
-அஸ்வினி
"நந்திதா! ஏய் நந்து!"
உலுக்கப்பட்டவளாய் நந்திதா விழித்தாள்.
"ம்... எ...என்ன சுமித்ரா?”
"நல்லாருக்கு நீ கேக்கறது. நானும் அப்பவே பிடிச்சு பார்க்கறேன். கம்ப்யூட்டர்ல கைதான் இருக்கே தவிர, மனசு மட்டும் எங்கேயோ இருக்கற மாதிரி இருக்கு! மாப்பிள்ளைக் கனவா? ஹௌ ஈஸ் மாப்பிளே? அரவிந்த்சாமியா? ஷாருக்கானா?"
"அம்மா, தாயே, போதும்!"
"சொல்லு. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்ன சொன்னாங்க? பிடிச்சிருக்காமா? மாப்பிள்ளை எப்படி இருக்கார்?''
பெண் பார்த்து விட்டுப் போன அரவிந்த் நினைவில் வந்து நின்றான். நந்திதாவுக்கு.
உண்மையிலேயே அரவிந்தசாமி மாதிரி நிறம் இல்லை என்றாலும். ஆறடி தோற்றத்தில் ஒரு அசத்தல் இருந்தது. பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாதுதான்.
ஆனால் இது மட்டுமே ஒருவனுடைய குணங்களை நிர்ணயித்து விடுமா?
"என்னப்பா, நான் கேட்டுட்டே இருக்கேன், பதிலே காணோம்? உனக்குப் பிடிச்சுதா, இல்லையா?"
நாற்காலியை அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள் சுமித்ரா.
"சுமி! அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்காம். மாப்பிள்ளை பேர் கூட அரவிந்த்தான். ஆள் பந்தாவாத்தான் இருக்காரு. ஆனா என்னமோ தெரியலே, என் மனசுல ஒரே பயம். பார்க்க நல்லா இருக்கறவங்க, மனசும் நல்லா இருக்குமா சுமி?"
சுமித்ரா அவள் கண்களை ஊடுருவினாள்.
"நான் ஒண்ணு கேட்கட்டுமா, நந்து?"
"கேளு சுமி!'
''நீ கூடப் பார்க்க நல்லாத்தான் இருக்கே. அவங்களும் அப்படி நினைக்கலாமில்லையா? டோன்ட் கெட் கன்ஃப்யூஸ்ட். எதுவுமே நம்பிக்கையிலேதாம்மா நடக்குது. உன் மனசுக்குப் பிடிச்சிருந்தா எஸ்னு சொல்லு. என்ன நான் சொல்றது?'
தோளில் விழுந்த அவள் கைகளை மென்மையாகப் பற்றிக்கொண்டாள் நந்து.
"சுமி! உங்கிட்டே ஒரு விஷயம் பத்தி மனம் விட்டுப் பேசணும். அப்பதான், என் கன்ஃப்யூஷன் உனக்குப் புரியும்."
"சரி, சொல்லு!"
''என் அக்காவுக்கு லாஸ்ட் இயர் மேரேஜ் ஆனதுதான் உனக்குத் தெரியுமே! அவ இப்ப எப்படி கஷ்டப்படறா தெரியுமா?"
நந்துவின் கண்களில் ஈரத்தின் பளபளப்பு. சுமித்ரா நந்துவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"என் அத்தான் ஒரு சந்தேகப் பிராணி சுமி! சந்தேகம் அவள் தேகத்தையே உருக்கிட்டிருக்கு. லைஃபே அவளுக்கு நரகமாயிடுச்சு. எங்கே போனாலும், எதுக்கெடுத்தாலும் சந்தேகப் பார்வை. எவ்வளவோ பார்த்துத்தான் எங்க பேரண்ட்ஸ் பண்ணினாங்க..."
அடங்கிய குரலில் பேசினாலும் அழுகை கலந்து வந்தது.
''எங்க அக்கா, இப்ப 'சுயமே' இல்லாம போயிட்டா. அவகிட்டே இருந்த அத்தனை கலைகளும் அழிஞ்சு போயிடுச்சு. ஏதோ ஜடமா வாழ்ந்துட்டு வரா...
"இப்ப என்னோட குழப்பம் உனக்குப் புரியும்னு நினைக்கறேன். எதிர்காலத்தைப் பத்தின ஒரு பயம்... அதுவும் என் அக்காவைப் பத்தி நினைச்சா... கல்யாணமே வேண்டாம்னு சொல்லிடலாம்னு தோணுது."
"என்ன, நந்து! குழந்தை மாதிரி! நீ இவ்வளவு கோழையா இருப்பேன்னு நினைக்கல்லே. நான் ஒண்ணு சொல்றேன். இப்ப சமையல் பண்றோம். உப்பு, காரம்னு திட்டமாத்தான் போடறோம். சரியா அமையறது. இல்லையா? சில சமயம் கூட, குறையப் போறது சகஜம்தான். அதுக்காக சமைக்காம இருந்துடறோமா..?
"பேரண்ட்ஸ் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணி வைக்கறாங்க. எல்லார்கிட்டேயும் எல்லா குணமும் சரியா இருந்துட முடியுமா? அட்ஜஸ்ட் பண்ணி வாழ்றதுலே ஒரு ஆனந்தம் இருக்கு, தெரியுமா?"
"அப்ப, அவங்கவங்க தலையெழுத்துன்னு சொல்றியா?"
"அப்படி இல்லை! வாழ்க்கையில 'பாஸிடிவ் திங்கிங்' வேணும். நல்லதையே நினைப்போம். எல்லாம் நிச்சயமா நல்லபடியா நடக்கும். சியர் அப்."
சுமித்ரா சிரித்தாள். சமீபத்தில் திருமணமான, அவளின் வெற்றியின் ரகசியமே இதுதானோ? எதையுமே ஈஸியாக எடுத்துக்கொள்ளும் சுபாவம்!
மனத்தில் ஓரளவு தெளிவு வந்திருந்ததாகப்பட்டது நந்துவுக்கு.
திருமணம் முடிந்து, முதலிரவு.
"நந்து, என்னைப் பிடிச்சிருக்கா?'
"ம்..." வெட்கத்தில் சிவந்த அவள் கன்னங்களை மேலும் சிவப்பாக்கினான் அரவிந்த்.
"நந்து! இனிமே நீதான் எனக்கு எல்லாம். உனக்கு என்ன பிடிக்குமோ, அதான் எனக்கும் பிடிக்கும். ஐ லவ் யூ ஸோ மச்."
சந்தோஷமாயிருந்தது அவளுக்கு.
"ஐ டூ லவ் யூ. ஆனா ஒண்ணே ஒண்ணு எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலே!"
நந்துவை பிரமிப்புடன் பார்த்தான் அரவிந்த். அவன் முகத்தில் கேள்விக் குறி.
"கல்யாணம் முடிஞ்ச உடனே உங்க கையைப் பிடிச்சு, குலுக்கு குலுக்குன்னு குலுக்கினாளே, ஒருத்தி! யாரது? எனக்குப் பிடிக்கவே இல்லே!"
பின்குறிப்பு:-
கல்கி 21 ஏப்ரல் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்