சிறுகதை - இன்று புதிதாய் மணந்தோம்!

 ஓவியம் - கரோ
 ஓவியம் - கரோ

-அன்னம்

பாலச்சந்திரன் தன் கைப்பெட்டியுடன் அலுவலகம் புறப்பட்டுக்கொண்டிருந்தார். என்றும் இல்லாத அதிசயமாக அவர் அறை வாயிற்படியில் அவரை எதிர்பார்த்து அவர் மனைவி காத்திருந்தாள்.

இருபத்திரண்டு வருஷங்களாகத் தம்பதியாக அதே பங்களாவில் இருந்தாலும் இருவரும் மனத்தளவில் நெருங்காமல் விலகியே இருந்தார்கள். பாலச்சந்திரனின் தாயார், "பேரன் எங்கே? பேத்தி எங்கே?" எனத் தொணதொணப்புத் தாங்காமல் அவர் சிலமுறை பரிமளாவைத் தீண்டியிருக்கிறார். இல்லை.. அவள் தொட அனுமதித்திருந்தாள்.

கிழவியின் ஆசை பாதி நிறைவேறியது. பேரன் இல்லை. பேத்தி மட்டும். பெயர் லாவண்யா.

பரிமளா பாலச்சந்திரனின் மாமன் மகள்தான். ஆனால் பாலச்சந்திரன் நாடியது இன்னொரு பெண்ணை. "சொந்தம் விட்டுப் போகக்கூடாது". "திரண்ட சொத்துக்கள் கை மாறிவிடக்கூடாது" என்று பல காரணங்களைச் சொல்லி அவர்கள் இருவரையும் மணவாழ்க்கையில் பிணைத்துவிட்டனர்.

பரிமளாவும் என்றும் பாலச்சந்திரனைத் தன் வாழ்க்கைத் துணையாக நினைத்துப் பார்த்ததில்லை. கல்லூரியில் சேர்ந்தவுடன் அங்கிருந்த ஓர் இளம் விரிவுரையாளர்பால் அவள் மனம் சென்றது. அரசல் புரசலாக இதைக் கேள்விப்பட்டுத்தான் அவள் வீட்டில் இந்தக் கல்யாணத்தை அவசர அவசரமாக முடித்து வைத்திருந்தார்கள். இந்த விரிசல் ஊருக்குத் தெரியாது. வீட்டு வேலைக்காரர்களுக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள்.

பிரபலமான பத்திரிகை இவர்களை லட்சிய தம்பதிகளாக அட்டைப் படத்தில் போட்டுக்காட்டியது. நடிப்பில் பெரிய நட்சத்திரங்களையே தோற்கடிக்கும் விதத்தில் போஸ் கொடுத்துத் தங்கள் அந்நியோன்யத்தை நடித்துக்காட்டினர். ஒரு வருஷம் ‘மேட் ஃபார் ஈச் அதர்’ போட்டியிலும், லயனஸ் கிளப் இவர்களைத் தேர்ந்தெடுத்துக் கௌரவித்தது.

லாவண்யா தன் வயிற்றில் உண்டானவுடன் தனிப் படுக்கை அறைக்கு மாறியவள் பரிமளா. இன்னும் அப்படியேதான். பரிமளா தன் கவனத்தைக் குழந்தையை வளர்ப்பதில் செலவிட்டாள். பாலச்சந்திரனுடன் கழித்த ஒரு சில நாட்களிலேயே அவளுக்கு வேறு ஆசைகள் எல்லாம் விட்டுப் போயிற்று. லாவண்யா அம்மாவுடன் ஒட்டிக்கொண்டாள். எப்போதாவது "டாடி" கூப்பிட்டுப் பரிசு கொடுக்கும்போது வாங்கிக் கொண்டு "தாங்க் யூ" சொல்வதுடன் சரி.

இதையும் படியுங்கள்:
வலிகள்தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி!
 ஓவியம் - கரோ

இப்போது, இத்தனை நாட்களுக்குப் பிறகு, தன் கணவனைப் பார்த்துப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது லாவண்யாவினால்.

லாவண்யா இப்போது மெடிகல் காலேஜில் படித்துக்கொண்டு இருந்தாள். புத்திசாலிப் பெண். தந்தைக்கும் தாயுக்கும் நடக்கும் பனிப்போர் அவளுக்குப் புரிய வந்தது. மெல்ல மெல்லத் தாயின் முந்தானை யிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள் வெளியில் பல தோழிகள். தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் வந்தது.

சுனில் சௌத்ரி. வங்காள வாலிபன். அவளுக்கு காலேஜில் இரண்டு வருஷம் சீனியர். நட்பு பிரேமையாக மாறியது.

ஒருநாள் பரிமளாவிற்கு அவனை அறிமுகப்படுத்தினாள். அவன் பார்வையிலிருந்தே பரிமளா புரிந்துகொண்டாள். லாவண்யாவிற்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லை. அவள் நல்ல சிவப்பு. இவன் அட்டக் கரி. அவள் வெடவெடவென்று மெலிந்த உடல்வாகு. இவன் குட்டையாக இல்லாவிட்டாலும் கட்டையாக இருந்தான்.

இத்தனை நாள் இலைமறைவு காய்மறைவாக இருந்த விஷயம், முதல் நாள் வெட்ட வெளிச்சமாகியிருந்தது. தன் தாயிடம் தான் சுனிலை மணந்துகொள்ளப் போவதாகவும் ‘டாடி’யிடம் சொல்லும்படி தன் தாயிடம் கெஞ்சவில்லை. உத்தரவு பிறப்பிப்பதுபோல் அறிவித்துவிட்டுப் போனாள்.

பரிமளா அதிர்ந்து போனாள்! தனிப்பட்ட முறையில் அவளால் என்ன முடிவு எடுக்க முடியும்? லாவண்யாவிற்குத் தந்தை என்று ஒருவர் அந்த வீட்டில் இருக்கிறாரே!

"முக்கியமான விஷயம். கொஞ்சம் உட்காரலாமா?" எனக் கேட்டாள் பரிமளா. நிச்சயமாக அவர் வெடிக்கப் போகிறார் என எதிர்பார்த்த பரிமளா ஏமாந்தாள்.

''ஓ, ஷ்யூர்!" என உட்கார்ந்தார் பாலச்சந்திரன்.

பரிமளா எல்லா விவரங்களையும் அவரிடம் சொன்னாள்.

"நீ என்ன நினைக்கிறாய், பரிமளா?" எனக் கேட்டார் பாலச்சந்திரன்.

பரிமளா சிலிர்த்தாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அவள் பெயரைச் சொல்லி அழைக்கிறார். இத்தனை நாட்கள் ஒருவரை யொருவர் தொண்டையைச் செருமித்தான் கவனத்தை ஈர்த்து வந்தனர்.

"எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..." என்றாள் பரிமளா.

"நான் தெளிவாக இருக்கிறேன், பரிமளா. நமக்கு உருவப் பொருத்தம் இருந்தது. அந்தஸ்தில் சமம். படிப்பில் கூடப் பழுதில்லை. கல்யாணத்திற்கு இந்தப் பொருத்தங்கள் மட்டும் போதும் எனப் பார்த்துத்தான் நாம் இணைந்தோம். எப்படி வாழ்கிறோம் என உனக்குத் தெரியும். இதே போல் - இந்தப் பொருத்தங்களை மட்டும் பார்த்தால் நாம் லாவண்யாவைக் கண்டிக்க வேண்டியதுதான். சுனிலை மறக்கச் சொல்ல வேண்டியதுதான். உன் அண்ணன் மகனுக்கோ, என் தங்கை மகனுக்கோ அவளைக் கட்டிக் கொடுக்க வேண்டியதுதான். நம்மிடம் இல்லாத ஒரு பொருத்தம். ஒரே பொருத்தம் மனப்பொருத்தம் அவர்கள் பக்கம் இருக்கு. இதைப்பற்றி நீ என்னிடம் ஒரு நாள் பேசுவாய் என்று எனக்குத் தெரியும். சுனில்,  லாவண்யா விஷயம் என் காதுக்கு வந்தது. சுனிலைப் பற்றி விசாரித்தேன். நல்ல குடும்பத்துப் பையன். அவன் அப்பா - அம்மா இரண்டு பேருமே உண்மையான மனமொத்த தம்பதிகள். நமக்குக் கிடைக்காத ஒரு இனிய இல்லறத்தை ஏன் நம் மகளுக்கு நாம் அமைத்துத் தரக் கூடாது?"

"இப்படி நீங்கள் நினைப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை!”

'பரிமளா... வயது நாற்பத்தைந்து தாண்டிவிட்டது. மூப்பின் அடையாளங்கள் அங்கங்கே தோன்ற ஆரம்பித்துவிட்டன. கிடைக்காததை நினைத்து விலகி இருப்பதைவிட கிடைத்ததைக் கொண்டு திருப்தி யடையாமல் போனோமே என்ற விவேகம் ரொம்பத் தாமதமாக எனக்கு வந்திருக்கிறது. இருந்தாலும் உன் மனநிலை தெரியாமல் நான் நெருங்க விரும்பவில்லை."

பரிமளா நெகிழ்ந்து போனாள். பாலச்சந்திரனிடம் என்ன குறை இருந்தது, பார்க்கப் போனால் அந்தக் கல்லூரி விரிவுரையாளரைவிட எல்லாவிதத்திலும் உயர்ந்தவர்தான்.

இதையும் படியுங்கள்:
சித்ரா பௌர்ணமி அன்று கன்னியாகுமரி கடலில் அரங்கேறும் அதிசயம்!
 ஓவியம் - கரோ

எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது. இருவர் ஓரடி நெருங்கினால் இடைவெளி இரண்டடி குறைகிறது. ஓரடி நகர்ந்தால் இரண்டடி கூடுகிறது.

பரிமளாவின் கண்களில் நீர் துளித்தது.

"கவலைப்படாதே. நான் லாவண்யாவிடம் பேசுகிறேன் " எனப் புறப்பட்டுப் போனார் பாலச்சந்திரன்.

ரே வியக்கும்படி லாவண்யா சுனில் திருமணம் நடந்தது. பாலச்சந்திரனும் பரிமளாவும் ஓடியாடி உபசரித்தனர். ஒருவரையொருவர் பரிகசித்தார்கள். சீண்டினார்கள்.

பார்த்தவர்களில் ஒருவர் சொன்னார்: ''பரிமளா - பாலச்சந்திரனைப் பாருங்கள். இன்றைக்குக் கல்யாணம்போல் எத்தனை உற்சாகம்?” ஆனவர்கள்

அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை, மனத்தளவில் அவர்களுக்கும் இன்றுதான் திருமணம் முடிந்திருந்தது என்று.

பின்குறிப்பு:-

கல்கி 13  செப்டெம்பர்  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com