
பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப் போலவே பொருள் கொண்ட சொல், தொடர் அல்லது இலக்கத்தை 'மாலை மாற்று' என்கின்றனர். இதனை இருவழியொக்கும் சொல் என்றும் சொல்வதுண்டு. இதனை ஆங்கிலத்தில், Palindrome என்கின்றனர். இந்த ஆங்கிலச் சொல்லானது, கிரேக்க வேர்ச்சொற்களிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.
தமிழ் மொழியில் விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும். ஆங்கிலத்தில் Civic, Radar, Level, Madam, Malayalam, Pop, Noon, Refer போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும். ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகரமுதலியில் மாலைமாற்றாகவுள்ள நீண்ட சொல் Tattarrattat என்பதாகும்.
தமிழ் மொழியில் தொடராக, தேரு வருதே, மாடு சாடுமா, மோரு தாருமோ தோடு ஆடுதோ, மேக ராகமே, மேள தாளமே, போன்ற தொடர்கள் மாலைமாற்றாக அமைந்துள்ளன.
ஆங்கிலத்தில், Was it a cat I saw?, Do geese see God?, A Toyota's a Toyota, A nut for a jar of tuna, Madam I am Adam போன்ற தொடர்கள் மாலைமாற்றுகள் ஆகும்.
பொதுவாக, மாலைமாற்றுத் தொடர்களில் வரும் இடைவெளிகள், நிறுத்தக்குறிகள், பேரெழுத்து - சிற்றெழுத்து வேறுபாடு போன்றவை கவனிக்கப்படுவதில்லை.
ஆங்கிலத்தில் Anna, Hannah, Ada, Bob, Eve போன்ற பெயர்கள் மாலைமாற்றுகளாக அமைந்துள்ளன.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலைமாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன. கீழ்வரும் பாடல் அவற்றுள் ஒன்று.
” யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா”
இந்தப் பாடலைக் கடைசி எழுத்திலிருந்து முதல் எழுத்து வரையில் ஒவ்வொரு எழுத்தாகத் திருப்பி எழுதிப் படித்தாலும் இதே பாடல் வருவதைக் காணலாம்.
இந்தப் பாடலின் பொருள்;
யாம் ஆமா - யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா
நீ ஆம் மாமா - நீ பெரிய ஆன்மா, பரமாத்மா
யாழ் ஈ காமா - யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே
காணாகா - இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று
காணாகா - இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று
காழீயா - சீர்காழியானே
மாமாயா நீ - அம்மை அம்மை ஆம் நீ
மாமாயா - (இப்படி) பெரிய மாயமானவனே
இப்படி, மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் பத்துப் பாடல்கள் உள்ளன.
மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணம் ஆகிய தமிழ் இலக்கியங்களிலும் மாலைமாற்றுப் பாக்கள் உள்ளன.
எளிய பாடல் ஒன்று:
“தேரு வருதே மோரு வருமோ
மோரு வருமோ தேரு வருதே”
இதனைத் திருப்பிப் படித்தாலும் இதே பாடல் வரும்
இந்தப் பாடலின் பொருள்:
வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும் போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.
வினோதன் எனும் தமிழ்த்திரைப்படத்தில் இடம் பெற்ற "மேகராகமே மேளதாளமே தாரா-ராதா!" எனும் நீண்ட திரைப்படப்பாடலும் இந்தியாவின் முதலாவது மாலைமாற்றுத் திரைப்படப் பாடல் ஆகும். இதில் ஒவ்வொரு பதத்தையும் திருப்பிப் படிக்க முடியும்.