
உன் அலும்ப பார்த்தவன். உங்கப்பன் விசிலக் கேட்டவன். உன் மகனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன் என்ற வரிகள் சும்மா பேச்சுக்கு எழுதப்பட்டவை அல்ல. தமிழ்த் திரையுலகம் ஐம்பது ஆண்டுகளாகக் கண்டுகொண்டிருக்கும் ஒரு யதார்த்தம். தமிழகம் மட்டுமல்ல இந்தியத் திரையுலகமே ஒரு நடிகரை தொடர்ந்து வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மட்டும் தான். இவருக்கு முன்னால் வந்தவர்கள், சம காலத்தவர்கள், பின்னால் வந்தவர்கள் அனைவரும் காலப் போக்கில் காணாமல் போய்விட, 1975 இல் ஆரம்பித்த திரைப்பயணத்தை இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். கமல் ஹாசன் மட்டுமே இதில் சற்றே விதிவிலக்கு.
தமிழ் திரையுலகை ரஜினிக்கு முன் ரஜினிக்குப் பின் என்று மட்டுமே பிரிக்க முடியும், அதுவும் பெயரளவில் மட்டுமே. இன்று வரை ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருப்பதால் ரஜினிக்குப் பின் என்பது எப்பொழுது சரியாக இருக்கும் என்பதே ஒரு ஆச்சரியமான கேள்வி தான். அவர் திரையுலகை விட்டு முழுமையாக விலகினால் மட்டுமே இந்த கேள்வியை எழுப்ப முடியும்.
தமிழ் சினிமாவின் அட்சயப்பாத்திரம் என்றல் அது இவர் மட்டுமே. விஜய், அஜீத் என அடுத்த கட்ட நகர்விற்குப் பிறகும் 'என் வழி தனி வழி' என்று அவரது வசனம் போலவே நடைபோட்டுக் கொண்டு இருக்கிறார். வயதுக்கு ஏற்ற வேடங்களில் அவர் நடிக்கத் தொடங்கிவிட்டாலும் அவர் படங்களில் ஹீரோ என்றால் அவர் மட்டுமே. போட்டிகள் நிறைந்த திரையுலகில் இது ஒரு சாதாரணமான விஷயமே இல்லை. எப்படி எம்ஜிஆர் சிவாஜி காலத்திற்குப் பின் வந்த நடிகர்கள் இவர்கள் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாதோ அதுபோல் தான் இவரும். இவரது ஸ்டைல், கேரக்டர்கள், உடல் மொழி இல்லாமல் இருப்பதில்லை. இருந்ததில்லை. தற்போதைய பிரபலங்கள் அனைவரும் இவரின் சிஷ்யர்கள், தம்பிகள் என்றே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஆரம்பத்தில் உலா வந்தனர். இதற்கு யாருமே விதிவிலக்கில்லை.
1975 இல் அபூர்வ ராகங்களில் சற்றே எதிர்மறையான ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானபோது, தான் இப்படியொரு ஆளாக மாறுவோம் என்று நினைத்ததில்லை என்று அவ ரே குறிப்பிடுகிறார். மூன்று முடிச்சு படத்தில் கமலுக்கு முப்பதாயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டதை அறிந்த இவர் நாமும் இவ்வளவு வாங்குவோமா என்று, கூட நடித்த ஸ்ரீதேவியிடம் கேட்டுள்ளார். ஐம்பது ஆண்டுகள் கழிந்து விட்டன. இன்று வரை தமிழில் ஏன் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலை சாதாரணமாக வந்ததில்லை.
நடிக்கத் தொடங்கிய பத்து ஆண்டுகளில் நூறு படங்கள் என்பது எந்தத் தமிழ் நடிகரும் அவ்வளவு சுலபமாக முடித்திட முடியாத ஒரு சாதனை. வருடத்திற்குப் பத்து படம் என்ற அளவு இனி வரும் காலங்களில் சாத்தியமே இல்லை. அதுவும் 1978 இல் ஒரே ஆண்டில் இருபத்தியோரு படங்கள். அனைத்துப் படங்களும் மாபெரும் வெற்றிகள் பெறாமல் போயிருக்கலாம். ஆனால் தயாரிப்பாளருக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ எந்தவிதமான நஷ்டமும் தராத படங்கள் என்று அடித்துச் சொல்லலாம். ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் அந்த நேரத்திற்கான இண்டஸ்ட்ரி ஹிட் எனப்படும் வசூல் சாதனைப் படங்களை இவர் கொடுத்திருக்கிறார். இந்த ஐம்பது ஆண்டுகளிலும் இது தான் நிலை. பத்து கோடியைத் தாண்டிய முதல் படம், எண்ணூறு நாட்கள் ஓடிய முதல் படம், என எந்தச் சாதனையை எடுத்துக் கொண்டாலும் அது இவர் படங்கள் மட்டுமே. தற்போதுள்ள நடிகர்களில் நூறு படங்கள் ஹீரோவாக நடித்து முடிப்பார்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. இது அவர்களுக்கும் தெரியும்.
இன்று வரை ஒரு படத்தின் வெற்றியை நூறு கோடி கிளப் என்ற அடைமொழிக்குள் கொண்டு வருகிறார்கள். அந்த நூறு கோடியை முதலில் தொட்ட படம் சிவாஜி. படிக்காதவன், அண்ணாமலை, தளபதி, என அனைத்தும் அந்தந்த வருடத்தின் வெற்றிப்படங்களில் முதலிடம். மணிரத்னம் கமல் இருவரும் சேர்ந்து பணியாற்றிய நாயகன் இன்று வரை ஒரு தமிழ் சினிமாவின் மைல்கல்லாகவும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. நாயகனுடன் சேர்ந்து வந்த மனிதன் வசூலில் இதைச் சுலபமாகக் கடந்து சென்று விட்டது என்பது மணிரத்னமே ஒப்புக்கொண்ட உண்மை.
தனக்கென்று ஒரு பார்முலா. எந்தவிதமான பரிட்சார்த்தமான படங்களும் கிடையாது. மக்களின் ரசனை என்னவோ அது தான் தன்னுடைய ரசனை. படம் ஓட வேண்டும். அனைவரும் லாபம் பெற வேண்டும். இது மட்டுமே இவர் குறிக்கோளாக இருந்தது. எஸ் பி முத்துராமன் மற்றும் மகேந்திரன் போன்றவர்களின் வற்புறுத்தலின் பேரில், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை போன்ற படங்களிலும் நடித்துத் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தவர். ஆனால் ஜனரஞ்சகமான படங்களே தன்னுடைய ஆதர்சம் என்பதில் உறுதியாக இருந்தார்.
தமிழ்த் திரைப்படங்களை உலக அளவில் அதுவும் குறிப்பாக அமெரிக்காவில் கொண்டு சேர்த்ததில் முதலிடம் இவருக்குத்தான். இவரது படங்கள் தமிழகத்தில் பெறும் அதே அளவு வரவேற்பை மேல் நாடுகளிலும் பெற ஆரம்பித்தன. வெளிநாடுகளில் நூறு கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமை கபாலிக்கு உண்டு. ஓவர்சீஸ் மார்க்கெட் என்ற ஒன்றை உருவாக்கி இன்று வரை தமிழ்திரையுலகம் தக்க வைத்துக்கொள்ள இவர் படங்கள் உதவுகின்றன. சமீபத்திய ஜெயிலரின் வெற்றியே இதற்குச் சாட்சி.
படையப்பா, பாட்ஷா போன்ற படங்கள் இவரது அரசியல் ஆர்வத்தையும், இவர் வார்த்தைகளுக்கு இருந்த மதிப்பையும் மக்களுக்குத் தெரியவைத்தன. முத்து என்ற ஒரே படம். ஜப்பான் மக்களின் மொத்த ஆதரவும் இவரிடம் வந்துவிட்டது. ரசிகர் மன்றம் ஆரம்பித்து இவர் படங்களின் வெளியீடுகள் கொண்டாடப்பட்டு. அங்கிருந்து இங்கு மக்கள் வந்து படம் பார்க்கும் வைபவமும் நடக்க ஆரம்பித்து விட்டது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்றும் இன்றும் ஜப்பானைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அன்னதானம், கேக் வெட்டுதல் என்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
1985 இல் நூறு படங்கள் முடித்து விட்டாலும் அடுத்த நாற்பது ஆண்டுகளில் எழுபது படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். பாபாவின் மகத்தான தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார். இவரது திரையுலக வாழ்வு அஸ்தமனமாகி விட்டது என்று பேச்சு வந்தது. வந்தது சந்திரமுகி. 'நான் யானையல்ல குதிரை. ஓடிக்கொண்டே இருப்பேன்' என்று மீண்டும் நிரூபித்தார். சிவாஜி ப்ரொடக்க்ஷனின் வாழ்நாள் வெற்றி இந்தப் படம்.
உடலளவில் மெனெக்கெடமாட்டார் என்ற பெயரை எந்திரனில் உடைத்தார். கமல் நடிக்க இருந்த படத்தில் இவர் நடித்தால் எப்படி எடுபடும் என்ற விமர்சனங்கள் சுக்கு நூறாயின. தமிழுக்கு இருநூறு கோடி வசூல் படம் கிடைத்தது. தமிழ்ப்படங்களில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெயரை 2.0 எடுத்தது. எந்திரன் அளவு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஐநூறு கோடிக்கு மேல் வசூலித்துச் சாதனை புரிந்த படம் 2.0.
காலா, அண்ணாத்த, தர்பார் எனத் தொடர் தோல்விகள். இவரைப் பொறுத்த வரை தோல்விப்படங்கள் என்பது நூறு முதல் இருநூறு கோடி வசூலித்த படங்கள். தன்னுடைய வெற்றிகளின் அளவை அந்த உயரத்தில் வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இவருக்கு இவரது முந்தைய படங்கள் மட்டுமே போட்டி. கமல்ஹாசன் உள்பட தனது போட்டியாக இவர் யாரையுமே கருதுவதில்லை. ஆனால் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இவர் தான் போட்டி. தான் அதற்குத் தயார் என்று தொடர்ந்து நிரூபித்துக் கொண்டு வருகிறார்.
'விக்ரம்' திரைப்படம் கமலின் திரைவாழ்வில் ஒரு மிகப் பெரிய திருப்பம். இப்படியொரு வசூல் சாதனையை அவர் பார்த்ததே இல்லை. ஐநூறு கோடி வசூல் என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் மிகப் பெரிய சாதனை. இந்தப் படத்தின் வசூல் சாதனையை ஆறே மாதங்களில் பொன்னியின் செல்வன் முறியடித்தது. இதை ரஜினி கவனித்துக் கொண்டு தான் இருந்திருக்க வேண்டும். தனது நண்பரின் வெற்றி அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அவருக்குள் இருந்த வெற்றிக்கான தேடல் அவரைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்தது.
உடல்நிலை சரி இல்லாமல் படங்களே வேண்டாம் என்று விட்டுவிடுவார் என்ற பேச்சு உலா வர ஆரம்பித்தது. புதிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்துத் தன்னை வேறு பரிணாமங்களில் காட்டிக் கொள்ள ஆரம்பித்தார். கார்த்திக் சுப்பாராஜ், ரஞ்சித், சிவா. ஏ ஆர் முருகதாஸ் என வெற்றி இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார்.
அப்படி அவர் சேர்ந்து பணியாற்ற முடிவுச் செய்தவர் தான் நெல்சன். வித்தியாசமான இயக்கத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என மூன்று படங்கள். பீஸ்ட் சரியாகப் போகவில்லை என்ற பேச்சு இருந்தாலும், முடிவு செய்தது செய்தது தான் என்று இவர் நடித்த படம் தான் ஜெயிலர். 2023 இல் இண்டஸ்ட்ரி ஹிட். விக்ரம், பொன்னியின் செல்வனை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. அறுநூறு கோடிக்கு மேல் வசூல். தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்று மீண்டும் நிரூபித்து விட்டார்.
அரசியல் மட்டுமே இவர்மேல் வைக்கப்பட்டுள்ள ஒரு மிகப் பெரிய குறை. வருகிறேன் வருகிறேன் என்று கூறிக்கொண்டே இருந்து கடைசியில் அந்த முடிவைத் திரும்பப் பெற்று விட்டார். ஆனால் அது எவ்வளவு சமயோசிதமாக முடிவு என்பதையும் உணர வைத்தார். இவருக்கு முன் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்துப் போட்டியிட்டு கமல்ஹாசன் பெற்ற பின்னடைவுகள் அதை நிரூபித்தன. அரசியலுக்கு வருவேன் என்று சொன்னபோது ஆதரவு கொடுத்த கட்சிகள் அனைத்தும் இவர் வரமாட்டேன் என்று சொன்ன போதும் குறையவில்லை. விட்டு விடவில்லை. சமீபத்திய திருமா வளவன் சந்திப்பு ஒரு உதாரணம். பிரதமரில் இருந்து முதல்வர்வரை அனைவரிடமும் நட்பு பாராட்டுகிறார். அம்பானி முதல் அமிதாப் வரை தொடர்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள். அரசியலோ சினிமாவோ ஆன்மீகமோ முதல் அழைப்பு இவருக்குத்தான். அரசியல் விளையாட்டு சினிமா என எல்லாத் துறைகளிலும் ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உண்டு.
மிகைப்படுத்தல் என்பது ஒவ்வொரு அணுவிலும் ஒளிந்திருக்கும் சினிமாவில், படத்தை விட்டு வெளியே வந்தால், தான் இப்படித் தான் என்று பாசாங்கு இல்லாமல் வர ஆரம்பித்த முதல் நடிகர் இவர் தான். மேக்கப் என்பது காமிராவிற்கு முன்பு மட்டுமே. மற்ற இடங்களில் நான் ஒரு சாதாரண மனிதன் என்று தான் இன்று வரை இருக்கிறார். சூப்பர் ஸ்டார் பட்டம்குறித்த சர்ச்சை எழுந்தபோது அதை ஜெயிலர் மற்றும் லால் ஸலாம் பட மேடைகளில் தெளிவாக்கினார். அந்தப் பட்டம் தனக்கு என்றுமே ஒரு பொருட்டில்லை என்று தான் இவ்வளவு ஆண்டுகளாகச் சொல்லி வந்திருக்கிறார். இந்தி, தெலுங்கு என எந்த மொழியானாலும் அந்தந்த நடிகர்கள் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் தான் என்று சொல்வார்கள். அமிதாப்பே இதை உறுதி செய்திருக்கிறார்.
நல்ல படங்களை, இயக்குனர்களை நேரில் அழைத்துப் பாராட்டுவது, கடிதம் எழுதுவது போன்ற விஷயங்களை இன்று வரை செய்து வருகிறார். தன் மேல் வைக்கப்படும் விமர்சனங்களை அவர் உணர்ந்து தான் இருக்கிறார். ஆனாலும் அதற்குத் தன் படங்கள் மூலம் மட்டுமே பதிலளிக்கிறார்.
அவர் படங்களைத் தேர்வு செய்யும் வேகம் இன்னும் பிரமிப்பாகத் தான் இருக்கிறது. கூலி, ஜெயிலர் 2 என்று வரிசை கட்டிப் படங்கள் வருகிறது. அவருக்குக் கிடைக்கும் மரியாதை அவரது வெற்றிகளாலும் நடவடிக்கைகளாலும் தரப்படுவது. மூத்த கலைஞர் என்பதை மீறி ரஜினிகாந்த் என்பவரின் ஆகர்ஷம் அனைவரிடமும் பரவிவிடுகிறது. விழாக்களில் அவரது வருகைக்கு இன்று வரை ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு மகத்தானது. மேடைகளில் அவர் பேசும் பேச்சுக்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. அரசியல் விவகாரங்களில் அவரது கருத்துக்கள் கேட்பது இன்று வரை நிற்கவில்லை.
தன்னை மட்டும் முன்னிறுத்தாமல் சமகால நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடனும் தொடர்நது பணியாற்ற விரும்புகிறார். அவரது ஸ்டைலை மட்டும் நம்புவதில்லை. அவரது வசன உச்சரிப்பு, அமைதியான இயல்பான நடிப்பு என அனைத்திலும் இன்னும் அவர் பார்மில் தான் இருக்கிறார் என்பதைக் காட்டிக் கொண்டே இருக்கிறார். புதிதாக வரும் ஆட்களானாலும் சரி பழைய ஆட்களானாலும் சரி ஒரு ரஜினி படம் செய்து விட்டால் போதும் அப்போது தான் தங்கள் கேரியர் முழுமையடையும் என்று நம்புகிறார்கள். மணிரத்னம், மாரி செல்வராஜ், வெங்கட் பிரபு எனப் பல பெயர்கள் அடுத்தடுத்த படங்களுக்கு அடிபடுகின்றன.
தலைவா தலைவா என்று கொண்டாடும் ரசிகர்கள் அனைவரும் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. இத்தனை வயதிலும் இவரது அயராத உழைப்பு. வெற்றிக்குப் பாடுபடும் அந்த வெறி. பொதுவெளிகளில் வெளிப்படுத்திக்கொள்ளும் ஆளுமை. ஒரு சின்னத் தோல்விக்குக் கூடத் துவண்டுவிடும் மனநிலையுள்ள இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் முன்னெப்போதும் இல்லாத ஒரு வெற்றியுடன் தன்னை வெளிக்காட்டுவது என அவரிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது.
நாட்டுக்கும், மக்களுக்கும் அவர் என்ன செய்தார் என்ற கேள்வி அவரை நோக்கி எப்பொழுதும் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவர் செய்வது தெரிந்து செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை தன்னுடன் வைத்திருக்கிறார். அவர் படங்கள் வரும் தினங்கள் இன்று வரை கொண்டாட்ட நாட்களாகின்றன. நீங்க வந்தா மட்டும் போதும் என்று அவர் சிவாஜியில் வசனம் பேசினாலும் ரசிகர்களுக்கும் அவர் திரையில் வந்தால் மட்டும் போதும் என்ற மனநிலையை விதைத்திருக்கிறார். படம் பார்க்கும் மூன்று மணி நேரமும் தங்கள் அனைத்து கவலைகளையும் மறந்து மகிழ வைக்கிறார்.
ஒன்றல்ல இரண்டல்ல ஐம்பது ஆண்டுகள். நூற்றி எழுபது படங்கள். இது தமிழ்த் திரையுலகில் அவர் அடியெடுத்து வைத்த பொன்விழா ஆண்டு. அதைச் சிறப்பாகக் கொண்டாட பல ஏற்பாடுகள் யோசிக்கப்பட்டு செயல்வடிவம் பெறக் காத்திருக்கிறது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஜெயிலர் 2 அறிமுக வீடியோவும், கூலி தொடர்பான ஒரு அறிவிப்பும் வரவிருக்கிறது என்று செய்தி. இவரது ஆர்ப்பாட்டமில்லாத அதே சமயம் அற்புதமான நடிப்பில் உருவான தளபதி இன்று மறுபடியும் வெளியாக இருக்கிறது.
இப்படியாகத் தமிழகத்தில் மையம் கொண்டுள்ள இந்தக் காந்தத்தின் ஈர்ப்பும் வசீகரமும் தொடர வேண்டும். தொடரும்.