ஓவியம்; மாருதி
ஓவியம்; மாருதி

சிறுகதை – ஜ்யோத்ஸனா!

World StoryTelling Day 2024

-மதுமிதா

டியில் புரண்டவன் முகம் திருப்பி,  அவள் வயிற்றில் மிருதுவாய் முத்தமிட்டான் நந்தினிக்குச் சிலிர்த்தது. அவன் தலைமுடியில் விரல்களை அலையவிட்டாள்.

"நந்து... நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா...!" சூர்யா கூவினான்.

நந்தினி பேசாமலிருந்தாள்.

"ஹேய்... என்னம்மா... நான் பாட்டுக்குப் பேசிட்டு இருக்கேன்... நீ ஒண்ணுமே சொல்லாம இருக்கே...!"

அவன் விரல்களைப் பிடித்துக்கொண்டாள்.

"என்னப்பா சொல்லணும்...!

''ம்... அப்படிக் கேளு... இங்க பார் நந்து... எனக்குப் பெண் குழந்தைதான் வேணும்... என்ன பேர் வைக்கலாம் சொல்லு...!"

நந்தினி யோசித்தாள். இனி தவிர்க்கமுடியாது. சொல்லித்தான் ஆக வேண்டும்.

"நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியேப்பா...?"

“சொல்...சொல்... காதல் ரோஜாவே...! "

சூர்யா நீளமாய்ப் பாடினான்.

"இப்ப இது வேண்டாமே...!"

சூர்யா பளிச்சென எழுந்தான். அவன் வேகம் கண்டு தயங்கினாள்.

"எது வேண்டாம்கிற...!"

"இந்தக் குழந்தை."

சூர்யாவின் முகம் மாறிவிட்டது.

''ஏன் நந்து?"

''ப்ளீஸ்பா... நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோங்க... இப்ப வேண்டாம்... கொஞ்ச நாள் தள்ளிப் போடுவோம்...!"

''அதான்...ஏன்?"

"சொன்னா கோபப்படக் கூடாது...!"

"சட்னு சொல்லு நந்து...!'"

சூர்யாவின் குரல் உயர்ந்தது.

சூர்யாவுக்கு அபூர்வமாய்த்தான் கோபம் வரும்.

"இந்த வருஷம் எனக்கு ப்ரமோஷன் ட்யூ... இது இருந்தா கொஞ்சம் சிக்கல்...!" தயங்கிச் சொன்னாள்.

''ச்சே... இவ்வளவுதானே... நான் என்னவோன்னு பயந்துட்டேன்மா...!"

''அப்ப சரியா...?"

"இல்லே நந்து... இது ஒண்ணும் பெரிய சிக்கலில்லை... நீதானே சீனியர்... பதவி உயர்வு கட்டாயம் கொடுத்துத்தான் ஆகணும்... இதெல்லாம் ஒரு பெரிய பிரச்னை இல்லே...!"

"இல்லைப்பா... உங்களுக்குப் புரியலை... உங்கள மாதிரி அரசாங்க உத்யோகமில்லே… சீனியாரிட்டிக்கு மதிப்பு கொடுக்க... அது தனியார் நிறுவனம். அதுவும் அட்வர்டைசிங் கம்பெனி... எக்ஸிக்யூடிவ் பதவி.. பிரெக்னென்ட்னா நிறைய லீவு போடணும்... ஆரம்பத்துல நிரம்பக் கஷ்டம்... அத யோசிச்சு நிறுத்திடுவாங்க..."

சூர்யா யோசித்தான்.

"நான் எவ்ளோ ஆசையாயிருந்தேன்... முதல் குழந்தைதானே... அப்புறம் பிரமோஷனைப் பாத்துக்கறது...!"

"இல்லப்பா முடியாது... இப்ப கிடைக்கலேன்னா அப்புறம் கிடையாது. இது நல்ல சந்தர்ப்பம். ஜஸ்ட் ரெண்டு வருஷம் டயம் கொடுங்க... சந்தோஷமாப் பெத்துக்கலாம். நமக்கென்ன வயசா ஆய்டுச்சு...!"

"இதுதான் உன் விருப்பம்னா சரி... இத என்ன பண்றது...?"

"டாக்டரே நேத்துத்தான் கன்பார்ஃம் பண்ணினாங்க... வேண்டாம்னா டாக்டரே பாத்துக்குவாங்க..."

"யூ மீன்...?"

"ஆமாம்... ஆரம்ப காலம்தானே... மிகச் சுலபம்...!'"

''பாவம் இல்லையா நந்து. நம்ம குழந்தையை நாமே சாகடிக்கிறது. இத முன்னாலேயே என்கிட்ட சொல்லியிருந்தா இது நடக்காம தடுத்திருக்கலாமில்லே..."

"ச்சீ... போப்பா... "

"இப்ப சொல்லு... அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க நந்து...!"

"சொன்னாத்தானே...!"

"சரி எப்ப டாக்டர் வீட்டுக்குப் போறது...!"

"சாயங்காலம்... நீங்களும் வர்றீங்க...!"

சூர்யா தலையசைத்தான்.

இதையும் படியுங்கள்:
அறியாமைக்கும் அப்பாவித்தனத்திற்கும் நூலிழையே வித்தியாசம்!
ஓவியம்; மாருதி

திரில் இருந்த பெண் இவளைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டது. நந்தினிக்கு ஆச்சர்யமாயிருந்தது.  சூர்யாவின் காதில் கிசுகிசுத்தாள்.

"அங்க பாருங்க... என்ன பதினெட்டு வயசு இருக்குமா... இதுவே ஒரு குழந்தை மாதிரி இருக்கு... இதுக்கு ஒரு குழந்தையா...?"

"ஆமாம்... எல்லாரும் உன்னை மாதிரி இருப்பாங்களா...!"

நந்தினி மௌனமானாள்.

அப்போதுதான் கயல்விழி உள்ளே நுழைந்தாள்.  இவளைப் பார்த்துச் சிரித்தாள். உள்ளே போனாள்.

"யாரு தெரியுதா சூர்யா...?"

"தெரியலையே...!"

“முன்னாடி குடி இருந்தோமே அந்த வீட்டுக்குப் பக்கத்து வீடு. அந்த வீட்டுப் பாட்டியோட பேத்தி... இங்கே ஸ்டாப் நர்ஸா இருக்கு...!"

சூர்யா சுற்றுமுற்றும் பார்த்தான்.  கிளினிக்கில் கூட்டம் சேர்ந்திருந்தது.

"டாக்டர் வர லேட்டாகும் போலிருக்கு... நான் கொஞ்ச நேரம் வெளில நிக்குறேன்...!"

"ஏய்... சிகரெட் பிடிக்கத்தானே...!" ரகசிய குரலில் கேட்டாள்.

"ஒண்ணே... ஒண்ணு...!"

''சரி... சீக்கிரம் வாங்க... நீங்க இல்லாம டாக்டரைப் பார்க்கக் கூடாது...!"

சூர்யா எழுந்தான்.

கயல்விழி இப்போது டிரஸ் மாற்றியிருந்தாள்

''எத்தனாம் நம்பர் டோக்கன் நந்து?"

''பதினெட்டு...!"

''கொஞ்சம் லேட்டாகும்...!"

"பரவாயில்லே... டாக்டர் வந்துடுவாங்களா...?"

''பக்கத்து வீடுதானே... வந்துடுவாங்க...!"

"ஏன் கயல்... ஒரு ஃபேன் போடக் கூடாது... இப்படி எரியுதே...!"

''உள்ளே வாங்க... எங்க ரூம் இருக்கு... அவரு எங்கே?"

"வெளில போய்ருக்கார்...!''

எழுந்து கயல்விழியுடன் போனாள். அவள் அறை சின்னதாக இருந்தது.

கயல்விழி மின்விசிறியைச் சுழல விட்டாள்.

''நந்து... உனக்கு எதிர்ல ஒரு பெண் - ஜ்யோத்ஸனா - உக்கார்ந்து இருந்ததே...பார்த்தியா...!"

''ஓ... அந்த சின்னப் பெண்... பார்த்தேன்... இத்தனை சின்ன வயசிலே குழந்தை பெத்துக்க வந்துருக்கே… பதினேழு வயசிலே கல்யாணம் பண்ணி அடுத்த வருஷம் குழந்தை பெத்து, முப்பது வயசிலே கிழவியாய்டும்...!”

கயல்விழி கண்சிமிட்டினாள்.

"என்ன கயல்...?"

"இது வேற விவகாரம்... அது கல்யாணம் ஆன பெண்ணில்லே...!"

"அடிப்பாவி... அப்புறம்...!"

"அது ஒரு கதை... ஜ்யோத்ஸனாவோட அம்மா ஒரு வீட்ல வேலை பாக்குது... இது அந்த வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கு... அந்த வீட்டுப் பையனோட பழக்கமாய்டுச்சு... பாவம் சின்னப் பொண்ணு… அவனுக்குச் சந்தோஷம்... இதுக்குக் கஷ்டம்...!"

இதையும் படியுங்கள்:
நயாகரா நீர்வீழ்ச்சியை வற்ற வைத்ததன் காரணம் தெரியுமா?
ஓவியம்; மாருதி

"அடக் கஷ்டமே... கலைச்சிட வேண்டியதுதானே..."

"டாக்டர் அம்மாவே இதான் கேட்டாங்க... அது பிடிவாதமா மறுத்திடுச்சு... ஒரு உயிரைக் கொல்லக்கூடாதுன்னு சொல்லிடுச்சு...!"

"வெளில் தெரிஞ்சா அசிங்கமாய்டுமே...!"

"அதையும் சொன்னோம். அசிங்கம்,  அவமானத்தோட ஒரு உயிர் பெரிசு.... நான் செஞ்ச தப்புக்கு இது தண்டிக்கப்படக் கூடாதுன்னு சொல்லுது...!"

நந்தினி உறைந்து போனாள். கயல்விழி இவள் தோள்களைத் தட்டினாள்.

"சரி... டாக்டர் வந்துட்டாங்க... நீ போய் உக்காரு...!"

நந்தினி உட்காரவில்லை. வெளியே வந்தாள்.  சூர்யா நின்றுகொண்டிருந்தான்.

"வீட்டுக்குப் போலாமா...?"

"ஏன்... டாக்டர்...!"

"பாக்கலை... நம்ப பெண்ணுக்குப் பேர் வச்சிட்டேன்... ஜ்யோத்ஸனா... எப்படி...? "

சூர்யா சந்தோஷமாய் அவள் விரல்களைப் பற்றிப் பின்னிக்கொண்டான்.

பின்குறிப்பு:-

கல்கி 21  மார்ச்  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

logo
Kalki Online
kalkionline.com