலிருந்தால் சும்மா இருந்திருப்பானோ... நாலாவதோ... ஐந்தாவதோ.. குறும்பு குறைந்திருக்குமா என்ன...?
"பசங்களை ஏண்டா அடிக்கறே...? பெரிய ரவுடின்னு நெனைப்பா...? இல்லே பணம் இருக்கிற கொழுப்பா...?"
மாமாந்தா தரையைப் பார்த்துக்கொண்டு மெளனமாக நின்றான்.
''வாயைத் தொறந்து சொல்றானா பாரு... வீட்டுலே கண்டிச்சு வளர்த்தா இல்லே உருப்பட...?"
அம்சவள்ளி டீச்சர் கையை ஓங்க, மாமாந்தா விலகி விறைப்பாக நின்றான்.
"எல்லாப் பசங்களும் சீனாக்காரா... சீனாக்காரான்னு கிண்டல் பண்றாங்க சார்... இந்த டீச்சரம்மாவே வீட்டுலே பாம்பு திம்பியாடா... பல்லி திம்பியாடான்னு கிளாஸ்லே கேக்கறாங்க..."
''பொய் சார்... நான் அப்படியெல்லாம் கேக்கலை..."
அம்சவள்ளி டீச்சர் மேல் முறையீடு செய்தார்
"நீங்க சும்மா இருங்க டீச்சர்... நான் பேசிக்கறேன்... ஏம்ப்பா... நாளைக்கு உங்க அப்பானை வந்து என்னைப் பார்க்கச் சொல்லு."
மாமாந்தா ஒரு வினாடி பேசாமல் நின்றான்.
"சார்... எங்க அப்பா இன்னும் பர்மாலேருந்து வரலே... அம்மாவைக் கூட்டி வரட்டா?"
வேதையா வாத்தியாருக்கு அந்தப் பையனைப் பார்க்க ஏனோ பரிதாபமாக இருந்தது.
"உங்க பெரியப்பா எங்கேடா?"
"கடையிலே சார்."
பர்மா ஸ்டோர் என்று ஜவுளிக்கடை சமீபத்தில்தான் திறந்தது. ஒருநாள் முழுக்க ஒலிபெருக்கி அலறி வகுப்பில் பாடம் எடுக்கத் தொந்தரவாய்ப் போனது நினைவுக்கு வந்தது.
"ஒழுங்காப் படிக்கறதுன்னா இங்கே இரு. இல்லே நீயும் கடையிலே துணி கிழிக்க போய் உக்காந்துடு... தெரியுதா...? இன்னொ வாட்டி இப்படி ஏதாவது செய்தியோ வெளியே அனுப்பிடுவேன்... போடா கிளாசுக்கு..."
அவன் மெல்ல நடந்து போவதையே பார்த்தபடி நின்றார்.
"சார்... இவன் அப்பா பர்மாவிலே ஜெயில்லே இருக்கிறதா ஊர்லே பேசிக்கறாங்க தெரியுமா...? அகப்பட்டதை எல்லாம் சுருட்டி பொண்டாட்டி பிள்ளையோட அனுப்பி அவரும் கிளம்பறபோது மாட்டிக்கிட்டாராம். பண ரெட்டிப்போ எதுவோ பண்ணி..."
"டீச்சர்... நீங்க கிளாஸ் எடுக்கப் போங்க. பிள்ளைங்க போடுற கூச்சல் ஊர்க் கோடிக்கு கேக்கும் போல இருக்கு."
"சார்... உள்ளே வரலாமா...?"
முன்னால் நின்ற இளைஞனை எங்கேயோ பார்த்ததுபோல இருந்தது வேதையா வாத்தியாருக்கு.
மீசை அரும்பிய முகம் சீனக்களையில் மாமாந்தா...
"என்னப்பா... படிக்கிறியா... எந்த காலேஜ்லே..."
மாமாந்தா சுமார் அழுக்கான சாய வேட்டியில் இருந்தான். மேலே சாயம் போன சட்டை.
"படிக்கலே சார்...இங்கே எட்டு கிளாஸ் முடிச்சுட்டுப் போனேனா..? அப்புறமா தொடர்ந்து படிக்க வீட்டு நிலைமை சரிபடலே...''
வீட்டு நிலைமை? வேதையா வாத்தியாருக்குப் புரியவில்லை. கைநிறையத் வளையல் குலுங்க வந்த இவனுடைய அம்மா... பர்மாவில் அப்பா... பர்மா ஜவுளி ஸ்டோர் பெரியப்பா...
"அப்பா ஜெயில்லே இருந்து வந்து ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்கேயே தங்கிட்டாரு சார்... கொண்டு வந்த பணத்தை வண்டி வாங்க... நெலம் வாங்க... கடை வைக்கன்னு பெரியப்பா அப்பப்ப வாங்கிக்கிட்டாரு..."
"கடைதான் நல்லா நடக்குது போல இருக்கே....?"
"நடக்குது சார்... ஆனா கைமாறிடுச்சு. பெரியப்பா சினிமா எடுக்கறேன்னு போய் எல்லாம் வித்து அழிஞ்சுது... வீடும் போய் கையிலே காசு இல்லாமே நானும் அம்மாவும் தெப்பக்குளப் பக்கம் குடிசை போட்டுட்டுப் போனோம். படிப்பு நின்னு போய் நான் தச்சாசாரி லச்சுமணன்கிட்டே எடுபிடியாச் சேர்ந்தேன். அம்மா தெருவிலே இட்லிக்கடை போட்டு... போன வாரம் அவங்களும் போய் சேர்ந்தாச்சு..."
தெருவில் இட்லி அவித்து விற்ற பர்மாகாரி...
"கடைசி வரைக்கும் அப்பா வரப் போறார்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தாங்க..."
மாமாந்தா கண்கலங்க நின்றிருந்தான்.
"ஓர் உதவி செய்யணும் சார். அரபு நாட்டுலே கார்ப்பெண்டர் வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாம்... பொறுப்பான ஆளுங்ககிட்டே இருந்து நடத்தை சர்ட்டிபிகேட் கேட்கறாங்க... எனக்கு சாரைத் தவிர யாரைத் தெரியும்...?"
"என்னன்னு தர? கிளாஸ்லே பெஞ்சி எல்லாம் போட்டு உடைச்ச பயன்னு தரட்டா?"
சிரித்தபடி லெட்டர்பேடை எடுத்தார்.
வேதையா வாத்தியார் ரிடையராக நாலு நாள் இருக்கும்போது, சின்னப் பையனைக் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு அந்த பெண் படியேறி வந்தாள். கூடவே நாலைந்து பேர் .
"பையனோட அப்பா என் மச்சான்தானுங்க... கல்ப்லே இருக்காரு...ஒண்ணாங் கிளாஸ்லே பையனைப் போடணும்..."
ஃபாரின் செண்டு மணக்க நின்றவன் பேசியபடி முன்னால் நிறுத்திய குழந்தை சீனாக்கார சாயலில் இருந்தது.
"இது பிள்ளைக்கு அம்மாங்க...?"
அவள் கையில் தங்க வளையல்கள் குலுங்க வணக்கம் சொன்னாள்.
பின்குறிப்பு:-
கல்கி 03 மார்ச் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்