
கமலா அக்கா பில்லியனில் தன் பாய்பிரண்டை உட்கார வைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் போவதைப் பார்த்ததும் அமலா'வுக்கு 'திக்'கென்று இருந்தது. 'ஐயோ! இது தப்பாச்சே! கமலாவுக்கு இந்த குண்டு தைரியம் எப்படி வந்தது' என்று திகைத்தாள். 'இவளுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்ததே தப்பு. அப்பவே சொன்னேன். எனக்குப் பொறாமை என்று முடிவு கட்டினார்கள். இப்போ இந்த அசிங்கத்தைப் பார்த்து என்ன முடிவுக்கு வருவார்கள்?'
அமலாவுக்கு வயது பன்னிரண்டு. அக்காவின் புத்தம் புதிய ஸ்கூட்டரைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து கடைசியில், "ஆமா, டூ வீலர் இருந்தாத்தான் காலேஜுக்குப் போக முடியுமாக்கும்" என்று கேட்டே விட்டாள். கமலா, டூ வீலர் எப்படியெல்லாம் உதவுகிறது; எவ்வளவு சிக்கனமானது, வசதியானது என்று விளக்கியபோது அமலாவின் கோபம் அதிகரித்தது. 'சாப்பாடு வேண்டாம்' என்று முகத்தைத் தூக்கிக்கொண்டு போய் படுத்தபோது அம்மாவுக்குப் புரிந்துவிட்டது. “இந்தா, பொறாமைப்படாதே! உனக்கும் லைசென்ஸ் வாங்கற வயசு வந்துட்டா ஓட்டிப் போ. அதுக்குள்ள கமலா கல்யாணமாகி புக்ககம் போயிடுவா" என்றாள்.
ஆனால் இப்போது? 'பாய் ஃபிரெண்டை பின்னால் அமர்த்திக்கொண்டு கமலா ஊர் சுற்றுவதைப் பார்த்தால் என்ன சொல்வாள், அம்மா?'
வீடு திரும்பியதும், முதல் காரியமாக அம்மாவிடம் மூட்டை அவிழ்த்தாள்.
நான் ஏதோ பொறாமைப்படறதா சொல்லி அன்னிக்கு அடக்கினியே, இப்ப என்ன ஆச்சு பாரு'' என்றாள்.
"என்னாச்சு? என்னாச்சு?'' என்றாள் அம்மா பதற்றமாக.
''அதைச் சொல்லவே எனக்குப் பிடிக்கலே" என்று முகத்தைக் கசப்பாக்கிக்கொண்டாள் அமலா.
அம்மா பெருமூச்சு விட்டாள். 'நல்ல காலம், ஆக்ஸிடெண்ட் ஏதுமில்லை. இது வேறு ஏதோ விஷயம்.
"சொல்லப் பிடிக்கலைன்னா எதுக்கு முழ நீளத்துக்கு முன்னுரை வாசிக்கிறே?" என்றாள்.
சுருக்கென்றது. ஒருவேளை எனக்கு இப்போதும் பொறாமைதானோ? அக்கா மாதிரி ஒரு பாய்ஃபிரெண்டுடன் நானும் ஊர் சுற்ற முடியலையே என்ற ஏக்கமோ?" அந்த எண்ணத்தைக் கொன்றாள். அக்காவைப் பற்றிய கவலையில்தான் பேசுவதாக சமாதானம் பண்ணிக்கொண்டாள்.
"அங்க உன் மூத்த பொண்ணு உருப்படாம போயிண்டிருக்கா. இங்க இளையவளுக்கு தர்மோபதேசம் பண்ணு" என்றாள் எரிச்சலுடன்
அம்மாவுக்குக் கோபம் வந்தது. கவலையும் மிகுந்தது. அமலா கன்னத்தில் ஒரு 'பளார்' விழுந்தது. "என்னடி செய்தா, என் பொண்ணு? சொல்லித் தொலையேன்!"
கண்களில் கண்ணீர் பொங்கியது. அதை ஆவியாக்கும் அளவில் கோபக் கனல் வீசியது. கன்னத்தை உள்ளங்கையால் ஒற்றிக்கொண்டு, ''பாய் ஃபிரெண்டை பில்லியனில் உட்கார வைச்சுண்டு ஊர் சுத்தறா; போதுமா?" என்று கேட்டாள்; ஆத்திரமாக.
"மூட்டி விட்டுட்டியா!" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் கமலா. "சகுனி, கூனி எல்லாம் உன்கிட்ட பிச்சை வாங்கணும். ஏண்டி, பாய் ஃபிரெண்டு என்கிறது என்ன கெட்ட வார்த்தையா? என்ன தப்பு பண்ணிட்டேன்? இன்னிக்கு ஏதோ அவசரம் என்று ரமேஷ் லிஃப்ட் கேட்டான். வீட்டிலே இறக்கி விட்டு வந்தேன்..."
“அப்படி என்ன அவசரமாம்? விசாரிச்சியா?" என்றாள் அம்மா கொஞ்சம் சந்தேகமாக.
"அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஃபோன் வந்ததாம். என்னமோ ஏதோன்னு தவிச்சான். மனிதாபிமானத்துடன் நடந்துக்கிறது தப்பா?"
"நிஜமாகவே உடம்பு சரியில்லேன்னா மனிதாபிமானம்தான். ஆனா பஸ்ஸிலே இடிக்கிறதைவிட ஸ்கூட்டரில் உரசிட்டுப்போறது சுகம் என்கிறதுக்காக எமர்ஜென்ஸியை கற்பனை பண்ணியிருந்தா அது மனிதாபிமானம் இல்லை, அதுக்கு வேற பேரு."
"இப்ப என்னங்கறே? அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லேன்னு டாக்டா் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு வரச் சொல்றியா...?"
அமலாவுக்கு பதில் கூறத் தெரியவில்லை. "எக்கேடும் கெட்டுப் போ" என்று பாத்ரூமுக்குள் போய் கதவை அறைந்து சாத்தினாள். 'டமால்!'
''தீபாவளிக்கு ஒத்தை வெடியே வாங்க வேண்டாம். இவளும் பாத்ரூம் கதவுமே போதும்" என்றாள் கமலா.
"அவ சொல்றதிலேயும் ஒரு பாயிண்ட் இருக்கு; ஜாக்கிரதையா இரு" என்று அம்மா எச்சரிப்பதும் அக்கா 'தம்தம்' என்று நடந்து படுக்கை அறைக்குள் நுழைவதும் மெலிதான ஒற்றைக் கல் சுவரை ஊடுருவி குளியலறையில் இருந்த அமலாவின் காதில் விழுந்து, மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது.
அன்றிரவு பர்வதம் ராகவனிடம் சொன்னாள்: "கமலாவுக்கு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுத்ததே தப்போன்னு தோணுது."
"ஏன்? ஹெல்மெட் போட்டுக்க மாட்டேன்றாளா?"
"தலைக்கு ஹெல்மெட் போட்டுக்கறா சரி. இளம் வயசு; மனசுக்கு என்ன கவசம் இருக்கு''
ராகவன் பெரிதாகக் கொட்டாவி விட்டபடி டேபிள் லாம்ப் அணைத்து புத்தகத்தைப் 'பட்'டென்று மூடிவைத்து தலையணை தட்டினான்.
அவனுடைய அசிரத்தையைப் பொருட்படுத்தாமல் தன் கடமை என்ற நோக்கில் பர்வதம் நடந்த கதையைச் சொல்லி முடித்தாள்.
இருட்டிலே ராகவன் குரல் தூக்கத்துடன் கலந்து மழலை பேசியது : "இந்தக் காலத்துப் பசங்க தேவலாம். காதல் இவங்ககிட்ட கைகட்டி நிக்குது. பொய்யோ மெய்யோ என்னத்தையோ சொல்லி, தைரியமா பேசி, எப்படியோ காரியத்தை சாதிச்சுடறாங்க. நம்மை மாதிரி பயந்து பயந்து சாகலே."
"போதுமே அசடு வழியறது" என்று சொன்னாளே தவிர, பர்வதம் அந்தப் பழைய நாட்களின் நினைவுகளில் - ராகவனின் குறட்டை ஒலி பின்னணியில் - ஆழ்ந்து போனாள்.
அவள் ஏறும் அதே பஸ்ஸில் அவனும் காத்திருந்து ஏறுவான். அவன் வீடு வேறு எந்த திக்கிலோ இருந்தது. ஆனாலும் இந்த ரூட்டில் வருவான். அவள் உட்காருகிற ஸீட்டுக்கு எதிர் ஸீட்டில் அமர்ந்து, அவளையே பார்த்துக்கொண்டிருப்பான். அந்த நாட்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தவிதம் இதற்கு அனுசரணையாக இருக்கும். மேலும் கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது ஆபீஸ் கும்பல் இராது. எதிரும் புதிருமாக உட்கார இடம் கிடைக்கும். அவன் தன்னையே உற்று நோக்குகிறான் என்பது அவளுக்குத் தெரியும். ஜன்னல் வழியே ஆகாயத்தைப் பார்ப்பதுபோல இருப்பாள். அப்புறம் வேறு திசையில் கவனம் ஈர்க்கப்பட்டதுபோல் திரும்புகிற பாவனையில் அவள் திராட்சைக் கண்கள் அவனுடைய ஊடுருவும் பார்வையைச் சந்திக்கும். அவனுடைய முகப் பொலிவு, தோள்களின் திரட்சி எல்லாவற்றையும் ஒரு கணத்தில் கபளீகரம் பண்ணிக்கொண்டு அவள் பார்வை அப்பால் நகர்ந்துவிடும். அப்போது அவளுடைய சந்தன வர்ண முகத்தில் செம்மை படர்ந்தாலும் தலைகுனிவதில்லை என்ற வீம்புடன் அவள் இருப்பதையும் அவன் உணர்வான்.
சற்று நேரம் சென்று மறுபடி எதிர்திசையில் ஏதோ கவனம் ஈர்க்கப்பட்டதுபோல தலை திருப்பி, இவன் இன்னமும் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை உணர்ந்து, முகம் சிவந்து, தன் பலவீனத்தை ஒப்புக்கொள்ளாமல் தலை நிமிர்ந்து... இப்படி எத்தனை நாட்கள், மாதங்கள்... பேச்சுக் கொடுக்க தைரியம் இருந்தால்தானே!
ஒருநாள் அவள் தன் பாட்டனி நோட்டுப் புத்தகத்தைப் புரட்டியபோது அதற்குள் அவளையும் அறியாமல் ஒரு சித்திரம் புகுந்துகொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டாள். மெலிதான அட்டையில் தீட்டப்பட்டிருந்த வண்ண ஓவியம். ஒளிரும் முழு மதி. நிலவு குடித்து பம்மி இருக்கும் ஒரு மேக மண்டலம் கண்சிமிட்டும் ஓரிரு தாரகைகள். நிழலாகத் தாழ்ந்து நீள்கின்ற ஒரு மரக்கிளை. அதில் அமர்ந்து ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொண்டிருக்கும் இரு பறவைகள். பரிசு பெறக்கூடிய வண்ணச் சித்திரம் அல்ல. கள்வன் புகுந்துகொண்ட உள்ளங்களை உணர்த்திய ஓவியம். மனத்தின் ஆசைகளை வண்ணங்களாக வடித்தெடுத்து வடிவம் தந்த ஓவியம்.
அதை முதன் முதலில் பார்த்ததும் இதயத் துடிப்பு சட்டென்று நின்று பிறகு மீண்டும் இயங்க ஆரம்பித்தது. தொடவே பயமாயிருந்தது. தைரியத்தைத் திரட்டிக்கொண்டு ஒரு விரலால் அதன் விளிம்போடு வருடிக் கொடுத்த பிறகு அதை விட்டு கையை எடுக்கவே பிடிக்காமலிருந்தது. நாலு விரல்களான அந்த லவ் பேர்ட்ஸை அன்புடன் தடவிக்கொடுத்து விரல்களை அதரங்களில் ஒற்றி எடுத்தபோது மெய்சிலிர்த்தது. எப்போது, எப்படி, சாமர்த்தியமாக இந்தப் படத்தை இந்த நோட்டுப் புத்தகத்தில் செருகினான்?
மறுநாள் பஸ்ஸில் அவன் புருவங்கள் கேள்விக்குறியில் உயர, இவள் மெதுவாக நோட்டும் புத்தகம் திறந்து அந்தப் படத்தைக் காட்டி, தடவிக் கொடுத்து புன்னகைக்க, அவன் நெளியா இவள் தவிக்க... மௌன நாடகம் தொடர்ந்தது ஒரே ஒரு வித்தியாசம்: படத்துக்குப் பதில் கடிதம் - பதில்....
அந்தக் கடிதங்களுள் ஒன்று இவள் தங்கையிடம் சிக்கிவிட, "அம்மா! இங்கே வந்து பாரேன் இந்த அநியாயத்தை” என்று அவள் அலற... விஷயம் அம்பலமாகி, அப்பா வீடே இரண்டுபடும்படியாக கூச்சல் போட்டு இரைய, அம்மா அவளையும் அடித்து, தன்னையும் அடித்துக்கொண்டு அழ...
கொஞ்சம் முற்போக்கு சிந்தனை உள்ளவர் என்பதாகப் பர்வதம் கருதிய அவளுடைய மாமாவின் எதிரே காதலர் இருவரும் நின்று கண்ணீர் மல்கக் காதல் கதை சொன்னார்கள். தன் உதவி கோரி காதலர்கள் வந்து விட்டதில் மாமாவுக்கு அசாத்தியப் பெருமை. அவர்கள் கல்யாணத்தை முடித்து வைக்கவே ஆண்டவன் தன்னை அனுப்பி வைத்திருப்பதாகக் கருதி, இரு குடும்பத்தாரிடமும் மாறி மாறி வாதாடி, அதில் ஏற்ற இறக்கங்கள் கண்டு, காதலர்களையும் அதற்கேற்ப இன்ப துன்பங்களில் ஆழ்த்தி, கடைசியில் வெற்றி பெற்று... சுபம்.
அவர்கள் நரசிம்ம மாமாவை அடிக்கடி சந்திக்க நேர்ந்த காலகட்டத்தில், "உங்க பாடு எவ்வளவோ தேவலாம் என் கதையைக் கேள்” என்று அவர், தான் ஸ்ரீதேவி மாமியின் கரம் பற்றுமுன் பட்டபாட்டை விவரித்திருந்தார்.
"இவ கழுத்துல நான் தாலி முடியறதுக்கு முன்னாடி சரியா பத்தொன்பது வீடுகள்ல பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொண்டேன். பாவம் அந்தப் பொண்ணுங்க. முதல்ல என் காலில் விழுந்து நமஸ்கரிச்சு மன்னிப்புக் கேட்டுட்டு அப்புறம்தான் பாடுங்க. அதனால் அந்தப் பாட்டையும் சகிச்சுப்பேன். ஆனா, அப்பா அம்மாகிட்ட வாய் திறந்து பேச தைரியம் கிடையாது. ஒரு கடிதாசு எழுதி வைக்கக் கூடத் துணிச்சல் பிறக்காது. பத்தொன்பதாவது பெண்ணையும் தலையாட்டி மறுத்த பிறகுதான் அம்மாவுக்கே என்னமோ தோணிப் போய், ஏண்டா எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் பிடிக்கலே பிடிக்கலேன்னு சொல்லி அவாளோட சாபத்தை சம்பாதிச்சுக்கறே? மனசுல எந்த மூதேவியையாவது நினைச்சுண்டிருக்கியா என்ன? சொல்லித் தொலையேன்" என்றாள்.
நானும் அதே கோபத்தோடு, "வேணும்னா வரதுவோட பொண் ஜாதகத்தைக் கேட்டுத் தொலையேன்! வரவர உன் வாக்கு பொய்க்காம மூதேவியா இருந்தாலும் பேராவது ஸ்ரீதேவியா இருந்து தொலையட்டுமே" என்றேன்.
அம்மா இடி விழுந்தது போலானாள். வரது என்ற வரதராஜன், அப்பாவிடம் காரியஸ்தராக வேலை பார்த்து வந்தவர். ஐம்பது பவுன் நகை, ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வெள்ளி சாமான்கள், ஏழு சுத்து முறுக்கு, எக்கச்சக்கமா பட்டுப் புடைவைகள் என்று மனசுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டிருந்த அம்மா, ''ஐயோ! ஐயோ! மயக்கிட்டாளே, மாய்மாலம் பண்ணிட்டாளே" என்று லபோதிபோ என்று அடித்துக்கொண்டாள். அப்பாவோ வரதுவை அழைத்து, ''என்ன ஓய், உம்மை எனக்குக் கணக்கு எழுதச் சொன்னா, உம்ம பொண்ணை விட்டு என் பிள்ளையையே கணக்குப் பண்ணச் சொல்லிட்டீரே! என் சொத்தையெல்லாம் அபகரிக்க இப்படி ஒரு திட்டமா?" என்று கர்ஜித்தார். எண்சாண் உடம்பு ஒரு சாணாகி நின்று கூசிக் குறுகிப் போனார்.
"இவளை ஊரை விட்டே விரட்டறேன் என்று பஞ்சாயத்துக்குப் போனார் அப்பா. அப்பாவுக்குப் பயந்த தீர்ப்பு எப்படி இருக்கும்னு புரிந்த வரதராஜன், "வழக்கு நடப்பதற்கு முன் நானே போய்விடுகிறேன்” என்று ஸ்ரீதேவியுடன் புறப்படத் தயாரானார்.
"அப்போ எங்கேருந்துதான் எனக்கு தைரியம் வந்ததோ, துணிந்து பஞ்சாயத்து தலைவர் பரமசிவப் பிள்ளை வீட்டுக்குப் போய் அவரைச் சந்திச்சு, "அநியாயமா வரதராஜனை கெட்ட பேரோட விரட்டி அடிக்காத குறையா அனுப்பி வைக்காதீங்க. அந்தப் பொண்ணு குனிஞ்ச தலைநிமிராது; கடைக்கண்ணாலகூட என்னைப் பார்த்ததில்லே. நான்தான் அவ அழகிலே மயங்கி கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்" என்று சொல்ல, அவரும் தர்ம நியாயம் கருதி, அப்பாவிடம் பேசி, அவர் எதிர்ப்பையெல்லாம் ஊர்ப் பிரமுகர்கள் உதவியுடன் தகர்த்து...
அப்பாவே அப்புறம் தன் ஸ்டேட்டஸுக்குக் குறையாமல் கல்யாணம் நடக்கணும்னு தீர்மானித்து... நாலு நாள் கல்யாணம்: ஆயிரம் பேர் சாப்பாடு; ரெட்டை நாயனம்; பாண்டு சாரட்டு ஊர்வலம்."
"கிருஷ்ணபரமாத்மாவே வந்து என்னை கொத்திக்கொண்டு போன மாதிரி எனக்கு இருந்தது" என்று ஸ்ரீதேவி மாமி பரவசத்தோடு முடித்தாள்.
பழம் நினைவுகளில் ஆழ்ந்துபோனதால் இரவு சரியாகத் தூங்காமல் அதிகாலையில் அலாரம் அடித்தபிறகும் பர்வதத்தின் கண்கள் சொக்கின. ''பர்வதம்! என்ன ஆச்சு உனக்கு சீக்கிரம் எழுந்து காப்பி போடு! மணி ஆறாச்சு!" என்று உலுக்கினான் ராகவன்.
அவள், அவன் கரங்களைப் பற்றிக்கொண்டு, "ஏன்னா, நரசிம்ம மாமா கதை ஒரு மாதிரி, நம்ம கதை இன்னொரு மாதிரி, இப்பு கமலா கதை வேறு மாதிரி, அமலா கதை எந்த மாதிரியாகுமோ?" என்றாள். கண்களில் இலேசான கலக்கம்.
''ஒரு மாதிரியுமில்லே. மாப்பிள்ளை மாலிகுலர் பயாலஜியிலே, 'டி.என்.ஏ. தொடர்பும் பாரம்பரியக் காதல் பாட்டர்னும்'னு ஆராய்ச்சி பண்ணி அமெரிக்க யூனிவர்ஸிடியிலே கம்ப்யூட்டர்ல கட்டுரை எழுதிட்டிருப்பான். அமலா, ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்திலேருந்து இன்டர்நெட் வழியா குறுக்கே புகுந்து அவன் கம்ப்யூட்டர் திரையில் 'ஐ லவ் யூ'ன்னு எழுதுவா, படம் போடுவா... பொறாமைப்பட வேண்டியதெல்லாம் இனிமே கம்ப்யூட்டர்கள்தான்" என்றான்.
பின்குறிப்பு:-
கல்கி 09 ஜீன் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்